உலகம் அனைத்தையும் சுருக்கமாக எதிர்பார்க்கிறது. யாருக்கும் பெரிதாகப் படிக்கவோ / பார்க்கவோ பொறுமையில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் அளவு மாறிக்கொண்டே உள்ளது. Image Credit
15 நொடி காணொளிகள்
இதையுணர்ந்து YouTube புதிய வசதியை அறிமுகப்படுத்தப்போகிறது. YouTube செயலி வழியாக எடுக்கப்படும் காணொளி நேரம் அதிகபட்சம் 15 நொடிகளே!
இது போல எடுத்தவற்றை இணைத்து ஒரு காணொளியாகக் கொடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தப்போகிறது.
15 நொடிகளுக்கு மேலே காணொளி எடுக்க வேண்டும் என்றால் YouTube செயலியைப் பயன்படுத்தாமல், திறன்பேசியை (ஸ்மார்ட் மொபைல்) பயன்படுத்தி எடுத்து அதை YouTube ல் தரவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
ஏன் இந்த மாற்றம்?
TikTok, Instagram அறிமுகப்படுத்திய குறைந்த நேர 15 நொடிகள், 1 நிமிடம் போன்றவை அனைவரிடையே பலத்த வரவேற்பை பெற்றது.
மக்களுக்குப் படிக்க / பார்க்கச் செய்திகள், நகைச்சுவைகள் என்று ஏராளமான வாய்ப்புகள் பெருகிவிட்டன, கொட்டி கிடக்கின்றன.
இதனாலே, முழுமையாகப் படிக்க / பார்க்க யாரும் விரும்புவதில்லை.
ஒரு நாளைக்கு 50 கட்டுரைகள் மட்டுமே படிக்க இருந்தால், 30 கட்டுரைகளாவது சுவாரசியத்தைப் பொறுத்துப் படிப்பீர்கள்.
அதே சுருக்கமாகச் சுவாரசியமாக 1000+ இருந்தால், எவ்வளவு படிக்க முடியும்?!
எனவே, Skim reading பெருகி, பெரிய கட்டுரைகள், Blog வரவேற்பு இழந்தன.
பெரும்பான்மை மட்டுமே!
பெரிய கட்டுரைகளுக்கென்று வாசகர்கள் இருக்கிறார்கள் ஆனால், அவர்கள் பெரும்பான்மையானவர்கள் அல்ல.
இங்கே பெரும்பான்மை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது ஃபேஸ்புக்கில் சண்டை போடுவதை விட, குறுகிய நேர நகைச்சுவை காணொளி, மீம்கள் பார்ப்பதற்கே தற்போதைய தலைமுறையினர் விரும்புகிறார்கள்.
எனவே தான் TikTok, Instagram வரவேற்பு பெற்று வருகின்றன.
பிரபலமடைந்து வரும் குறுகிய நேர காணொளி
ஏராளாமான காணொளி காண கிடைப்பதால், எதை / எவ்வளவை பார்ப்பது என்று குறுகிய நேர காணொளி பிரபலமடைந்து வருகிறது.
இவை அதிகரிக்க WhatsApp செயலியும் முக்கியக்காரணம். WhatsApp Status உலகில் பெரும்பாலானவர்கள் பார்க்கிறார்கள், பழகியுள்ளார்கள்.
எனவே, 30 நொடிகள் மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டுத் தற்போது கூடுதல் நேர காணொளி பார்க்கும் ஆர்வத்தை இழந்து விட்டனர்.
சமீபத்தில் வந்த மீம் நகைச்சுவையாக இருந்தாலும், அதில் உள்ள மிகப்பெரிய உண்மையை உணர்ந்தால், நடந்து வரும் மாற்றங்களை உணர முடியும்.
அது என்னவென்றால்..
‘அட அட WhtasApp status பார்த்துப் பார்த்துப் பழகி இப்பெல்லாம் 1 நிமிட வீடியோ பார்த்தாலே போர் அடிக்குதுப்பா!‘ என்பது தான்.
இதைப் படிக்க நகைச்சுவையாக இருந்தாலும், தற்போது நடந்து வரும் மாற்றத்தை எளிமையாக விளக்கி விட்டது.
சுருக்கமாக, யாரும் பெரிய காணொளியை அதிகம் விரும்புவதில்லை.
நேர்முகம் மற்றும் சில வகை நீண்ட காணொளிகளுக்கு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது என்றாலும், பெரிய வரவேற்பு சிறு காணொளிகளுக்குத் தான்.
YouTube ல் ஒரு காணொளி சில நொடிகள் சலிப்படைந்தாலே, அருகில் ‘Related Videos’ பார்த்து க்ளிக் செய்து இன்னொன்றுக்கு தாவி விடுகிறார்கள்.
மூன்று / நான்கு நிமிடங்கள்
மூன்று / நான்கு நிமிடங்களுக்கு மேல் ஒரு காணொளியைப் பார்க்கும் பொறுமையைப் பெரும்பாலானவர்கள் இழந்து விட்டார்கள்.
இதை உங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.
எனவே, YouTue இந்தப் புதிய வசதியை முயற்சிக்கப்போகிறது. தற்போது அனைவருக்கும் கொடுக்கப்போவதில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே இவ்வசதியை கொடுத்து, 15 நொடி காணொளிகள் எப்படி வரவேற்பை பெறுகிறது என்பதைப் பார்த்து, வெற்றி பெற்றால் மட்டுமே செயல்படுத்தப்போகிறார்கள்.
எனவே, இன்று இல்லையென்றாலும் YouTube க்கும் இவ்வகைக் காணொளிகள் வந்தே ஆக வேண்டும், வேறு வழியில்லை.
பார்ப்போம் என்ன நடக்கிறது என்று 🙂 .
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.