காங்கிரஸ் இல்லா பாரதம்

2
காங்கிரஸ் இல்லா பாரதம்

காங்கிரஸ் இல்லா பாரதம் என்பது மோடி நிலை. இதையொட்டி தனது கட்சியைப் பாஜக இந்தியாவெங்கும் வலுப்படுத்தி வருகிறது. Image Credit

ஆனால், தற்போது கதையே வேறாக நடந்துகொண்டுள்ளது. பாஜக செய்ய வேண்டியதை மம்தா செய்துகொண்டுள்ளார்.

என்னவென்று பார்ப்போம்.

காங்கிரஸ் இல்லா பாரதம்

சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியாவைக் காங்கிரஸ் ஆண்டு வந்தது. இடையில் 1977 ஜனதா கட்சி, 1996, 98, 99 வாஜ்பாய் தலைமையில் பாஜக வெற்றிப் பெற்றது.

1989 முதல் 2009 வரை எந்தக்கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறவில்லை. 2014 ல் மோடி தலைமையில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது, 2019 லும் தொடர்ந்தது.

மோடியின் முழக்கம் காங்கிரஸ் இல்லா பாரதம் என்பதாகத்தான் இருந்தது.

'காங்கிரஸ் இல்லா பாரதம் என்பது, காங்கிரஸை இல்லாமல் செய்வதல்ல. இலவசங்கள், சலுகைகள் இருக்காது என்ற அர்த்தத்தில். இலவசங்களை விட நேர்மையான நிர்வாகத்தையே மக்கள் விரும்புகிறார்கள்'

என்று காங்கிரஸ் இல்லா பாரதம் என்பதற்கு மோடி விளக்கம் கூறி இருந்தார்.

ஆனால், மற்ற கட்சிகள் அளவுக்கு இல்லையென்றாலும், பாஜக வும் சில கவர்ச்சி அறிவிப்புகளைத் தேர்தல் நேரத்தில் ஓரிரு மாநிலங்களில் அறிவித்துள்ளது.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி குடும்பக்கட்சியாக இருப்பது அக்கட்சியின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. நேரு குடும்பத்திலிருந்து ஒருவரே கட்சித்தலைவராக இருந்து வருகிறார்.

சோனியா இருந்தவரை கட்சி கட்டுப்பாட்டினுள் இருந்தது, வளர்ச்சிக்கும் அவர் உறுதுணையாக இருந்தார்.

சோனியா ஓய்வு பெற்ற பிறகு ராகுல் தலைமையேற்றார் ஆனால் ராகுலால் கட்சியைத் திறம்பட வழி நடத்தமுடியவில்லை.

இளம் தலைவர்களுக்கு வாய்ப்புக்கொடுக்காமல் வயதானவர்களே பதவியை வைத்துக்கொள்வதும் கட்சியின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது.

எனவே, நாளடைவில் இளைஞர்கள் ஆதரவை காங் இழக்க ஆரம்பித்தது. சுருக்கமாகக் காங்கிரஸ், முதியோர் கட்சி போல நடைபெற்றுக்கொண்டுள்ளது.

பஞ்சாப் காங் உட்கட்சிப் பிரச்சனையில் உள்ளது, அரவிந்த் கெஜரிவால் தனக்குச் சாதகமாக்கி வருகிறார். ராஜஸ்தானிலும் காங் உட்கட்சி பூசல் உள்ளது.

காங்கிரசில் திறமையானவரும் இளைஞருமான சச்சின் பைலட் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்காதது பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வளவு மோசமான நிலையில் கட்சி இருந்தும், காங் தலைமை ஏன் எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது என்பது புரியாத புதிர்.

சோனியா குடும்பம் மட்டுமே தலைமையில் இருக்க வேண்டும் என்றால், காங் அழிவதை தடுக்க முடியாது.

மாநிலங்கள்

இந்தியா முழுக்கக் காங்கிரஸ் கட்சி மக்கள் ஆதரவை இழந்து வருகிறது.

மிகப்பெரிய அளவில் ஆதரவை வைத்து இருந்த வட மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஆதரவை இழந்து வருகிறது. தென் மாநிலங்களிலும் தொடர்கிறது.

தமிழகத்தில் திமுக கூட்டணி இல்லையென்றால், காங்கிரஸ் பூஜ்யம் தான்.

கேரளா, ஆந்திராவிலும் இதே நிலை ஏற்பட்டு வருகிறது. கர்நாடகாவில் மட்டும் இன்னும் மதிப்பை வைத்துள்ளது காரணம், வேறு மாநிலக் கட்சிகள் (ஜனதா தல் தவிர்த்து) பலமாக இல்லாததால்.

மாநில கட்சிகள் காங் கட்சியுடன் கூட்டணி அமைத்து அவர்கள் வளர்ந்து விட்டார்கள், காங் மக்கள் ஆதரவை இழந்து வருகிறது.

ஒவ்வொரு மாநிலமாக ஆதரவை இழந்து வரும் சூழ்நிலையில் தற்போது காங்கிரசுக்கு பெரிய தலைவலியாக மம்தா மாறி வருகிறார்.

தற்போது காங்கிரஸ் இல்லா இந்தியா நிலையைப் பாஜக இல்லாமல், மம்தா முன்னெடுத்து வருகிறார்.

மம்தா

மம்தா மிகப்பெரிய வெற்றியை மேற்கு வங்கத்தில் 2021 ல் பெற்றார். பெரிய வெற்றியைப் பெறும் எனக்கருதப்பட்ட பாஜக, தோல்வியடைந்தது.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் போலக் கம்யூனிஸ்ட் தன் ஆதரவு மக்களைப் பாஜக விடம் இழந்தது. மம்தா தனிப்பெரும் கட்சித்தலைவரானார்.

மம்தா வெற்றியில் (213) பிரசாந்த் கிஷோர் பங்கு மகத்தானது.

பாஜக இரட்டை இலக்கை (99) தாண்டினால் ட்விட்டரை விட்டே விலகி விடுகிறேன் என்று கூறி, அதே போலப் பாஜக (77) தோல்வியை உறுதி செய்தார்.

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு பாஜக க்கு மம்தா மரண அடி கொடுத்து எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி வெற்றி பெற்றதால், உற்சாகமானார்.

இதன் பிறகு பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் மேலும் ஐந்து வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

காங்கிரஸ் & மம்தா

பிரசாந்த் கிஷோர் ஆலோசனையாலோ அல்லது தனக்கே பிரதமர் வேட்பாளர் தகுதி இருப்பதாக மம்தா நினைத்தாரோ என்னவோ காங்கிரஸிடம் இதுகுறித்துப் பேசியதாகச் செய்திகளில் வந்தது.

ஆனால், காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இதனால் காங்கிரஸ் தேறாது என்று பிரசாந்த் கிஷோர் விமர்சனம் செய்தார்.

இதன் பிறகு தனது கட்சியை விரிவுபடுத்துவதில் மம்தா தீவிரமானார். கோவா, திரிபுரா என்று அதிரடி காட்டி காங்கிரசிலிருந்து பலரை தனது கட்சிக்கு இழுத்தார்.

தற்போது மேகாலயாவில் காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் காங் முதல்வர் உட்பட 12 பேரைத் தனது கட்சிக்கு இழுத்து விட்டார்.

இது தொடர்ந்து கொண்டுள்ளதால், காங்கிரஸ் கட்சி மிகப்பெரியளவில் ஆட்டம் கண்டுள்ளது.

பாஜகவைத் தோற்கடித்த மம்தா உட்பட மற்ற கட்சிகளை ராகுல் ஆதரித்துப் பேசித் தற்போது அவர்களே காங்கிரஸ் கட்சிக்கு வில்லனாகி விட்டார்கள்.

தற்போது பாஜக எதுவும் செய்யாமலே காங்கிரஸ் இந்தியா முழுக்கப் பெரும் ஆபத்தில் உள்ளது.

2024 பாராளுமன்றத் தேர்தல்

அடுத்தப் பாராளுமன்றத்தேர்தல் 2024 ம் ஆண்டு நடப்பதால், மம்தா தன்னைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த தனது கட்சியை மற்ற மாநிலங்களிலும் பலப்படுத்தி வருகிறார்.

இது சரியாக வந்தால், இவர் பிரதமர் வேட்பாளராகப் பாஜக க்குப் போட்டியாக மற்றவர்கள் ஆதரிக்கலாம். ஒருவேளை மற்றவர்கள் ஆதரவு இல்லையென்றால், காங் திரும்பக் காட்சியில் வரும்.

எதிர் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாதது பாஜக க்குச் சாதகமாக உள்ளது.

மம்தாவின் வெற்றியில் முஸ்லிம்களின் பங்கு முக்கியமானது. காரணம், தேசிய சராசரியை விட மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் சராசரி அதிகம்.

எனவே, இவருடைய மேற்குவங்க மாநில வெற்றியை வைத்து மற்ற மாநிலங்களின் வெற்றியைத் தீர்மானிக்க முடியாது.

தமிழகத்தில் காங்கிரசை கழட்டி விட்டு மம்தாவை ஆதரிக்கத் திமுக தயங்காது. ஏற்கனவே காங்கிரஸை கழட்டி விடச் சமயம் பார்த்துக்கொண்டுள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ்க்கு நிரந்தர வாக்குகள் உள்ளன ஆனால், மம்தாக்குக் கிடையாது. எனவே, திமுக என்ன முடிவெடுக்கும் என்று ஊகிக்க முடியவில்லை.

காங்கிரஸ் தலைமை தனது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வரவில்லை என்றால் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது என்பது மட்டும் உறுதி.

யாருக்கு இலாபம்?

மம்தா மற்ற மாநில கட்சிகளின் ஆதரவை பெற்று ஒருவேளை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டாலும் பாஜக வை 2024 ல் வெற்றிகொள்வது கடினமானது.

ஏனென்றால், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற அதிக MP உள்ள இடங்களிலும் குஜராத் போன்ற இடங்களிலும் பாஜக வலிமையாக உள்ளது.

மஹாராஷ்ட்ராவிலும் பாராளுமன்றத்தேர்தலில் பாஜக அதிக இடங்களைப் பெறவே வாய்ப்பு அதிகம்.

இதில் மாற்றம் வந்தால் மட்டுமே பாஜக தோல்வியடைய வாய்ப்புள்ளது.

தேர்தலுக்குத் தேர்தல் மாறும் மக்கள் மன நிலையில் எதிராக வாக்களித்தால், பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் பாதிப்பு ஏற்படலாம்.

2024 பாராளுமன்றத் தேர்தலுக்குக் கிட்டத்தட்ட 2+ வருடங்கள் உள்ளதால், என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம்.

ஒருவேளை காட்சிகள் மாறி மம்தா வருகிறார் என்றே வைத்துக்கொள்வோம். மம்தாக்குத் தற்போது (2021) வயது 66 இதன் பிறகு எவ்வளவு வருடங்கள் அரசியலைத் தொடர முடியும்?!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முழுக்க மம்தா என்ற ஆளுமையை நம்பியுள்ளது. அவருக்குப் பிறகு யாருமே இல்லை.

எனவே, தொலைநோக்கு அளவில் பார்த்தால், இதனால் பாஜக வே பலனடையும். தேசிய அளவில் பெரிய எதிர்க்கட்சி என்ற ஒன்றே பாஜக க்கு இல்லாமல் போய் விடும்.

பாஜக

ஒரு தலைவரை நம்பி பாஜக இல்லை, குடும்பக் கட்சியும் கிடையாது. மோடிக்கு பிறகு தடுமாறினாலும் வேறொரு தலைவரை அவர்களால் கொண்டு வர முடியும்.

தலைமை கூறினால், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சர்ச்சை, மறு பேச்சு இல்லாமல் பதவி விலகுகிறார்கள் முதல்வர் உட்பட.

யோகி யாரென்றே ஐந்து வருடங்களுக்கு முன்பு பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது ஆனால், அவரால் முக்கியத் தலைவராக உருவெடுக்க முடிகிறது.

தமிழகத்தில் 37 வயது அண்ணாமலைக்கு மாநிலத்தலைவர் பதவி கொடுக்கிறார்கள். அதை மூத்த தலைவர்களும் ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்.

பாஜக என்ற கட்சி வெற்றி தோல்விகளைக் கடந்து நீண்ட காலம் நிலைத்து நிற்கும் காரணம் அதன் கட்டுக்கோப்பான தலைமை, கட்டமைப்பு, தனியொருவரை நம்பி கட்சியில்லாதது.

மோடி கூறிய அர்த்தம் வேறு என்றாலும், மம்தா தற்போது காங்கிரஸ் இல்லா பாரதம் என்ற நிலையை அடைய பாஜக க்கு உதவிக்கொண்டுள்ளார்.

மாநில கட்சிகளின் உதவியால் எப்படியோ 2024 ஆட்சியை மம்தா ஒருவேளை பிடித்தாலும் எதிர்காலத்தில் தொடருவது சந்தேகமே, காரணம் வயது.

மம்தா 2024 ஆட்சியைப் பிடிக்க முடியாமல் பாஜக வெற்றி பெற்று விட்டால், 2024 லியே பாஜக தேசியளவில் வலிமை மிகுந்த ஒரே கட்சியாகி விடும்.

இந்தியாவில் கம்யூனிசம் மறைந்து வருவது போல (கேரளா தவிர்த்து), தன் தவறுகளைச் சரி செய்து, புதிய தலைவர்களை உருவாக்கத் தவறினால் காங்கிரஸ் என்ற கட்சியும் காணாமல் போய் விடும்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. சரியான கட்டுரை. எந்த கட்சிக்கும் வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்க கூடாது. பாஜக அரசு விலைவாசியை கட்டுப்படுத்த தவறிவிட்டது. காஸ் சிலிண்டர் மானியம் ரத்து. ரயில் மானியம் ரத்து. தொடர் பெட்ரோல் விலை உயர்வு. காஸ் சிலிண்டர் விலை உயர்வு. என்று மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது இதை யாரும் மறுக்க முடியாது. வரும் தேர்தலில் பாஜக 2019 இல் பெற்றது போல அதிரிபுதிரி வெற்றி பெற முடியாது. ஆனால் பாஜகவை தோற்கடிக்க இங்கு எந்த கட்சிக்கும் பலமில்லை. அதனால் கூட்டணி கட்சி ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கவே வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன். பாஜகவிற்கு மீண்டும் அறுதி பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தால் தான் நாட்டு மக்களுக்கும் நல்லது. தொடர் வெற்றி யாரையும் புத்தியை தடுமாற வைத்து விடும். நாம் செய்ததை எல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் இனி நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்து அடுத்து ஆட்சியில் கடுமையாக விலைவாசி உயர்வை ஏற்றி விடுவார்கள். இது நடக்க கூடாது என்றால் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் இருப்பதே மக்களுக்கு நல்லது.

  2. @ஹரிஷ்

    எரிபொருட்கள் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது.

    இது குறித்து விரிவாக எழுதியுள்ளேன். இதனால் என்ன பிரச்சனைகள் வருகிறது என்று https://www.giriblog.com/central-bjp-govt-price-controversy/

    அறுதிப்பெரும்பான்மை நீங்கள் கூறுவது ஒருவகையில் சரி என்றாலும், இன்னொரு வகையில் இந்தியாவை நம்பி முதலீடுகள் வருவதும் குறையும்.

    நிச்சயமற்றதன்மை இருந்தால், முதலீடு செய்ய யோசிப்பார்கள். நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்.

    கடந்த தேர்தலில் நீங்கள் நினைத்தது போலவே நினைத்தேன் ஆனால், 2014 தேர்தலை விட கூடுதல் 2019 ல் இடங்கள் பெற்றார்கள்.

    இந்தமுறையும் அறுதிப் பெரும்பான்மை பெற வாய்ப்புள்ளது.

    எரிபொருட்கள் (Gas, Fuel, FasTag) விலை / கட்டண உயர்வாலே பணவீக்கம் ஏற்படுகிறது. இதை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறுவது கடுப்பை ஏற்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here