தமிழக அரசு ஆங்கிலத்தில், சமஸ்கிருதத்தில் உள்ள பெயர்களைத் தமிழில் மாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளதை அறிந்து இருப்பீர்கள். அது போல டமில்நாடு இனி தமிழ்நாடு என்று மாற்றப்போவதாகக் கூறியுள்ளார்கள்.
நகரங்களின் ஆங்கிலப்பெயர்கள், புரியாத சமஸ்கிருத பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படவுள்ளன. இதற்குப் பலத்த வரவேற்பு அனைத்துப் பக்கங்களிலும் கிடைத்துள்ளது. Image Credit
உதாரணத்துக்குத் தூத்துக்குடி / திருவல்லிக்கேணி ஆங்கிலத்தில் Tuticorin / Triplicane என்று கூறப்படுவது இனி ஆங்கிலத்திலும் தூத்துக்குடி / திருவல்லிக்கேணி என்றே அழைக்கப்படும்.
இதன் ஒரு பகுதியாக..
Tamilnadu என்று ஆங்கிலத்தில் எழுதப்படுவதை Thamizhnadu என்று மாற்றப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள்.
சென்னை மாகாணம்
ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது, தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவை இணைந்து, “Presidency of Madras” என்று ஆங்கிலத்திலும், “சென்னை மாகாணம்” என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்தது.
மொழிவாரியாகப் பிரிந்து அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது 1969 ம் ஆண்டு ஜனவரி 14 “சென்னை மாகாணம்” என்ற பெயர் “தமிழ்நாடு” என்று மாற்றப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதற்காகக் கடும் போராட்டங்கள், சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்து இருக்கிறார்.
“அண்ணா” அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகே இந்தப் பெயர் மாற்றம் நடந்துள்ளது.
இதிலும் ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது என்ற சர்ச்சை விவாதம் வந்துள்ளது.
மற்றவர்கள் உச்சரிப்பதில், அழைப்பதில் உள்ள நடைமுறை சிக்கலை உணர்ந்து அண்ணா அவர்கள் Tamilnadu என்பதை தேர்வு செய்துள்ளார்.
இனி Thamizhnadu என்று மாற்றப்பட்டால் / எழுதப்பட்டால், இதை மற்ற மொழியினர் எப்படி அழைப்பார்கள், படிப்பார்கள் என்பது பெரிய சிக்கல்.
“தமிஸ்நாடு” என்று படிப்பார்கள் என்று நினைக்கிறேன் 🙂 .
காரணம், ZH = ழ்(L) என்பதை தமிழர்கள் மட்டுமே அறிவார்கள்.
டமில்நாடு இனி தமிழ்நாடு
Louis Philippe என்பதை சிறு வயதில் “லூயிஸ் பிலிப்பி” என்று படித்துக்கொண்டு இருந்தேன் 😀 . இதை லூயி பிலிப் என்று படிக்க வேண்டும்.
இது போல பல ஆங்கில வார்த்தைகள் எழுத்து வேறு உச்சரிப்பு வேறாக உள்ளது. அது போல ஒன்றாக Thamizhnadu இருந்துட்டு போகட்டுமே!
Louis Philippe என்பதை தவறாகப் படித்து நான் திருத்திக்கொண்டது போல, இதையும் மற்றவர்கள் திருத்திக் கொள்ளட்டுமே! என்ன இப்ப.. 🙂 .
தொடர்புடைய கட்டுரைகள்
சென்னையில் நடந்த “Google for தமிழ்”
தமிழ் முக்கியத்துவம் குறைய நீங்களும் ஒரு காரணம்!
இந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம்! [FAQ]
தமிழைத் திரும்பக்கொடுத்த “HDFC”
ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுதுவது கடினமா?!
facebook “முகநூல்” என்றால் Lady Gaga “பெண் காகா” வா?
கொசுறு
கனடா போல ஜனவரி மாதத்தைத் ‘தமிழ் மரபுடைமை’ மாதமாக அறிவிக்க வேண்டும் என்று விருப்பம். “தமிழ் தினம்” என்று ஒரு தினத்தைக் கொண்டாட வேண்டும்.
இதன் மூலம் தமிழின் வீச்சு இன்னும் அதிகரிக்கும், கொண்டாடுபவர்களும் அதிகரிப்பார்கள். இதை எப்போது அறிவிக்கப் போகிறார்களோ?
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை.
நான் கூட பார்த்து குழப்பமடைந்துள்ளேன் தமிழை Tamilzh என்று எழுதுவதை பார்த்து. இது மேலதிக குழப்பத்தையே எற்படுத்தும் என்று நினைக்கிறேன். மெட்ராசின் தமிழ்தான் சென்னை என்பது உங்களின் பதிவு பார்த்துதான் தெரிகிறது. மெட்ராஸ்தான் சென்னையாக பெயர்மாற்றியதாகத்தான் இதுவரை நம்பிக்கொண்டிருந்தேன். ரூடோவின் வித்தைகளில் ஒன்றுதான் இந்த தமிழ் மாதம், பொங்கல் விழா…,. இருந்தாலும் ஒருவகையில் நன்மைதான். அது என்னமோ என்ன மாயமோ தெரியவில்லை. கனடாவில் வதியும் தமிழர்களை தவிர்த்து ரூடோவினை எல்லா தமிழர்களுக்கும் பிடித்திருக்கிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல, எல்லாவற்றிலும் மாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.. மொழியின் மீது அதீத காதல் கொண்டவன் என்ற அடிப்படையில் “தமிழ் தினம்” நானும் வரவேற்கிறேன்.. உங்களுக்கு படிக்கும் போது Louis Philippe எப்படியோ, எனக்கு யூவான் சுவாங்.. படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@ப்ரியா.. ஆமா.. உங்களுக்கு ஏன் அவரைப் பிடிக்கவில்லை?!! தெரிந்து கொள்ள கேட்கிறேன்.
@யாசின் யுவான் சுவாங் தமிழ் பெயர் வழியாகவே அறிமுகம் அதனாலே எனக்கு சிக்கல் இல்லை 🙂