ஒவ்வொருவருக்கும் அவர்கள் சொந்த ஊரின் மீது அன்பு, காதல் இருக்கும். என்ன ஆனாலும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். அதைப்போலக் கோடிக்கணக்கான நபர்களில் நானும் ஒருவன். சொர்க்கமே என்றாலும் கோபி போல வருமா! Image Credit
கோபி
கோபி என்றாலே உங்களில் அனைவருக்கும் என்ன நினைவிற்கு வரும்? திரைப்பட படப்பிடிப்பு, இயற்கை காட்சிகள், கொங்குத் தமிழ், செங்கோட்டையன் (அதிமுக) இவைகள் தான்.
மேலே இருப்பது தான் கோபியின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்றான CKS பங்களா. சின்னத்தம்பி, நாட்டாமையில் நீங்கள் பார்த்த வீடு இது தான்.
“கலகலப்பு” படத்திற்காக இப்படியொரு கன்றாவியான வண்ணத்தில் மாறி இருக்கிறது.
இவை அல்லாமல் உங்களுக்குத் தெரியாத பல சிறப்புகள் உள்ளன.
சாயப்பட்டறை
திருப்பூரை காலி செய்தது போதாது என்று, அங்கு உள்ள சாயப்பட்டறைகளைப் போலக் கோபியிலும் அமைக்க முயன்றார்கள்.
இதற்கு இங்குள்ள விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, இங்கே வரக் கூடாது என்று போராட்டம் நடத்தியதால், கோபி பிழைத்தது.
இல்லை என்றால் நாங்களும் சாயத் தண்ணீரால் பாதிக்கப்பட்டு இருப்போம், விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்.
தற்போது அரசாங்கமே இதற்குத் தடை விதித்து விட்டதால், இனி இங்கே வர வாய்ப்பே இல்லை. முறையாக ஆவியாக்கி விடுவோம் என்றாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
திருப்பூர் தண்ணீரை ஒன்றுக்கும் இல்லாமல் ஆக்கி விட்டார்கள். பாவம் அங்குள்ளவர்கள்.
கோபி மக்கள் என்னை எதோ ஒரு விதத்தில் கவர்ந்து இருக்கிறார்கள்.
ICICI வங்கி துவங்கப்பட்டபோது தமிழகத்தில் இரண்டாவது அல்லது மூன்றாவதாகத் துவங்கப்பட்ட கிளை கோபி என்பது பலருக்குத் தெரியாதது.
தற்போது கோபியில் இல்லாத வங்கிகளே இல்லை என்கிற அளவிற்கு அனைத்து வங்கிகளும் வந்து விட்டது.
இங்கே உள்ளவர்கள் ஓரளவு துட்டு பார்ட்டிகள் தான். பார்த்தால் யாரையும் தெரியாது ஆனால், கட்டுக் கட்டாக எடுப்பார்கள்.
காஸ்மோபாலிடன் க்ளப்
காஸ்மோபாலிடன் க்ளப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். 100 ஆண்டுப் பெருமை வாய்ந்த க்ளப்.
சென்னையில் உள்ள இந்தக் க்ளப்பில் கலைஞர் உட்பட பலர் உறுப்பினர்கள். இங்கே இணைவது என்றால் எளிதல்ல.
இங்கே உள்ள உறுப்பினர்கள் நம்மை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இணைய முடியும்.
தற்போது பல க்ளப்கள் வந்து விட்டாலும், இந்தக் க்ளப்பிற்கு என்ற பாரம்பரியமான மரியாதை உண்டு.
இவ்வளவு பாரம்பரியமான க்ளப், எப்படி எங்கள் சின்ன ஊரான கோபியில் வந்தது என்று தான் புரியவில்லை.
அருகில் உள்ள பெட்ரோல் பங்கு தான் முதன் முதலாகக் கடனட்டை மூலம் பணம் கட்டும் வசதியைக் கொண்டு வந்தார்கள்.
தற்போது பல நவீன பங்குகள் வந்து விட்டாலும் அப்போது கலக்கியது இந்தப் பங்கு தான்.
கோபி சின்ன ஊராக இருந்தாலும், இங்கே இல்லாத வசதிகளே இல்லை எனும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
மற்ற ஊர்கள் எல்லாம் குப்பை கூளமாக இருக்க, இங்கேயும் இருந்தாலும் கூடுமானவரை சிறப்பாகவே பராமரித்து இருப்பார்கள்.
காங்கிரஸ் நகரத்தலைவராக நல்லசாமி அவர்கள் இருந்த போது சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது.
வீடுகளுள்ள இடங்களில் மரங்கள் வைத்து அழகாகப் பராமரிப்பார்கள். தெருக்கள் நன்கு அகலமாகவும் சுத்தமாகவும் இருக்கும்.
சமீபமாகக் கூட்டம் அதிகம் ஆகியதால் சுத்தம் குறைந்து வருவதாக அப்பா குறிப்பிட்டார்.
எப்போது ஊருக்கு வந்தாலும் கோபியில் உள்ள தெருக்களில் ஜாலியாகச் சுற்றி வருவது எனக்கு ரொம்பப் பிடித்தமானது.
மனைவியின் வீடும் கோபி தான் என்பதால், வேறு ஊருக்குப் போக வேண்டிய அவசியமும் இல்லை.
சமீபமாகக் கோபியில் நடைபெறும் நகை பறிப்பும், நடந்த இரு கொலைகளும் பொதுமக்களைப் பயப்பட வைத்து இருக்கின்றன.
இது மட்டுமே வருத்தம் அளிக்கும் படி உள்ளது.
சீதா கல்யாண மண்டபம்
“சீதா கல்யாண மண்டபம்” மிக மிகப் பழமையானது மிகப்பெரியது கூட. இதுபற்றிச் செய்திகளில் கூட வந்துள்ளது, எங்கள் உறவினரின் திருமண மண்டபம் இது.
திருமணம் மட்டுமல்லாது கம்பர் விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
முன்பு இலவசமாக இருந்தது தற்போது கட்டணமாக்கி விட்டார்கள். இருப்பினும் மற்ற மண்டபங்களை ஒப்பிடும் போது குறைவு தான்.
ஒரே சமயத்தில் மூன்றோ / நான்கோ திருமணம் செய்ய முடியும். தற்போது சாப்பிடும் இடத்தை மண்டபம் அருகிலேயே கட்டி வசதியைக் கூடுதலாக்கி உள்ளார்கள்.
என் திருமணம் இங்கே தான் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
சனி ஞாயிறு திருமணம் நடக்க வேண்டும் மற்றும் இந்த மண்டபத்தில் தான் நடக்க வேண்டும் என்பதாலையே திருமணம் எட்டு மாதங்கள் தாமதமானது.
நிச்சயம் செய்து எட்டு மாதம் கழித்து திருமணம் செய்தவன் நானாகத் தான் இருப்பேன் 🙂 .
எமரால்ட் ஹவுஸ்
இந்த மண்டபத்தின் எதிரே தான் எமரால்ட் ஹவுஸ் என்ற மிகப்பிரலமான ஹோட்டல் உள்ளது. ஹோட்டல் உரிமையாளரின் மகன் எனக்குக் கோபி ஹாஸ்டலில் சீனியர்.
திரைப்படப் படப்பிடிப்பு நடக்கும் போது நடிகர் நடிகையர் இங்கே தான் தங்குவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறை எப்போதும் வழக்கமாக வழங்கப்படும்.
அதிகமாக விஜயகாந்த், பிரபு, சரத், கார்த்திக், ராதாரவி, குஷ்பூ போன்றோர் வந்து இருக்கிறார்கள்.
என் திருமணத்திற்கு இங்கே தான் நண்பர்களுக்கு அறை பதிவு செய்து இருந்தேன்.
ஒரு குழுக்கு குஷ்பூ இருந்த அறையைக் கொடுத்த போது, ரூம் பையன் இதை அவர்களிடமும் கூறி விட்டான்.
குஷ்பூ படுத்த படுக்கை என்று அனைவரும் கலாட்டா செய்தது மறக்க முடியாது 🙂 .
ASM பேருந்து
ASM பேருந்து, நான் சிறு வயதாக இருக்கும் போது இருந்தே மிகப் பிரபலம். கோவை – கோபி – அந்தியூர் வழித்தடத்தில் செல்கிறது.
அக்கா கோவையில் படித்த போது நாங்கள் அடிக்கடி கோவை செல்லும் போது ASM தான் எங்களுக்குப் பிடித்த பேருந்து. இளசுகளின் விருப்பப் பேருந்து.
PP யே இருந்தாலும் இதில் செல்லத் தான் போட்டி இருக்கும். என் அண்ணன் கூடச் செல்வதென்றால் கண்டிப்பாக இதில் தான் செல்வேன்.
தற்போது காதைக் கிழிக்கும் ஹாரன் சத்தம் வைத்து இருக்கிறார்கள்.
தற்போது கோவை – அவனாசி – ஈரோடு சாலையை ஆறு வழிப் பாதையாக மாற்றி, ஆங்காங்கே பாலம் கட்டும் வேலை நடைபெறுவதால் சாலை கண்டபடி இருக்கிறது.
இதில் ASM புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது.
தற்போது கோபியில் ஆக்கிரமிப்பு எல்லாம் அகற்றி பெரிய சாலையாக இருந்ததை மிக மிகப் பெரிய சாலையாக்கி இருந்தார்கள்.
அரசு அலுவலகங்கள் பயணியர் விடுதி
அரசு அலுவலங்கள், அரசு பயணியர் விடுதி [மாளிகை], அரசு மருத்துவமனை, காவல் துறை, நீதி மன்றம், RTO அலுவலகம், பத்திர அலுவலகம் என்று அருகருகே இருப்பது கோபியின் சிறப்பு.
ஈரோடுக்கு பிறகு முக்கியமான அனைத்து அரசு சார்ந்த அலுவலங்களும் இங்கே உள்ளது.
நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், மரங்கள் சூழ்ந்து ரொம்ப அழகாக இருக்கும், பழமையான கட்டிடங்கள் கூட. அரசு மருத்துவமனை மிகச் சிறப்பாகப் பராமரிக்கபடுகிறது.
இங்கும் சில சர்ச்சைகள் ஏற்பட்டு இருந்தாலும், ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, சிறப்பான மருத்துவமனை தான்.
இங்கே என் அக்கா பல வருடங்கள் Lab Technician ஆக இருந்தார். தற்போது சத்தியமங்கலம் மாற்றலாகிச் சென்று விட்டார்.
கோபி பற்றிக் கூறுவதென்றால் கூறிக்கொண்டே இருக்க முடியும், அவ்வளவு பிடித்த ஊர்.
பணியின் காரணமாகச் சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் மட்டுமே இருக்க முடியும்.
கோவையில் IT பிரபலமானால் குறைந்த சம்பளம் என்றாலும் இங்கேயே வந்து விடலாம், கோபியிலேயே இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.
நம் ஆசையைவிட சில நேரங்களில் எதார்த்தம் என்ற ஒன்று தான் முன்னிற்கிறது.
கோபியை சிறப்பான நகராக, அனைவருடனும் இணைந்து மாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் விருப்பமும் உண்டு. பார்ப்போம் என்ன ஆகிறது என்று.
சொர்க்கமே என்றாலும் கோபி போல வருமா! 🙂
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
நல்ல ஊர்… அங்கு வீசும் காற்றுக்காகவே இருக்கலாம்… நான்கு வருடம் உங்கள் ஊரில் இருந்தேன்…
பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி… . வாழ்த்துக்கள்…
கோபி பற்றி நல்ல பதிவு. டி. ஜூப்ளி பள்ளி மற்றும் கோபி collage பற்றியும் கொஞ்சம் எழுதுங்க.
நன்றி.
தங்கள் மன்ணைப் பற்றிய நேர்த்தியான இடுகை. படங்களும் சிறப்பு.
ஸ்ரீ….
என்னுடைய மனைவியின் வீடும் கோபி தான் என்பதால், வேறு ஊருக்குப் போக வேண்டிய அவசியமும் இல்லை. இதனால் சுற்றலோ சுற்றல் தான்.//
-பையனுங்க வளந்ததும் கூட்டிக்கிட்டு பக்கத்து ஊர்களையும் சுத்திப் பாருங்க!!
ASM அந்தியூர் நகைக் கடைக்காரங்களுது தானே?
தமிழ் வணக்கம்
கோபி கேரளாவைப் போல ஒரு வகையில் கடவுளின் தேசம் தான். படங்களில் தெரியும் குளுமை மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,
நம்மூர் பத்திய ரீசன்ட் போஸ்ட்ஸ் எல்லாம் சூப்பர்ங்க. Bank of Madura ஐ.சி.ஐ.சி.ஐ. உடன் மெர்ஜ் செய்யப்பட்டதால் கோபியில் இருந்த BoM-இன் கிளைக்கு இந்த அந்தஸ்து. 🙂
@வெயிலான் : You are correct. கடைப் பேரும் ASM ஜுவல்லரி தான்.
கோபி பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்
தகவலுக்கு நன்றி தல.. படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு கை வசம் இன்னும் ஒரு தொழில் இருக்கு போல
– அருண்
என்னமோ போங்க, ஊர ஞாபகப்படுத்திட்டே இருக்கீங்க.. பேசாம மச்சான விவசாயம் பாக்கச் சொல்லீட்டு நானும் நடவு நட்டு வயல் பாத்துகிட்டு இருந்துட்டா பரவாயில்லைன்னு இருக்கு 🙂 இன்னும் ஒரு மாசத்துல ஊருக்கு வருவேன் அண்ணா, நீங்க கிளம்பிடுவீங்களா ?
முக்கியமா டைமண்ட் ஜூபிலி பத்தி சொல்லாம விட்டுட்டீங்களே? விக்டோரியா மகாராணி காலத்து புகழ் இருக்கே அந்த ஸ்கூல்க்கு. நம்ம கோபி ஆர்ட்ஸ், பொரிக்கடை, பாரியூர் தேர் இதெல்லாம் நமக்கே நமக்கான சந்தோஷங்கள்..
ஊரப் பத்தி சொன்னா பத்தி பத்தியா தான் போய்கிட்டே இருக்கும்.. என்ஜாய் பண்ணுங்க, ஊரெல்லாம் சுத்தி பாருங்க.
வாழ்ந்து அனுபவிச்சதை, அனுபவிச்சு எழுதி இருக்கீங்க கிரி. ஒரு வேளை சினிமாகாரங்க ஜாஸ்தி வந்து போய்க்கிட்டு இருந்ததால தான் நவீன வசதிகள் எல்லாம் உடனே கோபிக்கு வந்ததோ?
CKS பங்களா தானே தேவர் மகன் படத்துல கமல் வீடா காமிச்சது? இல்லை அது வேறயா?
கலகலப்பு படத்துக்கு அந்த கண்றாவி கலர் அடிச்ச அவனுங்களை…. (நற..நற..)
கலக்கல் பதிவு கிரி… காக்கைக்கு தான் குஞ்சு பொன் குஞ்சு தான்… பிறந்த மண் என்றுமே பெருமையான மண் தான்…
அனைவரின் வருகைக்கும் நன்றி
@பாலா கணேஷ் வேறு ஒரு சந்தர்பத்தில் நிச்சயம் எழுதுகிறேன்.
@வினோ இவங்க வளரும் போது இது போல இடங்கள் இருக்குமா என்பதே சந்தேகம் தான்.
@வெயிலான் தெரியல.. செந்தில் மோகன் நீங்க கூறியது சரி தான் என்கிறார் 🙂
@செந்தில் மோகன் ICICI வங்கி கோபி கிளை Bank Of Madura மெர்ஜ் செய்யும் முன்பே இங்கே வந்து விட்டது என்று நினைக்கிறேன்.
@பிரதீபா நான் தற்போது சிங்கப்பூர் வந்து விட்டேன். இனி பொங்கலுக்கு செல்லலாம் என்று இருக்கிறேன். ஊருக்கு சென்றால் எங்கள் வீட்டிற்கு சென்று வரவும்.
கோபி பற்றி எவ்வளவு கூறினாலும் ஏதாவது விட்டுப் போய் இருக்கும் 🙂
@பாமரன் ரொம்ப சரியா சொன்னீங்க. நீங்கள் கூறியது ஏறக்குறைய உண்மை தான். திரைப்படப் படப்பிடிப்பால் கோபி வளர்ச்சி அடைந்தது உண்மை தான் ஆனால், அது மட்டும் காரணமல்ல. இங்குள்ள இயற்கை வளம் மற்றும் அமைந்துள்ள இடம் அதைவிட முக்கியமாக மக்கள் பழகும் விதம். இங்கே வேலை மாற்றலாகி வரும் எவரும் இங்கே இருந்து போக மாட்டார்கள். சமீபத்திய உதாரணம் கோபி கிளைக்கு வந்த IDBI வங்கி மேனேஜர் எல்லா இடத்தையும் விட கோபி தாங்க நல்லா இருக்கு, ரொம்ப பிடிச்சு இருக்கு என்று என் தந்தையிடம் கூறியது.
கோபிக்கே இதுவரை ரஜினி கமல் வந்ததில்லை. கமல் தேவர்மகனில் வந்தது இந்த வீடு அல்ல.
@யாசின் உண்மை தான் 🙂
நான் உங்கள் ப்ளாக் கொஞ்ச காலமாக தான் படித்து வருகிறேன். அனைத்து பதிவுகளும் அருமை..கோபிஐ பற்றி நீங்கள் கூறும் போது எனக்கும் ஒருமுறை அங்கு சென்று வர தோன்றுகிறது..