இந்த முறை எழுத ஏராளம் இருக்கிறது, மூன்றாவது பகுதிக்குப் போக விருப்பமில்லாததால், இதோடு முடித்துக்கொள்கிறேன்.
மருத்துவப் பரிசோதனை
ஆண்டு முழு உடல் மருத்துவ பரிசோதனையை இனி ஒவ்வொரு பொங்கல் விடுமுறையின் போதும் செய்து விடலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
ஒவ்வொரு விடுமுறையில் செல்வதற்கும், சரியான வழிமுறையாகவும், தொடர்ந்து ஒரு வருட இடைவெளியில் பரிசோதிக்கச் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நானும் மனைவியும் பரிசோதனை செய்தோம். ஏற்கனவே இங்கே சென்று கொண்டு இருப்பதால், இம்மருத்துவமனையையே தேர்வு செய்தேன். கட்டணம் ₹4,500.
கால்சியம் குறைவாக உள்ளது என்பதைத்தவிர வேறு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பிரச்சனைகள் எதுவுமில்லை. Reading Glass அணிய அறிவுறுத்தப்பட்டது.
ஒவ்வொரு இடத்துக்கும் அவர்களே அழைத்துச் சென்று அனைத்தையும் ஏற்பாடு செய்கிறார்கள், முன்னுரிமையும் கொடுக்கிறார்கள்.
பரிசோதனைக்கு முன்பு வந்த ஜூனியர் மருத்துவரும் மிக அக்கறையாகப் பொறுமையாக அனைத்தையும் கேட்டுக்கொண்டார்.
பரிசோதனை முடிந்த பிறகு மூத்த மருத்துவர் ராமசாமி அவர்கள், பிரச்சனைகளுக்கு ஏற்ப மருத்துவ ஆலோசனையை வழங்கினார். ஆக மொத்தத்தில் சிறப்பான சேவை.
முன்பதிவு செய்ய வேண்டும் ஆனால், நாங்கள் முன்பதிவு செய்யவில்லை. இருப்பினும் எங்களை எச்சரிக்கை செய்து கோபியிலிருந்து வந்ததால் அனுமதித்து, அடுத்தமுறை முன்பதிவு செய்து வர அறிவுறுத்தினார்கள்.
எனக்கு ஒரு ராசி உள்ளது, எங்கே சென்றாலும் அறிமுகம் இல்லாதவர்களும் அன்பாகவே நடந்து கொள்வார்கள் 🙂 . அரிதாக மட்டுமே கசப்பான அனுபவம்.
ராசிபுரம்
பள்ளி நண்பர்களைப் பார்க்க ராசிபுரம் சென்றேன், பார்த்த பிறகு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் செல்லலாம் என்று நண்பர்கள் கூறியதால் கோவில் சென்றோம்.
ஆனால், ஆஞ்சநேயர் அலங்காரம் நடப்பதால் மாலை 7 மணிக்குத் தான் திரை விலக்குவதாக அறிவிப்பு இருந்ததால், பார்க்காமலே கிளம்பி விட்டோம்.
நான் கற்பனை செய்து இருந்தது, கோவில் இடம் பெரியதாக நகரின் வெளிப்பகுதியில் இருக்கும் என்று ஆனால், நகரின் உள்ளே வீடுகள், கடைகளுக்கு நடுவே குறுகிய இடத்தில் இருந்தது.
சேலம் – கரூர் தேசிய நெடுஞ்சாலை அற்புதமாக உள்ளது. எவ்வளவு நேரம் பயணித்தாலும் சலிப்புத் தெரியாது, சாலை மிகத்தரமாக இருந்தது.
வழியில் பெட்ரோல் பங்கில் ஊழியர்கள் காரைத் துடைத்துச் சுத்தம் செய்கிறார்கள்.
கேவலமான தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்று கோவை நெடுஞ்சாலை. சுங்கக்கட்டணம் ₹115 கட்டணம் வசூலித்தும் கொடூரமான சாலையை வைத்துள்ளார்கள்.
இச்சாலையைத் திட்டாதவர்களே இருக்க மாட்டார்கள் ஆனால், எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. கிராமத்து சாலை கூட இதை விட 100 மடங்கு நன்றாக இருக்கும்.
சேலம் – பெருமாநல்லூர் முன்பு வரை மட்டுமே சாலை நன்றாக இருக்கும். அதன் பிறகு கோவை வரை படுகேவலமாக இருக்கும்.
இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு நரக வேதனை.
U Turn
கோவையில் தற்போது விமானநிலையம் அருகே இருந்து அண்ணா சிலை வரை உயர்மட்ட பாலம் அமைத்து வருகிறார்கள்.
தூண்கள் பெரும்பாலும் அமைத்து விட்டார்கள். தற்போது தமிழகப் பெரிய நகரங்களில் பின்பற்றப்படும் U Turn முறையை இங்கேயும் பயன்படுத்துகிறார்கள்.
அதாவது சிக்னலில் நிற்காமல் கடந்து சென்று U Turn போட்டு வந்து விட வேண்டும். இதன் மூலம் சிறிது தொலைவு செல்ல வேண்டும் என்றாலும், சிக்னலில் நிற்க வேண்டிய அவசியமில்லை. இது எளிதாக உள்ளது.
சென்னையிலும் தேனாம்பேட்டை உட்படப் பல முக்கியச் சிக்னலில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பரிசோதனை முயற்சியில் உள்ளது என்று நினைக்கிறேன்.
கடைகள்
ஒவ்வொரு ஆண்டும் Branded கடைகள் புதிதாகக் கோபியில் வந்துகொண்டே உள்ளன. தற்போது Lenskart வந்துள்ளது, Zudio வரப்போகிறது.
மருத்துவர் அறிவுறுத்தியபடி Reading Glass வாங்கலாம் என்று புதிதாகத் துவங்கிய Lenskart ல் ஆர்டர் கொடுத்தேன் ஆனால், ஏதோ தொழில்நுட்ப கோளாறு காரணமாக Order Register ஆகவில்லை.
எனவே, பணத்தைச் சில நாட்களில் (Credit Card Payment) திருப்பிக்கொடுத்து விட்டார்கள். சென்னையிலேயே வாங்கி இருப்பேன் ஆனால், நம்ம ஊரு கடைக்கு ஆதரவு கொடுப்பமே என்று.. 🙂 .
உணவகங்கள்
உணவகங்கள் கணக்கு வழக்கு இல்லாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, எப்படி இவர்களுக்குக் கட்டுப்படியாகிறது என்று புரியவில்லை.
அதை விட எப்படி எல்லோரிடமும் பணமுள்ளது என்று புரியவில்லை, பல கடைகள் எப்போது பார்த்தாலும் கூட்டமாக உள்ளது.
சென்னையைப் போலவே தின்றே சொத்தை அழித்து விடுவது போல எல்லோரும் வெறித்தனமாக உணவகங்களில் சாப்பிடுகிறார்கள்.
கோபியின் பிரபலமான Eebees பேக்கரி ஒரு உணவகத்தைத் திறந்துள்ளார்கள். பிரபலமான ஹோட்டலான எமெரால்டு ஒரு உணவகத்தைத் திறந்துள்ளார்கள்.
ஏதாவது ஒரு உணவகத்துக்குக் குடும்பத்தோடு செல்லலாம் என்று இருந்தேன் ஆனால், பொங்கல் செலவே அதிகமாகி விட்டதால், தவிர்த்து விட்டேன்.
உறவினர்
மனைவி பக்க வயதான உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லாததால், அவரைப் பார்க்க மனைவியுடன் சென்று இருந்தேன், காது சரியாகக் கேட்காது.
சிறு வயதில் எப்படி உழைத்தார், வியாபாரத்துக்காக அந்தக்காலத்திலேயே மும்பை சென்று எப்படி வளர்ச்சி அடைந்தார் என்பவை உட்பட அனுபவங்களைக் கூறினார்.
அவர் கூறியது உண்மையாகவே சுவாரசியமாக இருந்ததாலும், வயதானவர்களிடம் பேசுவது எனக்குப் பிடித்தமானது என்பதாலும் ஆர்வமாகக் கேட்டேன்.
உரையாடல் 20 நிமிடங்களைக் கடந்தது. முடிவில் ‘உங்களுடன் பேசியது எனக்கு சந்தோசம், நீங்கள் கூறியது ரொம்பச் சுவாரசியமாக இருந்தது‘ என்று அவர் காது அருகே சென்று கூறியதும் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
80+ வயதாக இருந்தாலும் இளையவர்களை வாங்க போங்க என்று தான் கொங்கு பகுதியில் பெரியவர்கள் அழைப்பார்கள். இவரும் என்னை அவ்வாறே அழைத்தார்.
உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்கள்.
சென்று பார்த்த போது சில நாட்கள் முன்பு பேசியதை நினைவு வைத்து முக மலர்ச்சியுடன் ‘என்கிட்டே ரொம்ப நல்லா பேசினார்‘ என்று என்னை அவரது குடும்பத்தினரிடம் கூறினார், காது கேட்காது என்பதால், பலர் பேசத் தவிர்ப்பதால்.
அதோடு ‘உங்க கிட்ட பேசியது எனக்கு ரொம்பச் சந்தோசங்க!‘ என்று கூறியது அளவில்லா மனநிறைவை எனக்கு அளித்தது, தற்போது காலமாகி விட்டார்.
பலமுறை எழுதியது தான், திரும்பவும் கூறுகிறேன். வயதானவர்களை மதியுங்கள், அவர்களுடன் உரையாடுங்கள், காலில் விழுந்து வணங்குங்கள், அன்பு பாராட்டுங்கள்.
திருட்டு
கிராமத்துக்குச் சென்று இருந்த போது பள்ளி ஆசிரியர் செல்வராஜ் அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டேன். இவரின் மகன் பூபதி பள்ளி வகுப்புத் தோழன்.
அவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது பக்கத்து வீட்டில் வயதானவர்களிடம் பொய் கூறி ஏமாற்றிப் பணத்தைப் பெற்று சிலர் ஏமாற்றி விட்டதாகக் கூறினார்.
ஒரு வாரம் முன்பே ஒரு பெண் வந்து அவர்களிடம் பேசி விவரங்களை வாங்கிக்கொண்டு அவர் அனுப்பிய இன்னொரு நபர் ஜோசியம் சொல்வது போல ஏற்கனவே தெரிந்து விவரங்களைக் கூறி இருக்கிறார்.
இவருக்கு எப்படித் தெரியும்?! என்று வியந்து அவர் பேசியதை நம்பி அந்த முதியவர்களும் வெள்ளி மோதிரமும், பணத்தையும் கொடுத்து ஏமாந்துள்ளார்கள்.
இதே போலக் கோபியில் சாய் பாபா பெயரில் சிலர் அவர் படத்தை வைத்துக்கொண்டு வண்டி ஒட்டி வருவார்கள், சென்னையிலும் பார்த்துள்ளேன்.
அவர்களும் பெண்களிடம் பணம் கொடுக்கவில்லை என்றால், உங்கள் வீடு அப்படி ஆகிடும், மந்திரம் போடுவேன் என்று மிரட்டியதால், பணத்தைக் கொடுத்துள்ளனர்.
எனவே, பொதுமக்கள் போலிகளிடம் ஏமாறாமல் முடிந்தால், மூக்கில் ரத்தம் வரும்படி நங்குன்னு குத்தி இந்தப்பக்கமே வராத மாதிரி அனுப்பவும் 🙂 .
சிலர் உண்மையான பக்தர்களாகக் கூட வண்டி ஓட்டி வரலாம். அவர்களும் இவர்களைப் போன்ற போலிகளால் பாதிப்படைகிறார்கள்.
இலந்தை வடை
இலந்தை வடை இடித்துத் தயாராக உள்ளது, இனி வடை தட்டி காய வைக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி 🙂 . அக்கா செய்து வைப்பார்கள்.
வடை தட்டும் முன்பே கால்வாசி பாத்திரத்தைக் காலி செய்தாகி விட்டது. அடுத்த மாதம் ஒரு திருமணத்துக்குக் கோபி செல்ல வேண்டி இருப்பதால், வரும் போது எடுத்து வந்து விடுவேன்.
இலந்தை வடை இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று தோன்றிக்கொண்டே இருக்கும். நாக்கெல்லாம் உரிந்து விட்டாலும், நிறுத்த மனம் வராது.
இதிலொரு வசதி என்னவென்றால், சிலருக்கு சுவை, வாசனை பிடிக்காது என்பதால், பங்குக்கு வர மாட்டார்கள் 🙂 .
இலந்தை வடை சாப்பிட்டு இருக்கீங்களா?
கடந்த 10 நாட்களாக விடுமுறையில் இருந்ததால் தளத்தில் எதையும் எழுதவில்லை என்றாலும், இத்தள WhatsApp Channel ல் அவ்வப்போது செய்திகள், துணுக்குகளை பகிர்ந்து வந்தேன், இது எளிதாக உள்ளது.
எனவே, தொடர்பில் இருக்க நினைப்பவர்கள் இணையலாம் 👇.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
உணவகங்கள் : கிரி எனக்கும் இதன் மர்மம் என்னவென்றெ புரியவில்லை.. ஆனால் சிலர் தொடங்குகின்றனர் வெகு சீக்கிரம் முடியும் விடுகின்றனர்.. பின்பு மீண்டும் வேறு யாரவது திறக்கின்றனர்.. எங்கள் ஊர் பகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புதிய உணவகம் (அரபிக்) திறக்கப்பட்டது..
கடுமையான கூட்டம்.. வியாபாரம்.. நான் ஊருக்கு சென்ற போது நண்பர்களுடன் செல்லும் போது மிகுந்த ஆச்சரியம்.. அதிகமாக உணவுக்கு அரபிக் பெயரை வைத்து வேறு ஏதோ ஒன்று தயார் செய்து கொடுக்கின்றனர்.. உள்ளூர் மக்களும் என்ன ஏது சென்று தெரியாமலே சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர்..
உறவினர் : மனமுருகி இந்த பத்தியை படித்தேன்.. நிச்சயமாக இது போன்று வயதானவர்களுடன் நேரத்தை செலவு செய்வது, அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். பரபரப்பான சுழலில் அவர்களுடன் நேரத்தை செலவு இங்கு செய்ய யாரும் தயாராக இல்லை.. குறிப்பாக இளைய சமூகத்தினர். உங்கள் செயல் பாராட்டுக்குரியது..
திருட்டு : இதை படிக்கும் போது வருத்தமாகவும், அதே சமயம் ஆச்சரியமாகவும் இருக்கிறது.. தினசரி செய்திகளில் எவ்வளவு வருகிறது.. அப்படி இருந்தும் ஏமாறுவது இன்னும் வியப்பை தருகிறது.. திருடர்கள் இன்னும் திறமையுடன் செயல்படுகிறார்கள்.. நாம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.. திருடர்களை என்றும் திருத்த முடியாது.. ஏனெனில் இது அவர்களின் தொழில்..
இலந்தை வடை : இதை பற்றி முன்பும் கூறி இருக்கீங்க.. (இதிலொரு வசதி என்னவென்றால், சிலருக்கு சுவை, வாசனை பிடிக்காது என்பதால், பங்குக்கு வர மாட்டார்கள். ) இந்த லிஸ்ட்ல நிச்சயம் நான் இல்லை கிரி.. ஆனால் எங்கள் பகுதியில் இந்த தின்பண்டம் கிடையாது.. அதனால் இதுவரை சுவைத்ததில்லை..
நீங்கள் செய்யும் தின்பண்டங்களில் கொழுக்கட்டை மிகவும் விருப்பமான ஒன்று.. குழம்பு வகைகளில் வத்தக் குழம்பும், சாம்பாரும் மிகவும் பிடித்தமானது.. கல்லூரி நாட்களில் சில சமயம் நண்பர்களுடன் போட்டி போட்டு கொண்டு சாப்பிடுவதுண்டு.. அப்போது மெலிதாக இருந்தாலும் ஒரு முறை கூட போட்டியில் தோற்றதில்லை..
@யாசின்
“கிரி எனக்கும் இதன் மர்மம் என்னவென்றெ புரியவில்லை.. ஆனால் சிலர் தொடங்குகின்றனர் வெகு சீக்கிரம் முடியும் விடுகின்றனர்.”
உண்மை தான். நானும் கவனித்துள்ளேன்.
“பரபரப்பான சுழலில் அவர்களுடன் நேரத்தை செலவு இங்கு செய்ய யாரும் தயாராக இல்லை.. குறிப்பாக இளைய சமூகத்தினர்.”
பலருக்கு பொறுமையில்லை. குழந்தைகளுக்கு பெரியவர்களின் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் உணர்த்த தவறுகின்றனர்.
“இந்த லிஸ்ட்ல நிச்சயம் நான் இல்லை கிரி.. ஆனால் எங்கள் பகுதியில் இந்த தின்பண்டம் கிடையாது”
இப்பெல்லாம் பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் இது கிடைக்கிறது.
“தின்பண்டங்களில் கொழுக்கட்டை மிகவும் விருப்பமான ஒன்று.. குழம்பு வகைகளில் வத்தக் குழம்பும், சாம்பாரும் மிகவும் பிடித்தமானது.. ”
எனக்கும் கொழுக்கட்டை பிடிக்கும். ரொம்ப இனிப்பாகவும் இல்லாமல், அதே நேரத்தில் சுவையாகவும் இருக்கும்.
“அப்போது மெலிதாக இருந்தாலும் ஒரு முறை கூட போட்டியில் தோற்றதில்லை..”
🙂