Life Is Unpredictable

60
Life is unpredicatable

சில நேரங்களில் சில செயல்கள் அல்லது சம்பவங்கள் நமக்கு அதிர்ச்சியையும் அதே சமயம் அனுபவத்தையும் கொடுக்கிறது. Life Is Unpredictable

ஒரு சில சம்பவங்கள் நமக்கு ஜீரணிக்கக்கூடியதாகவும் சில அதை மனது ஏற்றுக்கொள்ள கொஞ்ச நாட்களும் ஆகிறது. அது போலத்தான் நான் தற்போது கூறப்போவதும்.

Life is unpredictable

கடந்த வெள்ளிக்கிழமை இரவு (6-8-2010 : 11.45 PM) (முதல்அக்காவின் கணவர் லாரியில் அடிபட்டு இறந்து விட்டார். Image Credit

சனிக்கிழமை விடியற்காலையில் தெரியவந்தது பின் இரவு விமானத்தில் நண்பர் உதவியுடன் டிக்கெட் பெற்றுச்சென்று பார்த்து வந்தேன்.

பொதுவாக ஆரம்பத்தில் இருந்தே நான் என் குடும்ப விசயங்களைப் பொதுவில் பகிர்ந்து கொள்வதில்லை.

ப்ரைவசியை அதிகம் விரும்புவேன் அனைத்து செய்திகளையும் பொதுவில் பகிர்ந்து கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.

தற்போது இதை நான் ஏன் கூற விரும்பினேன் என்றால், அனுதாபம் தேட அல்ல அந்தக்கட்டத்தை எல்லாம் தாண்டி வெகு வருடங்கள் ஆகிறது.

இதைப் படித்தாலாவது இரண்டு பேராவது தங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்களா! என்ற நப்பாசையில் தான்.

விபத்து

விபத்து என்றாலே அது எதிர்பாராமல் நடப்பது தான். யாரும் விரும்பிச்சென்று மாட்டிக்கொள்வதில்லை.

பெரும்பாலும் விபத்தில் ஒருவர் மாட்டிக்கொண்டால் அதை விதி என்று கூறுகிறோம்.

எனக்கும் விதி கர்மவினை போன்றவற்றில் நம்பிக்கையுண்டு ஆனால், அதே சமயம் நமது கடமையைச் சரிவரச் செய்யாமல் விதியைக் கையைக் காட்டக்கூடிய நபர் அல்ல நான்.

நமது கடமையைச் சரி செய்ய வேண்டும் அதன் பின் நடப்பது நடக்கட்டும்.

சரி நமது கடமை என்ன? மற்றும் விதண்டாவாதம் என்றால் என்ன?

எடுத்துக்காட்டாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது அவசியம்.

அது கடமை ஆனால் அதை அணிந்து உடலின் மற்ற பாகத்தில் அடிபட்டு இறந்துவிட்டால் என்ன செய்வது? அதனால் ஹெல்மெட் அணிவதால் என்ன பயன்? என்று கேட்பது விதண்டாவாதம்.

நமக்கு நேரப்போவதை யாராலும் தடுக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் அதற்காக எப்படி வேண்டும் என்றாலும் செல்லலாம் என்பதில் எனக்கு சிறிது கூட உடன்பாடில்லை.

அக்காவின் கணவர் தனது காரைக் கோவையில் சர்வீஸ்க்கு விட்டுவிட்டு அவர்கள் அதைச் சரி செய்யத் தாமதம் செய்ததால் அவர்களிடம் பைக் வாங்கிக்கொண்டு ஊர் திரும்பும் வழியில் இரவு லாரியில் அடிபட்டு இறந்து விட்டார்.

இடுப்பிற்கு கீழே எதுவுமே இல்லை எல்லாம் கூழ் ஆகி விட்டது லாரி டயர் மேலே ஏறி இறங்கி விட்டது.

அடித்த லாரியும் நிறுத்தாமல் சென்று விட்டது (ப்ரேக் போட்ட தடயம் கூட இல்லை) அடிபட்ட உடனே அவரும் இறந்து இறக்க வேண்டும்.

108

அதன் பிறகு 108 க்கு யாரோ கூறி அவர்கள் உடனே வந்து பார்த்து இறந்து விட்டதை உறுதி செய்து பின்னர் காவல்துறைக்கு தகவல் அனுப்பி விட்டனர்.

பின்னர் காவல்துறை அவருடைய கைத்தொலைபேசியை வைத்து அவரது குடும்பத்தைத் தொடர்பு கொண்டனர்.

அதன் பிறகு என்ன நடந்து இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

இரவிலே தேசிய நெடுஞ்சாலையில் பைக் போன்ற வாகனங்களில் வருவது எவ்வளவு ஆபத்தானது என்பது இதைப்போன்ற சம்பவங்கள் நமக்கு அறிவுறுத்தினாலும் இதை பலர் புறக்கணித்துக்கொண்டே உள்ளார்கள்.

தவிர்க்க முடியவில்லை என்றால் எதுவும் செய்ய முடியாது ஆனால் ஒத்தி போடக்கூடிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.

இரவு அக்கா அங்கேயே தங்கி வரக்கூறியும் பிடிவாதமாக அக்கா கணவர் கிளம்பி வந்துள்ளார்.

இவர்களுக்கு கல்லூரி படிக்கும் ஒரு மகன் உள்ளான்.

என்னதான் எங்களின் ஆதரவு அவர்களுக்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் உண்டு என்றாலும் குடும்பத்தலைவன் என்கிற தகுதிக்கு முன் எதுவும் ஈடாகாது.

அவருக்கு நேரம் அவ்வளவு தான் என்று நமது மனதை தேற்றிக்கொள்ள முடியும் சில மாதங்களில் அல்லது வருடங்களில் இதை மறந்து விட முடியும்.

ஆனால், இதனால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பை யார் ஈடு செய்வது.

கொஞ்சம் யோசித்து இருந்தால் அல்லது பிடிவாதத்தை தவிர்த்து இருந்தால் ஒருவேளை இதைப்போல நடக்காமல் சென்று இருக்க வாய்ப்பு உண்டு (நடக்காது என்று உறுதியாக கூறவில்லை).

மனிதம்

ஒருவர் அடிபட்டுக் கிடக்கிறார் ஆனால் அதில் எவ்வளவு திருட முடியும் என்று சிலர் கணக்கு போடுகிறார்கள்.

கார் சர்வீஸ் க்காக கொண்டு சென்ற பணம் 20,000 ரூபாயை யாரோ எடுத்து விட்டு அந்தப் பையை மட்டும் அருகே வீசிச் சென்றுள்ளார்கள்.

பணம் ஒரு விஷயம் இல்லை என்றாலும் எப்படி இதைப்போலக் கீழ்த்தரமாக நடத்து கொள்ள முடிகிறது வெறுப்பாக உள்ளது.

இதைப்போலச் சம்பவங்கள் ரயில் விபத்து நடக்கும் போதும் மற்றும் சாலை விபத்து நடக்கும் போதும் சர்வசாதாரணமாக நடக்கிறது.

இவர்களை எல்லாம் எந்தக்கணக்கில் சேர்த்துக்கொள்வது!

தொலைபேசி

வாகனத்தை ஓட்டும் போது தொலைபேசியில் பேசக்கூடாது என்பது பலரும் கூறி சலித்து போன விஷயம் ஆனால் இன்றும் யாரும் இதை மதிப்பதில்லை.

இவர்கள் செய்வதால் இவர்களுக்கு பாதிப்பு என்பதை விட இதற்கு சம்பந்தமே இல்லாமல் ஒழுங்காக சென்று கொண்டு இருப்பவரும் உடன் பாதிக்கப்படுகிறார் இதை என்னவென்று கூறுவது!

நண்பனிடம் இது பற்றிக் கூறி வெறுத்து போய் விட்டேன். இன்று வரை அதே தவறை செய்துகொண்டு இருக்கிறான். கேட்டால் இல்ல மச்சி! இப்பெல்லாம் குறைத்து!!! விட்டேன் என்கிறான்.

இதில் குறைக்க என்ன இருக்கிறது? முழுவதும் நிறுத்த வேண்டியது தானே!

நீ சாவதும் இல்லாமல் உன்னை நம்பி இருக்கும் குடும்பத்தையும் அல்லவா பாதிப்புக்குள்ளாக்குகிறாய்!

இதை எப்போது தான் அனைவரும் புரிந்து கொள்ளப்போகிறீர்கள்? அப்படி என்ன பேசியே ஆக வேண்டிய விஷயம்? கொஞ்ச நேரம் ஓரமாக நிறுத்தி பேச முடியாதா!

உங்களை எல்லாம் திருத்துவது என்பது இயலாத காரியம் என்றே தோன்றுகிறது.

அம்மாவோ அல்லது அப்பாவோ இல்லாமல் வளரும் குழந்தையின் பிரச்சனை பற்றி அறிவீர்களா! அதன் உள்ளக்குமறல்களை உணர்வீர்களா!

இதைப்படித்துக்கொண்டு இருக்கும் எத்தனை பேர் வாகனத்தை ஓட்டும் போது தொலைபேசி பயன்படுத்துகிறீர்கள் என்பதை உங்கள் மனசாட்சி கூறும்.

காவல்துறை

அப்பாவும் சரி என் அக்காவின் கணவரும் சரி அரசியலில் உள்ளவர்கள்.

தற்போது அப்பா அரசியலில் ஒதுங்கி விட்டாலும் அரசியல் அவரை விடுவதில்லை. தற்போது அனைத்து கட்சிகளில் இருந்தும் பலரும் வந்து இருந்தார்கள் திமுக அதிமுக காங்கிரஸ் உட்பட.

பலரும் கூறியது அந்த தப்பித்து போன லாரி ஓட்டுனரை விடக்கூடாது என்று என்ன ஆனாலும் சரி அவரை பிடித்து விட வேண்டும் உறுதியாக இருக்கிறார்கள்.

அதிலும் என் மாமா ஒருவர் (காங்கிரசில் இருக்கிறார்) அனைத்து பெரிய தலைகளுக்கும் கூறி தகவல் சேகரிக்க கூறி இருக்கிறார்.

இவை எல்லாம் எந்த அளவிற்கு வரும் என்று எனக்கு தெரியவில்லை.

காவல்துறை (அனைவரையும் கூறவில்லை) சில நேரங்களில் நடந்து கொள்வதை பார்த்தால் அடித்து விட்டு சென்ற லாரிக்காரனே பரவாயில்லை என்கிற அளவிற்கு நம்மை நினைக்க வைத்து விடுகிறார்கள் இத்தனை அரசியல் தொடர்புகள் இருந்தும்.

அனுபவப்பட்டவர்களுக்கு தெரிந்து இருக்கும் நான் கூற வருவது என்னவென்று!

அடுத்தது என்ன செய்யலாம் என்று தான் யோசிப்பேனே தவிர நடந்ததை நினைத்துக் காலத்தை வீண் ஆக்குபவன் அல்ல எனவே கவலை வேண்டாம்.

கடைசியாக நான் கூறிக்கொள்வது…. வாகனங்களை ஓட்டும் போது நம்மை நம்பி ஒரு குடும்பம் உள்ளது அல்லது நம் குடும்பம் நம்மைப் பின்னர் சார்ந்து இருக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து வாகனத்தை ஓட்டுங்கள்.

அனைத்து நேரங்களிலும் உஷாராக இருப்பது அல்லது பாதுகாப்பாக இருப்பது என்பது இயலாத காரியம் ஆனால் உங்களால் முடிந்த வரை பின்பற்றப்பாருங்கள்.

உயிர் விலைமதிப்பில்லாதது அதை உணர்ந்து செயல்படுங்கள்.

அதையும் மீறி நடப்பதை நாம் எதுவும் செய்ய முடியாது. உங்களுடைய கடமைகளைப் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொண்டீர்கள் என்றாலே போதுமானது.

Yes. Life is unpredictable

குறிப்பு

கலைஞர் (அரசு) மீது எனக்கு பல வருத்தங்கள் கோபங்கள் உண்டு ஆனால், பாராட்டும்படி செயல் செய்யும் போது பாராட்ட என்றும் தவறுவதில்லை.

இதுவும் அதைப்போன்றதே கலைஞர் அரசு அறிமுகப்படுத்திய 108 ஆம்புலன்ஸ் சேவை மிகச்சிறப்பாக செயல்படுகிறது.

இது பற்றிச் சிலருக்கு தெரியவில்லை பலருக்கு தெரிந்து இருக்கிறது.

அதே போலப் பலர் விபத்து பற்றிய தகவல்களைக் கொடுத்தால் நாம் வழக்குகளில் மாட்டிக்கொள்வோம் என்ற எண்ணம் இருக்கிறது அது நமது நாட்டிற்கே உரிய இயல்பான பயம்.

நம்மிடம் தொலைபேசி எண்ணைப் பெறுவது சரியான இடத்தை அறிந்து கொள்வதற்காக மட்டுமே!

எனவே, தயக்கம் இல்லாமல் யாராவது அடிபட்டு இருந்தால் 108 ஐ அழைத்துத் தகவல் கூறுங்கள்.

நமக்கு அரசு இதைப்போல அருமையான சேவையை அறிமுகப்படுத்தி இருக்கும் போது அதைத் தவறான புரிதல்களால் பயன்படுத்தாமல் இருந்தால் இழப்பு நமக்குத்தான்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

60 COMMENTS

  1. நமது கடமையை சரிவர செய்யாமல் விதியை கையை காட்டக்கூடிய நபர் அல்ல நான். நமது கடமையை சரி செய்யவேண்டும் அதன் பின் நடப்பது நடக்கட்டும்.]]

    சரியா சொன்னீங்க கிரி,

    சாலையில் மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும், முக அவசரம் என்றால் வாடகை கார் போன்றவற்றை நாடுதல் நலம்.

    ———————————-

    உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் பிரார்த்தனைகள்

  2. முதலில் உங்களுக்கும் தங்கள் அக்கா குடும்பத்திற்கும் இரங்கல்கள்.

    இத்தனை துக்கத்துக்கு நடுவிலும் முக்கியமான எச்சரிக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் எண்ணம் மலைக்க வைக்கிறது.

    நல்ல இடுகை. இதைப் படிப்பவர்களில் ஒருவர் திருந்தினால் கூட மகிழ்ச்சிதான்.

    108 நல்ல சேவை. அதை பயன்படுத்த மக்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும் அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனம் எதாவது – தெருமுனைப் பிரச்சாரங்கள், டிவி விளம்பரங்கள் அல்லது தெரு நாடகங்கள் மூலம்.

  3. கிரி உங்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் மாமாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அத்துடன் நம் சாலை விதிமுறைகளை நாம் கடைப்பிடிப்பதுடன் நம் அடுத்த தலமுறைக்கும் எடுத்து கூறி கடைப்பிடிக்க சொல்ல வேண்டும்.

  4. உங்களுக்கும் உங்கள் சகோதரிக்கும் என்ன வார்த்தைகள் ஆறுதலளிக்க முடியும்? அடிபட்டவருக்கு எங்கே காயம் என்று பார்க்குமுன் பர்ஸையும் பையையும் லவட்டும் ஈனப்புத்தி நம் ஊரில் மட்டுமே மிக அதிகம். 108ன் சேவை மிக அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி

  5. தங்கள் சகோதரி குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த சூழ்நிலையிலும் நண்பர்களுக்கு எடுத்து சொல்ல நினைக்கும் உங்களை பாரடமல் இருக்க முடியாது.

    ஆட்டோவில் சென்ற ஒருவர் ஆட்டோ டிரைவர் செல் போனில் பேசிக்கொண்டு சென்றதால் விபத்தில் இறந்த சம்பவம் எனக்கு தெரியும் . இதில் டிரைவர் செய்த தவறால் பயணம் செய்தவர் இறந்தது கொடுமை. இது போல எவ்வளவோ . அதே போல காலை நேரம் 8.30 to 9.00 அனைவரும் மிக வேகமாக செல்கின்றனர் . ஒரு 10 நிமிடம் முன்னாலேயே கிளம்பி சற்று நிதானமாக செல்லலாம்.

  6. நம்மூர் சாலைகளை உபயோகிக்க தனித்திறமை வேண்டும்.
    உங்கள் அக்கா குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  7. என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை வருத்தங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

  8. மிகவும் வருத்தமளிக்கும் செய்தி கிரி!
    அக்காவுக்கும், குழந்தைகளுக்கும் அடிக்கடி பேசி ஆறுதல்படுத்துங்கள்.

  9. சரியானபடி சொன்னீர்கள்.. கால் கை இழந்து இருந்தால் அவருக்கே துயரம். இறந்தால் இழந்தவர்களுக்கு துயரம். இப்படி இரண்டையுமே சிந்தித்துப் பார்க்கவேண்டும், கவனம் கொள்ளவேண்டும்
    குடும்பத்தினர் மன அமைதி பெறட்டும்.

  10. ரொம்ப வருத்தமா இருக்கு கிரி
    சாரி இது தெரியாம உங்க ல நான் பதிவு போடுங்கனு தொந்தரவு பண்ணிட்டேன்
    இதுவும் கடந்து போகும்
    – உங்க குடும்பம் பழையபடி வரணும் நு வேண்டிக்குறேன்

  11. கிரி கேட்கவே ரொம்ப கஷ்டமாக உள்ளது உங்கள் அக்காவின் கணவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் உங்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுங்கள் நீங்கள் அனைவரும் மன அமைதி பெற வேண்டும்

  12. க‌ட‌ந்த‌ ப‌திவில்தான் ஹெல்மெட் அணிந்து சென்ற‌தை பெருமையாக‌ கூறியிருந்தீர்க‌ள். அத‌ற்குள் இப்ப‌டியாகி விட்ட‌தே!

    உங்க‌ள் குடும்ப‌த்தின‌ருக்கு என‌து ஆழ்ந்த‌ இர‌ங்க‌லை தெரிவித்துக் கொள்கிறேன்.

  13. கிரி,

    மனசுக்குப் பெரும் கஷ்டமாப் போச்சு:(

    இந்த செல்ஃபோனையும் ‘சனியன்’ லிஸ்ட்டுலே நான் சேர்த்தாச்சு.

    பொழுதன்னிக்கும் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு? அப்படி ஒரு அரைமணி நேரம் பேசாம இருந்தால்….குடியா முழுகிரும்?

    ப்ச்….. நல்ல கண்டுபிடிப்புகளையெல்லாம் எப்படி நாதாரித்தனமா மக்கள் பயன்படுத்தறாங்க பாருங்க:(

  14. ஈடு செய்ய இயலாத இழப்பு. காலம்தான் ஆற்ற வேண்டும் மன வேதனையை. அக்கா கணவரின் ஆத்ம சாந்திக்கும் குடும்பம் துயரிலிருந்து மீண்டு வரவும் என் பிரார்த்தனைகள்.

  15. மிகவும் துயரமாக உள்ளது, என்ன ஆறுதல் சொன்னாலும் உங்கள் அக்காவின் குடும்பத்திற்கு தகாது, சென்ற வாரம் சக பாடசாலையில் பயின்ற முன்னால் மாணவர்கள் (இப்போது பல்கலைகழகம் ) இருவர் ஒரேயிடத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் இறந்துவிட்டனர் ஆனால் அந்த குடும்பங்கள் இரண்டுக்கும் இருந்த ஒரே ஆண் வாரிசு இழந்த துயரம் ஆயுள்காலம் வரை அவர்களை விடுமா? விபத்துக்களினால் ஏற்படும் மரணம் மிகவும் கொடுமையானது.

    //பின்னர் காவல்துறை அவருடைய கை தொலைபேசியை வைத்து அவரது குடும்பத்தை தொடர்பு கொண்டனர். அதன் பிறகு என்ன நடந்து இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.//

    இந்த நிலையை நினைத்துகூட பார்க்க முடியவில்லை.

    //கடைசியாக நான் கூறிக்கொள்வது…. வாகனங்களை ஓட்டும் போது நம்மை நம்பி ஒரு குடும்பம் உள்ளது அல்லது நம் குடும்பம் நம்மை பின்னர் சார்ந்து இருக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து வாகனத்தை ஓட்டுங்கள். அனைத்து நேரங்களிலும் உஷாராக இருப்பது அல்லது பாதுகாப்பாக இருப்பது என்பது இயலாத காரியம் ஆனால் உங்களால் முடிந்த வரை பின்பற்றப்பாருங்கள். உயிர் விலைமதிப்பில்லாதது அதை உணர்ந்து செயல்படுங்கள். அதையும் மீறி நடப்பதை நாம் எதுவும் செய்ய முடியாது. உங்களுடைய கடமைகளை பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொண்டீர்கள் என்றாலே போதுமானது.//

    இதை அனைவரும் உணரவேண்டும், இங்கு கூட சிலநாட்களுக்கு முன்னர் அரசியல்/போராட்ட பகைமையால் மாறிமாறி இளைஞர்களை வீதிகளில் சுட்டுவிட்டு போய்விடுவார்கள், ஒருகணத்தில் சுடப்பட்டவன் இறந்து விடுவான், அதன்பின்னர் குடும்பத்தின் நிலை? உயிர்வலி ரொம்ப கொடியது,இறந்தவனுக்கில்லை , கூட இருப்பவனுக்கு.

  16. 🙁 என்ன சொல்வதென்றே தெரியவில்லை … எனது ஆழ்ந்த வருத்தங்கள்

  17. உங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்

  18. ////எடுத்துக்காட்டாக ஹெல்மெட் அணியவேண்டும் என்பது அவசியம்…///

    இனிமே ஹெல்மெட் இல்லாமல் வண்டியை தொடமாட்டேன் தல

  19. அன்புள்ள கிரி,
    உங்க குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    //இவர்களை எல்லாம் எந்தக்கணக்கில் சேர்த்துக்கொள்வது!//
    – இந்த மாதிரி சமயங்களில் திருடறவன் மனுஷனே கிடையாது. விடுங்க.

    உங்க எழுத்தில் ஆழம் இருக்கு. கண்டிப்பா உணர வேண்டியவங்க உணருவாங்க.

    இதுல இன்னும் ஒரு விஷயம் நான் சொல்ல விரும்பறேன் – வேறு யாரோ ஒருவரின் பைக் ஓட்டும் போது மிகவும் கவனமாக ஓட்ட வேண்டும் என்பது சிலர் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றல் அந்த பைக் நாம் நன்று பழகினது அல்ல. அதனால் என்றும் ஓட்டுவது போல் இல்லாமல் அந்த பைக்கின் பிழைகள் என்ன என்று புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி நம்மை “அட்ஜஸ்ட்” செய்து கொள்ள வேண்டும்.

    உங்கள் மாமாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

    – முகுந்த்

  20. எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் தங்கள் குடும்பத்தினருக்கு !!
    எமது பிரார்த்தனைகள் தங்கள் மாமாவின் ஆத்மா சாந்தி வேண்டி !

    – லக்ஸ்மன்

  21. மாமாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் கிரி.

  22. கிரி, உங்கள் அக்கா மற்றும் குடும்பத்தினற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களது மாமாவின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.

  23. உங்கள் அக்காவிற்காக வருந்துகிறேன். உங்கள் குடும்பம் அடைந்திருப்பது மாபெரும் இழப்பு

    🙁

  24. ஆறுதல்களும் அனுதாபங்களும் தங்களுக்கு சொல்லும்மளவுக்கு நான் பெரிய ஆளில்லை… ஆனால் தங்களின் மாமாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். தங்களது இக்கட்டுரையை முழுமையாக படித்து அறிந்தாலே.. வாழ்க்கையின் யதார்த்தத்தையும்.. மனிதம் பற்றியும் மனிதர்களைப்பற்றியும்.. மிக இயல்பாய் அறிந்திடலாம். இது தங்களின் புகழ்சிக்காக இதை கூறவில்லை அக்கட்டத்தை எல்லாம் தாண்டிய ஒரு சிறந்த வெளிப்படையான எழுத்தாளரிடம் எமது எண்ணங்களே…!!!

  25. கிரி,

    தங்களுக்கும் உங்கள் அக்காவிற்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். என்ன ஆறுதல் கூறினாலும் அன்னாரின் இழப்பு நிவர்த்தி செய்ய முடியாது…

    //இத்தனை துக்கத்துக்கு நடுவிலும் முக்கியமான எச்சரிக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் எண்ணம் மலைக்க வைக்கிறது.

    நல்ல இடுகை. இதைப் படிப்பவர்களில் ஒருவர் திருந்தினால் கூட மகிழ்ச்சிதான்.

    108 நல்ல சேவை. அதை பயன்படுத்த மக்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும் அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனம் எதாவது – தெருமுனைப் பிரச்சாரங்கள், டிவி விளம்பரங்கள் அல்லது தெரு நாடகங்கள் மூலம்//

    Repeatu

    லாரி டிரைவர் முதல் குற்றவாளி என்றால் பணத்தை திருடியவனை எந்த லிஸ்டில் சேர்க்க , இப்படியல்லாம் மனிதர் இருக்கிறர்கள் 🙁

  26. எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் தங்கள் குடும்பத்தினருக்கு !!
    எமது பிரார்த்தனைகள் தங்கள் மாமாவின் ஆத்மா சாந்தி வேண்டி

  27. ஆழ்ந்த அனுதாபங்கள் கிரி. உங்களது மாமாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்….

  28. ஆழ்ந்த அனுதாபங்கள் கிரி. :-((

    இந்த எச்சரிக்கை மிக அவசியம்.
    உள்ளூர் அரசியல் செல்வாக்குகளுக்கும் களவாணித்துறை வழக்கம்போல சண்டியாகவும், பணம் பறிக்க முயலும் வகையிலேயே நடந்துகொள்ளும். இது என் குடும்ப அனுபவத்திலும் நான் கண்டது.
    சுனாமி வந்த சமயத்திலும் இந்த ஈனப்பிறவிகள் பணம், பொருளை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டினார்கள். 🙁

  29. ஆழ்ந்த அனுதாபங்கள் கிரி…. மாமாவின் ஆன்மா சாந்தியடையட்டும் !!!

    தேவையான எச்சரிக்கைப் பதிவு.

  30. மனதுக்கு மிகவும் வருத்தமான செய்தியாக உள்ளது.
    உங்களது அக்கா கணவரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன்.

  31. எனது அனுதாபங்கள் கிரி அவர்களுக்கும் தங்களின் அக்க குடும்பத்தாருக்கும் therivithu கொள்கிறேன்

  32. சாலை விபத்துக்கள் பற்றி தாங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. விபத்துக்களுக்கு காரணம் இரண்டு – ஒன்று தேவையில்லாத அவசரம் – இரண்டு – தன்முனைப்பு என்னும் ஈகோ – இவற்றை ஒழித்தால் சாலை விபத்துக்களை தவிர்க்கலாம் – அன்புள்ள ஜெயராமன் www .mindthisweek .com

  33. கிரி உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்… சுதந்திர வாழ்த்து சொல்ல இத்தளத்திற்கு வந்த எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி …
    1)சில பேர் வண்டி ஓட்டும் போது காதில் earphone வைத்து FM கேட்டு கொண்டே செல்கிறார்கள். கவனங்கள் சிதறப் பெரும் வாய்ப்புண்டு !

    2)வேகமாக சென்றால் “ஹீரோ” வாக நினைத்து கொள்கிறார்கள் சில பேர் …அவர்களாக தான் திருந்த வேண்டும்..

    3)Side Glass bar களை style க்காக எடுத்து விடுகிறார்கள் …. அது ஒரு பெரிய தற்காப்பு கருவி ..அதை வெய்த்து நம் பாதையை மாற்றி கொள்ள முடியும் ..

    4)சில நேரத்தில் நம்மையும் மீறிய சக்தி இருக்கிறது என்று மனிதன் உணரும் தருணம்… புறப்படும் முன் மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் நன்று. சகுனங்கள் மூலம் சிலவை புலப்படும் …இது அவரவர் நம்பிக்கையை பொருத்து..!

  34. Dear Giri,
    Really sorry to hear the news. Our sincere prayers are with you and your family during this tough time. Hope your sister will recover from this.

    Take care.

    Regards
    K Siva
    Singapore.

  35. உங்களை மிக சமீபத்தில்தான் தெரியும், ஆனால் உங்கள் எழுத்து மூலம் ரொம்ப நாட்கள் தெரியும். நீங்கள் அலைபேசியில் இந்த செய்தியை என்னிடம் சொன்ன போது, என்னை வெகுவாக பாதித்தது. ஆனால் எப்படி இவரால் எளிதில் இயல்புக்கு வர முடிந்தது என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் இப்போது தளத்திலும், நீங்கள் கற்ற பாடத்தை அடுத்தவருக்கு சொல்ல அதுவும் தற்காப்பின் அவசியத்தையும் அதை மறுப்பதின் பாதிப்பையும் அனைவருக்கும் தெளிவாகவும், புரியும்படியும், மண்டையில் உறைக்கும்படியும் சொல்லும் உங்களின் மன உறுதியும் தைரியமும் என்னை பிரம்மிக்க வைக்கிறது.

    அடிபட்டவர்கள் அல்லது இறந்தவர்களின் சட்டையில்/பையிலிருக்கும் பணம்/நகை/பொருள்களை திருடுபவர்களுக்கு அங்கு துடித்துக் கொண்டிருக்கும் நபர் வெறும் கண்காட்சிதான். இரத்தத்தை பார்த்து பயந்து நடுங்கும் மனிதாபிமானம் எல்லாம் என்றோ மலையேறிவிட்டது. இப்போது இந்தியாவில் இறப்பு / கொலை எல்லாம் சர்வ சாதாரணம் (அவரவர் உறவினரோ நண்பரோ அதில் பாதிக்கப் படாத வரை). பாதிக்கும் குறைவான மக்களே அப்படி ஒரு செய்தியை கேட்கும்போது சம்பந்தப்படாதவராக இருந்தாலும் உண்மையாக வருத்தப்படுகிறோம். அனால் அப்படி வருந்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டுதான் வருகிறது. யாரை எதற்கு குற்றம் சொல்ல?

    மேலும் இந்தமாதிரி சொல்பேச்சு கேட்காமல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு திமிர் என்று சொல்ல முடியாது. அலட்சியம். “அவங்க கெடக்குறாங்க. நாம carefull-ஆ தான வண்டிய ஓட்டுறோம், ஒன்னும் ஆகாது”-ன்னு போயி மட்டுறவங்கதான் அதிகம். உங்களின் மாமாவும் இந்த வகைதான் என்று தெரிகிறது.

    மற்றவர்கள் புரிந்து கொண்டால் சரி. ஒருவருக்கு சொல்லிப் புரிவதை விட இப்படி பார்த்தால் புரியும். அதிலும் பலர் “இனிமேல் பாத்து வண்டிய ஓட்டனும்”-ன்னு கெளம்புவாங்களே ஒழிய ஹெல்மெட்/செல் பேசிக்கொண்டு வண்டிய ஓட்டக்கூடாது/இரவு நேரங்களில் அதிக போக்குவரத்துள்ள சாலைகளில் செல்லக்கூடாதுன்னு யோசிக்க மாட்டாங்க. சொன்னாலும் சொத்தை காரணம் சொல்லுவாங்க. இது அலட்சியம் இல்ல, திமிர். அவங்களை எல்லாம் ஓங்கி அறையலாம்னு இருக்கும்.

    உங்கள் வருத்தத்தில் நானம் பங்கு கொள்கிறேன். உங்கள் குடும்பம் மற்றும் அக்காவின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். மாமாவின் ஆத்மா நிலை கொள்ளட்டும்.

  36. மிகவும் வேதனையான விஷயம் நெருங்கிய உள்ளங்களின் மரணம்,

    அவரது ஆன்மா சாந்தி அடைய எங்கள் பிராத்தனைகள்

  37. மரணம் பற்றி சுஜாதா…

    நிறமற்ற வானவில் – சுஜாதா நாவலில் இருந்து சில பகுதிகள்…..

    மிக நெருக்கமானவர்கள் மரணத்தில் தான், நமக்கு உண்மையான தரிசனம் கிடைக்கிறது. தினம் தினம் பல பேர் இறக்கிறார்கள். அந்தச் சாவெல்லாம் நம்மைப் பாதிப்பதில்லை.

    ‘மரணம் – கடவுளுக்கு வாசல்’ என்று ரஜனீஷ் சொல்லியிருக்கிறார். மனிதனால் இதுவரை களங்கப்படாத ஒரே ஒரு சங்கதி மரணம். அதை அவன் இன்னமும் கொச்சைப்படுத்தவில்லை. கொச்சைப்படுத்தவும் முடியாது. அது துல்லியமானது. அதை அவனால் அறியவே முடியாது. அதை அவனால் ஒரு விஞ்ஞானமாகவோ, வேதாந்தமாகவோ மாற்றமுடியாது. அது அவன் கைப்பிடியிலிருந்து எப்போதும் வழுக்கிச் செல்கிறது. உங்கள் வாழ்வில் எதிர்பாராமல் மரணம் குறுக்கிடும்போது உங்கள் வாழ்வு அர்த்தமற்றதாகிறது. ஆம், வாழ்வு அர்த்தமற்றதுதான். ஒவ்வொருவரும் கொஞ்சம் இறக்கிறோம்.”

    சாவுங்கறதே ஒரு முடிவு இல்லை. ஒரு தொடர்ச்சிதானாம். நம்ம உடம்பில் அறுநூறு கோடி செல் உயிரணுக்கள் இருக்கு. ஒவ்வொரு இருபத்துநாலு மணி நேரமும் அதில ஒரு பகுதி செத்துக்கிட்டே இருக்கு. முப்பது வயசுக்கப்புறம் நம்முடைய மூளை வருஷத்துக்கு ஒரு பர்சென்ட் செத்துக்கிட்டு இருக்காம். கொஞ்சம் கொஞ்சமா, செதில் செதிலா அழிஞ்சுண்டு வர்றோம். அதனால நாம எப்போ சாகறோம். எப்போ உயிரோட இருக்கோம்கிறதே சரியா சொல்ல முடியாது. பிறந்த நிமிஷத்திலிருந்து இறந்து கொண்டே இருக்கோம்…”

    “அதனால…?”

    “இறந்து போயிட்டாங்கன்னு சொல்றதில அர்த்தமேயில்லை..”

    “எப்படி ?”

    “நம்ம மனசிலே அவங்களைப் பத்திய நினைப்புகள் இருக்கிற வரைக்கும் தே டோன்ட் டை !”

    மஹாபலி – சுஜாதா சிறுகதையில் இருந்து…..

    ‘How did you die?’

    ‘Death comes with a crawl,
    or comes with a pounce
    And whether he is slow or spry
    It is not the fact that
    you are dead that counts
    But only, how did you die?’

  38. உங்கள் குடும்பத்தார்க்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். க‌வ‌லைப்ப‌டாதீர்க‌ள் இதுவும் க‌ட‌ந்து போகும்.
    சிவாபி

  39. கிரி என்னை நினைவிருகிறதா
    உங்கள் ரசிகன் நான். சில பிரச்சனைகளால் பதிஉலகம் பக்கம் வர முடியவில்லை
    உங்களை இப்டி ஒரு நிலைமையில் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை 🙁

  40. giri,

    it (death) happens in everyone’s life. But, the attitude of the persons differs. I appreciate your attitude in facing this unforseen incident.

    your web friend rajesh.v

  41. கிரி…..

    சாரி…. ரொம்ப ஷாக்கிங் நியூஸ் இது….

    ஜனனம் என்கிற போதே மரணம் என்ற ஒன்றும் எழுதப்பட்ட ஒன்று என்றாகி விடுகிறது….

    ஆயினும், மனது கேட்கவில்லை….

    உங்களுக்கும், சகோதரியின் குடும்பத்திற்கும், என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்…

    இந்த நிலையிலும்,மற்றவர்கள் இது போன்ற ஒரு துன்பத்தை அனுபவித்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் பதிவு இட்டுள்ளது, உங்கள் மன முதிர்ச்சியை காட்டுகிறது….

    உங்கள் சோகத்தில் நானும் பங்கு கொள்கிறேன்… எல்லாம் வல்ல இறைவன் உங்கள் குடும்பத்தார்க்கு, இந்த நிலையில் இருந்து விரைவில் மீண்டு வர அனைத்து சக்தியையும் தர வேண்டுகிறேன்….

  42. ஆழ்ந்த அனுதாபங்கள். வேறென்ன சொல்ல…? கஷ்டமான மனநிலையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பதிவு ‌எழுதியிருக்கும் உங்களை பாராட்ட வார்த்தைகள் வரவில்லை.

  43. Dear Giri,
    My condolences to you. May GOD give you and your family enough strength to over come this irreparable loss.
    Pradeep Kumar

  44. அன்புள்ள் கிரி அவர்களுக்கு ,

    என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் ! மிகவும் மோசமான விபத்து என்பது நீங்கள் எழுதியதை வைத்து யூகிக்க முடிகிறது.

    உங்கள் சகோதரி , இனி மீதமுள்ள வாழ்க்கையை எப்படி கழிக்க போகிறார் ? அவர் மன ஓட்டம் எந்த அளவுக்கு பாதித்து இருக்கும் என்று நினைத்தாலே எனக்கு கண்ணீர் வருகிறது.

    தப்பு நாம் செய்கிறோம்…தண்டனையை குடும்பத்தார்கள் அனுபவிக்கிறார்கள் . என்ன கொடுமை !

    இந்த துக்ககரமான நேரத்திலும் எங்களுக்கு நீங்கள் சொன்ன அறிவுரைக்கு மிக்க நன்றி !

    வருத்ததுடன்,
    அபுதாகீர் , துபாய் .

  45. கிரி,

    I just came for a casual visit to your blog after a long time and got this shocking news. My condolences for your sisters family, may god be with them. If any one who goes through this write up follows what you have told will be a good thing to happen.

    Kamesh
    Botswana

  46. கிரி உங்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
    உங்கள் மாமாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  47. டியர் கிரி,
    உங்களுக்கும் மற்றும் உங்கள் அக்கா குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்

  48. Hello Giri..
    For the last few days only I m regularly visiting u r blog.. but 2day i feel very sad.. My condolences to you as well as u r uncle family.. It’s very difficult task to forget this incident but u hav understand the situation and shared with us.. U r really something different person.. Thanks for u r advice while driving.. Every one knows very well abt the rules and regulation but very few peoples only following tht but once the problem is happened to our relatives or neighbors tht time only we feel very sad…

  49. மாம்ஸ்,
    இந்த விஷயம் கேவிபட்டு ரொம்ப மனசு வருத்த படுகின்றது..எங்களுடைய பிராத்தனை மற்றும் அக்க குடும்பத்துக்கு வேண்டிய மனுருதியயி ஆண்டவன் தருவாரக

    வ.சிவசைலம் & குடும்பம்

  50. கிரி நான் மகேஷ் ரொம்ப கஷ்டமா இர்ருக்கு உங்கள்ளோட வாக்கியம் என்னக்கு அழுகிய வந்துச்சு கண்டிப்பா இரண்டு பாரவவுது திருந்தத்தூம்
    முக்கியமா சிவா வீட்ல எல்லோரையும் visarith அதாக சொல்லவும் மிக்க நன்றி

  51. I came to this blog from our Facebook – to follow your post about Google and saw this shocking post.
    As one who had undergone such traumatic experience when my Father, Niece and Uncle were killed in an accident way back in 1992, i can empathasise with the shock.
    My heartfelt condolences and prayers

  52. கிரி,
    இடுகைகளை தொடராத காரணத்தால் உங்களின் துயரத்தை உடனடியாக பகிர்ந்து கொள்ள முடியவில்லை.இன்று உங்கள் நினைவு வர உங்கள் பக்கங்களை தேடியதில் இந்த துயர சம்பவத்தை படிக்க நேர்ந்தது.

    My sincere heartfelt condolences .

  53. நீங்கள் குறுப்பிட்டுள்ள “என்னதான் எங்களின் ஆதரவு அவர்களுக்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் உண்டு என்றாலும் குடும்பத்தலைவன் என்கிற தகுதிக்கு முன் எதுவும் ஈடாகா” முற்றிலும் உண்மை.

    இதே போன்று பிரிதொரு நிகழ்வில் எனது நண்பரின் அப்பா சிக்கி இறந்துவிட்டார், அடித்த போட்ட கார் நம்பரை நன்கு பார்த்த பேருந்து ஓட்டுனர் பின்பு சரியாகப் பார்க்கவில்லை என்றதும், சாட்சி சொல்ல வரமாட்டேன் என்றும் ஒதுங்கிக் கொண்டனர். காரின் எண்ணை மோப்பம் பிடித்துச் சென்றால் அது ஒரு மோட்டர் பைக் நம்பர் கோவையில் பதியப்பட்டது என்றும் மாற்றி விட்டனர். இத்தனைக்கும் விபத்து நடந்த இடம் கும்பகோணத்திற்கும் மயிலாடுதுறைக்கும் இடைப்பட்ட பகுதி. என்னதான் நம்ம இந்தியர்கள் ஆன்மிகவாதிகள் என்று நாம் பெருமை பட்டாலும் பிற நாடுகளை ஒப்பிடுகையில் நம்ம நாட்டில் நேர்மையாளர்கள் மிகக் குறைவு. 🙁

  54. அன்புள்ள கிரி ,
    சிவராமன் எழுதிகொள்வது , நலம், நலம் அறிய அவா. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தான் நீ இணையத்தில் எழுதும் பதிவுகள் குறித்து ஜனார்த்தனன் மூலம் அறிந்தேன். அதிலிருந்து உனது பதிவுகளை சிறுக சிறுக படித்து வருகிறேன். பிரமிப்பாகவும், நெடு நாளைக்கு பிறகு உன்னுடன் பேசுவது மகிழ்ச்சியாகவும் உள்ளது. அக்காவின் கணவர் இறந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!