குழந்தைகளைப் பெற்றோர்கள் தான் கெடுத்து வருகிறார்கள் என்று நான் கண்ட அனுபவத்தில் புரிந்து கொண்டு இருக்கிறேன். இது குறித்த என் பார்வையே குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்கள் கட்டுரை.
பொருளாதார மேம்பாடு
1970, 80, 90 ல் பிறந்தவர்களுக்கும் 2000 க்கு மேல் பிறந்தவர்களுக்கும் பொருளாதார ரீதியாக நிறைய வேறுபாடுகள் உள்ளன.
கடந்த காலங்களின் பொருளாதாரச் சூழ்நிலையை விடத் தற்போது மக்களின் பொருளாதாரம் மேம்பட்டு இருக்கிறது.
இது நல்ல மாற்றம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால், தாங்கள் தான் சிரமப்பட்டோம் தங்களின் குழந்தைகளாவது வசதியாக வாழட்டும் என்ற மக்களின் எண்ணம் குழந்தைகளைக் கெடுத்து வருகிறது.
இதைப் பெருமையாக நினைப்பது தான் ஆகப்பெரிய கொடுமை.
பணத்தின் மதிப்பே தற்காலப் பெரும்பாலான குழந்தைகளுக்குத் தெரியவில்லை என்பது கசப்பான உண்மை, இதற்குக் காரணம் பெற்றோர்கள் என்பது அதை விடக் கசப்பான உண்மை.
குழந்தைகள் என்ன கேட்டாலும் வாங்கித் தருவது, அடம் பிடித்தால் அதன் போக்கில் செல்வது, குடும்பத்தின் சூழ்நிலையைக் குழந்தைகளுக்கு உணர்த்தாமல் இருப்பது, அதிக செல்லமாக இருப்பது என்று பெற்றோர்கள் நடந்து கொள்கிறார்கள்.
பெற்றோர்கள் இது போலக் குழந்தைகளை வளர்ப்பது அவர்களைச் செலவாளிகளாக்கும், அவர்கள் பெரியவர்கள் ஆனதும் இதே பழக்கம் தொடர்ந்து குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறுவார்கள்.
நான் இதைக் கண்கூடாகப் பலரின் குடும்பங்களில் காண்கிறேன்.
குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்
நானும் சிறு வயதில் பணத்துக்காக மிகச் சிரமப்பட்டு இருக்கிறேன் அதற்காக என் பசங்களைப் பணத்தின் மதிப்புத் தெரியாமல் வளர்ப்பது நான் அவர்களுக்குச் செய்யும் துரோகம்.
அவர்கள் எதிர்காலத்தில் சிரமப்பட நானே வழியமைத்துக் கொடுப்பது போல. தற்போது கடுப்பாக இருந்தாலும், எதிர்காலத்தில் நிச்சயம் இதை உணர்வார்கள்.
இதற்கு நம் துணையின் ஒத்துழைப்பும் முக்கியமானது, மனைவி ஒத்துழைக்கவில்லை என்றால், என்னால் மட்டுமே குழந்தைகளிடம் மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியாது.
சிறுவயதில் என் அப்பா, அம்மா என்னைக் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார்கள்.
அப்போது கடுப்பாக இருந்தது ஆனால், இன்று யோசித்தால், “அன்று மட்டும் பெற்றோர் என்னைக் கட்டுப்பாட்டுடன் வளர்க்காமல் இருந்து இருந்தால், என்ன ஆகி இருக்கும்?” என்று பயம் கலந்த சிந்தனை வருகிறது.
அப்படிக் கேட்டால் தான் அது குழந்தை
பெற்றோரைக் கஞ்சத்தனமாக இருக்கக்கூறவில்லை, குடும்பச் சூழ்நிலையைச் சிரமத்தைக் குழந்தைகளும் உணரும்படி நடந்து கொள்ளுங்கள் என்பதே கூற வருவது.
குழந்தைகள் என்றால் பார்க்கும் அனைத்தையும் கேட்பார்கள், அப்படிக் கேட்டால் தான் அது குழந்தை.
அதை நீங்கள் தான் அவர்களுக்குப் புரியும் படி எடுத்துக்கூற வேண்டும்.
எதையும் கூறும் விதத்தில் கூறினால் குழந்தைகள் கேட்பார்கள்.
ஐடி துறை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, இது போல மற்ற துறைகளும் எனவே, நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.
பணமுள்ளது என்று என் பசங்களுக்குச் சொகுசை பழக்கி விட்டால், நாளைப் பணமில்லை என்றால் அவர்களால் அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாது.
கஷ்டமே தெரியாமல் வளர்ந்தவர்கள் உடைந்து விடுவார்கள், போராடத் தோன்றாது, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள அவர்களால் முடியாது.
நீங்களோ உங்கள் துணையோ பணத்தின் மதிப்பு தெரியாமல் செலவு செய்தால், காரணம் உங்கள் துணையோ நீங்களோ அல்ல, உங்கள் மற்றும் உங்கள் துணையின் பெற்றோரே பெரும்பான்மைக் காரணம்.
அவர்களின் வளர்ப்பே இந்த நிலைக்குக் காரணம்.
அவர்கள் அப்பவே கண்டித்து இருந்தால், இந்த நிலை வந்து இருக்காது.
ஆடம்பரத்தை பழக்காதீர்கள்
பசங்களுக்குத் தான் செய்வது என்ன என்று புரிந்துகொள்ளும் வயது, பக்குவம் வந்த பிறகு நீங்கள் பணத்தைத் தாராளமாகக் கொடுக்கலாம்.
இதன் பிறகு இது போலக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய தேவையில்லை.
அவர்களுக்கே எது சரி தவறு, எதற்குச் செலவு செய்யலாம் கூடாது என்பது புரியும். ஆடம்பரத்தை பழக்கி விட்டால், பெரியவர்கள் ஆகியும் அவர்கள் எண்ணம் அதே போல இருக்கும்.
வரவுக்கு மீறிய செலவு, குடும்பச் சூழ்நிலையை உணராமை, துணையுடன் சண்டை, நெருக்கடி என்று வாழ்க்கை முழுக்கச் சண்டையாகி விடும்.
சுருக்கமாக, குடும்பச் சூழ்நிலையை, எப்படிக் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறீர்கள் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறுங்கள்.
உங்களிடம் நிறையப் பணம் இருந்தாலும், அவசியமற்ற செலவை, ஆடம்பரத்தை ஊக்குவிக்காதீர்கள்.
பணம் மரத்தில் காய்ப்பதல்ல என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.
குழந்தைகளுக்கு அதிகப் பணம் கொடுப்பது, ஆடம்பரத்தை பழக்குவதன் பெயர் பாசமல்ல, நீங்கள் குழந்தைகளுக்குச் செய்யும் துரோகம்.
நீங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டியது பணத்தை அல்ல, மிகைப்படுத்தப்படாத உண்மையான பாசத்தை.
தொடர்புடைய கட்டுரை
குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்கள் – 2
கொசுறு
அடுத்தக் கட்டுரையில் குழந்தைகளிடம் பல பெற்றோர் எப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள், பொறுமையை இழக்கிறார்கள், செல்லம் கொடுத்துக் கெடுக்கிறார்கள், தங்கள் எதிர்பார்ப்பைத் திணிக்கிறார்கள் என்பது பற்றி எழுதுகிறேன்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
முழுமையாக ஒத்துக்கொள்கிறேன்.
சிறப்பான கட்டுரை. நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.
அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன்.
கில்லாடி,
நீங்கள் சொல்வது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை. நெறைய குடும்பத்தில் இதை நான் கண்கூடாக பார்க்குறேன், பார்த்துக்கொண்டு இருக்கிறேன் 🙂
ரஜினியின் தூத்துக்குடி மகிழ்ச்சி பயணத்தைப் பற்றிய கட்டுரை எழுதுங்கள்.
ரஜினியின் தூத்துக்குடி மகிழ்ச்சி பயணத்தைப் பற்றிய கட்டுரை எழுதுங்கள்.
அப்புறம் வர்றேன் கிரி.
தமிழகத்தின் விஷக் கிரிமி, பாசிசத்தின் சிந்தனை சிற்பி ரசினியை தலைவராக ஏற்போறை என்ன சொல்லி அழைப்பது.
கிரி, எதிர்காலத்தை நினைத்தாலே மிகப்பெரிய பயம் எப்போதும் உண்டு.. சாதரண நடுதர குடும்பத்திலிருந்து வந்தவன்… இன்றும் சாதாரண வாழ்க்கைக்கு என்னால் திரும்ப முடியும்.. ஆனால் கட்டிய மனைவி, பெற்ற பிள்ளை இவர்களால் முடியுமா???? இந்த கேள்விக்கு விடை எனக்கு தெரியவில்லை.. குழந்தை வளர்ப்பை விட கடினமான ஒன்று உலகில் இல்லை என்பது என் கருத்து.. தந்தையான பின் தான் வயதானவர்களின் மீதான மதிப்பும், அன்பும் எனக்கு கூடியது… சரியான பாதையில் அவர்களை கொண்டு செல்வது மிகவும் சிரமான காரியம்… நம்முடைய வலிகளை, வேதனைகளை அவர்களுக்கு சரியான நேரங்களில் உணர செய்ய வேண்டும்… எதுவும் எளிதாக கிடைக்காது, என்பதை உணர செய்ய வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி கிரி
@Varadaradjalou நன்றி 🙂 விரைவில் எழுதுகிறேன்.
@விஜய் 🙂
@யாசின் நாம் துவக்கத்தில் இருந்தே அவர்களுக்கு புரியும்படி கூறினால் போதும். அதோடு பணத்தின் முக்கியத்துவத்தையும் எது அனாவசிய செலவு என்பதை உணர வைத்தால் இப்பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
என்னுடைய பசங்களிடம் இதை பின்பற்றுகிறேன். துவக்கத்தில் சிரமமாக இருந்தது, தற்போது பசங்க பழகி விட்டார்கள், எங்களுக்கும் எளிதாக உள்ளது.
@Alim விஷக் கிரிமி, பாசிசத்தின் சிந்தனை சிற்பி, ரசினி
அடேங்கப்பா! எத்தனை பெயர் 🙂 கிரி என்றே அழைக்கலாம், தவறில்லை.
@ஜோதிஜி எழுதினால் மட்டும் என்ன சொல்ல போறீங்க.. அதே தானே! 🙂 விடுமுறையில் இருந்தேன்.
எங்களை விட ரஜினியை அதிகம் நினைப்பது ரஜினியை பிடிக்காதவர்கள் தான் போல! 🙂
//நாம் துவக்கத்தில் இருந்தே அவர்களுக்கு புரியும்படி கூறினால் போதும். //
கிரி, எந்த வயதில் இருந்து சொல்லலாம்?
@swamirajan நான் 4 வயதில் இருந்து கூறி வருகிறேன்.இந்த வயதில் முழுவதும் புரியாது என்றாலும், இந்த வயதில் இருந்து தான் பிடிவாதம் போன்றவை ஆரம்பிக்கிறது.
எனவே, இந்த வயதில் இருந்தே இதெல்லாம் அவசியமில்லை, வீண் செய்யக்கூடாது, உடலுக்கு கெடுதல் போன்றவற்றை பக்குவமாக கூறி வந்தால் புரிந்து கொள்வார்கள்.
என்னுடைய இரண்டாவது மகனுக்கு 5 வயதாகிறது. இவனுக்கு நான் சிலது வாங்கி தரமாட்டேன் என்று தெரியும், புரியும். உதாரணத்துக்கு பெப்சி கோக் பிடிக்காது என்று தெரியும் எனவே, கோலி சோடா மட்டுமே கேட்பான்.
பொம்மை போன்றவையும் அப்பா கிட்ட அவ்வளவு பணமில்லை என்றால், சரி என்று ஏற்றுக்கொள்வான். கடைகளுக்கு சென்றால் அது வாங்கி கொடுங்க இது வாங்கி கொடுங்க என்று கேட்க மாட்டான்.
கேட்டாலும் விளக்கினால் புரிந்து கொள்வான். எனவே 4 வயது என்பது சரியானது என்று எனக்குத் தோன்றுகிறது.
நன்றி கிரி…
நானும் முயற்சி செய்கிறேன்.