கோபிசெட்டிபாளையம் 1 | 2024

4
பயணக் குறிப்புக்கள் 1 | 2024

2024 ம் ஆண்டும் பொங்கலுக்கு ஒரு வார விடுமுறையில் வர முடிந்தது. வழக்கம் போலக் கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்ற பயணக்குறிப்புகளை எழுதுகிறேன்.

கடந்த வருட பயணக்குறிப்புடன் ஒப்பிட்டு என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று விரும்புகிறவர்கள் பார்த்துக்கொள்ளலாம்.

ஈரோடு சத்தி சாலை

கிட்டத்தட்ட ஈரோடு – கோபி பகுதி முடித்து விட்டார்கள். இன்னும் வழியில் கட்டப்படும் பாலங்கள் வேலை மட்டும் முடியாமல் தாமதமாகி வருகிறது.

பசங்க கூட Jupiter ல் ஈரோடு சென்று வந்தேன், வாகனம் ஓட்ட சாலை அற்புதமாக உள்ளது, களைப்பே தெரியாத அளவுக்குச் சென்று வந்தோம்.

சித்தோடு முதல் ஈரோடு வரை உள்ள சாலையில் ஏகப்பட்ட வேகத்தடை. இது போன்ற வேகத்தடையை எந்தத் தேசிய நெடுஞ்சாலையிலும் பார்த்தது இல்லை.

பல இடங்களில் அவசியமே இல்லாமல் போட்டு வைத்துள்ளார்கள். எனவே, கோபியிலிருந்து எவ்வளவு வேகமாக வந்தாலும், இப்பகுதியை கடக்கச் சாலை நன்றாக இருந்தும் தாமதமாகிறது.

DMart

பிரபலமான DMart அங்காடி ஈரோடு செல்லும் வழியில் சித்தோடு தாண்டிய பிறகு வருகிறது. ஈரோடு நகரத்துக்கு முன்பே ரொம்பத் தொலைவில் உள்ளது.

ஆனால், கூட்டம் அள்ளுகிறது. எங்கே இருந்து அனைவரும் வருகிறார்கள் என்று புரியவில்லை.

அனைத்துப் பொருட்களும் உள்ளது, கிடைக்காத பொருளே இல்லை எனும் அளவுக்கு. விலையும் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

இது போன்ற கடைகளுக்குச் சென்றால், திட்டமிடாத பொருட்களையும் வாங்கி விடுவோம். தேவையற்ற செலவைச் செய்ய வைக்கும். எனவே, எப்போதாவது அனைத்தையும் வாங்க செல்ல திட்டமிடலாம்.

ஈரோடு செல்பவர்கள் ஒருமுறை முயற்சித்துப்பார்க்கலாம்.

பாரியூர்

பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் திருவிழா விளையாட்டுக் கட்டணத்தை வருடாவருடம் ₹20 / ₹30 உயர்த்தி வருகிறார்கள், இந்த வருடம் ₹120. மிக அதிகம்.

பசங்களே ஒரு விளையாட்டு போதும், ஏதாவது சாப்பிட்டுக்கலாம் என்று தவிர்த்து விட்டார்கள், வற்புறுத்தியும் வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.

இந்தாண்டு முஸ்லீம் குடும்பத்தினர் ஏராளமானோரை திருவிழாவில் காண முடிந்தது. இதற்கு முந்தைய வருடங்களும் வந்து இருக்கலாம்.

ஆனால், கோபியில் சமீபமாகப் புர்கா போடுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். எனவே, இந்த முறை அதிகமானோர் வந்தது போலத் தோன்றியிருக்கலாம்.

விளையாட்டுக்கட்டணம் உயர்வுக்குக் காரணம், இந்து அறநிலையத்துறை மட்டுமே! இவர்களுக்கு டெண்டர் மூலமாகப் பணம் வந்தால் போதும், மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.

டெண்டர் ₹60 லட்சத்துக்கு முடித்ததாகக் கூறப்படுகிறது. இவ்வளவு பணத்தை டெண்டரில் கொடுத்து விட்டு, அவர்கள் என்ன ₹50 கட்டணத்துக்கா விளையாட்டை வைக்க முடியும்?!

வழக்கமான நாட்களில் ₹20 உள்ள கொண்டத்துக்குப் போடும் உப்புத் தட்டம், தற்போது ₹50. காரணம் கேட்டால், டெண்டரையே குறை கூறுகிறார்கள்.

டெண்டர் விடும் போது அதிகபட்சம் இவ்வளவு கட்டணம் மட்டுமே வைக்க வேண்டும் என்றால், டெண்டர் கட்டுப்படியாகிறவர்கள் எடுப்பார்கள்.

ஆனால், அறநிலையத்துறை கோவிலைச் சம்பாதிக்கும் ஒரு துறையாகத் தான் பார்க்கிறது.

குடமுழுக்குக்கு ஒரு தாலிக்கு ₹10,000 ஊரில் வசூல் செய்கிறார்கள். அதாவது, ஒரு வீட்டில் அம்மா, அப்பா மற்றும் அவர்கள் பையன் மருமகள் என்று இருந்தால், வீட்டுக்கு ₹20,000 கொடுக்க வேண்டும்.

இவ்வாறு வாங்கும் பணத்தை வைத்துத்தான் குடமுழுக்கு நடத்துகிறார்கள் ஆனால், இந்து அறநிலையத்துறை தான் செய்ததாக விளம்பரப்படுத்துவது அநியாயம்!

இந்து அறநிலையத்துறை 20% செலவு செய்தாலே பெரிய விஷயம். கோவில் வருமானத்தையும் எடுத்துக்கொள்கிறார்கள், கோவிலுக்கும் எதையும் செய்வதில்லை.

பாஜக ஆட்சிக்கு வந்தால், கேடுகெட்ட துறையை நீக்குவதாக அண்ணாமலை கூறியுள்ளார். அந்த நாளுக்காக என்னைப் போலப் பலர் காத்துள்ளனர்.

சாலை

கோபியில் பல இடங்களில் ஜல் ஜீவன் திட்டத்துக்காகக் குழாய் அமைக்கும் பணிக்காகச் சாலையைத் தோண்டி நாசம் செய்து வைத்து இருந்தார்கள்.

தற்போது பல தெருக்களில் சாலை அமைத்து விட்டார்கள், எங்கள் பகுதியில் மட்டும் இன்னும் சாலை அமைக்கவில்லை.

இரு சக்கர வாகனத்தில் செல்ல கடுப்பாக உள்ளது. சாலை அமைக்க வேண்டியதில்லை, தோண்டியதை மட்டுமாவது சரி செய்தால் கூடப் போதும்.

இதோடு ஐந்து வருடங்களாக முதன்மை சாலையில் சாக்கடை அமைக்க நடுச் சாலையில் தோண்டி போட்டு வைத்து இருந்தார்கள்.

ஒரு வழியாக ஈரோடு சத்தி நெடுஞ்சாலை பணியில் இதைச் சரி செய்து விட்டார்கள், இன்னும் சாலை அமைக்கவில்லை. அடுத்த முறை முடித்து இருப்பார்கள்..

எங்கள் வீட்டுப் பகுதியில் ‘விநாயகர், அம்மன்’ கோவில் அமைத்துள்ளார்கள். மிகவும் எளிமையாக, அழகாகக் கோவில் அமைத்துள்ளார்கள்.

மார்கழி மாதம் முழுவதும் தினமும் காலையில் அன்னதானம் செய்கிறார்கள். எங்கள் பகுதியில் ஒரு கோவில் இல்லையே என்ற குறை தற்போது தீர்ந்தது 🙂 .

மணி கூல் ட்ரிங்க்ஸ்

எங்கள் குலதெய்வ கோவிலான தோட்டக்குடியான் பாளையம் முருகன் கோவிலுக்குச் சென்றோம், செல்லும் போது அத்தாணி வழியாகத்தான் செல்ல வேண்டும்.

அத்தாணி சந்திப்பில் மணி கூல் ட்ரிங்க்ஸ் என்ற கடையில் தேங்காய் பால் பிரபலமானது, சுவையாக இருக்கும் என்று அக்கா கூறியதால் முயற்சித்தோம்.

₹20 கட்டணம், அட்டகாசமான சுவை. கடையில் உள்ளவர்கள் மிக வேகமாகப் பணி புரிகிறார்கள். பேருந்து நிறுத்தத்தில் இருப்பதால், கூட்டமாகவே உள்ளது.

எவ்வளவு கூட்டம் இருந்தாலும் வேகமான சேவையால், கலைந்து கொண்டே உள்ளது. இனி இந்தப்பக்கம் சென்றால், தவறாமல் சென்று விடுவேன்.

பேக்கரி

கோபியில் (காஃபி / டீ) பேக்கரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. புதிதாக சத்தி, ஈரோடு சாலையில் ஆரம்பித்துக்கொண்டே உள்ளார்கள்.

நானும் ஒவ்வொரு கடையாக முயற்சித்துப் பார்த்துக்கொண்டே உள்ளேன். என்ன கொடுமை என்றால், எங்கள் வீட்டருகே ஒரு நல்ல பேக்கரி கூட இல்லை.

வயல் பகுதி சாலையோரத்தில் கூட பேக்கரியை அமைத்து வருகிறார்கள். மேலே உள்ள படம் இது போன்ற ஒரு பேக்கரியிலிருந்து எடுக்கப்பட்டது தான்.

மற்ற கடைகள், வங்கிகள், பெட்ரோல் பங்க் என எங்கள் வீட்டருகே உள்ளது. முக்கியமாக பக்கத்திலேயே காஸ்மோபாலிடன் க்ளப் உள்ளது.

உறுப்பினராகி கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாகிறது ஆனால், இன்னும் ஒருமுறை கூடச் செல்லவில்லை.

இதன் தொடர்ச்சியை அடுத்தப் பகுதியில் கூறுகிறேன்.

தொடர்புடைய கட்டுரை

இந்து சமய அறநிலையத்துறை தேவையா?

மலையாளிகள் பேக்கரி

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

 1. கிரி.. இது போன்ற பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. குறிப்பாக நான் இதுவரை பயணிக்காத, கேள்விப்படாத இடங்களை குறித்து படிக்கவும், நிழல்படங்களை பார்க்கவும் எப்பவுமே ஒரு ஆர்வம் இருக்கும்.. உங்களின் பழைய இது போன்ற பதிவுகளை நான் மீண்டும் படிப்பதுண்டு..கோவையில் பணிபுரிந்த போது நானும் சக்தியும் பல புதிய இடங்களுக்கு பயணம் செய்தோம்.. இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதன் பசுமையான நினைவுகள் நெஞ்சுக்குள் பொக்கிஷமாக புதைந்து கிடக்கின்றது..

  மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டியவைகளை அரசு டெண்டர் கொடுத்து அதன் மூலம் இடைத்தரகர்கள் சம்பாரிப்பது எல்லாம் என்று மாறப்போகிறதோ?? கடவுளுக்கு தான் வெளிச்சம்.. என்னை பொறுத்தவரை வசூல் செய்யாமல் அரசு செலவு செய்து இது போன்ற விழாக்களை நடத்த வேண்டும்.. பின்பு எப்படி பண்பாடு, நாகரீகம், பாரம்பரியம் இவற்றை எவ்வாறு காக்க இயலும்.. பொதுமக்கள் கிட்ட வசூல் செய்து விட்டு அதில் இவர்கள் பெயர் போடுவது இன்னும் கொடுமை…

  நான் கோவையில் இருந்த சமயத்தில் எங்கள் பகுதியை விட உணவகங்களும் ,பேக்கரிகளும் அங்கு அதிகம்.. தற்போது நிச்சயம் இன்னும் அதிகமாக தான் இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.. (நானும் ஒவ்வொரு கடையாக முயற்சித்துப் பார்த்துக்கொண்டே உள்ளேன். என்ன கொடுமை என்றால், எங்கள் வீட்டருகே ஒரு நல்ல பேக்கரி கூட இல்லை.) வாய்ப்பு இருந்தால் நீங்கள் INVEST செய்து நம்பிக்கையான தொழில் தெரிந்தவரை வைத்து நீங்கள் ஆரம்பிக்கலாம். உங்களுக்கும் எதிர்காலத்தில் COFFEE SHOP வைப்பதில் ஆர்வம் உண்டு என்பதை முன்பு சொல்லி இருக்கீங்க.. இது ஒரு ஆரம்ப புள்ளியாக இருக்கட்டுமே..

  காஸ்மோபாலிடன் க்ளப் : சிறு வயதில் இந்த பேர கேட்டாலே ஒரு வித மயக்கம் இருக்கும்.. நிறைய பணக்காரர்கள் வந்து போகும் ஒரு இடமாக இருக்கும் என்று தான் நினைப்பேன்.. என்னுடைய ஓய்வு காலத்தை இது போன்ற கிளப்பில் இணைந்து விளையாட்டிலும் , படிப்பிலும் அதிக நேரத்தை செலவு செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது..

 2. @யாசின்

  “இது போன்ற பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்”

  🙂

  “உங்களின் பழைய இது போன்ற பதிவுகளை நான் மீண்டும் படிப்பதுண்டு”

  ஒரே மாதிரி எழுதுவதாக தோன்றியதால், வருடத்துக்கு ஒன்று என்று மாற்றிகொண்டேன்.

  “வாய்ப்பு இருந்தால் நீங்கள் INVEST செய்து நம்பிக்கையான தொழில் தெரிந்தவரை வைத்து நீங்கள் ஆரம்பிக்கலாம். உங்களுக்கும் எதிர்காலத்தில் COFFEE SHOP வைப்பதில் ஆர்வம் உண்டு என்பதை முன்பு சொல்லி இருக்கீங்க.. இது ஒரு ஆரம்ப புள்ளியாக இருக்கட்டுமே..”

  நானும் ஊரில் இருக்கும் போது குறிப்பாக கடைகளுக்கு செல்லும் போது நினைக்காத நாளில்லை.

  இருப்பினும் முதலீடு செய்ய பயமாக உள்ளது. உங்களுக்கே தெரியும், எவ்வளவு கஷ்டப்பட்டு கடனை அடைத்துத் தற்போது தான் பணப்பிரச்சனையிலிருந்து மீண்டு வந்துள்ளேன்.

  எனவே, அதிகம் பண கையிருப்பு இல்லாமல் அதுவும் 45+ வயதுக்கு மேல் முயற்சிக்க தயக்கமாக உள்ளது.

  நாளை என்ன நடக்கும் என்று தெரியாது இருப்பினும் மனதில் விருப்பம் இருந்து கொண்டே உள்ளது, ஒருவேளை நடக்க வேண்டும் என்றும் இருந்தால் நடக்கும் 🙂 .

  பார்ப்போம் கடவுள் எப்படி வழி காட்டுகிறார் என்று.

  “என்னுடைய ஓய்வு காலத்தை இது போன்ற கிளப்பில் இணைந்து விளையாட்டிலும் , படிப்பிலும் அதிக நேரத்தைச் செலவு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது”

  நீங்க சொன்னால் நம்ப மாட்டீங்க.. நான் அதற்குத்தான் உறுப்பினரே ஆனேன் 🙂 .

  ஏற்கனவே உறுப்பினர் எண்ணிக்கை அதன் அதிகபட்ச எண்ணிக்கையை நெருங்கி வருகிறது. உறுப்பினர் கட்டணமும் கட்டணமும் உயர்ந்து வருகிறது. எனவே தான் தற்போது இணைந்தேன்.

  அதோடு என்னுடைய ஓய்வை 55 வயதில் எடுத்து விடலாம் என்ற திட்டத்திலும் உள்ளேன். அதற்கேறப திட்டங்களை வகுத்து வருகிறேன்.

  60 வயதுக்கு பிறகு உடல்நிலை எப்படி இருக்கும், ஒத்துழைக்கும் என்று தெரியவில்லை.. சிலவற்றை அனுபவிக்காமலே கடந்து விட வேண்டியதாகலாம்.

  இதுவரையும் எங்கும் செல்லவில்லை.. எனவே, இறுதி காலத்திலாவது நம் விருப்பப்படி வாழ முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்.

  வாழ்க்கை முழுவதும் குடும்பத்துக்காகவே உழைத்தாச்சு.. இறுதிக்காலத்திலாவது நமக்காக கொஞ்சம் காலம் வாழ்வோம் என்று நினைக்கிறன்.

  எனவே இந்த முடிவு 🙂 .

 3. (நானும் ஊரில் இருக்கும் போது குறிப்பாக கடைகளுக்கு செல்லும் போது நினைக்காத நாளில்லை.) கிரியோட காபி கடையில சக்தியோட சேர்ந்து ஒரு காபி குடிக்காம (தேவர் மகன் டயலாக் நினைச்சிக்கிங்க) இந்த கட்டை வேகாதுப்பு!!! நம்பிக்கை வந்துடுச்சி…

  எனவே, அதிகம் பண கையிருப்பு இல்லாமல் அதுவும் 45+ வயதுக்கு மேல் முயற்சிக்க தயக்கமாக உள்ளது – நான் இரண்டு இடத்துல வாங்குன அடியால சொந்த தொழில் என்று சொன்னாலே ஒரு தயக்கம் இயல்பாகவே ஏற்படுகிறது. நீங்கள் சொல்வது போல 45+ வயதுக்கு மேல் நிச்சயம் சுய பாதுகாப்பு / குடும்பத்தினர் எதிர்காலம் மிகவும் அவசியம்.

  வாழ்க்கை முழுவதும் குடும்பத்துக்காகவே உழைத்தாச்சு.. இறுதிக்காலத்திலாவது நமக்காக கொஞ்சம் காலம் வாழ்வோம் என்று நினைக்கிறன் – உண்மை.. சும்மா நச்சுன்னு சொல்லி இருக்கீங்க.. நடுத்தர வர்க்கத்தில் பிறந்த ஒவ்வொரு ஆண்மகனின் ஏக்கமிது..

 4. @யாசின்

  “கிரியோட காபி கடையில சக்தியோட சேர்ந்து ஒரு காபி குடிக்காம (தேவர் மகன் டயலாக் நினைச்சிக்கிங்க) இந்த கட்டை வேகாதுப்பு!”

  அதுவொரு அற்புதமான தருணமாக இருக்கும் ஆனால், அதற்கு முன்னே நாம் சந்தித்து காஃபி குடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் 🙂 .

  “நடுத்தர வர்க்கத்தில் பிறந்த ஒவ்வொரு ஆண்மகனின் ஏக்கமிது..”

  🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here