பொருளாதார நெருக்கடி சூழ்நிலை காரணமாக, தன் ஊழியர்கள் 170+ பேரை விகடன் பணிநீக்கம் செய்துள்ளது. இதைப் பலரும் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். விகடன் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பதைப் பார்ப்போம்.
விகடன்
திரு பாலசுப்ரமணியம் அவர்கள் விகடனை நடத்திய போது விகடனுக்கு என்று பெருமதிப்பு இருந்தது. தமிழ்நாட்டில் விகடன் வாங்காத குடும்பத்தினரே இல்லை எனும் அளவுக்குக் குடும்பத்தில் ஒன்றாக இருந்தது. Image Credit
திரு பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட நிர்வாக மாறுதல்களால் விகடன் முற்றிலும் தடம் மாறி விட்டது. இதோடு மக்கள் அச்சு இதழ்களை வாங்குவதைக் குறைத்து மின்னணு முறைக்கு மாறி விட்டார்கள்.
தற்போதைய கால மாற்றத்தைத் திரு பாலசுப்ரமணியம் அவர்கள் இருந்து இருந்தாலும் தடுத்து இருக்க முடியாது ஆனால், தற்போதைய விகடன் போல மோசமான, மரியாதைக்குறைவான நிலையை அடைந்து இருக்காது.
திரைச்செய்திகள்
பல்சுவை இதழாக வெளிவரும் விகடன் போன்ற இதழ்கள் திரைச் செய்திகளைத் தவிர்க்க முடியாது ஆனால், தற்போது திரைச்செய்திகள் மட்டுமே விகடனில் உள்ளது.
பெயருக்கு மற்றவை உள்ளன. ஆழமான கட்டுரைகள், கதைகள் கிடையாது.
இணையத்திலேயே அனைத்து திரை செய்திகளையும் படித்து விடும் போது, திரும்ப இவற்றை ஏன் பணம் கொடுத்துப் படிக்க வேண்டும் என்று தவிர்த்து விடுகிறார்கள்.
அதோடு திரைச்செய்திகள் படிக்க விகடன் எதற்கு? விகடனுக்கு என்றுள்ள தனித்தன்மை எங்கே போனது?
இணைய துணுக்குகள்
இணையத்தில் ட்விட்டர் ஃபேஸ்புக் போன்றவற்றில் உள்ளவற்றை எடுத்துப் பக்கத்தை நிரப்பினார்கள். துவக்கத்தில் மக்கள் ரசித்தாலும், அவை தொடர்பான துணுக்குகளே தொடர்ந்து பக்கங்களை நிரப்பியதால் சலிப்படைந்தனர்.
இளைஞர்கள், இளைஞிகளைக் கவர இவற்றைக் கொடுத்தாலும், அவர்கள் பணம் கொடுத்து வாங்கவில்லை.
ஏனென்றால், இன்றைய இளைய சமுதாயம் பல்சுவை இதழ்களை இணையத்தில் படிக்கத் தயாராக உள்ளது ஆனால், புத்தகமாகப் படிக்கத் தயாராக இல்லை.
இளைய சமுதாயத்தைக் கவர்ந்து வாங்க வைக்க முடியவில்லை, அவர்களுக்காகச் செய்த மாற்றங்கள், ஏற்கனவே படித்துக்கொண்டு இருந்தவர்களுக்கு பிடிக்காமல் போனதோடு புத்தகம் வாங்குவதையும் நிறுத்தி விட்டார்கள்.
திரைச்செய்திகள் அளவோடு இருந்தவரை பிரச்சனையில்லை ஆனால், நாளடைவில் அவையே முதன்மை ஆகும் போது வாசகர்கள் வெறுப்பாவதில் வியப்பில்லையே.
அரசியல் நிலைப்பாடு
கடந்து இரு வருடங்களுக்கு மேலாக விகடன் அறிவிக்கப்படாத முரசொலியாகத்தான் செயல்படுகிறது. திமுக என்ன செய்தாலும் கண்டுகொள்ளாமலும், மற்றவர்களைத் தினம் ஒரு கட்டுரை என்று துவைப்பதுமாக இருந்தது.
துவக்கத்தில் சில எதிர்ப்புகளே இருந்தன, தற்போது ஃபேஸ்புக் ட்விட்டர் கருத்துப் பகுதியில் விகடனை அனைவரும் கழுவி ஊற்றுகின்றனர்.
எந்த ஒரு நாளிதழும் நேர்மையாக நடப்பது இக்காலத்தில் சாத்தியமில்லாதது ஆனால், எல்லை மீறி விகடனை போலச் செயல்படும் போது அதனுடைய மதிப்பு பாதாளத்துக்குச் செல்வதில் வியப்பேதுமில்லை.
திரைப்படம் சீரியல்
பத்திரிகை துறையல்லாது திரைப்படம், சீரியல், விருதுகள் போன்றவற்றிலும் கவனத்தைச் செலுத்தியது. தற்போது Web Series லும் இறங்கப் போகிறது.
விகடன் இவற்றில் முதலீடு செய்வதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் ஆனால், இவற்றில் கவனம் செலுத்தவில்லை என்றால், விகடன் தற்போது ஊழியர் பணி நீக்கம் செய்ய எடுத்த நடவடிக்கையை என்றோ எடுத்து இருக்கும்.
தற்போதைய சூழ்நிலையில் அச்சு ஊடகத்தை மட்டுமே நம்பி இருக்க முடியாது.
விருதுகள் திருப்பியளிப்பு
ஊழியர்களை விகடன் பணி நீக்கம் செய்ததும், விகடனிடம் விருதுபெற்ற சிலர் உடனே பொங்கி தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்து வருகிறார்கள்.
என்னமோ விகடன் இதுவரை நியாயமாக நடந்து கொண்டது போலவும் தற்போது தான் அநியாயமாக நடந்து விட்டது போலவும் எல்லோரும் வித்யாசமாக நடந்து கொள்கிறார்கள். இவையாவும் ‘ஸ்டண்ட்’ என்பதன்றி வேறில்லை.
கடந்த இரு வருடங்களாக விகடன் நியாயம் இல்லாமல் செய்திகளை வெளியிட்ட போதெல்லாம், விருது வாங்கியவர்களுக்குத் தவறு என்று தெரியவில்லையா..! தற்போது தான் விகடன் தவறு தெரிகிறதா?
இவர்கள் மட்டுமல்ல, இன்னும் பலரும் விகடனை புறக்கணியுங்கள் என்று தற்போது தான் ஞானோதயம் வந்தது போலப் பேசிக்கொண்டுள்ளார்கள்.
இவ்வளவு நாள் இவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
இந்தியாவில் விகடன் நிறுவனத்தில் மட்டுமல்ல, ஏராளமான நிறுவனங்களில் ஊழியர் பணி நீக்கம் நடைபெற்று வருகிறது.
கம்யூனிச சிந்தனை
விகடன் கம்யூனிச சிந்தனை கொண்ட இதழ் என்பது அவர்களது கட்டுரைகளைப் படித்தாலே தெரிந்து கொள்ளலாம்.
கம்யூனிச கொள்கைகளில் ஆர்வம் கொண்டு இருப்பது தவறல்ல ஆனால், தனது கருத்துகளை மக்களிடையே திணிக்கும் போது மக்களால் வெறுக்கப்படுகிறது.
இதே விகடன் கம்யூனிச கொள்கைகளை வீரமாகப் பேசிவிட்டு, அதற்குச் சம்பந்தமே இல்லாமல் இன்று 170+ ஊழியர்களைத் திடீர் என்று நீக்கியுள்ளது.
இது தான் கம்யூனிச கொள்கையின் லட்சணமா? ஊருக்கு மட்டும் உபதேசம் தனக்கு மட்டும் கிடையாது.
விகடன் தற்போது நல்ல நிலையில் இருந்து, விகடனுக்கு ஏற்பட்ட நிலை வேறு நிறுவனத்துக்கு ஏற்பட்டு இருந்தால், இந்நேரம் எத்தனை கட்டுரைகளை, கேலி சித்திரங்களை விகடன் ‘ஐயகோ‘ என்று வெளியிட்டு இருக்கும்?!
‘ஊழியர்கள் உழைப்பை நிறுவனம் மதிக்கவில்லை, அவர்கள் நிலை என்ன ஆவது?‘ என்று பக்கம் பக்கமாகக் கட்டுரைகளை வெளியிட்டு வரும்.
பாதிக்கப்பட்ட ஊழியரிடம் பேட்டி எடுத்துச் சோக கீதத்துடன் காணொளி வெளியிட்டு இருப்பார்கள்.
தனக்கு என்பதால், சத்தமே இல்லை. நல்லா இருக்குயா உங்க நியாயம்!
கால மாற்றம்
விகடனின் தரம் குறைந்து விட்டது, செய்திகள் ஒரு சார்பாகி விட்டது என்ற குற்றச்சாட்டுகள் விகடன் வீழ்ச்சிக்குக் காரணம் கூறப்பட்டாலும், காலம் மாறி விட்டதும் முக்கியக்காரணம்.
இளைய சமுதாயம் புத்தகங்களை வாங்கத் தயாராக இல்லை.
வார இதழ், செய்தித்தாள் வாங்கிப்படித்த தலைமுறை முடிந்து விட்டது. படிக்க இணைய செய்திகள், சமூகத்தளங்கள் என ஏராளமான வாய்ப்புகள் பெருகி விட்டன.
எதைப்படிப்பது என்ற நிலையாகி விட்டது. இதனாலே பலரும் எதையும் முழுமையாகப் படிப்பதில்லை.
தற்போது அனைவருக்கும் SKIM Reading பழக்கமாகக் காரணமே படிக்க ஏராளமாக இருப்பது தான்.
விகடன் பொருளாதாரம் பின்னாளில் மேம்பட்டாலும், முன்பு போல நிறுவனத்தை நடத்த முடியாது. விகடன் என்றல்ல அச்சு இதழ்களுக்கு இனி எதிர்காலமில்லை.
எனவே, இத்துறையை சார்ந்த ஊழியர்கள் இதை மட்டுமே நம்பிக்கொண்டிராமல் தங்கள் எதிர்காலத்தை மாற்றி அமைத்துக்கொள்வது நல்லது.
முடிவைத் தாமதமாக மரியாதையுடன் எதிர்கொள்ள வேண்டிய விகடன், மரியாதையிழந்து முன்பே தன்னை இந்நிலைக்கு உட்படுத்தி விட்டது.
தொடர்புடைய கட்டுரைகள்
தரம் குறைந்தால் தரைமட்டம்தான்…
அதுமட்டுமல்ல கிரி. இந்த இளங்கோவன் ன்னு ஒருத்தன் விகடன் யூடியூப் சேனலில் investigation ன்னு வீடியோ போடுவான். மிரட்டிய அமித்ஷா நடுங்கிய எடப்பாடி, நான் சொல்வதை செய்யவில்லை என்றால் ஆட்சியை கலைத்து விடுவோம் என்று மிரட்ட எடப்பாடி பயந்து அலறினார் அப்படி இப்படின்னு பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி அடிச்சு விடுவான். எல்லாம் கற்பனை. விகடன் போன்ற நிறுவனம் கற்பனை கதைகளை சொல்வது அந்த ஊடகம் எவ்வளவு தரம் தாழ்ந்து போச்சுன்னு தெரிஞ்சுக்கலாம். அப்புறம் ஜூனியர் விகடனில் புழுகார் ன்னு ஒருத்தன் (கழுகார்) ன்னு பேர்ல எல்லாமே இவங்க ஒட்டு கேட்ட உளவுத்துறை அதிகாரி மாதிரி கட்டுரை எழுதுவான். சப்பாஆஆஆஆ. அவ்வளவு கடுப்பா இருக்கும் படிக்கும் போது. விகடன் மின்னணு முறைக்கு மாறி விட்டது. ஆனால் வாங்க தான் ஆள் இல்லை. தொடர்ச்சியாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்கிறார்கள். எவன் வாங்குவான். இந்த 3ம் தர பத்திரிகையை.
கிரி, உண்மையிலே எனக்கு பிடித்த துறை ஊடக துறை .. Journalism இந்த வார்த்தைக்கு எவ்வளவு அழகான தமிழ் வார்த்தை பாருங்க .. “இதழியல்”. கல்லூரி ஒரு ஆண்டு பட்டப்படிப்பை (பகுதிநேர) முடித்து இருக்கிறேன் .. அந்த நாட்களில் அவ்வளவு விருப்பமான துறையாக இருந்தது .. கால ஓட்டம் என்னை வேறு திசையில் பயணப்பட வைத்து விட்டது .. தற்போது வேகமாக அடைந்து வரும் மாற்றத்தில் பத்திரிகை துறையின் எதிர்காலத்தை கணிக்க முடியவில்லை ..
வையாபுரி ஏதோ ஒரு படத்தில் இதுல சன் டிவி வருமான்னு கேட்பார் .. கூட விவேக்குனு நினைக்கிறேன் .. அதிர்ந்து போவார் .. 15 வருஷத்துக்கு முன்னாடி இதெல்லாம் மாறும் என்று யாராவது சொன்ன “அவன் பைத்தியம் ” என்று தான் கூறுவார்கள் ..
ஆனால் தற்போதைய சூழலை பார்க்கும் போது என்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலை அளிக்கிறது .. இந்த அவரச மாற்றங்கள் நல்லதா ??? கெட்டதா ??? என்று புரிந்து கொள்ள முடியவில்லை .. ஆனால் ஏற்று கொண்டு பயணப்படவேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கிறது .. பகிர்வுக்கு நன்றி கிரி ..
பணிநீக்கம் varuthamalikirathu
@கார்த்திகேயன் உண்மையே!
@ஹரிஷ் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்வதில், கழுகார் பெரிய ஆள். அவங்க கற்பனை அலாதி. 10 கல்லு விட்டால் 1 அடிப்பது போல, எப்பாவது 1 சரியாகி விடும்.
அதையே வைத்து பல கதை எழுதி விடுவார்கள்.
@யாசின் தற்போது ஊடகத்துறை அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எனவே, இருப்பதில் எது பரவாயில்லை என்று முடிவெடுக்கும் நிலையிலேயே மக்கள் உள்ளார்கள்.