இயல்பு வாழ்க்கையைக் கொரோனா முடக்கியுள்ளது, ஊரடங்கால் பாதிப்புக் கட்டுப்படுத்தப்பட்டாலும் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்பதை வலியுறுத்துகிறது.
புரட்டிப்போட்ட கொரோனா
மூன்று மாதங்களுக்கு முன்பு உலகம் குறிப்பாக இந்தியா இப்படியொரு நிலையைச் சந்திக்கும் என்று எவரும் கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார்கள்.
தற்போது யோசித்தாலும் நம்ப முடியாத நிகழ்வாகவே தோன்றுகிறது.
மக்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு விட்டது. பலர் வாழ்வாதாரம் இழந்து விட்டார்கள். Image Credit
ஊரடங்கு
கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மிகச்சிறந்த செயல் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
லட்சத்தில் சென்று இருக்க வேண்டிய பாதிப்பை ஆயிரங்களுடன் ஊரடங்கு கட்டுப்படுத்த உதவியது.
மக்களும் துவக்கத்தில் ஒத்துழைப்பு கொடுத்தார்கள் ஆனால், நாளடைவில் இப்பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருந்ததே தவிர முடிவிற்கான வழி தெரியவில்லை என்றதும் பொறுமையிழக்க ஆரம்பித்தனர்.
பலரும் இருக்கும் கொஞ்ச சேமிப்பை வைத்து ஒரு மாதம் சமாளித்தனர் ஆனால், தொடர்ந்ததால் வாழ்வாதாரத்துக்கான வருமானம் இழந்து மன உளைச்சலாகினர்.
எத்தனை நாட்கள் இப்படியே தொடர்வது? என்ற வெறுப்பு அனைவர் மனதிலும் எழ ஆரம்பித்தது.
வெளிமாநில தொழிலாளர்கள்
வெளிமாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்குச் செல்லக் கூட்டமாகக்கூடிய போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இவர்கள் கொரோனாவை அதிகப்படுத்துகிறார்கள் என்று பலர் விமர்சித்தனர்.
வாழ்க்கை நடத்த பாதுகாப்பான நிலையில் உள்ளவர்கள் இதுபோலக் கருத்துக் கூறலாம் ஆனால், அடுத்த வேளை உணவுக்கே தவிப்பவர்கள் நிலை என்ன ஆவது?
அவர்களால் எப்படிச் சமாளிக்க முடியும்? எங்கேயோ அமர்ந்து கொண்டு சமூகத்தளங்களில் இதை எதிர்த்துக் கருத்திடுவது எளிது ஆனால், அந்நிலையில் உள்ளவர்களுக்கே நடைமுறை சிரமம் புரியும்.
பசியால் சாவதை விட, மற்றவரின் தயவை எதிர்பார்த்து வாழ்வதை விட, கொரோனா வந்தாலும் பரவாயில்லை சொந்த ஊருக்கே போய்விடலாம் என்று நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை.
இத்தனை நாட்கள் எப்படிச் சமாளித்தார்களோ பாவம். தற்போது மாநில / மத்திய அரசுகள் உதவி மூலம் தங்கள் ஊருக்குச் சென்று கொண்டுள்ளார்கள்.
வாழ்வாதாரம்
அனைத்து துறைகளும் மிகச் சிரமத்தில் உள்ளன. அதோடு பணியாளர்களும் பணியிழப்பு உட்படப் பல்வேறு நெருக்கடிகளில் உள்ளனர். அடுத்த நாள் உணவுக்கே திண்டாடும் நிலையும், கடன் வாங்கும் நிலையும் உள்ளது.
இந்நிலையில் ஊரடங்கை தொடர்வது சரியான யோசனையல்ல. இதை உணர்ந்து தான் அரசுகள் தளர்வுகளைக் கொண்டு வந்துள்ளனர்.
முடிவே தெரியாத ஒன்றுக்கு எத்தனை மாதங்கள் காத்திருப்பது? கொரோனாவில் சாகவில்லையென்றாலும், மக்கள் பசியாலும் வாழ்வாதாரத்துக்கு வழியல்லாமலும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, இனி ஊரடங்கை தொடருவது அறிவுப்பூர்வமானதாக இல்லை.
இனி நம் வாழ்க்கையைக் கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் அதாவது, விழிப்புணர்வுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிலைத் தொடர்வதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தோன்றவில்லை.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே நிரந்தரத் தீர்வு. அதுவரை எப்படிக் கட்டுப்பாடாக இருந்தாலும், எதோ ஒருவகையில் பரவிக்கொண்டே இருக்கும்.
எனவே, உங்கள் நடவடிக்கைகளைப் பாதுகாப்பானதாக மாற்றிக்கொண்டு வாழ்க்கையைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை. கசப்பானதாக இருந்தாலும், இது தான் நடைமுறை எதார்த்தம்.
கவலைப்படாதீர்கள்! இதுவும் கடந்து போகும்.
தொடர்புடைய கட்டுரைகள்
சேமிப்பின் அவசியம் உணர்த்தும் கொரோனா
கொரோனா வைரஸ் WhatsApp புரளிகள்
வேற வழி இல்லை கில்லாடி.
இதுவும் கடந்து போகும் அவ்வளவுதான் 🙂
🙂 ஆமாம் கேப்டன்