ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுதுவது கடினமா?!

9
ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுதுவது கடினமா?!

மிழை வளர்த்து, தமிழின் பெருமையை மக்களுக்கு உணர்த்த வேண்டிய ஊடகங்கள் தமிழ் மொழியைச் சிதைத்துக்கொண்டு உள்ளன.

தமிழில் எழுதிப் பிரபலமான வலைப்பதிவர்கள் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ளாமல் ஆங்கிலக் கலப்பு & எழுத்துப் பிழையுடன் எழுதி வருகிறார்கள்.

ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுதுவது கடினமா?

மக்களுக்குச் சரியான வழியைக் காட்ட வேண்டிய ஊடகங்களோ சிறிதளவும் பொறுப்பின்றி ஆங்கிலக்கலப்பை செய்து வருகின்றன.

இது குறித்து முன்பே பலமுறை எழுதி இருக்கிறேன்.

இருப்பினும் தினம் தினம் இவற்றைக் காணும் போது “தமிழ் இந்து, தினமணி” தவிர வேறு எந்தப் பிரபல ஊடகங்களும் இதைப் பற்றி யோசிப்பதே இல்லையே என்று மன உளைச்சல் ஆகிறது.

பிழைகள் குறித்த அக்கறையின்மை

ஊடகங்களில் இதற்கென்றே படிப்புப் படித்தவர்களைத் தான் பணிக்குச் சேர்க்கிறார்கள்.

இருந்தும், பிழையாக எழுதுகிறோம், ஆங்கிலக் கலப்பில் எழுதுகிறோம் என்ற எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் இருக்கிறார்கள்.

ஒரு பத்தியில் எத்தனை எழுத்துப் பிழைகள், சந்திப் பிழைகள், ஆங்கிலக்கலப்பு!!

எப்படித்தான் மனசாட்சி இல்லாமல் எழுதுகிறார்களோ! பிழை திருத்துபவர்கள் என்ன செய்கிறார்கள்? ஆசிரியர் (Editor) இது குறித்துக் கேள்வியே கேட்க மாட்டாரா?

செய்தி இணையத்தளங்களில் எழுதுபவர்கள், “நான் எழுதுவது தான் எழுத்து.. வேணும்னா படி இல்லைனா போயிட்டே இரு!” என்கிற எண்ணத்தில் தான் எழுதுகிறார்கள்.

எழுத்துப் பிழை என்பது இணையத் தளங்களில் வர வர படு மோசமாகச் சென்று கொண்டு இருக்கிறது.

ஊடகங்கள் சரியாக இருந்தால் தானே இதைப்படிக்கும் மக்களும் தங்களை மாற்றிக் கொள்வார்கள்.

ஊடகங்களே பொறுப்பற்று இருந்தால், யாரை நொந்து கொள்வது?

தங்கள் தளம், பத்திரிகை மற்ற ஊடகங்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே ஆசிரியர்களுக்குக் கிடையாதா?!

பல ஊடகங்களுக்கு இது குறித்துத் தனி மடல் எழுதி இருக்கிறேன் ஆனால், எந்தப் பயனுமில்லை.

ஆபீஸ் & ரோடு

ஆபிஸ் (அலுவலகம்) ரோடு (சாலை) என்பதைக் கூடவா ஊடகங்களால் தமிழில் எழுத முடியவில்லை?!! இதைக் கூடவா படிப்பவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்?!!

தமிழில் விளையாடும் கலைஞரின் குடும்பத்தில் இருந்து வரும் “தமிழ் முரசு” பத்திரிகையில் வந்துள்ள தலைப்பு “ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அட்மிட்” இதை “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி” என்று எழுதுவதில் என்ன பிரச்சனை?!

இந்த லட்சணத்தில் தான் தமிழ் ஊடகங்கள் உள்ளன. தமிழை அழிக்கும் பணியை நமது பொறுப்பற்ற தமிழ் ஊடகங்களே சிறப்பாகச் செய்து வருகின்றன.

படிப்பவர்கள் இல்லையென்றால் எழுதுபவர்கள் நிலை என்ன ஆகும் தெரியுமல்லவா? வாசகர்களுக்குக் கொஞ்சமாவது நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்.

அவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

படிப்பவர்களுக்குச் சிறப்பான தமிழ் வாசிப்பனுபவத்தைக் கொடுங்கள். தமிழை வன்புணர்வு செய்யாதீர்கள்.

பிழை திருத்த நேரம் செலவிடுங்கள்

எழுதி முடித்த பிறகு திரும்ப இரு முறை பார்வையிட்டால், எழுத்துப் பிழை, சந்திப் பிழை, ஆங்கிலக்கலப்பு போன்றவற்றை எளிதாகச் சரி செய்யலாம்.

நீங்கள் நினைப்பது போல கடினமான  செயல் அல்ல.

துவக்கத்தில் சில நாட்கள் கடினமாக இருக்கலாம் ஆனால், பழகி விட்டால், நீங்களே நினைத்தால் கூடப் பிழையுடன் எழுத உங்கள் மனம் ஒப்புக்கொள்ளாது.

தற்போது இணையத்திலேயே தானியங்கியாகப் பிழை திருத்தம் செய்ய வசதி உள்ளது. நண்பர் நீச்சல்காரன் இதற்காக முயற்சி எடுத்து வசதியை ஏற்படுத்தி இருக்கிறார்.

எளிதான முறையில் எழுத்துப் பிழை திருத்தம், சந்திப் பிழை திருத்தம் செய்ய முடியும்.

இந்த வசதியைப் பயன்படுத்துங்கள்

பிழை திருத்தி http://vaani.neechalkaran.com

சந்திப் பிழை திருத்தி http://dev.neechalkaran.com/p/naavi.html#.V-Sy6ih942w

இச்சேவைகளால் பயன் பெற்று நன்கொடை அளிக்க விரும்பினால் http://www.neechalkaran.com/p/donate.html

ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுதுவது சிரமமா?

கடந்த இரு வருடங்களாக 95 % ஆங்கிலக்கலப்பு இல்லாமல் என் தளத்தில் எழுதி வருகிறேன். தவிர்க்க முடியாத வார்த்தைகளுக்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்துகிறேன்.

இக்கட்டுரையில் ஒரு இடத்தில் கூட ஆங்கிலக்கலப்பு செய்யவில்லை.

இவை உங்களுக்குப் படிக்கச் சிரமமாக இருக்கிறதா? எந்தவித கடினமான வார்த்தைகளையோ புரியாத வார்த்தைகளையோ நான் பயன்படுத்துவதில்லை.

அனைவரும் நினைப்பது போல ஆங்கிலக்கலப்பு இல்லாமல் எழுதுவது கடினமல்ல.

துவக்கத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தது ஆனால், தற்போது நானே நினைத்தால் கூட ஆங்கிலக்கலப்பு வராது போல. அந்த அளவுக்கு மனதும் எழுத்தும் பழகி விட்டது.

அனைத்துமே பயிற்சி தான்.

துவக்கத்தில் சரியான தமிழ் வார்த்தைகள் கிடைக்காது, மனம் திண்டாடும் ஆனால், எழுத எழுத நாளடைவில் நம் மனதில் இருந்து தமிழ் வார்த்தைகள் மட்டுமே வரும், கடினமாக இருக்காது.

ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுதுவது கடினமா என்றால், இல்லையென்பதே என் அனுபவத்தில் கண்ட உண்மை.

வடமொழிச் சொற்களின் கலப்பு

ஆங்கிலக்கலப்பாவது என்னவென்று தெரிகிறது! சரி செய்ய முயற்சி எடுக்கலாம் ஆனால், தமிழ்ச் சொற்கள் போன்றே தோற்றமளிக்கும் வடமொழிச் சொற்களை என்ன செய்வது?

நாம் தமிழ் என்று நினைத்துப் பேசும் பல சொற்கள் தமிழே அல்ல! என்பது கசப்பான உண்மை. எப்படி வட மொழிச் சொற்கள் நம் தமிழ் மொழிச் சொற்களோடு இரண்டற கலந்தது?!

தமிழில் ஷ், ஜெ, ஜ் ,ஹா போன்ற உச்சரிப்புகள் இல்லாததால் (தமிழ் தோன்றிய போது இச்சொற்களுக்கான பயன்பாடு இல்லை) வட மொழியில் இருந்து கடனாகப் பெறப்பட்டது.

இவ்வகைச் சொற்களைப் பயன்படுத்துவதன் தேவை புரிகிறது ஆனால், விருப்பம் என்ற அழகான தமிழ்ச் சொல் இருக்கையிலே “இஷ்டம்” என்ற சொல் எப்படி வந்தது? அது ஏன் பிரபலமானது? புரியவில்லை.

தமிழை சீரழித்த தமிழ்த் திரைப்படங்கள்

தமிழில் வட மொழிச்சொற்கள் அதிகளவில் கலக்க 60, 70 களில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் முக்கியக் காரணிகளாக இருந்துள்ளன.

இக்காலகட்டங்களில் அதிகளவில் வட மொழிச் சொற்கள் தமிழில் நுழைந்து, தற்போது பிரிக்க முடியாத அளவுக்குக் கலந்து விட்டன.

அப்போதைய தமிழ்த் திரைப்படங்களைக் கவனித்தால்  உணர முடியும்.

இக்கட்டுரையில் ஆங்கிலக்கலப்பு இல்லாமல் எழுதி உள்ளேன் என கூற முடியும் .

ஆனால், வட மொழிச் சொற்கள் கலப்பு இல்லாமல் எழுதி உள்ளேன் என கூற முடியவில்லை காரணம், எவை வட மொழிச் சொற்கள் என்பதே தெரியவில்லை.

தற்போது முடிந்த வரை வட மொழிச் சொற்கள் கலப்பு இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன் ஆனால், தவறே என்னவென்று தெரியாத போது அதைச் சரி செய்வது கடினமான ஒன்றாக உள்ளது 🙁 . முடிந்த வரை  தவிர்த்து வருகிறேன்.

வேண்டுகோள்

ஊடகங்களும், வலைப்பதிவர்களும் பொறுப்புடன் தமிழை எழுதுங்கள்.

நீங்கள் எழுதும் தமிழுக்கு, உங்களைப் பிரபலப்படுத்திய தமிழுக்குக் கொஞ்சமாவது நேர்மையுடன், நன்றியுடன் நடந்து கொள்ளுங்கள்.

தமிழ் மொழி மிக அழகானது அதைத் தயவு செய்து சிதைக்காதீர்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

தமிழ்

தமிழ்ச் சொற்கள்

தமிழ் ஊடகங்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள்

facebook “முகநூல்” என்றால் Lady Gaga “பெண் காகா” வா?

எழுத்தாளர் “சுஜாதா” தரும் எழுத்து ஆலோசனைகள்

படிப்பதில் Skip தெரியும்.. “Skim” தெரியுமா?!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

9 COMMENTS

  1. அருமையான கட்டுரை கிரி அவர்களே, எனக்கும் நீண்ட நாட்களாக இந்த வருத்தம் இருந்தது.

    நான் தமிழ் ஹிந்து, தினமலர், தினமணி அவ்வப்போது தினகரன் இவைகளை வலைத்தளத்தில் படித்து வருகிறேன். எழுத்துப்பிழை, ஒரே சொல் 2 முறை வருவது, கட்டுரையின் நீளத்திற்காக ஒரே பத்தியை மீண்டும் ஒரு முறை போடுவது மற்றும் இனைய தள முகவரியை தவறாக போடுவது போன்று பல தவறுகள்.

    இது தவறா அல்லது தப்பா என்றே தெரியவில்லை, தற்போது அதுவே பழகி போய்விட்டது. நானும் பலமுறை பின்னூட்டம் எழுதிவிட்டேன் ஒன்றும் மாறியதாய் தெரியவில்லை.

    பிரண்டை காயும் புரட்டாசி வெய்யிலில் அலைந்துவிட்டு வந்து நன்னாரி பானம் குடிப்பது போல் உள்ளது ஆங்கிலம் கலக்காத தமிழ் படிப்பது.

    google blogger ல் வரும் தமிழ் மொழிமாற்றை விட இங்கு தட்டச்சு செய்யும் போது வருவது நன்றாக உள்ளது.

  2. ஆங்கில கலப்பு இல்லாமல் எழுதுவது நன்றாகவே உள்ளது. ஆனால் ஏன் வட மொழி கலப்பு இல்லாமல் எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஏனெனில் சங்க இலக்கியங்கள் முதல் பாரதியின் எழுத்து வரை அனைத்துமே வட மொழி கலந்தே உள்ளது. கலந்து உள்ளது என்று சொல்வதை விட, ஒரு தாய் வயிற்றின் பிள்ளைகளின் அமைப்பு குண நலன்கள் ஒன்றாக இருப்பது போல் உள்ளது, என்று சொல்வது தான் சரியாக இருக்கும். இன்னும் சொல்ல போனால் இந்திய மொழிகளின் அனைத்திலுமே வட மொழியின் கலப்பு உள்ளது. ஆகையால் வட மொழி என்று சொல்வது கூட தவறு தேசத்தின் மொழி என்று கூறுவது தான் சரியாக இருக்கும். அதை ஏன் நாம் அவமானமாக கருத வேண்டும். ஆகையால் நீங்கள் வட மொழி தவிர்த்து எழுத வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எழுதுவதும் முடியாது. தமிழ் மட்டும் அல்ல ஹிந்தி முதல் அனைத்து மொழிகளிலுமே அது முடியாத காரியம்.

    அதே போல் தமிழ் மொழி எழுத்துக்களில் இல்லாத ஹ, ஜ போன்ற எழுத்துக்கள் தமிழ் தோன்றிய பொழுது இல்லை பின்னால் கடனாக பெறப்பட்டது என்று சொல்வதும் தவறு. தமிழின் பழங்கால ஓலைச் சுவடுகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் போன்ற பல வற்றிலும் அந்த எழுத்துக்கள் உள்ளன. அது மட்டும் அல்லாமல் தமிழில் மட்டும் இரு விதமான எழுத்து வடிவம் உள்ளது. அதில் தான் இந்த எழுத்துக்கள் வருகின்றன. அதை ஆராய்ச்சி செய்து நிரூபித்து இருக்கிறார் சென்னையை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் அதை புத்தகமாகவே போட்டு உள்ளார். ஆகையால் இதை 60/70 களில் வந்த சினிமா தான் இதை வளர்த்தது என்பதும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. இவைகள் அனைத்தையும் நான் கூறுவதற்கு காரணம் நான் ஆறு மொழிகளை முடிந்த வரை கற்று உள்ளேன். ஆகையால் சிறு பகுப்பாய்வு செய்ய முடிந்தது. வட மொழியையும் சேர்த்து. ஓரே தேசத்தில் மொழிகளிலும், கலாச்சாரங்கலிளும், ஒற்றுமை இருப்பது, பலவீனம் அல்ல அது தான் நம் பலம். அதனால் அதை நாம் தூக்கி எறிய வேண்டியதில்லை. நீங்கள் எறிய வேண்டும் என்று கூறவில்லை, இருப்பினும் தவிர்த்தல் கூட தேவை இல்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் நாம் அனைவரும் ஓர் தாய் பிள்ளைகள்……

  3. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்.. சத்தியமான வரிகள். அவரவர்க்கு அவர்களின் மொழி சிறந்தது என்றாலும், தமிழை போல் இனிமையான மொழி உண்டா? என்று தெரியவில்லை, இருக்கிறது என்றாலும் அதை கற்க விருப்பம் இல்லை.

    என் வேலையின் தேவைக்காக ஹிந்தி வேண்டும் என்பதால் படங்களை பார்த்தும், நண்பர்களிடம் உரையாடியும், 70% பேச மட்டும் கற்று கொண்டேன். ஆனால் எழுதுவதோ, வாசிப்பதோ அவசியம் இல்லை என்பதால் அதை விட்டு விட்டேன்.

    கல்லூரி நாட்களில் தமிழின் மீதும் / பத்திரிகை துறையின் மீதும் கொண்ட காதலால் இதழியல் பட்டயம் பெற்றேன். ஊடங்களின் நிலைப்பாடு உண்மையில் வருத்தம் அளிப்பதாக உள்ளது. அவர்களின் வேலையே அவர்கள் சரியாக செய்யாத போது இன்னும் கஷ்டமாக இருக்கிறது.

    உங்கள் தளத்துடன் 6 ஆண்டுகள் தொடர்பில் இருந்தவன், என்ற அடிப்படையில் உங்கள் உரைநடையில் எனக்கு எந்த குறைபாடும் தெரியவில்லை. குறைகள் காணுகின்ற போது கண்டிப்பாக சுட்டிக் காட்டுகிறேன். உங்கள் எழுத்தின் பலமே உங்களின் எளிமையான நடையே.. சுவையை கூட்டுகிறேன் என்று எளிமையை குறைத்து விடவேண்டாம். பகித்தமைக்கு நன்றி கிரி. நண்பர் பிரகாஷின் கருத்து நன்றாக இருக்கிறது.

  4. @அருள் உங்கள் இரு கட்டுரைகளும் நன்றாக இருந்தது. கிட்டத்தட்ட நான் எழுதியது போலவே இருந்தது.

    @சோமேஸ்வரன்

    “பிரண்டை காயும் புரட்டாசி வெய்யிலில் அலைந்துவிட்டு வந்து நன்னாரி பானம் குடிப்பது போல் உள்ளது ஆங்கிலம் கலக்காத தமிழ் படிப்பது.”

    செம்ம உதாரணம் 🙂 எனக்கும் முழுக்க தமிழ் உள்ள, பிழையின்று எழுதப்பட்ட கட்டுரைகளைப் படிக்க மிக மகிழ்ச்சியாக இருக்கும்.

    @பிரகாஷ்

    “ஏன் வட மொழி கலப்பு இல்லாமல் எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்கள்”

    ரொம்ப எளிது. தமிழுக்கு என்று தனித்தன்மை உள்ளது அதை கெடுக்க விரும்பவில்லை. அவ்வளவே.

    ” நீங்கள் வட மொழி தவிர்த்து எழுத வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எழுதுவதும் முடியாது.”

    உண்மையே! பிரிக்க முடியாத அளவுக்கு கலந்து விட்டது இனி பிரித்து எழுதுவது என்பது சாத்தியமில்லை.

    “தமிழின் பழங்கால ஓலைச் சுவடுகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் போன்ற பல வற்றிலும் அந்த எழுத்துக்கள் உள்ளன. ”

    இருக்கலாம். தமிழ் பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. எனவே கிடைத்த தகவல்கள் அதன் பிறகு உருவானதாக இருக்கலாம்.

    “இதை 60/70 களில் வந்த சினிமா தான் இதை வளர்த்தது என்பதும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை”

    இப்படங்கள் வட மொழிச் சொற்களை பிரபலப்படுத்தியது, மக்களிடையே எளிதாகக் கொண்டு சென்றன என்பதே நான் கூற வருவது.

    “இவைகள் அனைத்தையும் நான் கூறுவதற்கு காரணம் நான் ஆறு மொழிகளை முடிந்த வரை கற்று உள்ளேன்.”

    மிக மகிழ்ச்சி பிரகாஷ் 🙂 ஆறு மொழிகளை தெரிந்து வைத்து இருப்பது என்பது சாதாரண செயலில்லை. கொஞ்சம் பொறாமையாகக் கூட உள்ளது 🙂 எவ்வளவு மொழிகளை தெரிந்து வைத்து இருக்கிறோமோ அவ்வளவு நல்லது.

    “நீங்கள் எறிய வேண்டும் என்று கூறவில்லை, இருப்பினும் தவிர்த்தல் கூட தேவை இல்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் நாம் அனைவரும் ஓர் தாய் பிள்ளைகள்……”

    “ஓர் தாய் பிள்ளைகள்” இதை நீங்கள் கூற வேண்டியது மத்திய அரசிடம் தான். இவர்கள் தான் மற்ற மொழிகளை மாற்றாந்தாய் எண்ணத்துடன் பார்த்து இந்தியை மட்டும் வளர்த்து மற்ற மொழிகளை அழித்து வருகிறார்கள்.

    விரைவில் இந்தித் திணிப்பைப் பற்றியும் அதனால் ஏற்படுகிற மொழி அழிப்பையும் விரிவாக எழுதப்போகிறேன்.

    அதில் என்னுடைய அனைத்து கருத்துகளையும் விரிவாகக் கூறுவேன். நிச்சயம் அவற்றை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கருதுகிறேன் 🙂 .

    @யாசின்

    தமிழை போல் இனிமையான மொழி உண்டா? என்று தெரியவில்லை, இருக்கிறது என்றாலும் அதை கற்க விருப்பம் இல்லை.

    யாசின், இந்தி என்றில்லை எந்த மொழியாக இருந்தாலும், நமக்கு வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். பல மொழிகளை தெரிந்து வைத்து இருப்பது நமக்கு மிக நல்லது.

    எனவே வாய்ப்புக் கிடைத்தால் தவற விடாதீர்கள்.

    “உங்கள் எழுத்தின் பலமே உங்களின் எளிமையான நடையே.. சுவையை கூட்டுகிறேன் என்று எளிமையை குறைத்து விடவேண்டாம். ”

    தமிழை அதிகம் பயன்படுத்துவேன் என்பது மட்டுமே என்னுடைய மாற்றம் மற்றபடி என்னுடைய நடையை மாற்றும் எண்ணமில்லை.. மாற்றவும் எனக்கு வராது.

  5. கிரி அண்ணா,நாம் நான் பெரும் வாசிப்பாளனல்லன்.சில வலைதளங்களை தொடர்ந்து வாசிக்கிறேன்.எனக்கு ஜெயமோகன் அவர்களின் கருத்துகளில் எதிர் நிலை இருந்தாலும் அவரது எழுத்தை தொடர்ந்து வாசிப்பவன்.காரணம் அவரது தனித்த தமிழ்நடை.பெரும்பான்மையான புதிய இதழியல்(பத்திரிகை) நண்பர்கள் வாசிப்பனுபவம் சிறிதும் இல்லாதவர்கள்.பெரும் வாசிப்பே பிழையற்ற எழத்துநடைக்கு உதவும் என்பேன்.

  6. சங்கர் வாசிப்பே பிழையற்ற எழுத்து நடைக்கு உதவும் என்பது 100% சரி. எந்த அளவுக்கு அதிகம் மற்ற நூல்களை படிக்கிறோமோ அந்த அளவுக்கு தமிழ் எழுத்துக்களை தவறில்லாமல் எழுதலாம். அதோடு எழுத்திலும் முதிர்ச்சி தெரியும்.

  7. தலைப்பு : நல்ல தமிழில் எழுதுவோம் எளிய வடிவில் தமிழ் இலக்கண அடிப்படைகள்.
    ஆசிரியர் : என்.சொக்கன்
    பதிப்பகம்: கிழக்கு
    விலை : 200
    புத்தகம் அருமையாக உள்ளது, தங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், தங்களை பின் தொடர்பவர்களுக்காக இங்கு தருகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!