ஆசிரியர்களின் பரிதாப நிலை

2
ஆசிரியர்களின் பரிதாப நிலை

சிரியர்களின் வாழ்க்கையைக் கோவிடுக்கு முன்பு கோவிடுக்கு பின்பு என்று இரண்டாகப் பிரித்து விடலாம். Image Credit

கோவிட்

கோவிட் பிரச்சனை காரணமாக மாணவர்களின் வகுப்புகள் ஆன்லைனுக்கு மாறிய பிறகு உளவியல் ரீதியாகப் பலரும் பாதிக்கப்பட்டார்கள்.

அதில் பாதிக்கப்பட்டு மரியாதை இழந்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஆசிரியர்கள்.

ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைன் படிப்போடு பொழுதுபோக்கையும் எளிதாக மாணவர்கள் கையாளவும் வாய்ப்பைக் கொடுத்து விட்டது.

Online Games க்கு மாணவர்களை அடிமையாக்கி விட்டது.

YouTube காணொளிகள், TikTok (தடைசெய்யப்பட்டது 2020), இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றைத் தொடர்ச்சியாகப் பார்த்தது மாணவர்களின் உளவியலையே திருப்பிப் போட்டு விட்டது.

அதில் உள்ள கலாய்க்கும் காணொளிகள் அனைவருக்கும் கொடுத்த மரியாதையை இழக்க வைத்து எவரையும் எப்படியும் கிண்டலாகப் பேசலாம் என்ற மோசமான எண்ணத்தைக் கொண்டு வந்து விட்டது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருந்தாலும், காலம் காலமாக ஆசிரியர்களுக்கு என்றிருந்த மதிப்பை இம்மாற்றம் சீரழித்து விட்டது.

ஆசிரியர்கள்

ஆண், பெண் இரு ஆசிரியர்களும் ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள் குறிப்பாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.

காரணம், தனியார் பள்ளியில் இது போல நடந்தால், TC கொடுத்து அனுப்பி விடுவார்கள் ஆனால், அரசுப்பள்ளியில் அதைப் போலச் செய்ய முடியாது.

என்ன பிரச்சனை, என்ன நடந்தது என்பதைக்கூட உணராமல், போராளிகள் போராட வந்து விடுவார்கள்.

மாணவர்கள் சரக்கடித்துட்டு வகுப்பிலேயே அமருகிறார்கள். ஆசிரியர்களுக்குத் தெரிந்து இருந்தாலும், மரியாதையைக் காப்பாற்ற சில நேரங்களில் தெரியாதது போல இருக்க வேண்டியதாக உள்ளது.

சரக்கைப் போட்டு ஆசிரியரை அடித்தாலும், பின்னரும் அதே வகுப்புக்கு அந்த மாணவன் வருவான் என்கிற பொழுது, அந்த ஆசிரியருக்கு என்ன மதிப்பு இருக்கும்?

பெண் ஆசிரியர்களின் நிலை இன்னும் மோசம். மோசமாகக் கிண்டல் அடிப்பது என்று அவர்கள் வேறு மாதிரியான உளவியல் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.

இவையெல்லாம் முன்பே இருந்தது (90s) ஆனால், மறைமுகமாக இருந்தவை தைரியம் பெற்று தற்போது வெளிப்படையாகி விட்டது.

ஆசிரியைகள் சிலரின் உடைகளும், ஒப்பனைகளும் பாடம் சொல்லித்தர வருகிறோம் என்பதை நினைவுபடுத்துவதாக இல்லையென்ற குற்றச்சாட்டுமுள்ளது.

கஞ்சா

இருக்குற பிரச்சனை போதாது என்று சில மாணவர்கள் கஞ்சா பழக்கத்துடன் உள்ளார்கள். விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி ஒரு மிட்டாய் மாதிரி கடிப்பதை போன்று வாயில் வைத்துள்ளார்கள்.

இதனால், இவ்வாறு உள்ளவர்கள் வகுப்பில் வாயைத் திறந்து பேசுவதில்லை, கேள்விகளுக்குப் பதில் கூறுவதில்லை என்ற புகார் உள்ளது.

சென்னை தனியார் பள்ளியில் இது போல நடந்தது தெரிய வந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்கள். அடுத்தக் கல்வியாண்டில் TC கொடுத்து விடுகிறார்கள்.

இவர்களைப் போன்ற தறுதலைகளுடன் நம்ம பசங்க பொண்ணுக படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பயத்தை அளிக்கிறது.

கண்டிக்க வேண்டிய பெற்றோர்கள், பொறுப்பற்று ஆசிரியர்களிடமே சண்டைக்குப் போவதால், எப்படியோ நாசமாகப் போகட்டும் என்று ஆசிரியர்கள் ஒதுங்கி விடுகிறார்கள்.

தங்கள் கடமை சொல்லிக் கொடுப்பது. படித்தால் என்ன? படிக்கவில்லையென்றால் என்ன? என்ற விரக்தி நிலைக்கு ஆசிரியர்கள் வந்து விடுகிறார்கள்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசின் ஆதரவும் இல்லை, அவமானமே மிஞ்சுகிறது.

மேலும் சிக்கலை ஏற்படுத்துவது போல, சில ஆசிரியர்கள் மாணவிகளிடம் தவறாக நடந்தது, ஆசிரியர்கள் மீதான மதிப்பைக் குறைத்து விட்டது.

எனவே, இவர்களால் மற்ற ஆசிரியர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

பெற்றோர்கள்

இருப்பதிலேயே கடுப்படிப்பது தற்போது பெற்றோர்கள் தான்.

தங்கள் பிள்ளைகளை எப்படியாவது சீரழித்து விட வேண்டும் என்று எங்கேயாவது சத்தியம் செய்து வந்துள்ளார்களா? என்று தெரியவில்லை.

ஒரு பெற்றோர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்குத் தற்காலப் பல பெற்றோர்கள் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்கள்.

ஒரு தவறு செய்தால் மெல்லமாக அடித்தால் கூடப் பொங்கி விடுகிறார்கள். இதனால், ஆசிரியர்கள் எதையும் செய்யவே பயப்படுகிறாரகள்.

அதோடு மாணவர்களும் (தற்கொலை போன்று) எதையாவது செய்து விடுகிறார்கள்.

நமக்கேன் வம்பு என்ற பாதுகாப்பு உணர்வே தற்போதைய ஆசிரியர்களிடம் மேலோங்கி உள்ளது.

இதைத்தவறு என்று கூற மாட்டேன் காரணம், இந்நிலையில் நான் இருந்தாலும் இதே முடிவைத்தான் எடுப்பேன். எதற்குப் பேசணும் சிக்கலில் மாட்டனும் என்றே தோன்றும்.

அடிப்பதை விடுங்க, திட்டினாலே பெற்றோர்கள் சண்டைக்கு வந்து விடுகிறார்கள். எதனால் திட்டினார்கள் என்று கேட்பதில்லை, காரணத்தைக் காதில் வாங்குவதில்லை.

அதெப்படி என் பையனை / பெண்ணைத் திட்டலாம், அடிக்கலாம்? என்று சண்டைக்கு வந்து விடுகிறார்கள்.

சமூக நெருக்கடி

நம்ம ஊர் ஊடகங்கள், ஊழலுக்கு Breaking News போட மாட்டார்கள் ஆனால், இது போன்ற சின்னப் பிரச்சனைகளுக்கு வரிந்து கட்டி Breaking News ஒளிபரப்பிப் பரபரப்பாக்கி விடுவார்கள்.

பாலியல் அத்துமீறல், பெரிய பிரச்சனை என்றால், கவனம் பெறுவது சரி ஆனால், சப்பை விசயத்தை எல்லாம் ஊரைக் கூட்டி விடுகிறார்கள்.

இதனால் பெற்றோர் புகார் வந்தால், பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களையே அமைதி காக்கக் கூறுகிறார்கள்.

தன்மானத்தை விட்டு இருக்க வேண்டி இருப்பதால், ஆசிரியர்கள் தற்போது எப்படியோ போய்த் தொலையட்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள்.

இதனால் இழப்பு மாணவர்களுக்கே!

தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை தாங்களே அழிக்கிறோம் என்பதைப் பெற்றோர்கள் உணர்வார்கள் என்ற நம்பிக்கை சத்தியமாக எனக்கில்லை.

கட்டுப்பாடில்லை

வகுப்பு எடுக்கும் போது கிண்டலடிப்பது, அதிக உரிமை எடுத்துக்கொள்வது, பாடம் நடத்தும் போது வெளியே செல்வது என்று மாணவர்கள் எல்லை மீறுகிறார்கள்.

பள்ளி மாணவ மாணவிகள் அத்துமீறி நடக்கிறார்கள். தற்போது Boy Friend இல்லாத மாணவியை மற்ற மாணவிகள் ஒதுக்கும் நிலையும் நடக்கிறது.

இவையல்லாமல் சிலவற்றை இங்கே பகிர முடியாத அளவுக்கு கேவலமான சம்பவங்களாக உள்ளது. இவையெல்லாம் எங்கே சென்று முடியுமோ!

கண்டிக்க வேண்டிய பெற்றோர்களோ அவர்களை ஊக்குவிக்கிறார்கள். அதோடு செலவுக்குக் கன்னாபின்னாவென்று பணத்தைக் கொடுக்கிறார்கள்.

Sports Day என்றால், ₹5,000 செலவுக்குக் கொடுக்கும் பெற்றோர்களும் உள்ளார்கள் என்பது சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.

ஆனால், முழுக்க முழுக்க உண்மை.

விளையாட்டு மனோபாவம்

இதுபோன்று கோவிடுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களில் மாணவர்கள் ஆசிரியருக்குக் கொடுக்கும் மரியாதையில் பெருமளவு சரிவு ஏற்பட்டுள்ளது.

திரைப்படங்களும், YouTube / Reels காணொளிகளும், சமூகத்தளங்களும் மாணவர்கள் மனதில் எதையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் மனோபாவத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதற்குச் சமூகமும், பெற்றோர்களும் உடந்தையாக உள்ளார்கள்.

இந்நிலை ஒரு சில கிராம மற்றும் செமி நகரங்களில் உள்ள கட்டுப்பாடான பள்ளிகளில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களும், படிக்கும் மாணவர்களும் புண்ணியம் செய்தவர்கள் என்று கூறுவதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.

பள்ளிகளில் நடைபெறும் உளவியல் தாக்குதல்களுக்கு பள்ளித்தலைமை / அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், மிக மோசமான நிலைக்கே நாளைய சமூகத்தைக் கொண்டு செல்லும்.

ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்காத சமூகம் உருப்படாது!

தொடர்புடைய கட்டுரை

குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்கள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி.. உண்மையில் பதிவை படித்த பின் மனது என்னுடைய கடந்த காலத்தை பின் நோக்கி பார்க்க வைக்கிறது.. இந்த தலைமுறைக்கும், நம் தலைமுறைக்கும் எவ்வளவு வேறுபாடுகள் இருக்கின்றது..

    உண்மையை சொல்லப்போனால் இந்த தலைமுறைக்கு எதையும் சீரியசாக எடுத்து கொள்வதில்லை. எல்லாமே விளையாட்டாகவே கருதுகிறார்கள்.. இதற்கு நிச்சயம் பெற்றோர்களும், சமூக வலைத்தளங்களும் முக்கிய காரணம் என எண்ணுகிறேன்..

    நகரத்தில் நடக்கும் அத்தனை மோசமான நிகழ்வுகளும், தற்போது கிராம புறங்களிலும் நடப்பது தான் கொடுமை.. பெற்றோர்கள் திருந்தாத வரை மாணவ / மாணவிகள் திருத்துவது கடினம்..

    என்னுடைய பள்ளி பருவத்தில் என் நண்பன் ஒருவன் பலான படம் பார்த்த போது தியேட்டரில் பிடிபட்டு, ஊர் பெரியவர்களின் ஆலோசனை படி மசூதியில் கட்டி வைக்க பட்டான்.. இவனுடன் மேலும் 4 பேர்கள் இருந்தனர். எல்லோருடைய வீட்டிற்கும் தகவல் அனுப்பி பெற்றோரை வர சொன்னார்கள்..

    தந்தைகளே அவமானம் காரணமாக சம்பவ இடத்துக்கு வர தயங்கிய போது, என் நண்பன் சார்பாக அவன் அம்மா வந்து ” அசால்ட்டாக இதெல்லாம் ஒரு பிரச்சனையா??? இந்த படத்தை எல்லாம் இந்த வயசுல பார்க்கம எந்த வயசுல பாக்கறதுனு!!!

    ஊர் பெரியவர்கள் எல்லோரையும் கிறு கிறுக்க வைத்து விட்டார்… அந்த பருவத்தில் எங்களுக்கு இதெல்லாம் சிரிப்பாகவும், விளையாட்டாகவும் இருந்தது.. ஆனால் கால ஓட்டத்தில் நண்பனின் பாதை மாறி வேறு மாதிரி சென்று விட்டது..

  2. @யாசின்

    “இந்த தலைமுறைக்கு எதையும் சீரியசாக எடுத்து கொள்வதில்லை. எல்லாமே விளையாட்டாகவே கருதுகிறார்கள்”

    இது தான் முக்கியப்பிரச்சனை

    “நகரத்தில் நடக்கும் அத்தனை மோசமான நிகழ்வுகளும், தற்போது கிராம புறங்களிலும் நடப்பது தான் கொடுமை.. பெற்றோர்கள் திருந்தாத வரை மாணவ / மாணவிகள் திருத்துவது கடினம்..”

    உண்மை.

    “ஊர் பெரியவர்கள் எல்லோரையும் கிறு கிறுக்க வைத்து விட்டார்… அந்த பருவத்தில் எங்களுக்கு இதெல்லாம் சிரிப்பாகவும், விளையாட்டாகவும் இருந்தது.. ஆனால் கால ஓட்டத்தில் நண்பனின் பாதை மாறி வேறு மாதிரி சென்று விட்டது.”

    இதைக்கையாளுவது எளிதல்ல.

    சில நேரங்களில் எவ்வாறு கூறுகிறோம் என்றுள்ளது.

    இப்பிரச்சனையில் அம்மா கூறியதை அவன் Advantage ஆக எடுத்துக்கொண்டதாக கருதுகிறேன்.

    ஆனால், அப்போது இவ்வாறு அம்மா கூறினார் என்பது உண்மையிலேயே வியக்க வைக்கிறது காரணம், அக்காலத்தில் இவை எளிதான பிரச்சனையல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here