பல் வலி பிரச்சனைகள்

12
பல் வலி பிரச்சனைகள்

ற்போது நம் உடல் சம்பந்தப்பட்ட சிறியளவு பிரச்சனைகளில் பெரியளவு செலவு வைக்கும் பிரச்சனையாகப் பல் வலி உருவெடுத்து உள்ளது.

தற்போதைய தலைமுறை குழந்தைகளுக்கு இப்பிரச்சனைகள் விரைவிலேயே துவங்கி விடுகிறது.

இதற்குக் காரணமாக இனிப்பு, பாக்கு, பற்களைச் சரியாகப் பராமரிக்காமை என்று அனைவருக்கும் தெரிந்த பட்டியல் இருக்கும். Image Credit 

பல் வலி

பல குழந்தைகள் அதிகம் சாக்லேட் சாப்பிட்டு பற்கள் படு மோசமாகி வலியால் அவதிப்பட்டதை கண்ணுற்றதால், என் மகன் வினய்க்கு சாக்லேட் கொடுப்பதில்லை.

ஓரளவுக்கு தான் தடுக்க முடியும் அதற்கென்று ரொம்ப முறுக்கிட்டும் இருக்க முடியாது.

மனைவி கிட்டே சொல்லிட்டே இருப்பேன் அவனுக்குக் கொடுக்காதே! என்று. எதிர்பார்த்தது போலச் சொத்தைப் பல் ஆகி விட்டது. செம கடுப்பாகி விட்டது.

பல் வலி நான் அனுபவித்தது இல்லை ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் கூறக் கேட்டு இருக்கிறேன். சாப்பிட, பேசக் கூட முடியாது என்று கூறக் கேட்கும் போதே எனக்கு வலிக்கும் 🙂 .

அந்த அளவிற்கு கொடுமையானது என்று கூறுவார்கள்.

இது போன்று வினய்க்கு ஆகி விடக் கூடாது என்பது என் கவலை. கடந்த வாரம் இரவு, பல் வலி என்று வினய் அழுது பின் சரியாகி விட்டது.

சரியாகச் சாப்பிடுவதில்லை என்று என்னுடைய மனைவி இவனைக் கோயமுத்தூரில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் சென்று இருந்தார்.

குழந்தைகள் சரியா சாப்பிடாம இருப்பது புதிதல்ல, இருந்தாலும் ஒரு வார்த்தை என்னவென்று கேட்டுக்கலாம் என்று பெற்றோருக்கே உண்டான மன நிலையில் சென்றார்.

பல் சொத்தை

மருத்துவர் ஆலோசனை கூறி விட்டு இவனுக்குப் பல்லில் சொத்தை இருக்கிறது என்று சாக்லேட் கொடுக்காமல், ஒரு பென்சிலும் ரப்பரும் கொடுத்து இருக்கிறார்கள்.

இதன் பிறகு இவர் கூறியது தான் எனக்கு வியப்பாக இருந்தது.

இரவில் பால்

இரவில் படுக்கப் போகும் முன் பால் அருந்துவதால், அதில் உள்ள சக்கரையால் சொத்தைப் பல் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறி இருந்தாராம்.

நம்மில் பெரும்பாலும் குழந்தைகளுக்கு இரவில் தூங்கும் போது அல்லது தூங்கிக் கொண்டு இருக்கும் போது தூக்கத்திலேயே பால் கொடுப்பது வழக்கம்.

குழந்தைகள் சரியாகச் சாப்பிடவில்லை என்றால், பாலையாவது குடித்தால் தெம்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் இரவில் பால் கொடுப்பார்கள்.

அதோடு பால் சத்துள்ளது என்ற இயல்பான எண்ணமும் ஒரு காரணம்.

நல்லதோ கேட்டதோ எது நடந்தாலும் அதோட தொடர்புடைய / அதுபோலச் செய்திகள் நாம் கேட்க நேரிடும். இது உங்களுக்கு நடக்கிறதா என்று தெரியலை, எனக்கு அடிக்கடி நடக்கும்.

அக்காவுடன் தொலைபேசியில் இரவு பேசிய போது அவருடைய மகளுக்கும் இதுபோலப் பிரச்சனை என்று கூறினார்.

அந்த டாக்டரும், இரவில் பால் குடிப்பதால் சொத்தை வரும் என்று கூறியதாகக் கூறினார்.

அதோடு இரவில் பால் குடித்து பல் துலக்கினாலும் இந்தப் பிரச்சனை இருக்கும். எனவே, மாலை மட்டும் பால் கொடுங்கள் இரவில் கொடுக்க வேண்டாம் என்று கூறியதாகக் கூறினார்.

எனக்கு இது குழப்பமாக இருந்தது.

இரவில் பால் குடித்தால் சொத்தைப் பல் வரும் என்பது லாஜிக்காக இருந்தது ஆனால், பல் துலக்கிய பிறகும் எப்படி சாத்தியம் என்று கேட்டேன்.

அது பல் இடுக்குகளில் இருக்கும், போகாது என்று கூறியதாகக் கூறினார்.

எனக்கு இது சந்தேகமாகவே இருக்கிறது. இதைப் படிக்கும் உங்களில் யாராவது நிச்சயம் இது பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

எனவே பகிர்ந்து கொண்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

குழந்தைகளுக்குப் பால் பல் விழுந்து இயல்பான பற்கள் முளைக்கும் போது இந்தச் சொத்தைப் பல் பிரச்சனை சரியானால் பரவாயில்லை.

முன்பே சிகிச்சை எடுக்காமல் வேரிலேயே பாதிக்கப்பட்டு இருந்தால் பால் பற்கள் விழுந்து புது பல் முளைக்கும் போதும் இந்தப் பிரச்சனை தொடரும்.

தலைவலியாகும் பல் வலி

சரியாகக் கவனிக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் பல் வலி நமக்கு “தலைவலியாக” மாறி விடும் 🙂 . பெற்றோர்கள் கவனமாக இருங்கள்.

இது வரை சாக்லேட் மற்றும் இனிப்பு சாப்பிடுவதால் மட்டுமே சொத்தைப் பல் வருகிறது என்று நினைத்து இருந்தேன். இது போல ஒரு கோணத்தில் யோசித்தது இல்லை.

அதை விட முக்கியம் இது போல யார் கூறியும் இதுவரை நான் கேட்டதில்லை. என்னைப் போலத் தெரியாதவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பகிர்கிறேன்.

செலவு வைக்கும் பல்

பற்களுக்கு ஆகும் செலவை நினைத்தாலே கண்ணைக் கட்டுகிறது. தற்போது இருக்கும் விலை வாசி உயர்வில் ஏற்கனவே பலர் திண்டாடிட்டு இருக்காங்க.

அதில் இந்தச் செலவும் அடிக்கடி சேர்ந்து கொண்டு பலரை பாடாய் படுத்துகிறது.

குழந்தைகளுக்கு அதிகம் சாக்லேட் கொடுத்துப் பழக்காதீங்க, இரவில் தூங்கப் போகும் முன் பல் துலக்குவதை அவர்களுக்கு ஒரு வழக்கமாக உணர வையுங்கள்.

இன்று அவர்களுக்கு அது சிரமப் படுத்துவது போலத் தெரிந்தாலும் அவர்கள் வளர்ந்து நிச்சயம் உங்களை வாழ்த்துவார்கள், பிரச்சனைகள் இல்லாத பற்களுக்காக.

பலரின் அனுபவங்களைக் கேட்கும் போது, பெரியவர்கள் பல் பிரச்சனைகளுக்காகத் தற்போது செலவு செய்வது ரொம்ப அதிகம் ஆனது போலத் தோன்றுகிறது.

ஒரு முறை சென்று வந்தாலே 4000 சர்வசாதரணமாக வருவதாகக் கூறினார்கள்.

ஆலோசனைக் கட்டணமே [பெரியவர்களுக்கு] 5000 வாங்கினார் என்று என் அக்கா கூறிய போது மிரட்சியாக இருந்தது.

குழந்தைகளுக்கு ஒரு பல்லுக்கு 1000 என்றும், தள்ளுபடியால்!! 750 ருபாய் என்று கூறினார். என்னங்கய்யா நடக்குது?!

அதனால் மக்களே! பற்களைச் சரியாகப் பராமரியுங்கள் அதோட எதுவும் பிரச்சனை என்றால், உடனே மருத்துவரைப் பார்த்துச் சரி செய்து கொள்ளுங்கள்.

செலவாகும் என்று தள்ளிப்போட்டால் பின்னால் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு செலவை வைக்கும்.

இதனால் நானும் எச்சரிக்கையாகி விட்டேன். மனிதர்கள் இருவகை, பிரச்னையைக் கேள்விப்பட்டு தன்னை திருத்திக்கொள்பவர்கள். பட்டால் மட்டுமே திருந்துபவர்கள்.

நான் முதல் வகை, நீங்கள் எந்த வகை?

அனைவருக்கும் இனிய பொங்ல் நல் வாழ்த்துக்கள்.

உறுதியான பற்களைக் கொண்டவர்கள் கரும்பைக் கடித்து கொண்டாடவும் மற்றவர்கள் பொங்கல் சாப்பிட்டு & கரும்பு ஜுஸ் குடித்து கொண்டாடவும் சிறப்பு வாழ்த்துகள் 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

தலைவலிக்கு மாத்திரை சாப்பிடுபவரா?

வறட்டு இருமலை குணப்படுத்துவது எப்படி?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

12 COMMENTS

 1. அனைவருக்கும் பயன்படும் அருமையான பகிர்வு
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  பொங்க்கல் நல்வாழ்த்துக்கள்

 2. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கிரி.

  நீங்க சொன்ன மாதிரி ராத்திரி தூங்க போகும் முன் பால் குடித்து சென்றால் சிறுவர்களுக்கு சொத்தை பல் வருவது இயல்பு. பெரியவர்களுக்கு அது போன்ற நிகழ்வுகள் குறைவு. ஏன் என்றால் 1. சிறுவர்களுக்கு பால் பற்கள். 2. பால் உண்ட பின் அவர்கள் தூங்குவதால் வாயினுள் எச்சில் ஓட்டம் குறைந்துவிடும், பற்கள் இடையே உள்ள பால் அமிலமாக மாறி பற்களை சொத்தை செய்துவிடும். பகல் பொழுதில் இவ்வாறு நடப்பதில்லை ஏன் என்றால் அவர்கள் பால் குடித்த பின் தூங்காமல் எதாவது செய்துகொண்டிருபார்கள் எனவே வாயினுள் எச்சில் ஓட்டம் இருக்கும், பற்கள் இடையே இருக்கும் பால் எச்சில் ஓட்டம் இருபதால் கரைந்துவிடும்.

  இரவில் பால் குடிப்பதை தவிற்காமல் பால் குடித்த பின் பற்களை விளக்கி நன்றாக கொப்பளித்தால் நன்று… 🙂

 3. கிரி. நான் கல்லூரியில் படிக்கும் போது எனது HOD (திரு.சுப்பிரமணியம்) கணக்குபதிவியலில் பாடத்தில் (ஒரே ஒரு கணக்கு மட்டும்) தேர்வு வைத்தார். 90% மாணவர்கள் சரியாக தேர்வை எழுதினோம். அவரும் பாராட்டிவிட்டு உடனே வேறு ஒரு தேர்வு வைத்தார், இம்முறை வித்தியசமானது, கணகுக்கான விடையை அவர் கொடுத்து விட்டு எங்களை வினாவை தயார் செய்ய கூறினார். 10% மாணவர்கள் கூட சரி வர செய்ய முடியவில்லை.

  அந்த நிகழ்வுக்கு பின் அவர் மேல் பெரிய மரியாதையே வந்தது (இன்றும் உள்ளது). என்ன காரணம் என்றால், அதற்கு முன் இது போல, எந்த மாணவர்களும் சரி, ஏன் ஆசிரியர்களும் சரி யோசித்தது கூட இல்லை. இன்றும் எனக்கு அது பிரமிப்பாக இருக்கும்.
  இந்த பதிவும் கூட அப்படிதான். ஏன் என்றால் இனிப்பு பண்டங்களை சாப்பிடால் மட்டும் சொத்தை பல் வரும் என்று நினைத்து கொண்டு இருக்கும் பலருக்கு, இரவில் பால் குடிப்பதால் கூட பிரச்னை ஏற்படும் என்பது அறியாத ஒன்றாக இருக்கும் (எனக்கும் தெரியாது) என நினைக்கிறன். அதற்கு இந்த பதிவின் மூலம் விடை கிடைத்தது மகிழ்வான ஒன்று. இந்த பதிவின் மூலம், நிச்சயம் நிறைய நண்பர்கள் பலன் அடைவார்கள்… பொங்கல் வாழ்த்துகள் கிரி. பகிர்தமைக்கு மகிழ்ச்சி. நீண்ட பின்னோடத்திற்கு SORRY.

 4. பொங்கல் வாழ்த்துக்கள் கிரி.
  ரொம்ப பயனுள்ள தகவல் கிரி. இன்றே மனைவியிடம் கூர வேண்டும். எப்படி எல்லாம் பிரெச்சனை வருது பாருங்க 🙁

  ஏன் இரவில் படுக்க போகும் முன், குழந்தைகள், பால் பருகினால் பல் சொத்தை வரும் என்று, விளக்கமாக விளக்கிய “Leela Prasath” அவர்களுக்கு நன்றி.

 5. உங்களிடம் டாக்டர்கள் சொன்னதிற்கும் அப்படியே எதிராக அமெரிக்க பல் மருத்துவரிடையே நம்பிக்கை நிலவுகிறது. சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் பல் சொத்தை ஏற்படுவது குறையும் என்கின்றன தற்போதைய ஆராய்ச்சிகள். சர்க்கரை சேர்த்த உணவினை சாப்பிட்ட அரைமணிக்கு பின்பு pH 5.7 ஆக வாயில் அமிலதன்மை ஏற்படுகிறது. அமில காரமற்ற நடுநிலை pH 7 ஆனால் சாப்பிட்ட பின் பால் குடித்த ஆட்களின் pH 6.5 உயர்ந்துள்ளது. தண்ணீர் குடித்தவரின் pH 6 ஆக உயர்ந்து இருந்திருக்கிறது. ஆக வாய் கொப்பளிப்பதை விட பால் நல்லது.

  ஆனால் எச்சரிக்கை, சர்க்கரை சேர்த்த பால் சாப்பிட்டால் இந்த விளைவு இருக்காது. அதாவது சர்க்கரை கலந்த பால் மற்ற சர்க்கரை சேர்த்த ஸ்வீட்களைப் போலவே அமிலதன்மையை அதிகரித்துள்ளது. ஆகவே குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்க்காத பாலை கடைசியாக சாப்பிட வைப்பது நல்லது.

  1. கடைசியாக சாப்பிடும் உணவு பல்நலத்தில் முக்கிய பங்காற்றுவதாக விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். ஆகவே சர்க்கரை சேர்த்த எந்த ஒரு பொருளையும் (பிஸ்கட், கேக்,குளிர்பானம் போன்றவை) உணவில் இறுதியில் சாப்பிடுவது நல்லதல்ல.
  2. அமிலத்தன்மை -புளிப்பு சுவை மிகுந்த உணவுகள் – லெமன் ஜூஸ் போன்றவை அருந்த ஸ்ட்ரா பயன்படுத்தவும்.
  3. சாப்பிட உடன் பல் துலக்காதீர்கள் அரைமணி கழித்து பல் விளக்கவும். உணவில் உள்ள ஆசிட் பல் எனாமலை இளக்கும் அப்போது பிரஷ் வைத்து தேய்த்தால் எனாமல் பாதிக்கப்படும்- பல் கூச்சம், சொத்தை உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

 6. வருகைக்கும் வருகைக்கும் நன்றி

  @லீலா பிரசாத் நன்றி. அந்த மருத்துவர் பல் துலக்கினாலும் இரவில் இருக்கும் என்று ஏன் கூறினார் என்பது தான் குழப்பமாக இருக்கிறது.

  @யாசின் நீங்க சிறிய பின்னூட்டம் அளித்தால் தான் யோசிப்பேன் 🙂

  @நந்தவனத்தான் தகவலுக்கு நன்றி. எப்போதுமே ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு கருத்தைக் கூறுகிறது.

 7. நல்ல தகவல் சற்று ஆச்சரியமாக இருக்கிறது எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் இப்போதைக்கு கவலை இல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here