இளையராஜா 75 விழா சிறப்பாக நடந்தேறியுள்ளது உடன் சில சர்ச்சைகளும்.
துவக்கத்திலேயே விழாக்கு தடைகேட்டு வழக்கு நடைபெற்றது. இளையராஜா தமிழ்நாட்டின் பெருமை என்று நீதிபதியே கூறி இளையராஜாக்குப் பெருமை சேர்த்தார். Image Credit
இளையராஜா இசையில் பாடல் கேட்காத / ரசிக்காத எவரும் இருக்க முடியுமா?! எத்தனை எத்தனை ரசனையான பாடல்கள். சலிக்கவே சலிக்காத பாடல்கள்.
“இளையராஜா” பாடல்கள் மட்டுமே!
கடந்த வாரம் எங்கள் அலுவலக ரீதியாகக் காரில் செல்லும் போது ஓட்டுநர் “இளையராஜா” பாடல்கள் மட்டுமே போட்டுக்கொண்டு வந்தார்.
“என்னங்க தீவிர இளையராஜா ரசிகரா?” என்று கேட்டேன்.
“ரசிகரெல்லாம் இல்லைங்க! இளையராஜா பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். இப்ப வர பாடல்கள் எல்லாம் கேட்குற மாதிரியா இருக்கு? ஒரு வாரம் கேட்டாலே சலிப்பாகி விடுகிறது” என்றார்.
தலைமுறை மாற்றம் / இடைவெளி என்றாலும் இவர் கூறியதில் உண்மை உள்ளதை மறுக்க முடியாது.
இரவின் மடியில்
சுற்றுலா செல்வது என்றாலே இளையராஜா பாடல்கள் இருக்க வேண்டும், இரவில் பணி புரிபவர்கள் இளையராஜா பாடல்கள் இருந்தால், உற்சாகமாகப் பணி புரிவார்கள்.
வெளிநாட்டில் தமிழர்கள் குறைவாக உள்ள பகுதியில் ஏதாவது ஒரு கடையில் / உணவகத்தில் இளையராஜா பாடல் ஓடிக்கொண்டு இருந்தால், அதைக் கேட்கும் போது அடையும் மகிழ்ச்சி அளவில்லாதது, அனுபவித்ததால் கூறுகிறேன்.
முதல் மரியாதை & ஹே ராம்
“முதல் மரியாதை” பின்னணி இசையை ஒரே நாளிலோ அல்லது இரு நாட்களிலோ இசையமைத்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
“ஹே ராம்” படத்துக்கு முதலில் இசையமைத்தவர் சுப்ரமணியம் என்பவர் ஆனால், கமலுடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரால் தொடர முடியவில்லை.
பின்னர் கமல், இளையராஜா அவர்களிடம் பேசி இசையமைக்க வேண்டுகோள் விடுத்தார்.
ஏற்கனவே இருந்த இசைக்கேற்ப பாடலும் படமாக்கப்பட்டு விட்டது ஆனாலும், இளையராஜா அந்தச் சுவடே தெரியாமல் பின்னணி இசையமைத்து அசத்தியிருந்தார்.
உங்களால் நம்ப முடியுமா? ஹே ராம் பாடல்கள் வாயசைப்புக்கு / காட்சிக்கு ஏற்ப இசையமைக்கப்பட்டது என்று! பாடல்களும் பின்னணி இசையும் கேட்டால் எங்கேயோ மிதப்பது போல இருக்கும். திரும்ப ஒரு முறை பாருங்கள், வியப்படைவீர்கள்!
இது போலப் பல அதிர்ச்சிகளைக் கேட்டு இருக்கிறேன்.
இசை எப்படி உருவாகிறது?
யாரோ ஒருவர் இளையராஜாவிடம் “உங்களுக்கு இசை எப்படித் தோன்றுகிறது? எப்படியொரு பாடலுக்கு இசையமைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
எனக்கும் ரொம்ப வருடங்களாக இருக்கும் சந்தேகம்.
“நான் யோசித்து இசைமைப்பதில்லை, அருவி போல இசை வந்து கொண்டே இருக்கும்” என்றார். உங்களுக்கு அதை எப்படி விளக்குவது என்று புரியவில்லை ஆனால், அவர் கூறியதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
பாடல்கள் என்றால் ரொம்ப விருப்பம். வீட்டில் இருந்தால், பாடல்கள் ஓடிக்கொண்டே இருக்கும். இளையராஜா இசையில் பாடல்கள் என்றால் கூடுதல் விருப்பம்.
தலைக்கனமும் திறமையும்
இளையராஜா மீது அனைவரும் கூறும் குற்றச்சாட்டு அவரின் தலைக்கனம்.
திறமையாக உள்ளவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்ற சப்பை காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதெல்லாம் முட்டுக்கொடுப்பதன்றி வேறில்லை.
தலைக்கனம் இல்லையென்றால், இளையராஜா தற்போது உள்ள இடத்தை விடப் பல நூறு படிகள் மேலே இருந்து இருப்பார்.
இளையராஜா மீது பல விமர்சனங்கள் கூறப்பட்டாலும், அவர் அசாத்திய திறமை மிக்கவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கடவுளின் வரம் பெற்றவர்.
இளையராஜாவால் பயன் அடைந்தவர்கள் ஏராளம், பயன்பெறவில்லை என்றாலும் அவரது பாடல்களை ரசித்தவர்கள் ஏராளம்.
எனவே, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த மிக முக்கிய விழாவில் நடிகர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள் அனைவரும் கலந்து அவருக்கு மரியாதை செலுத்தி இருக்க வேண்டும்.
வெறுப்பைக் காட்டும் நேரம் இதுவல்ல
நம்முடைய தனிப்பட்ட கோபங்களை, வெறுப்புகளைக் காட்டும் நேரம் இதுவல்ல.
எனக்கும் இளையராஜாவின் சில செயல்கள், விமர்சனங்கள், பேச்சுகள் பிடிக்காது ஆனால், விமர்சனங்கள் வேறு, மரியாதை / ரசனை வேறு.
இரண்டையும் குழப்பி, இசையை ரசிப்பதில் இவை எனக்குத் தடையாக இருப்பதில்லை.
தமிழ்ப்படங்களின் இசையைத் திரும்பிப் பார்க்க வைத்தவர்
இந்தி பாடல்களே தமிழகத்தை ஆக்கிரமித்து இருந்த காலங்களில், தமிழ் இசையை இந்தியாவெங்கும் கொண்டு சென்ற பெருமை இளையராஜாக்கு உண்டு.
இது இக்காலத் தலைமுறைகளுக்குத் தெரியாது, தெரிந்தவர்கள் உணர்வார்கள்.
A.R.ரகுமான் இந்நிகழ்வில் கலந்து அனைவர் பாராட்டையும் பெற்றார், மூத்த கலைஞருக்கு உண்டான மரியாதையைக் கொடுத்தார். வாழ்த்துகள் ரகுமான்.
“தமிழகத்தின் பெருமை இளையராஜா” நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தவர்களால் இளையராஜாக்கு சிறுமையில்லை, புறக்கணித்தவர்களுக்கே அவமானம்.
காலத்துக்கும், எப்போதும் சலிக்காத பாடல்களைக் கொடுத்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இசை ரசிகனாக என் மனமார்ந்த நன்றி.
இசையுள்ளவரை இளையராஜாவின் பெயரும் இருக்கும். அவர் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே ஒரு இசை ரசிகனாக எனக்குப் பெருமை!
தொடர்புடைய கட்டுரைகள்
மகாநதி [1994] ஒரு ரஜினி ரசிகனின் விமர்சனம்
இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
ஆமாம் இளையராஜா மிகுந்த திறமை மிக்கவர். அவருடைய பாடல்கள் நம் ரசனையை உயர்த்தியிருக்கின்றன. மகிழ்ச்சி அளித்திருக்கின்றன.
புகழும் திறமையும் உச்சத்தில் இருப்பவர்களில் சிலர், வித்தியா கர்வத்தைப் பெற்றுவிடுகிறார்கள். இது குறைதான். சில சமயம் இளையராஜா பேச்சு பலர் மனதைப் புண்படுத்தக்கூடியது.
இந்தக் குறைகளுக்கும் அவர் திறமைக்கும் சம்பந்தமில்லை. அதனைத் தெளிவாச் சொல்லியிருக்கீங்க.
புகழ் பணம் இல்லாமல் (தேவைக்கு மீறி) இல்லாமல் வாழும் சாதாரண மனிதர்கள் கூட ஐம்பது வயது தொடங்கும் போது பேச நினைப்பதில் பாதி தான் பேச வேண்டும். அறுபது வயது தொடங்கும் போது முக்கால் வாசி பேச்சைக் குறைத்துக் கொள்ள வேண்டும். எழுபது வயது என்றால் பேச்சை முழுமையாக குறைத்துக் கொள்ள வேண்டும். மிக மிக தேவையானது மட்டுமே பேச வேண்டும். இது சாதாரண மனித வாழ்க்கையில் பொது விதி. காரணம் உடல் இயக்கம் குறையத் தொடங்கும் போது, முழுமையாக செயல் இழக்கும் போது மனதிற்கும் உடம்பிற்கும் நடக்கும் போராட்டத்தை மகன் மகள் மனைவி க்கு நம்மால் புரிய வைக்க முடியும். இதுவே பிரபல்யம் என்றால் நெருக்கடிகள் அதிகம். எதிர்பார்ப்புகள் அதிகம். பொறாமையும் கூட அதிகமாகத்தான் இருக்கும். இன்னும் வாழக்கூடிய காலத்தில் இளையராஜா பேசுவதைக் குறைத்து இன்னும் பல ஆக்கபூர்வமான (தன் வாழ்நாளுக்குள்) காரியங்களைச் செய்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்துக் கொள்வதுண்டு. காரணம் இவர் திறமையைப் பார்த்து வியப்பதா? இவர் உளறலைப் பார்த்து வருத்தப்படுவதா? என்று ஒவ்வொருமுறையும் வருத்தமாக உள்ளது.
ஜோதிஜி ஜயா சொல்லுவது மிகச்சரி. பேச்சை குறைத்தால் மிகவும் நலம். அனைவருக்கும் அது பொருந்தும் . இளையராஜவிற்கு மிகவும் பொருந்தும். இவரின் இந்த அகங்காரபோச்சுக்களால் இவரின் பாடல்களும் கூட அடுத்த தலைமுறைக்கு சரியாக கடத்தப்படாது.
ஆயிரம் விமர்சனங்கள் தாண்டி நான் மதிக்கும் (ரசிக்கும்) வெகு சிலரில் முதன்மையானவர் இளையராஜா சார் என்பதில் எந்த ஐயமும் இல்லை!!! நான் இதுவரை அவரது பாடல்களை கேட்பதற்கு நேரிடையாக ஒரு ருபாய் பணம் கூட நான் அவருக்கு கொடுத்தது இல்லை.. ஆனால் என்னுடைய கோபம், வெற்றி, தோல்வி, காதல், ரணம், மரணம், சந்தோஷம், சிந்தனை என ஒவ்வொரு நிகழ்விலும் இளையராஜா இருக்கிறார்..
நான் தோல்வியில் வாழ்வின் விரக்தியில் சென்ற காலங்களில் என்னுடைய ஒரே ஆறுதல் இளையராஜாவின் பாடல்கள் மட்டும் தான்!!! (எனக்கு மட்டும் அல்ல, நிச்சயம் நிறைய பேருக்கும் தான்) தெய்வங்களும் என்னை விட்டு விலகிய பொழுதில் என்னை அரவணைத்தது இவரின் இசை மட்டுமே!!! அவரின் இசையை மட்டும் நேசிக்கிறேன்.. அவரை குறித்த மற்ற விஷியங்களில் தலையிட விரும்பவில்லை..
(தமிழகத்தின் பெருமை இளையராஜா” நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தவர்களால் இளையராஜாக்கு சிறுமையில்லை, புறக்கணித்தவர்களுக்கே அவமானம்.) இதை அவர் ஒரு பொருட்டாக கூட எடுத்து கொள்ளமாட்டார்.. வானத்தில் உள்ள சூரியனை வெறும் கையால் மறைக்க முடியுமா? அதுபோலத்தான் அறிவாற்றல் உடையவர்களின் புகழையும் யாராலும் தடுக்க முடியாது..
நான் முன்பே உங்களிடம் கூறியது போல், பழைய கஞ்சி சாதத்தில் உள்ள சுவை, தற்போது உள்ள வித விதமான பல துரித உணவின் சுவை பிடிப்பதில்லை.. இதனால் புதிய பாடல்கள் எதுவும் கேட்பதில்லை.. வெகு அரிதாக சில பாடல்கள் தவிர்த்து. 12 ம் வகுப்பு படிக்கும் போது, வாழ்வின் ஒரே இலட்சியம் PIONNER CD PLAYER வாங்கி இளையராஜாவின் பாடல்களை கேட்க வேண்டும் என்பது, ஆனால் தற்போது வரை என் ஆசை நிறைவேறவில்லை..
இரைச்சல் & சத்தம் மனைவிக்கு கொஞ்சமும் பிடிக்காததால் CD PLAYER என்றாலே அப்புறம் வாங்கலாம் என்று நாட்கள் (10 வருடம்) கடக்க போகிறது!!! மரணம் வரை நான் இளையராஜாவிடம் கொண்ட காதல் என்றும் தொடரும்… இறைவன் அவருக்கு நல்ல ஆரோக்கியமான உடல் சுகத்தை அளிப்பாயாக..பகிர்வுக்கு நன்றி கிரி..
@நெல்லைத்தமிழன் ஜோதிஜி ப்ரியா
இளையராஜாவின் கர்வம், மற்றவர் வருத்தப்படும் படி பேசுவது, தான் மட்டும் தான் திறமையானவர் என்ற எண்ணங்களை பழக்கங்களை விட்டு இருந்தால், இன்று அவர் இருக்கும் நிலையே வேறு.
ஏன் வயதாகியும் புரிந்து கொள்ளாமலே இருக்கிறாரோ!
@யாசின் இளையராஜா பாடல்கள் நாளை முதல் இல்லை என்றால்.. பலர் கிறுக்கு பிடித்து தான் அலைவார்கள். அந்த அளவுக்கு தன் இசையால் அனைவரையும் கட்டிப்போட்டு இருக்கிறார்.
எத்தனை எத்தனை பாடல்கள்?! அடேங்கப்பா! நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது.
கடவுள் அருள் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமே இல்லை. இவர் கடவுளின் ஆசி பெற்றவர், அதற்குத் தகுந்த மாதிரி தன்மையாகவும் நடந்து கொண்டால்.. எவ்வளவு சிறப்பாக இருக்கும்….!
இளையராஜாவின் கர்வம், மற்றவர் வருத்தப்படும் படி பேசுவது, தான் மட்டும் தான் திறமையானவர் என்ற எண்ணங்களை பழக்கங்களை விட்டு இருந்தால், இன்று அவர் இருக்கும் நிலையே வேறு.
திரைப்படத்துறையில் இருக்கும் நண்பர்கள் மூலம் இளையராஜா மற்றும் ரகுமான் உறவு, தொடக்கம் முதல் ரகுமான் பிரிந்தது வரைக்கும் பல விசயங்களை இங்கே எழுதினால் இளையராஜா மேல் மரியாதை வைத்திருப்பவர்கள் மனம் வருந்தக்கூடும் என்பதால் இங்கே எழுதவில்லை. இளையராஜா மிகச் சிறந்த மெட்டு அமைப்பாளர். ரகுமான் மிகச் சிறந்த இசை அமைப்பாளர். இளையராஜா உருவாக்கி வைத்திருந்த மோனோபோலி தனமான பல விசயங்களை உடைத்து நொறுக்கியவர் ரகுமான். இதன் மூலம் பலன் பெற்றவர்கள் பல ஆயிரம் பேர்கள். இந்த ஒரு விசயமே இளையராஜாவை பல விசயங்களில் பின்னுக்குத் தள்ளியது. போட்டி போட முடியவில்லை. இதுவே ரகுமான் உலக அளவில் கொண்டு போய் சேர்த்தது. இன்னும் பல விசயங்கள் உள்ளது. அவையெல்லாம் இசைக்கு அப்பாற்பட்ட பணம் சார்ந்த விசயங்கள். அதிலும் ரகுமான் தான் வென்றுள்ளார். முறையாக கையாண்டிருந்தால் இளையராஜா இன்றைய சூழலில் பல பில்லியன் டாலருக்குச் சொந்தக்காரராக இருந்திருப்பார். கோட்டை விட்டு விட்டார் என்பதே உண்மை. காரணம் உங்களுக்கே தெரியும்.