இன்னும் சில வருடங்களில் கூட்டுக்குடும்பம் என்பது புத்தகங்களில் மட்டுமே பார்க்கப்படும் நிலையானால் வயதானவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி.
வயதானவர்களின் நிலை என்ன?
கூட்டுக்குடும்பம் சரியா தவறா என்ற கட்டுரையல்ல. கூட்டுக் குடும்ப முறை கலைந்ததால் பாதிப்பிற்குள்ளான பெற்றோர்கள், வயதானவர்கள் நிலை குறித்தது.
கூட்டுக்குடும்ப முறையில் சில மனத்தாங்கல்கள் இருந்தாலும் பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் வாழப் பிரச்சனை இல்லாமல் இருந்தார்கள்.
தற்போது தனிக் குடும்பம் ஆனதால் இறுதிக் காலத்தில் யாரிடம் இருப்பது?!! என்ற பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.
மகன்
மகன் இருக்கும் வீடாக இருந்தால், இத்தலைமுறை வயதானவர்களுக்குப் பிரச்சனை இருக்காது.
தற்போதே புறக்கணிப்புகள் நடந்து கொண்டு இருப்பதைக் கவனித்து இருப்பீர்கள். நாளைடைவில் தொடர்ந்து அதிகரிக்கும்.
உடலில் வலு இருக்கும் வரை பெற்றோர்கள் தனியாகச் சமாளிக்க முடியும் ஆனால், உடல் பலகீனமாகும் போது மகனைச் சார்ந்து இருக்க வேண்டியது உள்ளது.
ஒன்றுக்கும் மேற்பட்ட மகன்கள் இருந்தால், யார் கவனித்துக் கொள்வது?!! என்ற பிரச்சனை வரும்.
மகன்களுக்குள் ஒற்றுமை இருந்தால் இப்பிரச்சனையில்லை ஆனால், ஒற்றுமை என்பது அதிசயமான ஒன்றாகி விட்டது.
ஒரு மகன் இருந்தாலும், வரும் பெண் தனிக் குடித்தனம் செல்லவே விரும்புவார், இது சிக்கலை ஏற்படுத்தும். ஒருவேளை கூட்டுக் குடித்தனம் என்றால், அதற்குத் தகுந்த மாதிரி அனுசரித்துப் போக வேண்டும்.
சில பெற்றோர்கள் புரிந்து கொள்ளாமல் பிரச்சனை செய்வதாலும் ஈகோ காரணங்களாலும் சண்டை வருகிறது.
மருமகள்
மருமகளை, அவர்களின் நடைமுறைச் சிக்கல்களை உணராமல் நெருக்கடிகளைக் கொடுப்பதால், வெறுப்பிற்கு ஆளாகிறார்கள்.
விலைவாசி உயர்ந்து வரும் வேளையில் செலவுகளைக் கட்டுப்பாட்டினுள் வைக்க வேண்டும். இல்லையென்றால் இதுவே புறக்கணிப்பிற்கு முக்கியக் காரணமாகும்.
பிள்ளைகளுக்குத் தாங்கள் செய்யும் செலவுகள் நியாயமானதாகவும், பெற்றோர்கள் தாத்தா பாட்டிகளின் செலவுகள் தேவையற்றது என்பது போலவும் தோன்றும்.
எனவே, வயதானவர்கள் அனுசரித்துப் போனால் மட்டுமே சமாளிக்க முடியும்.
இந்த நடைமுறை எதார்த்தங்களை உணர்ந்து கொண்டால் தொடர முடியும், இல்லையென்றால் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்க வேண்டும்.
சுருக்கமாகத் தன்மானத்தை விட்டுச் சில நேரங்களில் இருக்க வேண்டியது வரும்.
பெற்றோர் Vs மனைவி இருவரை சமாளிக்க வேண்டிய நிலை மகனுக்கு உள்ளது.
இருவரையும் சமாளிக்க முடியாமல், பணிச் சூழலுடன் மன அழுத்தம் அதிகரிக்கும் போது பெற்றோரைக் கைவிட வேண்டிய சூழல் அல்லது அருகிலேயே வேறு வீடு பார்த்துத் தனிக் குடித்தனம் அல்லது முதியோர் இல்லம் என்று முடிவுகள் மாறலாம்.
மகள்
மகளை வைத்து இருப்பவர்கள், மகள் திருமணம் ஆகிச் சென்ற பிறகு வயதான காலத்தில் சமாளிப்பது கடினம்.
முன்பு விவசாயம் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அதில் எதோ சுமாரான வருமானம் வந்து கொண்டு இருந்தது, சமாளித்துக்கொண்டு இருந்தார்கள் ஆனால், தற்போது விவசாயம் தனது மூச்சை நிறுத்திக்கொண்டு வருகிறது.
எனவே, ஒரு கட்டத்திற்கு மேல் வாழ்க்கையை ஓட்ட வருமானம் இருக்காது, அதோடு உடலில் வலுவும் இல்லை என்ற நிலையானால் யாருடைய ஆதரவாவது தேவை.
செலவுகள் கண்டபடி உயர்ந்து கொண்டு செல்கிறது. நாளைய விலைவாசியைக் கற்பனையும் செய்ய முடியவில்லை.
தற்போது சில பெண்கள் (உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லையென்றால்) திருமணம் ஆன பிறகு தனிக் குடித்தனம் வந்தால், தங்களது பெற்றோரையும் உடன் அழைத்து வர வேண்டும் என்று வேண்டுகோள் அல்லது நெருக்கடி தருகிறார்கள்.
இந்நிலை ஏற்பட்டால் பெண்ணின் பெற்றோர்களுக்குப் பெரிய சிக்கல் இல்லை.
ஒருவேளை அவரது துணை, “நான் மட்டும் எங்க அம்மா அப்பாவை விட்டு வரணும் ஆனால், நீ அழைத்து வைத்துக்கொள்ளனுமா?” என்று மறுத்தால் சிக்கலாகும்.
இறப்பு
இவையெல்லாவற்றையும் விடப் பெரிய பிரச்சனை வாழ்க்கைத் துணை இறந்தால் ஏற்படும் மோசமான தனிமை மற்றும் சாப்பாடு போன்ற நடைமுறை சிக்கல்கள்.
கணவன் இறந்தால், மனைவியால் சமாளிக்க முடியும் ஆனால், அதே மனைவி இறந்தால் கணவன் நிலை மிகப் பரிதாபம்.
இள வயதில் உடலில் வலு, பணம் இருக்கும் தைரியத்தில், வயது காரணமாகப் பேசித் தீர்க்கக்கூடிய சின்னப் பிரச்சனைகளுக்குக் கூடப் பிரிந்து விடுகிறார்கள்.
ஆணோ பெண்ணோ துணை இல்லாமல் இருப்பதன் வலி 45 – 50 வயதுக்குப் பிறகு தான் தெரியும்.
தனிமை
தனிமை மிகக் கொடுமை. தனிமையில் உள்ளவர்களுக்கு உடல் நிலை சரி இல்லாமல் போனால், பார்த்துக்கொள்ளக் கூட ஒருவரும் இல்லாது, பழக்கமான நபரின் உதவியை எதிர்பார்க்க வேண்டி வரும்.
அவர்களும் துவக்கத்தில் உதவுவார்களே தவிர, தொடர்ச்சியாகக் கவனிக்க முடியாது.
உடல் நிலை சரியில்லையென்றால் ஒருவரின் துணை ரொம்ப அவசியம்.
மருந்து கூட நாமே சமாளிக்கலாம் என்றாலும் சாப்பாடுக்கு என்ன செய்வது? நாளைக்கே மயக்கம் போட்டு விழுந்து விட்டால், யாருக்குத் தெரியும்?
மன உளைச்சல்
தனியாக இருப்பது என்பது 45+ வயதிற்கு மேல் சவாலான விஷயம் குறிப்பாக ஆண்களுக்கு. தனியாக இருந்தால், கண்டதையும் நினைக்கத் தோன்றும்.
வேறு வழிகளில் மனதை திருப்பிக் கொள்கிறவர்களுக்குப் பிரச்சனையில்லை ஆனால், நினைத்துப் புலம்பிக்கொண்டு இருந்தால், மன உளைச்சலால் உடல்நலம் பாதிக்கப்படும்.
பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் பிழைப்புத் தேடி தங்களை விட்டுப் பிரியும் போது மிகவும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
பார்த்துக் கொள்ள யாரும் இல்லை, வருமானம் இல்லை என்ற நெருக்கடியான நிலை வரும் போது மன அழுத்தம் அதிகரிக்கும்.
ஒவ்வொரு செலவிற்கும் எதிர்பார்த்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
வெளிநாடுகளில் ஆதரவற்ற வயதானவர்களின் நிலை நிறைய இருப்பது போல விரைவில் இந்தியாவிலும் அதிகரிக்கும்.
நடைமுறை எதார்த்தம்
பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ இது தான் நிதர்சனம்.
எனவே, பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் கவலையில்லை.
ஆனால், அதே வேறு மாதிரி நிலை என்றால் அதற்குத் தகுந்த மாதிரி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும், மனதை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
எதிர்காலத் தேவைகளுக்கு / செலவுகளுக்குச் சேமிப்பை உறுதி செய்ய வேண்டும்.
பெற்றோரும் நடைமுறை பிரச்சனைகள், பிள்ளைகளின் பண நெருக்கடி, செலவுகள், பணிச் சூழல்கள், உறவுக்குள் ஏற்படும் மனத்தாங்கல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அனுசரித்துச் செல்ல வேண்டும்.
இல்லையென்றால் மன அழுத்தமும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சும்.
வயதானவர்களின் நிலை கேட்கக் கசப்பாக இருந்தாலும் இது தான் உண்மை.
கூட்டுக்குடும்ப முறை அழிந்ததால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் வயதானவர்களும், வருமானம் இல்லாத பெற்றோர்களும் தான்.
இவர்களின் நிலை தான் கேள்விக் குறியாகியுள்ளது!
தாத்தா பாட்டி அன்பு
குழந்தைகள், தாத்தா பாட்டிகளின் அன்பையும் அவர்களின் அறிவுரையையும் இழந்து விட்டார்கள் என்பது இக்கட்டுரைக்குச் சம்பந்தமில்லா கூடுதல் தகவல்.
நம்மை வளர்த்த பெற்றோர்களையும், பாசம் காட்டிய தாத்தா பாட்டிகளையும் புறக்கணிக்காதீர்கள், குறிப்பாக மரியாதைக் குறைவாக நடத்தாதீர்கள்.
பெரியவர்களும் பிள்ளைகளின் நிலை உணர்ந்து அனுசரித்துச் செல்லுங்கள்.
நீங்கள் தற்போது எப்படி நடந்து கொள்கிறீர்களோ அதே தான், நாளை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளால் நடக்கும்.
இந்தக் கட்டுரை யாரையும் குறை கூறவோ, பயமுறுத்தவோ எழுதப்படவில்லை. அவரவர் பொறுப்பு உணர்ந்து அதன் படி நடந்து கொள்ளுங்கள்.
https://www.facebook.com/giriblog
தொடர்புடைய கட்டுரை – “வீடு” தாத்தா
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
இதில் பல கோணங்கள் உள்ளது கிரி.
அறுபது வயதைக் கடந்தவர்களால் நிகழ் கால வாழ்க்கையோடு ஒன்றிப் போக முடியவில்லை.
கிராமத்தில் இருந்து நகர்ப்புறங்களில் திருமணம் முடிந்து வாழ வந்துள்ள பெண்களால் மாமியர் வந்தால் தற்போது நாம் அனுபவிக்கும் சுகமும் சுதந்திரமும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மாமியாரை வெறுக்கின்றார்கள்.
சமீபத்தில் நடிகர் வடிவேல் கொடுத்துள்ள பேட்டியில் உள்ள சிலவரிகள் என்னை ரொம்பவே கவர்ந்தது.
என் அம்மாவை கட்டாயப்படுத்தி சென்னைக்கு அழைத்து வந்தால் கேட் அருகே உள்ள நேபாள் கூர்க்காவுடன் முறைப்பதே அவருக்கு வாடிக்கை. அவன் வெளியே போகக்கூடாது என்பான். இவரோ நான் போய்த்தான் தீருவேன் என்பான். இப்போது நான் கூப்பிட்டாலும் போடா நீயும் உன் ஊரும் என்கிறார் என்று சொல்லியிருந்தார்.
என் அம்மா இங்கே வந்த போது இது போன்று தான் நடந்தது. அவர்களால் அவர்களின் சுதந்திர விசயங்களை தியாகம் செய்ய முடியாத போது பல பிரச்சனைகள் உருவாகின்றது. அதை மீறி பல விசயங்களை நாம் செய்து கொடுத்தால் அவர்கள் வாழ்ந்த மண் இடம் சூழ்நிலையை அவர்களால் விட்டுக் கொடுக்க முடியவில்லை. எனக்கு இதுவே போதும் என்று சொல்லிவிடுகின்றார்கள்.
ஆனால் பேரன் பேத்திகளுடன் அனுசரித்து வாழ விரும்பும் பெற்றோர்களை கட்டாயப்படுத்தி முதியோர் இல்லத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் பல புண்ணியவான்களைப் பார்க்கும் போது?
த்தூ…….. வேறென்ன எழுத?
மனதை தொட்ட பதிவு!
எழுதிய கைகளுக்கு தங்க காப்புதான் போட வேண்டும்.
உண்மை!
உண்மை!
உண்மை!
நன்றி! நல்ல பதிவை நல்கிய நல்ல மனது படைத்தவருக்கு!
நட்புடன்,
புதுவை வேலு
நான் கடந்த எட்டு மாதங்களாக தங்கள் பதிவுகளை தவறாது தொடர்ந்து படித்து வருகிறேன்.
பெரும்பாலான பழைய பதிவுகளை படித்துள்ளேன். யதார்த்தமான எழுத்து நடை என்னை தொடர்ந்து படிக்க வைக்கிறது.
தற்பொழுது “வயதானவர்களின் நிலை என்ன”? என்ற படித்த பின் தங்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.உறவுளைப்பற்றிய தங்களின் அனைத்து பதிவுகளுமே
மிகவும் நன்றாக இருக்கிறது.
தங்களுக்கு எனது மனம் உவந்த வாழ்த்துக்கள்.
விபுலானந்தன்
உங்கள் பதிவு மிகவும் அருமை
ஜெயராமன்
சிங்கையில் பெற்றோர்களுடன் வசிக்க முடியாதவர்களுக்கு, பெற்றோர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் வீடுகளைத் தருகிறார்கள், அவ்வப்போது பார்த்துவர இயலும்.
பிள்ளைகளுடன் வசிக்க வேண்டும் என்கிற எண்ணம் மேற்கத்திய நாடுகளில் வசிப்போருக்கு ஏற்படுவது இல்லை, நம்பாளுங்க தனியே வசிக்க விரும்புவதை தன்னலம் என்பார்கள் ஆனாலும் முதியோர் இல்லாங்கள் பெருகுவதை தவிர்க்க முடியவில்லை.
வெளிநாட்டினரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது யாருக்கும் தொந்தரவின்றி வாழ்வது. சென்டிமென்டுகளை கடந்துவாழ்ந்தால் அனைவருக்குமே நல்லது.
குழந்தைகள், தாத்தா பாட்டிகளின் அன்பையும் அவர்களின் அறிவுரையையும் இழந்து விட்டார்கள். ( எஸ் ப்ரோ, நானும் அந்த குழந்தைகள்ள ஒருவன். )
&
vibulananthan s கமெண்ட்ட நானும் ஷேர் பண்ணிக்குறேன்.
ரொம்பவும் அருமையாக சொல்லி உள்ளீர்கள் கிரி அவர்களே!!! வாழ்த்துகள்!
கிரி… கட்டுரையை ஒன்றுக்கு, இரண்டு, மூன்று, நான்கு முறை படித்து மனம் விசும்பி எழுதும் பின்னூட்டம்.. சிறு வயது முதலே கூட்டு குடும்ப அமைப்பில் வளர்ந்ததால் என்னை பொறுத்த வரை, கூட்டு குடும்பம் தான் சிறந்தது… நிறை,குறைகள் எல்லாவற்றிலும் தான் இருக்கும்…
பாசத்துக்கு முன்பு பணம் உட்பட எந்த ஒன்றும் நிற்காது!!! கால மாற்றம், சூழ்நிலைகள், பொருளாதாரம் என பல்வேறு காரணங்கள் கூறி நமக்கு ஆறுதல் தேடி கொண்டாலும், கூட்டு அமைப்பில் இருந்த பாசம், அரவணைப்பு, அன்பு, நேசம், உழைப்பு, பொறுமை, விட்டு கொடுத்தல் இன்னும் பலவற்றை நீங்கள் தனி குடும்ப அமைப்பில் நிச்சயம் பார்க்க முடியாது…
நவீன பெண்கள் பெரும்பாலும் இந்த வாழ்க்கை முறையை விரும்புவதில்லை.. முக்கிய காரணம் அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கும் என்று…
சுருக்கமாகத் தன்மானத்தை விட்டு சில நேரங்களில் இருக்க வேண்டியது வரும் – (சத்தியமான வார்த்தை…) ஒரு பக்கம் தாய் / தந்தை ஒரு பக்கம் மனைவி , வேலை ரொம்ப கஷ்டம் கிரி, இதை எதிர்கொள்வது… சரியான பக்குவம் இருந்தால் மட்டுமே இதை எதிர் கொள்ள முடியும்… இல்லையெனில் வாழ்வின் திசை மாறி போகும்..
வாழ்வில் பல பெரிய பிரச்சனைகளில் எதிர் நீச்சல் போட்டவர்கள் எல்லாம் திருமணமான பின்பு, குடும்ப பிரச்சனைகளில் முடிவு எடுக்க முடியாமல் திணறி கொண்டு இருப்பது ரொம்ப வேதனையான ஒன்று…
பிரச்சனையை வெளியில் சொல்ல முடியாமலும், உள்ளுக்குள் வைத்து கொள்ள முடியாமலும் மனம் புழுங்கி என் தோளில் அழுத சில நண்பர்களின் கண்ணீர் சூடு இன்னும் அப்படியே இருக்கிறது!!!!
அழகான மனைவி, அன்பான துணைவி.. வாலி சார் உங்க செல்ல அனுமதியோடு ஒரு சின்ன திருத்தம் மட்டும் செய்து சொல்கிறேன்.. அமைதியான மனைவி, அன்பான துணைவி, அமைந்தாலே பேரின்பம் தான்!!! பகிர்வுக்கு நன்றி கிரி… நீண்ட பின்னூட்டதிற்கு மன்னிக்கவும்..
கிரி,
ரொம்ப நிதர்சன உண்மைகள் உள்ள பதிவு இது..அதுவும் “நடைமுறை எதார்த்தம்” top class narration தல…. “அப்பா அம்மா” போட்டோ செமையா இருக்கு ரொம்ப இயல்பான சிரிப்பு..சுத்தி போட சொல்லுங்க 🙂
யாசின்,
உங்க பதிவுல உள்ள ஆதங்கம் நல்லாவே புரியுது…ரொம்ப நல்லா எழுதுறீங்க
– அருண் கோவிந்தன்
அருண், நீங்கள் கொடுக்கும் உற்சாகத்திற்கு நன்றி!!!
அனைவரின் வருகைக்கும் நன்றி
@ஜோதிஜி “மாமியர் வந்தால் தற்போது நாம் அனுபவிக்கும் சுகமும் சுதந்திரமும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மாமியாரை வெறுக்கின்றார்கள்.”
இது சரி தான்.
கட்டாயப்படுத்தி அனுப்ப நினைத்தால் முதியோர் இல்லமே சென்று விடுவது நல்லது என்று நினைக்கிறேன். இல்லையென்றால் இவர்களின் ஏச்சுகளை தினமும் வாங்கிக்கொண்டு நரக வாழ்க்கையாக இருக்கும்.
@கோவி.கண்ணன்
“வெளிநாட்டினரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது யாருக்கும் தொந்தரவின்றி வாழ்வது. சென்டிமென்டுகளை கடந்துவாழ்ந்தால் அனைவருக்குமே நல்லது.”
இந்தியா ஓடிக்கொண்டு இருப்பதே சென்டிமென்ட்டில் தான். இன்னும் சில தலைமுறைகள் செல்லும் போது நீங்கள் எதிர்பார்க்கும் நிலை வந்து விடும்.
அப்போது இது போன்ற கட்டுரைகளின் அவசியமும் இருக்காது.
@யாசின் உங்கள் உணர்வு புரிகிறது ஆனால், உண்மை நிலை வேறாக இருக்கிறது.
“ஒரு பக்கம் தாய் / தந்தை ஒரு பக்கம் மனைவி , வேலை ரொம்ப கஷ்டம் கிரி, இதை எதிர்கொள்வது… சரியான பக்குவம் இருந்தால் மட்டுமே இதை எதிர் கொள்ள முடியும்… இல்லையெனில் வாழ்வின் திசை மாறி போகும்..”
இதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். இதில் என்ன சோகம் என்றால், பக்குவத்தை அடையும் முன்பே பலர் பிரிந்து விடுகிறார்கள்.
புரிந்து கொள்ளும் முன்பே பொறுமையில்லாதவர்கள் பிரிந்து வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறார்கள். இது குறித்து எழுத நினைத்து இருக்கிறேன் ஆனால், இதற்கு இன்னும் ஒரு வருடம் எடுக்கும்.
மனைவியோ கணவனோ அழகாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் துவக்கத்தில் தான். வாழ்க்கை துவங்கிய பிறகு துணை பிரச்சனையில்லாமல் புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரது வேண்டுதலாக இருக்கும். அழகெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.
@அருண் அந்தப் படம் என் அப்பா சிரிக்காமல் நின்றதால், நான் கிண்டலடித்து சிரிக்க வைத்து இயல்பாக எடுக்கப்பட்ட படம் 🙂 .
ஹிந்து, விகடன், போன்ற பத்திரிகைகளில் வரவேண்டிய மகத்தான கட்டுரை….. போட்டு பாருங்கள் வாரம் ஒரு கட்டுரை கேட்பார்கள்………
நண்பரே,
தெளிவான தேவையான கருத்துக்கள்.
இன்றைய தனிகுடித்தன மக்களும் நாளை வயோதிகம் அடைவர் என்ற நிதர்சனம் உணர்ந்தால் ஈகோ விலகும் கூட்டு குடும்ப நேசம் பெருகும்.
எல்லாத்தையும் கடந்து commnetla கொடுத்த இந்த பஞ்ச் ரொம்ப புடிச்சது..
“இந்தியா ஓடிக்கொண்டு இருப்பதே சென்டிமென்ட்டில் தான். இன்னும் சில தலைமுறைகள் செல்லும் போது நீங்கள் எதிர்பார்க்கும் நிலை வந்து விடும்”