துவக்கத்தில் போதை / அடிமையாவது என்றால் போதை மருந்துப் பழக்கம் கூறப்பட்டது, பின்னர் குடிப்பழக்கம் ஆனது.
தற்போது கால மாற்றத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர், WhatsApp போன்ற சமூகத்தளங்களாக மாற்றம் பெற்று இருக்கிறது. Image Credit
குடிப்பழக்கம்
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி எத்தனை குடும்பங்கள் அழிந்து கொண்டு இருக்கின்றன என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
ஃபேஸ்புக் / WhatsApp
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பல குடும்பங்களை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தாங்கள் அடிமையாக இருக்கும் ஃபேஸ்புக்கில் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
குடிப் பழக்கம் கெட்டது என்ற கூறத் தெரிந்த பலருக்கு தாங்களும் அது போல ஃபேஸ்புக் போதையில் இருக்கிறோம் என்பதை உணரவில்லை.
நம்மில் பலருக்கு போதை / அடிமையாவது என்பது குடிப்பழக்கத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று நினைத்துக் கொண்டுள்ளார்கள்.
இதற்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல பேஸ்புக் / ட்விட்டர் / கூகுள்+ / WhatsApp போன்ற சமூகத்தளங்களும்.
போதை / அடிமையாவது என்றால் என்ன?
ஒரு பழக்கத்தை தவறு என்று தெரிந்தும் அதில் இருந்து வெளிவர முடியாமல் தொடர்ந்து அதைச் செய்து கொண்டு இருப்பதற்குப் பெயர் தான் போதை / அடிமையாகுதல். இது குடிப்பழக்கத்திற்கு மட்டும் பொருந்துவதல்ல.
குடிப்பழக்கத்தைப் போல குடும்பத்தை அழிக்கும் சக்தி வாய்ந்தவை சமூகத்தளங்கள். இத்தாலியில் சில மாதங்கள் முன்பு திருமண முறிவிற்கு முக்கியக் காரணமாக WhatsApp இருந்துள்ளது.
இது கற்பனை செய்தி கிடையாது. அதிகாரப்பூர்வமான செய்தி.
தற்போது ஃபேஸ்புக் / ட்விட்டர் / WhatsApp போன்றவைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பலரை வசப்படுத்தி அதில் கிடைக்கும் போதைக்கு அனைவரையும் அடிமையாக்கி வருகிறது.
மக்கள் நிஜ வாழ்வில் உள்ளவர்களுடன் பழகுவதை விட Virtual உலகில் இருப்பதை மகிழ்ச்சியாக நினைக்கிறார்கள்.
மன உறுதி
ஒரு விசயத்திற்கு அடிமையாவது நம்மை அறியாமல் நடப்பது ஆனால், அதைத் தவறு என்று ஒரு கட்டத்தில் உணர்வோம் அவ்வாறு உணர்ந்து பிறகும் தொடர்ந்தால் பிரச்சனை.
தவறை திருத்திக் கொண்டால் நாம் அதில் இருந்து தப்பிக்கலாம்.
நன்றே செய் இன்றே செய்
எந்த ஒரு தொடர் பழக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவது என்பது நடக்கவே நடக்காத காரியம்.
முடிவு செய்த உடனே நிறுத்தினால் மட்டுமே நிறுத்த முடியும். அதோடு அதைத் தொடர்ந்து பின்பற்ற மன உறுதியும் வேண்டும்.
புகைப் பழக்கத்தைச் சிலர் பல முறை நிறுத்தியது போல!!
ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்குக்கு அடிமையானேன் என்று கூற முடியாது இருப்பினும் இதனால் சில மன உளைச்சல்களும் தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்பட்டது.
ஃபேஸ்புக்கை மனம் ஏன் தேடுகிறது?
நாம் கூறுவதற்கு Like / Comment / Share வேண்டும், நாம் பிரபலமாக இருக்க வேண்டும், நம்மை நான்கு பேர் புகழ வேண்டும்.
நாம் போட்ட நிலைத்தகவலுக்கு எத்தனை Like / comment வந்துள்ளது? இவையே ஃபேஸ்புக்கை நோண்டிக்கொண்டு இருக்கக் காரணங்கள்.
அதோடு முக்கியமாக அடுத்தவரின் அந்தரங்கத்தில் இருக்கும் ஈடுபாடு.
ஃபேஸ்புக் காட்டும் இன்னொரு முகம்
உண்மையில் சரியாகப் பயன்படுத்த தெரிந்தால் ஃபேஸ்புக் அற்புதமான சேவை. பல விசயங்களைத் தெரிந்து கொள்ள உதவும் சிறப்பான தளம்.
எனவே, இதைக் குறை கூற முடியாது.
ஆனால், நான் கவனித்தவரை நேரில் ஒரு மாதிரியாகவும் ஃபேஸ்புக்கில் ஒரு மாதிரியாகவும் தான் பலர் நடந்து கொள்கிறார்கள்.
ஆழ் மனதில் உள்ள வன்மங்களை / பொறாமைகளை / குரோதங்களை / வக்கிரங்களை தேடிப்பிடித்துக் கொண்டு வருகிறது.
நல்ல நட்பை ஃபேஸ்புக் இழக்க வைக்கிறது அல்லது மனத்தாங்கலை ஏற்படுகிறது.
ஃபேஸ்புக்கை செய்திகளைத் தெரிந்து கொள்ளத் தான் அதிகம் பயன்படுத்துகிறேன், நட்பு என்பது அதன் பிறகு தான் வருகிறது ஆனால், கருத்து வேறுபாடுகளால் நட்பில் விரிசல் ஏற்படுகிறது.
மன உளைச்சல் சப்பை விசயத்துக்காக எல்லாம் ஏற்படுகிறது. இவை எதுவுமே நேரில் பேசும் போது நடப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரச்சனை என்றால் அதற்கு நியாயமான காரணம் இருக்க வேண்டும்.
ஒன்றுமில்லாத பிரச்சனைகளுக்கெல்லாம் சண்டை போட்டுக் கொண்டு இருப்பது அடி முட்டாள்த்தனமானது. நம்மை மேலும் சிக்கலில் விட்டு மன நிம்மதியை குலைக்கும்.
எப்படித் தவிர்ப்பது?
நானும் இதைத் தவிர்க்க எவ்வளவோ வழி முறைகளைப் பின்பற்றினேன்.
நான் பகிரும் நிலைத்தகவலுக்குத் (Status Update) தகுந்த குழு உருவாக்கி அதில் மட்டும் பகிர்ந்து பார்த்தேன் ஆனாலும் அது முழுமையான வெற்றியடைவில்லை.
ஏதாவது கருத்துக் கூறினால் அதற்குத் தேவையற்ற வாக்குவாதம் வருகிறது.
ஒரு விவாதத்தால் பயன் இருக்கிறது என்றால் தொடரலாம் ஆனால், அர்த்தமற்ற விசயத்துக்கெல்லாம் சண்டை போடுவது நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வது போலத்தான்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து ஃபேஸ்புக் பயன்படுத்துவதையே நிறுத்தி விட்டேன்.
ஏனென்றால், சில நேரங்களில் நாம் விரும்பவில்லை என்றாலும் நமக்குப் பிடிக்காத செய்திகளை நண்பர்கள் பகிர்வார்கள்.
நமக்குப் பிடித்த செய்திகள் மட்டுமே வேண்டும் என்றால் நாமே பகிர்ந்தால் தான் உண்டு.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கொண்டு இருப்பார்கள் என்பதால், குறை கூற எதுவுமில்லை.
நாம் நினைப்பதை, நமக்கு விருப்பமானதையே நம் நண்பர்கள் அனைவரும் பகிர வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.
எனவே, மிக முக்கியமான தகவலை பகிருவதற்கு மட்டும் ஃபேஸ்புக் பயன்படுத்துவது மற்ற நேரங்களில் புறக்கணிப்பது என்று முடிவு செய்தேன்.
ஃபேஸ்புக் / கூகுள்+ பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு சுதந்திரமாக இருப்பது போல உணர்வு. சில விசயங்களை நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது.
குடும்பத்துடனான தொடர்பை இழக்க வைக்கிறது
ஃபேஸ்புக்கிற்கு அடிமையாக இருப்பவர்கள் நிலையை நினைத்துப் பாருங்கள். குடிப்பழக்கத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லாத பிரச்சனைகளைக் கொண்டு வரும்.
வீட்டிற்கு வந்த பிறகும் இதிலேயே கவனம் செலுத்துவதால், இன்பம் அடைவதால் நேரில் உள்ள குடும்பத்தினருடன் தொடர்பு அற்றுப் போகிறது.
அம்மா, அப்பா, கணவன், மனைவி, அண்ணன், தம்பி, தங்கை, அக்கா மனைவி, குழந்தைகள் என்று எவருடனும் பேசுவதில்லை.
யார் என்ன செய்கிறார்கள் என்று கவனம் செலுத்துவதில்லை. குழந்தைகள் / குடும்ப உறுப்பினர்கள் குறித்து எந்த யோசனையும் இல்லை.
என்ன நடக்கிறது என்று கூடத் தெரிவதில்லை ஆனால், ஃபேஸ்புக்கில் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அத்துப்படி.
குடும்பத்தில் எவருக்கும் காலை / இரவு வணக்கம் கூறுவதில்லை ஆனால், ஃபேஸ்புக் / WhatsApp ல் பலர் இதை வெட்டித் தனமாகச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்காமல் Virtual உலகத்தில் வாழ்க்கை நடத்திக் கொண்டுள்ளார்கள்.
இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு, குடும்பத்தில் குழப்பம் / சண்டை / வாக்குவாதங்கள் / எரிச்சல்கள் / மனத் தாங்கல்கள் போன்றவை ஏற்பட்டு திருமண முறிவு வரை கொண்டு செல்கிறது.
படிப்பில் கவனம் சிதறி மதிப்பெண்கள் குறைகிறது.
ஃபேஸ்புக்கில் கிடைக்கும் Likes / comments, ட்விட்டரில் RT / Favourites / பின் தொடர்பவர்களின் எண்ணிக்கைக்காகப் பலர் போலியான வாழ்க்கை வாழ்ந்து உண்மையான வாழ்க்கையைக் கண்முன்னே வீணடித்துக் கொண்டுள்ளார்கள்.
போதை என்பது குடிப்பழக்கத்தில் மட்டுமே அல்ல.
ஃபேஸ்புக், ட்விட்டர், WhatsApp, புகைத்தல் போன்றவற்றிக்கு அடிமையாக இருப்பதும் நம் உடல் நலத்தையும் குடும்பத்தின் மகிழ்ச்சியையும் பாதிக்கும்.
Like / comment எதுவுமே போடாமல் நாள் முழுக்க ஃபேஸ்புக் பார்த்துக்கொண்டு இருந்தாலும் (Silent reader), இதே பிரச்சனை தான்.
என்ன பெரிய வேறுபாடு?
குடித்து விட்டுப் பொறுப்பில்லாமல் குடும்பத்தைக் கவனிக்காமல் இருப்பதற்கும், சமூகத்தளங்களே கதி என்று இருப்பவர்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு?
ஆறு வித்யாசம் கூடக் கண்டு பிடிக்க முடியாது. இரண்டுமே குடும்பத்தைப் பாதிக்கிறது. பிறகு என்ன பெரிய வித்யாசம்?
இரண்டுமே வெவ்வேறு வகைப் போதை தான், அனைவருக்கும் கெடுதல் தான்.
திரை ரசிகர்கள் சண்டை
தமிழ் திரை ரசிகர்களைப் போல உலகத்திலேயே எவரும் இவ்வளவு கீழ்த்தரமாக நடிகர்களுக்காக அடித்துக் கொள்ள மாட்டார்கள்.
திரை ரசிகர்கள் என்றால் விவாதம் இல்லாமல் இருக்காது. நானே என் தளத்தில் பல விவாதங்களை நடத்தி இருக்கிறேன் ஆனால், வரம்புமீறாமல்.
ஃபேஸ்புக் வெறுத்துப் போக மிக முக்கியக் காரணம் ரசிகர்களின் சண்டை. அனைத்து ரசிகர்களும் அடித்துக் கொள்கிறார்கள் என்றாலும் ட்விட்டரில் அஜித் விஜய் ரசிகர்கள் சண்டை நாடே அறியும்.
தங்களுக்குப் பிடித்த நடிகரையே அசிங்கப்படுத்திக்கொண்டு இருக்கிறோம் என்பதையே உணரமால் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இறுதியில் என்ன கிடைக்கப் போகிறது? ஒரு கட்டத்திற்கு மேல் தான் செய்தது தவறு என்று புரியும் ஆனால், காலம் கடந்ததாக இருக்கும்.
ஆரோக்கியமான விவாதங்கள் அனைவராலும் நிச்சயம் வரவேற்கப்படும் ஆனால், அநாகரிகமாகச் சண்டை போடுவது அனைவருக்கும் கெட்ட பெயரையே ஏற்படுத்தும்.
இதைத் திரை ரசிகர்கள் உணரப்போவதில்லை. இதனால் அவர்கள் வீணடிக்கும் நேரம் திரும்பக் கிடைக்குமா?!
ஒரு நடிகரைப் பற்றிய செய்தி என்றால் அதில் அவரைப் பிடிக்காதவர்கள் படு ஆபாசமாகப் கருத்து இடுகிறார்கள்.
இதை உணர்ந்த ஊடகங்கள் தங்கள் FB page பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே சண்டை மூட்டும் தலைப்புகளை வைக்கிறார்கள்.
இதை உணராத முட்டாள் ரசிகர்கள் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தனிப்பட்ட தளத்தில் விவாதம் என்றால் அதோடு முடிந்து விடும் ஆனால், ட்விட்டர் போன்ற தளத்தில் hashtag பிரபலமாவதால் நாடே காறித்துப்பும் அளவிற்கு ஆகிறது.
Current Trend / செய்திகள்
என்னதான் செய்தித் தளங்கள் இருந்தாலும், ஃபேஸ்புக் பயன்படுத்தாததால் பல நடப்பு செய்திகளைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
நான் Blog எழுதுவதால் நடப்பு விசயங்கள் பற்றித் தெரிந்து இருப்பது அவசியமாகிறது, இல்லையென்றால் பழைய செய்திகளைப் புதிது போலக் கூற வேண்டிய நிலை ஏற்படலாம்.
எனவே, போலியான ஃபேஸ்புக் கணக்கை உருவாக்கி நண்பர்கள் இல்லாமல் எனக்குத் தேவையான Page மட்டுமே like செய்துள்ளேன்.
இதன் மூலம் செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது அதோடு வேறு எந்தப் பிரச்சனையும் மனத்தாங்கலும் ஏற்படுவதில்லை.
காரணம், என்ன வேண்டும் வேண்டாம் என்பதை இதில் முடிவு செய்பவன் நானே!
எனவே, ஒரு page எரிச்சலை உண்டாக்குகிறது என்றால் unlike செய்து விடலாம். Like / comment என்ற எதிர்பார்ப்பும் இருக்கப் போவதில்லை.
சுருக்கமாக, நமக்குத் தேவை எதுவோ அது மட்டும் நம் கண்ணில் படும். வேறு எதுவுமே நமக்கு வர வாய்ப்பே இல்லை.
இந்தப் போலிக் கணக்குக் கூடத் தேவையில்லை என்று நினைத்தால், உடனே நிறுத்தி விடக் கூடிய மன வலிமை இருக்கிறது.
இருப்பினும் பல விசயங்களில் Outdated ஆகவே இருக்கிறேன், இது வருத்தமளிக்கவில்லை.
ஒன்று வேண்டும் என்றால் இன்னொன்றை இழந்து தான் ஆக வேண்டும். இந்த அளவு செய்திகளே போதுமானது இதற்கு மேலும் தேவை என்று நுழைந்தால் சிக்கலையே கொண்டு வரும்.
நம்முடைய பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணமே நாமே வலியப் போய்த் தலையை நுழைப்பது தான்.
பிரச்சனை வரும் என்று தெரிந்தால் ஒதுங்கிப் போவதில்லை. வம்படியாய் கலந்து கொண்டு / படித்துப் பின்னர்க் குத்துது குடையுது என்று புலம்ப வேண்டியது.
WhatsApp கதையும் ஃபேஸ்புக் போலத்தான். குறுந்தகவல் எதுவும் வரவில்லை என்றாலும் சும்மாவது ஏதாவது வந்துள்ளதா என்று பார்க்க வைக்கும்.
அதிகக் குழுக்களில் இருப்பது உங்களின் நேரத்தை வீணடிக்கும். Image Credit – http://www.redmondpie.com
முடிந்தவரை One to one குறுந்தகவலுக்கு மட்டும் WhatsApp பயன்படுத்துங்கள், குழுக்களில் இணையாதீர்கள் அல்லது எண்ணிக்கையைக் குறைவாக வைத்துக்கொள்ளுங்கள்.
அநாவசியமாகக் குறுந்தகவலை அனுப்பவர்களைத் தடை செய்யுங்கள்.
குப்பை போலப் படங்களும், காணொளிகளும், காலை / இரவு வணக்கங்களும் வந்து குவிவதை ஊக்குவிக்காதீர்கள்.
இல்லையென்றால் இதற்கே நேரம் முழுக்கச் செலவழிக்க வேண்டியதாக இருக்கும்.
ஃபேஸ்புக், WhatsApp போன்றவை அற்புதமான சேவைகள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை ஆனால், அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
நம்முடைய அவசியமான தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தினால் இதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
Read: ஃபேஸ்புக் நல்லதா கெட்டதா!
நம் நடவடிக்கைகளை / சுதந்திரத்தை தீர்மானிப்பது யார்?
Blog ல் என்ன எழுத வேண்டும் எவ்வளவு நாளைக்கு ஒருமுறை எழுத வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நான், என்னுடைய தளமல்ல.
என்றைக்கு என்னுடைய திருப்திக்காக எழுதாமல் மற்றவர்களின் திருப்திக்காகவும் / நெருக்கடிக்காகவும் / பாராட்டுக்காகவும் எழுதுகிறேனோ அன்றே என் சுதந்திரம் பறி போய்விடும்.
என்னை யாரும் கட்டுப்படுத்துவதை விரும்பவில்லை.
இது Blog / facebook / Twitter / WhatsApp என்று எதுவாக இருந்தாலும் சரி. இவையெல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் வரையே நமக்கு நல்லது.
இறுதியாக, குடும்பம் / அலுவலகம் / நண்பர்கள் இதன் பிறகு தான் மற்றதெல்லாம்.
இதைச் சரியாக உணர்ந்தால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் குழப்பங்கள் / மன உளைச்சல் இல்லாமலும் இருக்கும். முடிவு உங்களிடம்.
கட்டுரை பெரியது என்பதால், நீங்கள் Skim செய்து படித்து இருந்தாலும் நான் கூற வந்த மையக் கருத்தை புரிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தொடர்புடைய கட்டுரைகள்
ஃபேஸ்புக் அந்தரங்கப் பாதுகாப்பு
ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கணினி வாங்கியதில் இருந்து சமூக தளங்களின் உள்நுழைய “பெயர் மற்றும் கடவுச் சொல்லை” பிரௌசரில் சேமித்து வைத்துக் கொள்ளவில்லை… பதிவுகளை பகிரும் போது மட்டும் அவை உதவும்…!
Silent reader ஆக கூட இருப்பதும் மனப் பிரச்சனைக்கு வழி வகுக்கும் என்பதும் உண்மை…
தேவையான சிறந்த பதிவு.
நடப்பியல் உண்மையைத் தெளிவாக பதிவிட்டிருக்கீங்க. தற்போதைய சூழலுக்கு மிக மிகத் தேவையான பதிவு இது. எதுவுமே கட்டுப்பாட்டை இழந்து நின்றால் அடிமை நிலை தான்.
கிரி, நீண்ட பதிவாக இருந்தாலும் மிகவும் அனுபவித்து எழுதி உள்ளீர்கள் என்பது உண்மை.. நிச்சயம் அனைவர்க்கும் பயனுள்ள பதிவு… ஆனால் படிப்பவர்கள் எப்படி எடுத்து கொள்வார்கள் என்று தெரியவில்லை… சில உண்மைகளை உரக்க கூறினால் அது கண்டிப்பாக கசக்கதான் செய்யும்..
நவீன வளர்ச்சி என்பது நன்மைக்கா அல்லது தீமைக்கா என்று இன்னும் குழப்பமாகவே இருக்கிறது… வரக்கூடிய எதிர்கால சந்ததிகளின் நிலையை நினைத்தால், ஒரு குழந்தைக்கு தந்தையாக ரொம்ப பயமாக இருக்கிறது…
தனது வீட்டில் உள்ளவர்களை தவிர வேறு சிறுவர்களுடன் பழகுவதற்கு, இன்றைய சிறுவர்கள் விரும்புவதில்லை. பள்ளியில் கொள்ளும் நட்போடு முடிந்துவிடுகிறது. உறவினர்கள் என்று எவரையும் அவன் அறிந்து கொள்ளவும் இல்லை. அவர்கள் மீதான அன்பும் அவனுக்குள் உருவாகவில்லை.
நமது கடந்த காலத்தில், பள்ளி நாட்களில் நான்கு/ஐந்து நண்பர்கள் பிரிக்கமுடியாத நட்போடு ஒருவர் தோள் மீது மற்றவர் கைபோட்டுக் கொண்டு ஒன்றாக நடக்கும் சிறுவர்கள் இன்று ஒருவருமில்லை..
நவீனத்தை கண்டு மனம் வலிக்கிறது, இருப்பினும் மாற்றம் என்ற ஒன்றை மனம் விரும்பாவிடினும் ஏற்று கொள்ள தான் வேண்டியுள்ளது என்பது தான் இயற்கை… பகிர்வுக்கு நன்றி கிரி..
அனைவரின் வருகைக்கும் நன்றி
@யாசின் “சில உண்மைகளை உரக்க கூறினால் அது கண்டிப்பாக கசக்கதான் செய்யும்”
🙂 நீங்கள் கூறுவது சரி தான். கசக்குதோ இனிக்குதோ எனக்கு எது சரின்னு படுதோ அதை கூறுவது தான் என் வழக்கம்.. அதனால் கூற எனக்கு தயக்கமே இல்லை.
“வரக்கூடிய எதிர்கால சந்ததிகளின் நிலையை நினைத்தால், ஒரு குழந்தைக்கு தந்தையாக ரொம்ப பயமாக இருக்கிறது…”
உண்மை தான். குறிப்பாக படிப்பை நினைத்தால் திக்குன்னு தான் இருக்கிறது. படிக்கும் நேரத்தில் இந்த நினைப்பே சுற்றிக்கொண்டு இருக்கும்.