மண்டேலா (2021) | தேர்தல் அட்ராசிட்டிகள்

2
மண்டேலா

கிராமத்து நாவிதரான யோகிபாபு எதிர்கொள்ளும் சமூக, சாதி பிரச்சனைகள் தான் மண்டேலா. Image Credit

மண்டேலா

பெயரே இல்லாத யோகிபாபுக்குச் சூட்டப்படும் பெயரே மண்டேலா. இதற்கான காரணமும், அதற்கு யோகிபாபு கொடுக்கும் விளக்கமும் மிகப்பொருத்தம்.

இக்கதை நடப்புக் காலத்தில் (2021) நடப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இதையே 90 களில் நடப்பதாகக் காட்டப்பட்டு இருந்தால், மிகப்பொருத்தமாக இருந்து இருக்கும்.

தற்போதும் சில பொருந்தும் என்றாலும், இதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் தற்காலத்துக்குப் பொருந்தாது. காரணம், காலம் மாறி விட்டது.

ஆனால், யோகிபாபு எதிர்நோக்கும் பெரும்பாலான பிரச்சனைகளைச் சிறு வயதில் நேரடியாகவே பார்த்துள்ளேன். இதில் கூறப்பட்டுள்ளவை / நடப்பவை உண்மையே!

யோகிபாபு

யோகிபாபுவின் நடிப்பு எப்போதும் கதாப்பாத்திரம் மீறிய பேச்சு. பல ஆண்டுகள் நடித்த மூத்த நடிகர் போல அவருடைய கிண்டல் இருக்கும்.

குறிப்பாக, கவுண்டர் தன் இறுதிக்காலங்களில் செய்த நடிப்பை, யோகிபாபு துவக்கத்திலேயே செய்து எரிச்சலூட்டி இருந்தார்.

ஆனால், மண்டேலாவில் கொஞ்சம் கூட மிகை நடிப்புச் செய்யாமல், அட்டாகாசமாக நடித்துள்ளார், நம்பவே முடியலை. தேடிப்பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது.

கிராமத்து நாவிதர் கதாப்பாத்திரமாகவே மாறி உள்ளார்.

அழுக்கு உடை, ஆதிக்கச் சாதியினரின் கட்டுப்பாடு, அவமானங்களை எதிர்கொள்வதை மிக எதார்த்தமாக அப்படியே கொண்டு வந்துள்ளார்.

யோகிபாபுவை பாராட்டுவதா? அல்லது இவரை இப்படி இயக்கிய இயக்குநரைப் பாராட்டுவதா?

இதுவரை யோகிபாபு இது போல இயல்பாக நடித்தது இல்லையென்பதால், இயக்குநருக்கே பெருமை சேர்கிறது.

வாக்கு

தேர்தலுக்காக இரு சாதியினர் பிரிய, வாக்கு எண்ணிக்கை சமமாக உள்ளது. யோகிபாபு வாக்கு யாருக்கு விழுகிறதோ அவரே வெற்றி பெற முடியும்.

கூட்டணி ஆட்சியில் சுயேட்சை MLA க்கு எப்படி முக்கியத்துவம் இருக்குமோ அதே போல, ஒரு வாக்குக்காக யோகிபாபுக்கு செம மரியாதை கிடைக்கும்.

ஏகப்பட்ட பணம், வசதி செய்து தர இரு தரப்பினரும் தயாராக இருப்பார்கள்.

அதுவும் ஒரு தொழிற்சாலை வரப்போவதால், அவர்கள் மூலமாகக் கோடிக்கணக்கில் கிடைக்கும் லஞ்சப்பணத்துக்காக இவருக்கு அள்ளி வழங்குவார்கள்.

ஒளிப்பதிவு & இசை

எந்தச் சினிமாத்தனமும் இல்லாமல் அப்படியே கிராமத்தைக் கண் முன் நிறுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர்.

எங்கேயுமே படம் நம்மை விட்டு அந்நியப்படவில்லை.

இதில் வரும் கதாப்பாத்திரங்களும், காட்சிகளும் நேரடி சம்பவத்தைக் காண்பதைப் போலவே உள்ளது.

காட்சிகளில் அப்படியொரு இயல்புத்தன்மை.

போகிற போக்கில் வரும் பாடல்களும், படத்தின் பின்னணி இசையும் அருமை. படத்தோடு ஒன்ற வைக்கிறது.

அரசியல்

ஒரு கழிப்பறை கட்டுவதில் கூட எவ்வளவு அரசியல், சாதிப்பிரச்சனை என்பதை ரசிக்கும்படி கூறியுள்ளார் இயக்குநர்.

நடந்த, நடக்கும் சம்பவங்களை எதார்த்தம் மீறாமல் கூறியதே இப்படத்தின் வெற்றி.

அரசியலுக்காக ஒவ்வொருவரும் எப்படிக் கீழிறங்கி வருகிறார்கள், சரக்கு அடிக்கும் போது காணாமல் போகும் சாதி என்று சுருக்கென்று அனைத்தையும் போகின்ற போக்கில் கூறியுள்ளார்கள்.

துணைக்கதாப்பாத்திரங்கள் அனைவரும் மிகச்சரியாகப் பொருந்தியுள்ளார்கள். ஒருவர் கூடத் தேவையில்லை, பொருத்தமில்லை என்று கூற முடியாது.

ஊர் தலைவராக வரும் சங்கிலி முருகனுக்குப் பொருத்தமான கதாப்பாத்திரம். இரு பக்கமும் மாட்டிட்டு அவர் படுறபாடு ரசிக்க வைக்கிறது 🙂 .

தனுஷ் போல இயல்பாக நடித்து யோகிபாபு அசத்தியுள்ளார். இதையே தொடரலாம், அதாவது மிகை நடிப்புச் செய்யாமல்.

இறுதியில் வழக்கமான தமிழ் படக் காட்சிகள் போல வருவது மட்டுமே உறுத்தல்.

இவ்வளவு சிறப்பாகப் படத்தை எடுத்த இயக்குநர் இதையும் வித்யாசமாக அல்லது சினிமாத்தனம் இல்லாமல் எடுத்து இருக்கலாம்.

வணிக ரீதியான வெற்றிக்காகச் சமரசம் செய்து கொண்டாரோ என்னவோ.

இயக்குநருக்கு முதல் படமாம். நம்பவே முடியவில்லை!

அனைவரையும் அவசியம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். NETFLIX ல் காணலாம்.

தொடர்புடைய விமர்சனங்கள்

வெக்கை (நாவல்)

அசுரன் | வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்

தீண்டாமை எப்போது ஒழியும்?

Written by Madonne Ashwin
Directed by Madonne Ashwin
Starring Yogi Babu, Sheela Rajkumar
Music by Bharath Sankar
Country of origin India
Original language Tamil
Producers S. Sashikanth, Chakravarthy Ramachandra, Balaji Mohan
Cinematography Vidhu Ayyanna
Editor Philomin Raj
Release date 4 April 2021
Duration 2.20 hrs

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. பொதுவாக யோகி பாபுவின் சிரிப்பு காட்சிகள் எனக்கு அந்த அளவிற்க்கு பிடிக்காது.. சில படங்களை தவிர்த்து.. கோமாளி படத்தில் அவரது நடிப்பினை ரசித்தேன்.. மண்டேலா படம் நன்றாக இருப்பதாக என் சில நண்பர்கள் கூறினார்கள்.. யோகி பாபுவும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருப்பதாக சொன்னார்கள்.. நீங்களும் அதைத்தான் சொல்கிறீர்கள்.. நிச்சயம் படத்தை பார்ப்பேன்.. சில அறிமுக இயக்குனர்களின் படங்கள் உண்மையில் வியக்க வைக்கிறது.. (இவ்வளவு சிறப்பாகப் படத்தை எடுத்த இயக்குநர் இதையும் வித்யாசமாக அல்லது சினிமாத்தனம் இல்லாமல் எடுத்து இருக்கலாம்) சில நேரம் புதுமுக இயக்குனர்கள் தன் விருப்பப்படி செயல்பட முடியாது.. வியாபாரம் என ஒன்றையும் கணக்கில் கொள்ளும் போது இது போல நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பு உண்டு.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. “சில நேரம் புதுமுக இயக்குனர்கள் தன் விருப்பப்படி செயல்பட முடியாது.. வியாபாரம் என ஒன்றையும் கணக்கில் கொள்ளும் போது இது போல நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பு உண்டு”

    ஏற்றுக்கொள்கிறேன் யாசின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here