மத்திய புரீஸ்வரர் கோவில் விழாவுக்குச் சென்ற போது பள்ளி நண்பனைக் கிட்டத்தட்ட 30+ வருடங்களுக்குப் பிறகு சந்தித்தேன். Image Credit
பள்ளி ஆசிரியர் செல்வராஜ் அவர்களின் மகன்.
பள்ளி நண்பர்கள் (1 – 5) எவரும் நினைவில் இல்லை. இவன் மற்றும் இன்னொரு நண்பன் சத்யநாராயணன் மட்டுமே நினைவில் உள்ளார்கள்.
படிப்பில் சத்யநாராயணன் எப்போதும் முதல் ரேங்க். இரண்டாவது பூபதி, தற்போது மூவருமே ஐடியில் உள்ளோம்.
பூபதி தற்போது 3 மாத விடுமுறையில் பல வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து ஊருக்கு வந்துள்ளான். சிலரின் முகம் மாறுவதில்லை, இவனைப் பார்த்ததும் கண்டுபிடித்து விட்டேன்.
நிழற்படம் / செல்ஃபி எடுக்கும் வழக்கம் இல்லாததால், இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு சந்தித்தும் ஒரு நிழற்பட எடுக்க இருவருமே மறந்து விட்டோம். இனி எவ்வளவு வருடங்கள் கழித்துப் பார்ப்பேன் எனத் தெரியவில்லை.
நான் சமூகத்தளங்களில் இல்லை ஆனால், Blog எழுதுவேன் என்று கூறி இருக்கிறேன். ஒருவேளை எப்போதாவது நினைவு வந்து படித்துத் தற்போதைய என் சூழ்நிலையைத் தெரிந்து கொள்ளலாம் 🙂 .
Blog படித்துப் பலர் என் தற்போதைய நிலையைத் தெரிந்து கொள்கிறார்கள் ஆனால், எனக்குத்தான் எவர் குறித்தும் விவரங்கள் தெரிவதில்லை.
கோபியில் நீச்சல்குளம்
கோபி வேற லெவலில் போய்க்கொண்டு இருக்கிறது. கோபியில் நீச்சல்குளமா?! என்று வியப்பாக இருந்தது. பசங்க இருவருக்கும் விடுமுறை என்பதால், நீச்சல் வகுப்பு செல்லக் கேட்டார்கள்.
வினய் ஓரளவுக்கு 15 நாட்களில் கற்றுக்கொண்டான், யுவன் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை.
கேட்டுட்டே இருந்தார்கள் என்று ஒருநாள் நானும் நீச்சலுக்குச் சென்றேன். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு நீச்சலடிக்கிறேன்.
ஒருமுறை பழகினால் மறக்காத வழக்கத்தில் நீச்சலுக்கு முதன்மையான இடம். ஒருமுறை பழகி விட்டால், எவ்வளவு வருடங்கள் தொடர்பில் இல்லையென்றாலும் தானாக நீச்சல் வரும்.
தலைக்கு 100 ருபாய், ஒரு மணி நேரத்துக்கு. மழையுடன் நீச்சல் அடித்தது செமையா இருந்தது.
இங்கே சென்ற போது உறவினர் வந்து இருந்தார். அவரது பெண்ணை நீச்சலுக்கு அழைத்து வந்து இருந்தார்.
அவருக்கு என்னைத்தெரிந்தது எனக்கு அவரைத் தெரியவில்லை ஆனால், அவரே அறிமுகப்படுத்திக் கொண்டு ரொம்ப நாள் பழகியது போலப் பேசினார். எனக்குத் தான் தெரியாதது சங்கடமாக இருந்தது.
இவரை நான் பார்த்ததில்லை. எங்க வீட்டுப் பக்கம் உறவினர்களையே பலரை தெரியாது, இவர் மனைவி பக்கம் உறவினர். பின்னர் விளக்கியதுமே எப்படிச் சொந்தம் என்று புரிந்தது.
என்னைப் பார்த்துப் பேசியவுடன் எனக்குப் பின்னாடி யாரும் இருக்கிறார்களா என்ற சந்தேகம் வந்து விட்டது. சூர்யவம்சம் பேருந்து நகைச்சுவை மாதிரி குழம்பி விட்டேன்.
இவர் கணவர் giriblog படிப்பார் என்று கூறினார். ஒருவேளை அவர் என்னைப் பற்றி முன்பே கூறி இருந்து இருக்கலாம். எனவே, ஓரளவு புரிந்து வைத்து இருப்பாரோ என்னவோ 🙂 .
சாலை அகலப்படுத்தும் பணி
ஈரோடு முதல் சத்தி வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் தேசிய நெடுஞ்சாலை பணி நடந்து வருகிறது. கிட்டத்தட்ட ஈரோடு – கோபி பாதிப் பணிகள் முடித்து விட்டார்கள்.
கோபி நகரப்பகுதியில் இனி மேல் தான் அகலப்படுத்தப்போகிறார்கள். இங்கே அகலப்படுத்தும்போது பல கடைகள் செம்ம அடி வாங்கும். சில இடங்களில் மிகக் குறுகலாக உள்ளது.
அகலப்படுத்தினால் போக்குவரத்துக்கு எளிதாக இருக்கும். கோபி – சத்தி சாலையில் உள்ள மரங்கள் அனைத்தும் வெட்டப்படும் என்பது கடுமையான வருத்தம்.
சாலை அகலப்படுத்தும் போது மழைநீர் கால்வாய் இருபுறமும் அமைப்பதால், சாலை ஆக்கிரமிப்பு இனி செய்ய முடியாது. செய்தாலும், எளிதாகத் தெரிந்து விடும்.
இப்பணியால் சாலைகள் மேடு பள்ளமாக இருப்பதால், ஈரோடு ரயிலுக்குச் செல்வதற்கு மாலையில் முன்பே கிளம்ப வேண்டியதாக உள்ளது.
UPI
கோபியில் UPI பெரும்பாலான கடைகளில் வந்து விட்டது பெரு மகிழ்ச்சி.
ஊருக்குச் சென்றால் பெரும்பாலும் வேட்டி தான் கட்டுவேன். வேட்டி என்பதால், பர்ஸ் வைக்க முடியாது. மொபைல், பர்ஸ் இல்லாமல் எங்கும் செல்ல மாட்டேன்.
இந்த இரண்டும் இல்லையென்றால் எனக்குக் கை உடைந்தது போல. எங்கு இருந்தாலும் எத்தகைய சூழ்நிலையிலும் ஆபத்பாந்தவனாக இருப்பது இவையிரண்டும் தான்.
தற்போது அனைத்து இடங்களிலும் UPI இருப்பதால், கொஞ்சம் பணம் ஒரே ஒரு கிரெடிட் கார்டு மட்டும் எடுத்துக்கொள்வதால், பர்ஸ் இல்லாமல் சமாளிக்க முடிகிறது.
நான் சென்ற நீச்சல் குளம், மருந்துக்கடை, காபி கடை, பழமுதிர் நிலையம், ஜெராக்ஸ் கடை, உணவகம், சலூன் உட்பட அனைத்துக் கடைகளிலும் இருந்தது.
கள்ளிப்பட்டி பிரிவு அருகே உள்ள பண்ணைப்பால் கடையில் மட்டுமே UPI இல்லை. அடுத்தமுறை செல்லும் போது இருக்கும் என்று நம்புகிறேன் 🙂 .
வீட்டுக்குப் பெயிண்ட் அடித்தோம். பெயிண்ட் வாங்கிய கடையில் பணமாக வாங்க மாட்டோம், GPay தான் என்று உறுதியாகக் கூறி விட்டார்கள்.
இப்படியொரு கடையில் இதுபோலக் கூறுவதை முதல்முறையாகப் பார்க்கிறேன்.
வீட்டுப் பராமரிப்புப் பணிகளுக்கு எதிர்பார்த்ததை விட 40% குறைந்த செலவே ஆனது. முழுக்க மனைவியின் மேற்பார்வையில் நடந்தது.
அனைவரிடமும் பேசி விலையைக் குறைத்து பணியையும் தரமாகச் செய்து வைத்து இருந்தார். ஒரு பொறுப்பைக் கொடுத்தால், மிகச்சிறப்பாகச் செய்து முடித்து விடுவார், மிகத்திறமையானவர். வீண் செலவு செய்யவே மாட்டார்.
டிவிஎஸ் ஜூபிடர்
டிவிஎஸ் ஜூபிடர் வாங்கி மூன்று வருடங்களாகி விட்டது ஆனால், புது வண்டி போலவே பளபளப்பாக உள்ளது.
கோவை சென்று இருந்தேன் அதோடு அனைத்து உறவினர்கள் வீடு, கடைகள், மற்ற வேலைகளுக்கு இதிலேயே சுற்றிக்கொண்டு இருந்தேன். ஓட்டச் செமையாக உள்ளது.
ஊருக்குச் சென்ற 10+ நாட்களில் ஓரிரு நாட்கள் மட்டுமே வெயில், மற்ற நாட்கள் மேக மூட்டம் அல்லது மழை. இந்த வருடம் அக்னி நட்சத்திரம் பெரியளவில் இல்லையென்பது ஆறுதல்.
ஜூபிடருக்கு 3 லிட்டர் பெட்ரோல் போட்டாலே நிறைந்து விடுகிறது. சென்னையில் உள்ள TVS Zest 2 லிட்டர் போட்டாலே நிறைந்து விடுகிறது.
5 லிட்டர் கொள்ளளவு உள்ளது ஆனால், முழுமையாக ஒருநாள் கூடப் போட்டதில்லை. இதன் காரணம் யாருக்கும் தெரியுமா?
உறவினர் ஓலா வாகனம் வாங்கியிருந்தார், வண்டி செம்ம பிக்கப். மின்சார வாகனம் என்பதால், On ல் உள்ளதா Off ல் உள்ளதா என்றே தெரியவில்லை.
Password எண் கொடுத்துத் தான் எடுக்க முடியும் ஆனால், Password கொடுக்கும் போது யாரும் கவனித்துத் திருடி விட்டால்? Thumb Impression வசதியும் கொடுக்கலாம். பின் பகுதியில் Foot Rest இல்லாதது பெண்களுக்கு சிரமம்.
கோபியில் பரவலாக மின்சார வாகனங்களைக் காண முடிந்தது.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
Super Giri.
கிரி, விடுமுறையை செம்மையா பசங்களுடன் enjoy பண்ணியிருக்கீங்க!!! நான் சென்ற முறை ஊருக்கு வந்தபோது சில பயண திட்டங்களுடன் வந்தேன்.. ஆனால் வீட்டு வேலை இருந்ததால் என்னுடைய அதிக அளவிலான நேரம் அதற்கே சென்று விட்டது.. மனைவிக்கு சிறு வருத்தம் இருந்தாலும் வீட்டு வேலையை ஆரம்பித்ததே அவரால் தான்.. இரண்டு மாதங்களுக்கு மேல் இருந்தும் சக்தியை கூட இருமுறை தான் பார்த்தேன்.. நிறைய நண்பர்களை முற்றிலும் தவிர்த்து விட்டேன்.. (சக்தியை தவிர)..
வெளிநாட்டிற்கு வந்து பல வருடங்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தாலும், காலம் செல்ல, செல்ல பலரை புரிந்து கொள்ள முடியவில்லை.. நாம் அதே மனநிலையில் பழகினாலும் அவர்களின் மன ஓட்டம் வேறு மாதிரி இருக்கிறது. மதம், அரசியல், பணம், சமுதாய மதிப்பு, தகுதி என சிலது கூட காரணமாகிறது.. பொதுவாக எல்லோரிடமும் ஏதோ எதிர்பார்ப்பு மற்றும் மாற்றம் இருந்து கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் நிறைய நண்பர்களை முற்றிலும் தவிர்த்து விட்டேன்.
2006 கோவையை விட்டு வந்த பின் அங்கு மீண்டும் செல்லவேயில்லை.. விடுமுறையில் ஊருக்கு போகும் போது ஒன்றிரண்டு முறை சக்தியுடன் திட்டமிட்டும் போக முடியவில்லை.. 2005/2006 காலக்கட்டங்களில் நாங்கள் இருவரும் சுற்றிய பகுதிகளை (அன்னுர், கரியம்பாளையம், கெம்பநாயகன் பாளையம்,சத்தியமங்கலம்,பவானி,புளியம்பட்டி,தென்திருப்பதி,உக்கடம்,
காந்திபுரம்,மருதமலை,மேட்டுபாளையம்,ஊட்டி ) மீண்டும் செல்ல வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு..
அப்போது இருவரிடம் பைக் இல்லாததால் பெரும்பாலும் நடப்பது மற்றும் பேருந்து பயணம்.. அந்த நாட்களின் நினைவுகள் இன்னும் பசுமையாக இருக்கிறது.. இவ்வளவு இடங்கள் சுற்றியும் இருவரும் ஒரு புகைப்படம் கூட எடுத்து கொள்ளவில்லை..
நீண்ட நாட்களுக்கு பின் நானும், சக்தியும் மேற்கொண்ட ஒரு நெடுதூர பயணம் உங்களை 2018 இல் கோபியில் சந்தித்தது தான்.. எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் சட்டென்று அமைந்த பயணம் அது.. இந்த பயணத்தில் பல நாட்களுக்கு பின் இருவரும் நிறைய விஷியங்களை பரிமாறி கொண்டோம்.. நீங்கள் பயணம் என்றவுடன் கடந்த காலத்தை அசை போடுவது இனிமையாக இருந்தது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@ஸ்ரீனிவாசன் நன்றி 🙂
@யாசின்
“நாம் அதே மனநிலையில் பழகினாலும் அவர்களின் மன ஓட்டம் வேறு மாதிரி இருக்கிறது. மதம், அரசியல், பணம், சமுதாய மதிப்பு, தகுதி என சிலது கூட காரணமாகிறது.. பொதுவாக எல்லோரிடமும் ஏதோ எதிர்பார்ப்பு மற்றும் மாற்றம் இருந்து கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது”
உண்மை தான் யாசின்.
இதற்கு அவரவர் சூழ்நிலை மாறுவது. கருத்தில் ஏற்படும் மாற்றங்கள். சமூக சூழ்நிலை.
இது தவிர்க்க முடியாதது. நமக்கு ஒத்துவரவில்லையென்றால் ஒதுங்கி விடுவது நல்லது.
“இவ்வளவு இடங்கள் சுற்றியும் இருவரும் ஒரு புகைப்படம் கூட எடுத்து கொள்ளவில்லை..”
அப்போது தற்போது போல படம் எடுப்பது எளிதல்ல. எனவே, நீங்கள் எடுக்காதது வியப்பை அளிக்கவில்லை.
“எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் சட்டென்று அமைந்த பயணம் அது.. இந்த பயணத்தில் பல நாட்களுக்கு பின் இருவரும் நிறைய விஷியங்களை பரிமாறி கொண்டோம்..”
அதென்னமோ முன்னேற்பாடு இல்லா பயணம் வெற்றிகர பயணமாக பலருக்கு அமைந்து விடும் 🙂