பொங்கல் பயணக் குறிப்புகள் 3 (2020)

2
Chennai-Central

பொங்கலுக்கு ஊருக்குப் போவது எவ்வளவு மகிழ்ச்சியோ அதை விடப் பல மடங்கு சோகம் திரும்பச் சென்னை கிளம்பி வருவது. கிளம்ப இரு நாட்களுக்கு முன்பு இருந்தே உற்சாகம் குறைந்து விடும். இந்த முறை கூடுதல் சோகம்.

அப்பா காலமான பிறகு அம்மா கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வெளியே எங்கும் செல்லவில்லை. இந்த முறை நாங்கள் வற்புறுத்தியதால், சென்னை வர அரை மனதோடு சம்மதித்தார்.

ஏனென்றால், அம்மாக்கு ஊர் தான் பிடிக்கும், நகர வாழ்க்கை, வெகு சிலரையே தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பது என்று விருப்பமில்லை. எனவே, சென்னை வந்தாலும் எப்போது ஊருக்குப் போகலாம் என்று தான் எண்ணுவார்கள்.

என்னுடைய மூன்றாவது அக்கா வீட்டில் இருந்து காரில் வந்ததால், அவர்களுடன் சென்னை கிளம்புவதாக முடிவானது. பொங்கல் முடிந்து சென்னைக்கு அனைவரும் திரும்புவார்கள், எனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்று ஞாயிறு காலையே கிளம்பி விட்டார்கள்.

நான் இதுவரை அம்மா இல்லாமல், சென்னை கிளம்பியதே இல்லை. அம்மா இல்லாமல் வீடே வெறுமையாக இருந்தது. மனைவி பசங்க இருந்தாலும், எப்போதும் வழியனுப்பும் அம்மா இல்லாத நிலை இவ்வளவு வருடங்களில் நடந்தது இல்லை.

அம்மாக்கும் இது போல எங்களை விட்டுட்டு முன்பே கிளம்பனும் என்பது வருத்தம் ஆனால், வேறு வழியில்லை.

நாங்கள் கிளம்பும் போது மறையும் வரை டாட்டா காட்டிட்டே இருப்பாங்க. அவங்க பார்வையில் இருக்கும் வரை நான் அவரைப் பார்க்க வேண்டும், இல்லையென்றால் தொலைபேசியில் அழைத்து ‘தம்பி! திரும்பிப் பார்க்காமையே போயிட்டே.. மனசே சரியில்லை‘ என்பார்.

அம்மா கிட்ட சொல்லிட்டேன்.. ‘நீங்க எங்க வேணா போங்க.. ஆனால், நாங்க ஊருக்குக் கிளம்பும் போது மட்டும் நீங்க கண்டிப்பாக வீட்டில் இருங்க‘ என்று 🙂 .

என்ன தான் சொல்லுங்க.. அம்மா.. அம்மா தான். அம்மா போல வருமா..! 🙂 .

ஈரோடு பேருந்து

பொங்கல் விடுமுறை முடிந்து செல்லும் நாள் என்பதால், ஞாயிறு வழக்கத்தை விடப் பேருந்தில் கூட்டம். எப்போதுமே அமர இடம் கிடைக்கும், இந்த முறை அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டது.

இருப்பினும் இப்பேருந்து தான் நேராக ரயில் நிலையம் செல்லும் என்பதாலும், நேரம் சரியாக இருக்கும் என்பதாலும் இதிலேயே ஏறினோம். என் பசங்க இருவரும் என் அருகே நிற்கிறேன் என்று பின்னாடி வந்து விட்டார்கள்.

யுவன் (இரண்டாவது படிக்கிறான்), நின்று கொண்டு இருப்பதைப் பார்த்து மூவர் அமரும் இருக்கையில் அமர்ந்து இருந்த ஒரு பெரியவர் அவனை மடியில் அமர வைத்துக்கொண்டார். முதலில் மறுத்தவன் பின் அமர்ந்து கொண்டான். அவன் அருகில் வினய் நின்று கொண்டான்.

இவருக்கு 65+ வயதுக்கு மேலே இருக்கும், அருகே அவரது மனைவி, மகள் & பேத்தி அமர்ந்து இருந்தார்கள். ‘எங்கே போறீங்க?‘ என்றார், ‘ஈரோடு‘ என்றேன். ‘நாங்க கவுந்தப்பாடியில் (20 நிமிட பயணம்) இறங்கி விடுவோம். நீங்கள் உட்கார்ந்துக்குங்க‘ என்றார், ‘சரி‘ என்றேன்.

பிறகு என்ன நினைத்தாரோ, எழுந்து கொண்டு வினயையும் அமரக் கூறி விட்டார். நான் எவ்வளவு மறுத்தும் கேட்கவில்லை. அவரது மனைவி அவர் பேத்திக்குக் கொடுத்த இஞ்சி பருப்பியை யுவனுக்குக் கொடுக்க, இவன் வாங்க மறுத்து விட்டான்.

நான் வெளி நபர் கொடுப்பதை வாங்கக் கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறேன்.

வாங்கிக்கடா‘ என்றேன், ‘எனக்குப் பிடிக்காது‘ என்று கூறி விட்டான். பெரியவர் பேத்திக்காக வைத்து இருந்த பைவ் ஸ்டார் சாக்லேட் கொடுக்க, என்னைப் பார்த்தான், தலையசைத்தேன். வாங்கிட்டு அப்படியே தூங்கிட்டான், பேருந்தில் அமர்ந்தவுடன் தூங்கி விடுவான்.

இவர்கள் கவுந்தப்பாடி வந்து கிளம்பும்போது வினய் ‘தேங்க்ஸ்‘ என்று கூற, பெரியவரின் மனைவிக்கு ஒரே சிரிப்பு.. ‘தேங்க்ஸாமா…!” என்று மகளிடம் கூறி சிரித்து எழுந்து கொண்டார்.

அவர் பெண், ‘அண்ணா ஈரோடு போறீங்களா?‘ ன்னு கேட்டுட்டு, இவனுங்களுக்கு டாட்டா காண்பித்து விட்டு ‘வறேண்ணா‘ என்று கூறிவிட்டு புன்னகையுடன் கிளம்பினார்.

என்ன தான் சொல்லுங்க.. ஊரு ஊரு தாங்க. எங்க ஊரு போல வருமா..! 🙂 .

எவன்டா எனக்குச் சூனியம் வைத்தது.. உண்மைய சொல்லுங்கடா..!

என்னுடைய ராசிப்படி இந்தமுறையும் எனக்கு S12 பெட்டி, இருக்கை 1, 3, 7 வழக்கம் போலக் கழிவறை பக்கம்.

இந்த முறை பொங்கல் கூட்டம் என்பதாலும், முன்பதிவு செய்யாத பயணிகளின் அட்டகாசம் இருக்கும் என்பதாலும், இவர்களை உள்ளே படுக்கக் கூறி விட்டு நான் Side Lower Berth ல் படுத்துக்கொண்டேன்.

எதிர்பார்த்தது போலவே, அதிகாலை 2 மணி வரை, இம்சையைக் கூட்டி விட்டார்கள், தூங்கவே விடவில்லை. TTR ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று கொண்டு இருந்த முன்பதிவு செய்யாத பயணிகளை இறக்கி விட்டார்.

அவர் இறக்கி விட்டுச் சென்றால், இன்னொரு கதவைத் திறந்து இன்னொரு கூட்டம் வருகிறது.

இதில் வட இந்திய தொழிலாளர்கள் கூட்டம் பெரிய மூட்டை, பைகளுடன் வந்து அட்டகாசம். Lower Berth ல் படுத்துக்கொண்டு இருந்த இரு பெண் பயணிகளுக்கு நடுவே வந்து அமர்ந்து கொண்டார்கள்.

அங்கே இருந்தவர் சத்தம் போட்டதும் எழுந்து கொண்டார். பின்னர் திரும்ப TTR வந்து அடுத்த நிறுத்தத்தில் இவர்களை இறக்கி விட்டார்.

‘ஜோலார் பேட்டை’ தாண்டியும் இப்பிரச்சனை நிற்கவில்லை. நான் 1.30 மணி நேரம் தூங்கி இருப்பேன், கண் விழித்துப் பார்த்தால் கால் கிட்ட இருவர் அமர்ந்து இருக்கின்றனர்.

TTR இளவயதுக்காரர், தமிழர் தான். இவர்களைச் சரியாகக் கையாண்டார் ஆனாலும், கூட்டம் வந்துட்டே இருந்ததால், அவர் என்ன செய்ய முடியும்? ரயில்வே காவலர்கள் இருப்பார்கள், அவர்களையும் காணவில்லை. அவர்கள் இருந்தால், ஓரளவுக்குச் சமாளித்து இருக்க முடியும்.

அந்த இரவில் நடந்த கூத்தைப் பற்றி எழுதினால், ஒரு கட்டுரை அளவுக்கு எனக்குச் செய்தி இருக்கிறது. அதை நினைக்கவே கடுப்பாக உள்ளது. அதோடு எல்லோருமே ஒரே நாளில் சென்னை திரும்புவதால், இதைப்போல நிலை தவிர்க்க முடியாது.

கடைசியா ஒரு நகைச்சுவையோடு முடித்துக்கிறேன்.

எனக்கு எப்பவுமே எங்க ஊர், ஊரில் இருப்பது தான் பிடிக்கும். இதை என்னோட பசங்க கிட்ட அடிக்கடி சொல்லிட்டே இருப்பேன். ‘நான் ரிட்டையரானால் தான் ஊருல இருக்க முடியும் போல‘ன்னு சலித்துட்டு ஒரு நாள் கூறினேன்..

யுவன் ‘அப்பா.. நீங்க எப்ப ரிட்டையர் ஆவீங்க?‘ ன்னு ஆர்வமா கேட்கிறான் 🙂 . குழந்தைகள் எப்போதுமே சுவாரசியமானவர்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

எவனோ சூனியம் வச்சுட்டான்

பொங்கல் பயணக் குறிப்புகள் 1 (2020)

பொங்கல் பயணக் குறிப்புகள் 2 (2020)

https://www.facebook.com/giriblog

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. வணக்கம்.. கிரி.. ஒரு மாத விடுமுறையை முடித்து கொண்டு தற்போது தான் திரும்பினேன்.. ஒரு மாதமாக இணையத்தில் எந்த தொடர்பும் வைத்து கொள்ளவில்லை.. எந்த பதிவையும் படிக்கவில்லை.. பொங்கல் திருநாளை நன்றாக கொண்டாடி இருப்பீங்கனு நம்புகிறேன்.. குழந்தைகள் நம்மை அடிக்கடி, அவர்களது பேச்சுக்கள் மூலம் மகிழ்விப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. யாசின் உங்கள் பயணம் சிறப்பாக இருந்து இருக்கும் என்று நம்புகிறேன் 🙂 . உங்களின் அடுத்த தயாரிப்புக்கு வாழ்த்துகள் 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here