இ-பாஸ் முறை ரத்துச் செய்யப்பட்ட பிறகு இரு வாரங்கள் ஊருக்குச் சென்று வந்தேன், கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு.
கோவை
மருத்துவப் பரிசோதனைக்காகவும், மருத்துவரின் குறைந்த நேரங்களாலும் நான்கு முறை கோவை செல்ல வேண்டியிருந்தது. இதில் மூன்று முறை ஜூபிடரிலும் ஒரு முறை காரிலும் சென்று வந்தேன்.
கோபி –> குன்னத்தூர் –> திருப்பூர் இணைப்புச் சாலை செமையாக உள்ளது.
Read : அசத்தலான டிவிஎஸ் ஜுபிடர்
பகலில் வெயில் பொளக்குது ஆனால், மாலை மழை பெய்கிறது.
கோவை வழக்கமான நிலைக்குத் திரும்பி விட்டது. எங்கெங்கு காணினும் கூட்டம், கடைகள் மற்றும் அனைத்து இடங்களிலும் மக்கள். கூட்டம் குறைவாக இருந்த ஒரே இடம் உணவகம் மட்டுமே!
மக்கள் இன்னும் உணவகங்களில் தைரியமாகச் சென்று சாப்பிடும் மனநிலையைப் பெறவில்லை. சென்னையிலும் கூட இதே நிலை.
உள்ளூர் பேருந்துகளில் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
மக்கள் கொரோனா பயத்தைத் தொலைத்து வருகிறார்கள். சென்ற இடங்களில் ஒரு இடத்தில் கூட யாருக்கும் பதட்டமில்லை. மருத்துவமனைகளிலும் இதே நிலை.
பயத்தைத் தொலைத்தாலும், பலர் முகக்கவசம் அணியாமல் திரிந்து கொண்டு இருப்பது அயர்ச்சியளிக்கிறது. இவர்களுக்கும் பாதுகாப்பில்லை, இவர்களால் மற்றவர்களுக்கும் பாதுகாப்பில்லை.
கோவை நவ் இந்தியா பகுதியில் இருந்து ஆர் எஸ் புரம் செல்லும் புதிய நீண்ட பாலத்தில் சென்றேன். காந்திபுரம் பாலத்தைப் பயனற்றது என அனைவரும் விமர்சித்தாலும், இப்பாலம் வரவேற்பை பெற்றுள்ளது.
நெரிசல் சாலைகள், சிக்னல்களை எளிதாகக் கடந்து செல்ல முடிகிறது.
நெடுஞ்சாலையில் முதல் முறையாக அதிகபட்சம் 80 கிமீ வேகத்தை வாகனம் தொட்டது. கோவை ஆறுவழிச்சாலை சமனாக இல்லை, நிறைய இடங்களில் வாகனங்கள் பறக்கிறது.
சிறு அளவில் ஏகப்பட்ட மேடு பள்ளங்கள். சாலையைப் பயன்படுத்தக் கட்டணத்தையும் பெற்று இது போலச் சாலையும் அமைப்பது கடுப்பளிக்கிறது. சாலையின் நடுவில் எவரும் வராதபடி பாலங்களை அமைத்து இருப்பது சிறப்பு.
பண்ணாரி
கோபி, சத்தியில் வழக்கமான போக்குவரத்து. உள்ளூர் பேருந்துகள் கொஞ்சம் கூட்டம் குறைவாகவும், நகரங்களை இணைக்கும் பேருந்துகள் கூட்டமாகவும் உள்ளன.
பண்ணாரி செல்லலாம் என்று அக்கா பையனுடன் சென்றேன், சென்றது வெள்ளிக்கிழமை என்பதால், கூட்டமாக இருந்த காரணத்தால், வெளியேயே நின்று கும்பிட்டு வந்து விட்டோம்.
பண்ணாரி பகுதியில் சாலை விரிவாக்க, மேம்பால பணிகள் நடப்பதால், போக்குவரத்து திருப்பிவிடப்பட்டு நெரிசலாக இருந்தது.
மழை பெய்து கொண்டு இருப்பதாலும், பவானிசாகர் அணையில் தண்ணீர் 100 அடி இருப்பதாலும், இன்னும் ஒரு வருடத்துக்கு உறுதியாக பசுமையாக இருக்கும்.
கோபி
ஆறு மாதத்துக்கு முன்பே கோபியில் குழாய் பதிக்கத் தோண்டியிருந்த குழி இன்றுவரை சரிசெய்யப்படவில்லை. ஏற்கனவே, அதிகரித்த நெரிசலுடன் இவையும் சேர்ந்து சாலை ரணகளமாக்கி வைத்துள்ளன.
ஊரில் அக்காக்கள் அம்மாவுடன் ரொம்ப வருடங்களுக்குப் பிறகு கொரோனா பிரச்சனையால் உடன் இருக்கிறார்கள். கொரோனாவால் நடந்த நல்ல விஷயம். நான் மட்டும் இரு வாரங்கள் இருந்தது அம்மாவுக்கு வருத்தம்.
அதென்னமோ ஊருக்கு வந்துட்டுச் சென்னை திரும்ப வேண்டும் என்றால், கிளம்புவதற்கு இரு நாட்கள் முன்பே ஒரு மாதிரியாகி விடுகிறது 🙂 . மாணவர் விடுதிக்குச் செல்வது போல ஒரு மனநிலை.
கூற இன்னும் சில முக்கியத் தகவல்கள் உள்ளது, அவற்றைத் தனிக்கட்டுரைகளாக எழுதுகிறேன். சுருக்கமாகக் கூற முடியாது.
மருத்துவமனைகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும் இருக்க வேண்டியிருந்தது. இருப்பினும் கொரோனா பாதிப்பு அடையாமல் சென்னை திரும்பி விட்டேன்.
கொரோனா காரணமாக உறவினர்கள், நண்பர்கள் பலரை சந்திக்க முடியவில்லை.
கொரோனவை கொடுக்காத அனைவருக்கும், கடவுளுக்கும் நன்றி 🙂 . என்னுடன் நிழலாக அக்கா பையன் இரு வாரங்களாக இருந்தான், அவனுக்கும் ஒன்றும் ஆகாததுக்குக் கடவுளுக்கு நன்றி.
Chennai to Kovai by Jupiter??? I recently bought TVS Jupiter Classic sparkling blue BSVI after reading your review. Excellent two-wheeler. Thanks for your review.
கிரி, புகைப்படம் அட்டகாசமாக இருக்கிறது.. நல்ல காற்றோட்டம் அடிக்கும் போது எடுத்த புகைப்படம் போல் தெரிகிறது.. ஜூபிடருக்கும் உங்களுக்குமான நெருக்கம் இன்னும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.. (பொல்லாதவன் : தனுஷ் – பல்சர் .. நீங்க – ஜூபிடர் ) கோவையை பற்றி நினைத்தாலே மனது வானில் பறக்கும்.. கோவையின் கடந்த கால நினைவுகள் மனதை பிழியும்.. பவானி சாகர் அணையும் அது போல தான்.. எல்லாம் நேற்று நடந்து போல் இருக்கிறது.. பவானி சாகர் அணைக்கு செல்லும் வழியில் ஒரு பெரிய ஓடை போல தண்ணீர் மிக வேகமான ஓடிக் கொண்டிருந்தது.. அந்த பகுதியில் நானும் சக்தியும் நீண்ட நேரம் உரையாடி கொண்டிருந்தோம்.. எல்லாம் நடந்து பல வருடங்கள் கடந்து விட்டது.. ஆனால் நினைவுகள் மட்டும் பசுமையாக இருக்கிறது ..கோவையை விட்டு வந்த பின் கடந்த 13 ஆண்டுகளில் ஒரு முறை கூட கோவைக்கு செல்ல முடியவில்லை.. ஒன்று / இரண்டு முறை முயன்றும் முடியவில்லை .. நான் கண்ட கோவை இன்று எப்படி இருக்கிறதோ ??? பகிர்வுக்கு நன்றி கிரி ..
@கணேஷ் கோபி போயிட்டு அங்கே இருந்து கோவைக்கு ஜூபிடர். சென்னையில் இருந்து என்றால், கடினம் 🙂 .
அப்படியா? 🙂 மகிழ்ச்சி. பிக்கப் குறைவாக உள்ளது, 50 / 60 KM வேகத்தை தொட கொஞ்சம் சிரமப்படுகிறது ஆனால், ஓட்டுவதற்கு நன்றாக உள்ளது.
அதாவது கை, இடுப்பு போன்றவை வலிப்பதில்லை. ஒருமுறை கோவை சென்று வந்தால் 200 KM தூரம் ஆகும். மூன்று முறை சென்று வந்தேன், சலிப்பாகவில்லை.
ஓட்டுவதற்கு நன்கு கிரிப் ஆக உள்ளது. உயரம் குறைவானவர்களுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கலாம்.
@யாசின் “ஜூபிடருக்கும் உங்களுக்குமான நெருக்கம் இன்னும் அதிகரித்து கொண்டே இருக்கிறது”
🙂 ஆமாங்க யாசின். எனக்கு அதை ஓட்டுவதில் ஒரு ஆனந்தம். அதிலும், பங்களாப்புதூர் சாலையில் ஓட்டிக்கொண்டு சென்றால், அற்புதமாக இருக்கும்.
கோவை எந்தப் பெரிய மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளது. புதிய பாலங்களும், மால்களும் மட்டுமே மாற்றம்.
கடந்த ஒரு வருடங்களாகவே பவானி சாகர் அணையில் தண்ணீர் அதிகம் உள்ளது. எனவே, எங்கள் பகுதி பசுமையாகவே உள்ளது.