உச்சியில் மகிழ்ச்சி நிலைக்குமா?

7
உச்சியில் மகிழ்ச்சி நிலைக்குமா

பொன்னான நிகழ்காலம் புத்தகம் பற்றி எழுதிய போது அதிலிருந்து 30 – 50 கட்டுரைகள் எழுதும் அளவுக்கு விஷயங்கள் உள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன் என்று கூறி இருந்தேன். அதிலிருந்து 3 வது கட்டுரை Image Credit

உச்சியில் மகிழ்ச்சி நிலைக்குமா?

பணிபுரிபவருக்குத் தன் பணியில், தொழில் புரிபவருக்குத் தன் தொழிலில், விளையாட்டில் ஈடுபடுவருக்கு அவர் விளையாட்டில் உச்சத்தை அடைய வேண்டும் என்பது விருப்பமாக இருக்கும்.

உச்சத்தை அடைந்த பிறகு மகிழ்ச்சி கிடைக்கும் ஆனால், நிலைக்குமா?! என்றால் இருக்காது.

காரணம், நம் சாதனையை இன்னொருவர் பின்னர் எளிதில் கடந்து விடுவார் அல்லது நம்மை அசத்தும் வேறு உயரம் வந்து விடும்.

உடனே நம் எண்ணம் அதை அடைய ஆசைப்படும். இது போல நம் எண்ணங்களுக்கு, விருப்பங்களுக்கு ஒரு முடிவே இல்லாமல் இருக்கும்.

எவரெஸ்ட் சிகரத்தை அடைய கடுமையான பயிற்சி, முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வளவையும் செய்து நாம் சிகரத்தை அடைந்தாலும் அங்கேயே இருந்து விட முடியாது, இறங்கித்தான் ஆக வேண்டும்.

இச்சாதனையைச் செய்து விட்டோம் என்பது தற்காலிக மகிழ்ச்சி. பின்னர் மனம் அடுத்ததை நோக்கி நகர்ந்து விடும்.

சுருக்கமாக, சில நிமிட மகிழ்ச்சியுடன் நம் கடுமையான முயற்சிகள் முடிந்து விடுகின்றன.

ஆன்மிகம்

ஆனால், ஆன்மீகத்தில் உச்சத்தை அடைந்து விட்டால், கீழே வருவதோ, மகிழ்ச்சியை இழப்பதோ கிடையாது, நிலையான ஓய்வைப் பெறுவீர்கள் என்பதே இதன் சிறப்பு.

நிலைபேற்றை அடையலாம், இறங்கி வர வேண்டியதில்லை. மற்றவர்களையும் மேலே அழைத்துச் செல்லலாம். இதற்குக் குறுக்கு வழி கிடையாது.

மாபெரும் இலட்சியத்தை அடைவதற்கு மிகப்பெரிய விலையைத்தர வேண்டும்.

அந்த விலை எது?!

தன்னலமற்ற வாழ்வு என்று கூறுகிறார் சுவாமி திரு சச்சிதானந்தா அவர்கள்.

சாத்தியமானது எது?

சுவாமி திரு சச்சிதானந்தா கூறுவது சராசரி வாழ்க்கை வாழும் நம்மைப் போன்றவர்களுக்கு இயலாத ஒன்று. குடும்ப வாழ்க்கையை விட்டு விலகி ஆன்மீகத்தில் தொடர்பவர்களுக்கே சாத்தியமானது.

இது போல நிலையை அடைய கடுமையான முயற்சிகள் தேவை அதோடு அவசர உலகில், போட்டி உலகில் இதை நம்மால் செய்ய முடியாது.

ஆனால்,

தியானம், யோகா, நேர்மறை எண்ணங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துவது நம்மை அடுத்தக் கட்டத்துக்கு 100% அழைத்துச் செல்லும்.

சுவாமி திரு சச்சிதானந்தா கூறும் நிலைக்கு முன்னோட்டமாக, அதாவது முதல் தகுதியாக (First level) வைத்துக்கொள்ளலாம்.

முதல் தகுதியை வளர்த்துக்கொண்டாலே மிகப்பெரிய சாதனையாக மாறும். சுவாமி திரு சச்சிதானந்தா கூறும் நிலைக்கு அதற்கான வயது வந்த பிறகு முயற்சிக்கலாம்.

தியானம் நம் மனதை ஒருமுகப்படுத்தும், மனம் அலைபாய்வதை நிறுத்தும், பதட்டத்தைத் தவிர்க்கும்.

யோகாவும் மிகச்சிறந்த பயிற்சியாக அனைவராலும் பரிந்துரைக்கப்படுகிறது.

நேர்மறை எண்ணங்களை மட்டும் 2016 ல் இருந்து பின்பற்றுகிறேன்.

100% உண்மை.

நேர்மறை எண்ணங்களைப் பின்பற்ற ஆரம்பித்த பிறகு எனக்கு நல்லதே நடக்கிறது. அனைவரும் என்னிடம் அன்பாகப் பழகுகிறார்கள், எதிரிகளே இல்லை.

எனவே, சுவாமி திரு சச்சிதானந்தா பரிந்துரைக்கும் நிலைக்கு முன்னதான நிலையான எந்த ஒரு சராசரி நபராலும் பின்பற்றக்கூடிய முதல் நிலையைக் கடந்தாலே மனம் தெளிவு பெற்று விடும்.

முதல் நிலையில் ஏதாவது ஒன்றை (தியானம், யோகா, நேர்மறை எண்ணங்கள்) பின்பற்றத் துவங்கினாலே நிச்சயம் உங்களிடம் மாற்றத்தை உணர முடியும்.

முதல் தகுதிக்கே இவ்வளவு நன்மைகள் என்றால் சுவாமி திரு சச்சிதானந்தா கூறும் நிலை நிச்சயம் சாத்தியமான ஒன்றே.

தொடர்புடைய கட்டுரைகள்

நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?

பொன்னான நிகழ்காலம் – மகிழ்ச்சியின் இரகசியம்

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

7 COMMENTS

  1. கிரி, வாழ்க்கையில் பல படிநிலைகளை கடந்து வந்து இருக்கிறேன்.. எனக்கு பொதுவாக இறைநம்பிக்கை இருந்தாலும் அதனுள் முற்றிலும் நுழைந்து கரை காண விருப்பம் இல்லை.. யதார்த்தமான பல மனிதர்களை சந்தித்துளேன்.. அவர்களின் வாழ்வியலை அருகில் இருந்து பார்த்து இருக்கிறேன்.. பேராசை, பொறாமை இவைகளை விட்டொழிந்து, தன்னிலை மாறாமல் எந்நிலையிலும் நேர்மையையும், உண்மையையும் கடைபிடிக்கும் போது வாழ்வில் எந்நாளும் மகிழ்ச்சி தான்!!! இது போக நீங்கள் கூறிய நேர்மறை எண்ணங்களும் முக்கியமான ஒன்று..

    நிறைய குழப்பமான தருணங்களில் இருந்து இருக்கிறேன்.. அதிலிருந்து மீண்டும் இருக்கிறேன்.. முதுகலை கல்லூரியில் படிக்கும் போது காதலியின் திருமண நாளன்று என்ன செய்வது என்று தெரியாமல் 5/6 மணிநேரம் மொட்ட வெயிலில் கடற்கரையின் மீது நின்று கொண்டு கடலை வெறிக்க பார்த்து கொண்டிருந்தேன்.. அன்று கடலின் வெப்பம் என்னையும், காதலின் நினைவுகளையும் சுட்டு எரித்தது.. (அதன் பின் கடற்கரைக்கே செல்லவில்லை..) சில ஆண்டுகளுக்கு பின் திருணமான புதிதில் மனைவியுடன் கடற்கரைக்கு செல்லும் போது மகிழ்ச்சி தளும்பியது..காதலியின் நினைவினால் சுட்ட கடல், மனைவியினால் வருகையால் வாடைக்காற்று தழுவியது போல் உணர்த்தேன்.. வாழ்வின் யதார்த்தம் என்னவென்று எனக்கு தெளிவாக அன்று தான் புரிந்தது.. இது போல நிறைய தருணங்களை கூறலாம்..

    ஆன்மீகத்தை பற்றி முழுமையான அறிவு இல்லாததால் அதை பற்றி என்னால் கூற முடியாது.. ஆனால் ஆன்மீகத்தை கருவியாக கொண்டு நேர்வழிப்படுத்துகிறேன் என்று, பாமர மக்களை வாட்டி வதைக்கும் கயவர்களை எந்த மதத்தில் கண்டாலும் மனம் பற்றி எரியும்.. பாமர மக்களின் கடைசி நம்பிக்கை இதுவே!!! இதிலும் இந்த கயவர்கள் இவர்களை ஏமாற்றும் போது உண்மையில் என்ன சொல்வது என்று தெரியவில்லை..

    கிரி, வாழ்க்கை மிகவும் எளிமையானது.. அதை நாம் தான் கடுமையாக்கிக் கொள்கிறோம்.. நமது மாற்றத்திற்கு சமுதாயமும் / போட்டியும் / வாழ்வியல் முறையும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.. தலைவர் சூத்திரம் தான் : “உன் வாழ்க்கை உன் கையில்” மிக சாதாரணமான வரிகளாக இருந்தாலும் மிகவும் ஆழமாக அர்த்தம் கொண்ட வரிகள் இது .. அடுத்தவர்களுக்கு ஆலோசனை கூறுவது மிக எளிது.. ஆனால் நான் என் வாழ்வில் எப்படி நடந்து கொள்கிறேன் என்பது தான் முக்கியம்..

    என்னை பொறுத்தவரை இதெல்லாம் படித்து வாழ்வில் கடைபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை.. அனுபவப்பூர்வமாக உணரப்பட வேண்டியவைகள் இது.. வெறும் புத்தகம் மூலமோ, சொற்பொழிவின், அல்லது யாரோ ஒருவரின் வாழ்வியலை தொடர்வதன் மூலமோ நமக்கு முழுமையான பாடம் கிடைத்து விட்டது என எண்ண முடியாது .. சொந்த அனுபவம் மட்டுமே தீர்வாகும்.. அது ஒவ்வொவருவர்க்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.. எனக்கு ஏற்பட்டது உங்களுக்கு ஏற்படாது.. பறந்து விரிந்த உலகில் ஒரு பறவையை போல் திரிந்து அந்த அனுபவத்தை அடைய வேண்டும்..பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. /*ஆன்மீகத்தை கருவியாக கொண்டு நேர்வழிப்படுத்துகிறேன் என்று, பாமர மக்களை வாட்டி வதைக்கும் கயவர்களை எந்த மதத்தில் கண்டாலும் மனம் பற்றி எரியும்.. பாமர மக்களின் கடைசி நம்பிக்கை இதுவே!!! இதிலும் இந்த கயவர்கள் இவர்களை ஏமாற்றும் போது உண்மையில் என்ன சொல்வது என்று தெரியவில்லை..*/

    சத்தியமான உண்மை யாசின்

  3. ஆழமான கருத்துகள் கிரி.

    Based on your recommendation, I purchased this book a long time ago but have yet to finish it.

  4. @யாசின்

    “பேராசை, பொறாமை இவைகளை விட்டொழிந்து, தன்னிலை மாறாமல் எந்நிலையிலும் நேர்மையையும், உண்மையையும் கடைபிடிக்கும் போது வாழ்வில் எந்நாளும் மகிழ்ச்சி தான்!!”

    மிகச்சரியான கருத்து.

    “கடலின் வெப்பம் என்னையும், காதலின் நினைவுகளையும் சுட்டு எரித்தது”

    உங்க காதலிக்கு கொடுத்து வைக்கல.. யாசின் போல ஒரு நபர் கிடைக்க 🙂 .

    “ஆன்மீகத்தை பற்றி முழுமையான அறிவு இல்லாததால் அதை பற்றி என்னால் கூற முடியாது.”

    எனக்கு மட்டும் இருக்கிறதா யாசின்? 🙂 மேலோட்டமாக நம்ம லெவலுக்கு தெரிந்ததை வைத்து பேசுகிறேன் அவ்வளவு தான்.

    ஆன்மிகம் ஒரு கடல். எவராலும் முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது.

    “பாமர மக்களின் கடைசி நம்பிக்கை இதுவே!”

    சரியான அவதானிப்பு. இதுலயும் ஏமாற்றுவது, தவறாக வழிகாட்டுவது மிக மோசமானது.

    “அடுத்தவர்களுக்கு ஆலோசனை கூறுவது மிக எளிது.. ஆனால் நான் என் வாழ்வில் எப்படி நடந்து கொள்கிறேன் என்பது தான் முக்கியம்.”

    இப்பெல்லாம் யாரும் அறிவுரை கேட்பதில்லை யாசின். சொல்வதும் வீண்.

    நம் அனுபவங்களைக் கூறலாம், அதைப் பின்பற்றுபவர்கள் பின்பற்றலாம்.

  5. @chandrasekar

    அவசியம் படிங்க.. இது தினமும் ஒன்றை படிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கமும் குறைவு.

    எனவே, தினமும் காலையில் ஒன்றை படித்தால், புத்துணர்வாக இருக்கும்.

    எளிமையான ஆனால், சிறப்பான புத்தகம்.

  6. ஆன்மீகவாதி ஆகிட்டீங்க கிரி 🙂

    இந்த கட்டுரையை படிக்கும் போது சூப்பர் ஸ்டார் சொன்ன வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

    1. வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்றவர்கள் தனியாக தான் இருக்க வேண்டும்.
    2. ஒரு பொருளையே, புகழையோ, வெற்றியோ அடையும் பொது இருக்கும் மகிழ்ச்சி, அதை அடைந்த பின்பு அது தொடர்வதில்லை அல்லது நாம் அதை கண்டுகொள்வதில்லை.

    இது தான் இயற்கை.இதற்கு நம் வாழ்கையை பார்த்தாலே புரியும். நல்ல கல்வி,வீடு, மனைவி, மக்கள், செல்வம், புகழ், இன்னும் பல. வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நம்முடைய தேவையும் தேடுதலும் வேறுபடுகிறது. இந்த விசை மனித குலத்துக்கு தேவையானது. அவசியமானதும் கூட.

    எவரொருவர் அரசியலிலோ தொழிலிலோ ideology லோ தீவிரமாக செயல்பட்டாலும் அவர்களின் கடைசி காலத்தில் ஒரு வெறுமையை அடைவார்கள். இதை நான் பல சாதனையாளர்களின் வாழ்க்கையை படித்த போது அறிந்தது. நீங்கள் எவ்வளவு நேர்மறையாக இருந்தாலும் இது தான் நிலை.

    நீங்கள் உங்களை detach செய்து கொள்ளாதவரை உங்கள் வெற்றி ஒரு சுமையே. அதனால் தான் பெரும்பாலானவர்கள் ஆன்மிகம் பக்கம் செல்கிறார்கள்.

    ஆன்மிகம் ஒரு அக பயணம். இதிலும் நீங்கள் பெரு விலையை தர வேண்டும். முதலில் உங்கள் ஈகோவை விட வேண்டும். எவ்வளவு பெரியலாக இருந்தாலும் உங்கள் குரு முன்பு நீங்கள் மாணவர் தான். ஆன்மிகவாதியின் பயணம் என்றும் முடிவதில்லை.பல குருமார்கள் அக பயணத்தில் என்றும் இருப்பவர்கள் தான்.

    ஆன்மீகத்தில் வெற்றி தோல்வி என்று கிடையாது. ஆன்மீக பயணத்தில் ஒருவர் இயற்கையை உணர்வதும் கண்ட தரிசனத்தை மற்றவர்க்கு கற்பிப்பதும் மட்டுமே. சேவையிலும் ஆன்மீகத்திலும் பெறுவது என்பது கிடையாது, கொடுப்பது அல்லது அளிப்பது மட்டுமே.

    தேடல் உள்ளவர்கள் அவர்களின் குருவை கண்டடைவார்கள். நல்ல குரு அமைவது ஒரு நல்லூழ்.

  7. @மணிகண்டன்

    “ஒரு பொருளையே, புகழையோ, வெற்றியோ அடையும் பொது இருக்கும் மகிழ்ச்சி, அதை அடைந்த பின்பு அது தொடர்வதில்லை அல்லது நாம் அதை கண்டுகொள்வதில்லை”

    100% உண்மை. எனக்கு பல முறை நேர்ந்துள்ளது.

    “முதலில் உங்கள் ஈகோவை விட வேண்டும்.”

    மிகப்பெரிய சவால்.

    கோபத்தை விட வேண்டும், மிகப்பெரிய பொறுமை வேண்டும்.

    “ஆன்மிகவாதியின் பயணம் என்றும் முடிவதில்லை.பல குருமார்கள் அக பயணத்தில் என்றும் இருப்பவர்கள் தான்.”

    கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கும். அதற்கான பதில் கிடைக்கும் வரை தேடல் தொடரும்.

    “ஆன்மீகத்தில் வெற்றி தோல்வி என்று கிடையாது.”

    சரியாக கூறினீர்கள். ஆன்மீகம் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டது. இதை புரிந்து கொண்டவர்களாலே உணர முடியும்.

    இதை உணர்வது எளிதானது அல்ல.

    “தேடல் உள்ளவர்கள் அவர்களின் குருவை கண்டடைவார்கள். நல்ல குரு அமைவது ஒரு நல்லூழ்.”

    உண்மையே! சரியான குரு அமைவது எளிதல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!