தற்போது பயணக்கட்டுரைகளை எழுதுவதில்லை காரணம், ஒரே மாதிரியான தகவல்களே திரும்ப வருவதால், படிப்பவர்களுக்குச் சலிப்பாக இருக்கும் என்று.
இந்தமுறை இவற்றைப் பதிந்து வைக்க வேண்டும் என்று விரும்பியதால் எழுதியுள்ளேன்.
அம்மா
அம்மாக்கு 80 வது பிறந்தநாள். உடல்நலம் நன்றாக உள்ளது ஆனால், முழங்கால் வலி தான் பல வருடங்களாக உள்ளது, சமீபமாக அதிகரித்துள்ளது.
வயதானாலே முழங்கால் வலி தவிர்க்க முடியாதது.
ஊருக்கு வரும் போது அண்ணாத்த படத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி இருந்தேன் ஆனால், முழங்கால் வலி காரணமாகச் செல்ல முடியவில்லை.
அம்மா தீவிர ரஜினி ரசிகை. சன் டிவியில் போடப்படும் ரஜினி படங்களைத் தவறாமல் பார்த்து விடுவார். அதில் உள்ள காட்சிகளை ரொம்ப ரசித்துச் சிலாகிப்பார்.
ரஜினி படங்களில் அம்மாக்கு சண்டைக்காட்சிகள், செண்டிமெண்ட், நகைச்சுவை ரொம்பப் பிடிக்கும்.
அண்ணாத்த அவருக்கு ரொம்பப் பிடித்தமான படமாக இருக்கும் ஆனால், அழைத்துச் செல்ல முடியவில்லை, திரையரங்கு அனுபவத்தைத் தவற விட்டது எனக்கு வருத்தம்.
ஈரோடு – சத்தி சாலை
ஈரோடு – சத்தி சாலையை அகலமாக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டுள்ளார்கள்.
எனவே, தற்போது சித்தோடு முதல் கோபி வரையான சாலையோர மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டுவிட்டன.
இவை முடிந்ததும் அடுத்தது கோபி – சத்தி சாலையோர மரங்கள் வெட்டப்படப்போகின்றன.
சாலை அகலப்படுத்துவது தவிர்க்க முடியாதது ஆனால், வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக மறுபடியும் மரங்களை நட வேண்டும் என்பது சட்டம்.
ஆனால், அதை யாருமே பின்பற்றுவதில்லை. கோபி – சத்தி வழியில் ஏராளமான மரங்கள் உள்ளன. இனி இவை இருக்காது என்பதை நினைத்தாலே மிக வருத்தமாக இருக்கிறது.
இதோடு கவுந்தப்பாடி – பவானி சாலையிலும் இதே நிலை. இங்கேயும் ஏராளமான மரங்கள் உள்ளன. பயணமே அவ்வளவு விருப்பமாக இருக்கும்.
இவற்றையும் தாண்டிச் சாலையோர தோட்டங்கள், வயல்கள் என்று பசுமையாகவே உள்ளது. வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக இல்லையென்றாலும், மரங்களை வைப்பார்கள் என்று நம்புகிறேன்.
வயதானவர்களுக்கு நடைப்பயிற்சி அவசியம்
நடக்க முடியவில்லை, கால் வலிக்கிறது என்று வயதானவர்கள் நடையைக் குறைக்கக் கூடாது. காலை / மாலை குறைந்தபட்சம் ஏதாவது ஒரு வேளையில் நடைப்பயிற்சி அவசியம்.
என் அத்தை ஒருவர் அவர்களது நெருங்கிய உறவினர் நிகழ்வுக்காகச் சென்றவர், அங்கே கிட்டத்தட்ட 15 நாட்கள் இருந்ததால், நடை குறைந்து விட்டது.
நடக்க வேண்டிய அவசியம் இல்லாததால் வழக்கமான வேலை இல்லாததால், பெரும்பாலும் அமர்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை.
இதனால் திரும்ப அவரது வீட்டுக்கு வந்த பிறகு அவரால், கால் வலியால் நடக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு விட்டார்.
வலி என்று கூறுவது சிலருக்கு அதன் வீரியம் புரியாமல் இருக்கலாம். காலை ஒரு அடி எடுத்து வைப்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கும், அவ்வளவு வலி இருக்கும்.
பல் வலி பிரச்சனையை எதிர்கொள்ளாதவர்களுக்கு, மற்றவர்கள் கூறினால் அதன் வலி புரியாது அது போலத்தான் இதுவும்.
அதுவும் முழங்கால் வலி வயதானவர்களுக்கு எனும் போது மிகக்கொடுமையாக இருக்கும். 10 அடி நடந்து செல்வதே மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.
எனவே, வலி இருக்கிறது என்று நடையைக் குறைத்தால், நிரந்தரமாக உட்கார வைத்து விடும். பின்னர் சிறு செயலுக்குக் கூட அடுத்தவர் உதவியை நாடும் நிலையாகி விடும்.
சொந்தம்
ஊருக்குச் சென்றாலே மரியாதை நிமித்தமாக உறவினர்கள் வீட்டுக்குச் செல்வது தவிர்க்க முடியாதது.
இந்த முறை பெரியப்பா வீட்டுக்குச் சென்ற போது என் வயதொத்தவர்கள் அவர்கள் பிள்ளைகளுடன் வந்து இருந்தார்கள்.
பல வருடங்களுக்குப் பிறகு இவ்வளவு பேரை (20+) ஒரே நேரத்தில் சந்திக்கிறேன். மீண்டும் பழைய காலத்துக்கே சென்றது போல இருந்தது.
தற்போது குடும்பங்கள் சிறிதாகி விட்டது, நகரமயமாக்கலில் பலர் இணைவது திருமணங்கள் அல்லது வேறு முக்கிய விசேஷங்களில் மட்டுமே.
அதுவும் சம்பிரதாய விசாரிப்பாகி விட்டது.
இது போல எந்தக்காரணமும் இல்லாமல் திடீர் என்று இவ்வளவு பேரைச் சந்திப்பது மகிழ்ச்சியே.
எங்கள் சமூகத்தில் நெருங்கிய சொந்தம் அதிகம், அனைவரும் சந்திக்கும் போது கிண்டல் கேலியுடன் கலகலப்பாக இருக்கும்.
சென்னை வந்த பிறகு இது போன்ற கொண்டாட்டங்களைத் தவற விடுகிறேன். அனைவரும் குழுவாக நிழற்படம் எடுத்துக்கொண்டோம். வரலாற்றில் நானும் இருக்கிறேன் 🙂 .
என் தலைமுறை மக்கள் கோபி, ஈரோடு, சத்தி, கோவை என்று அதிகம் இருக்கிறார்கள்.
ஆனால், அடுத்தத் தலைமுறை சென்னை, பெங்களூரு, வெளி மாநிலம், வெளிநாடு என்று நகர்ந்து விட்டார்கள்.
எனவே, எதிர்காலத்தில் இது போல எதேச்சையாகச் சந்திக்கும் வாய்ப்பு கூட அவர்களுக்கு இருக்காது. அவர்களுடைய வாழ்க்கை முறையே வேறாக இருக்கும்.
நகரமயமாக்கலில் ஏற்பட்ட தவிர்க்க இயலாத மாற்றங்களை, இழந்தவைகளைத் தனிக்கட்டுரையாகப் பின்னர் எழுதுகிறேன்.
தொடர்புடைய கட்டுரை