அம்மா அப்பா அத்தை மாமா

7
Amma Appa Athai Mama அம்மா அப்பா அத்தை மாமா

னக்கு மூன்று அக்காக்கள், மூவருமே அம்மா அப்பா என்று தான் அழைப்போம் ஆங்கிலத்தில் மம்மி டாடி என்று அழைத்ததில்லை. எவரையும் மாமா அத்தை என்று தான் கூறி இருக்கிறோமே தவிர எவரையும் ஆன்ட்டி அங்கிள் என்று அழைத்ததில்லை.

நாங்களாவது சென்ற தலைமுறை என்பதால், இது அனைவர் குடும்பங்களிலும் சாதாரணமான ஒரு நிகழ்வு என்று கருதலாம்.

இன்றைய தலைமுறை

தற்போதைய தலைமுறையாக அக்காக்கள் பசங்க, என் பசங்க அனைவருமே இது போலத் தான் அனைவரையும் அழைக்கிறார்கள்.

இது எனக்கு மிக மகிழ்வைத் தருகிறது.

முதல் இரண்டு அக்கா பசங்க மட்டும் சில நேரங்களில் “மாம்ஸ்” என்று என்னை அழைப்பார்கள், இனி மாமா என்றே அழைக்கும்படி கூற இருக்கிறேன்.

மூன்றாவது அக்கா திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து விட்டார்.

நகரத்துக்கு வந்தும் இவருடைய பையனும் பெண்ணும் மாறாமல் அம்மா அப்பா மாமா அத்தை என்று தமிழிலேயே அழைப்பது மிக மகிழ்ச்சியைத் தரும்.

என் பசங்களும் இப்படித் தான் அழைப்பார்கள். பெரிய பையன் வினய் மட்டும் எப்பவாவது என்னை வெறுப்பேத்த டாடி என்று கூறி விட்டு ஓடி விடுவான் 🙂 .

“டாடி மம்மி” என்று அழைப்பது எனக்குப் பிடிக்காது என்று அவனுக்குத் தெரியும்.

அவனை அப்பா என்று கூற கட்டாயப்படுத்தியதில்லை, அவனே தான் கூறுகிறான். ஒரு வேளை எங்கள் குடும்பத்தில், உறவினர்களில் அனைவரும் அதே போல அழைப்பதால், அவனும் அப்படியே அழைக்கிறான் என்று நினைக்கிறேன்.

கொங்கு பகுதிகளில் இவ்வாறு அழைப்பது வழக்கமான ஒன்று. இன்னும் எங்கள் சொந்தத்தில் ஆங்கில மோகம் முழுவதும் ஆக்கிரமிக்கவில்லை என்று கருதுகிறேன்.

புதியவர்களைத் தமிழில் அழைக்கக் கூச்சம் ஏன் வந்தது?!

நம் பழக்க வழக்கங்களால் உறவினர்களை அழைக்கும் போது தமிழிலும் புதியவர்களை அழைக்கும் போது ஆன்ட்டி அங்கிள் என்று அழைக்கிறோம்.

என் பசங்க என் நண்பர்களை மாமா என்று தான் அழைக்கிறார்கள்.

நான் அவர்களுக்குச் சொல்வதே சதீஷ் மாமா, விஜய் மாமா என்பதால், அவர்களும் அப்படியே பழகி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

அம்மா அப்பாவா டாடி மம்மியா! 🙂

நண்பரிடம் இது குறித்த பேச்சு வந்த போது என்னோட பசங்க டாடி என்று தான் அழைப்பார்கள் என்றார்.

என்ன தான் இருந்தாலும் அப்பா என்று அழைப்பது போல வராதுங்க” என்றேன்.. “அதெல்லாம் ஒன்றுமில்லைங்க.. டாடி என்றாலும் அதே உணர்வு தான்” என்றார்.

அவர் கூறுவது சரி தான்.. அதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம். இதில் நாம் என்ன கூறுவது?!

அம்மா அப்பான்னு கூப்பிடாதே.. டாடி மம்மி ன்னு ஸ்டைலா கூப்பிடு!!

தற்போது ஆங்கில மோகம் காரணமாகப் பெற்றோரே தங்கள் பிள்ளைகள் அம்மா அப்பா என்று அழைத்தாலும், வெட்கப்பட்டு!! டாடி மம்மி என்று கூற கட்டாயப்படுத்துகிறார்கள்.

அம்மா அப்பா என்று கூறுவதில் கிடைக்கும் உணர்வு புரியவில்லை என்றே கருதுகிறேன், புரிந்தாலும் சிலர் விரும்புவதில்லை.

“டேய் மச்சான்” என்பதற்கும் Hey Buddy / Bro என்பதற்கும் உள்ள வித்யாசம் தான் 🙂 . “மச்சி” என்பதில் உள்ள நெருக்கம் ஆங்கிலத்தில் அழைப்பதில் நிச்சயம் வராது.

பிராவோ, தோனியை “மச்சான்” என்று அழைத்ததை Hey Bro என்று போட்டு இருந்தால், நம்ம Meme Creators கண்டுக்கிட்டு இருப்பாங்களா! 🙂 .

நெருக்கம் உணர முடியவில்லை

அக்கா பசங்க என்னை மாமா என்று அழைக்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன், அதே அங்கிள் என்றால் (இது வரை அழைத்தது இல்லை), செயற்கையாகத் தோன்றுகிறது.

மாமா என்பது உள்ளத்தில் இருந்தும், அங்கிள் என்பது உதட்டில் இருந்தும் வருவது போல உணர்வு. மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை.

இதைப்படித்துக்கொண்டு இருக்கும் பெரும்பாலனவர்கள் வீட்டில் டாடி மம்மி, ஆன்ட்டி அங்கிள் தான் இருக்கும் என்று நினைக்கிறேன் 🙂 .

ஒவ்வொருவருக்கும் எப்படி அழைத்தால் தங்களுக்கு மகிழ்ச்சி என்ற விருப்பம் இருக்கும். சிலருக்கு அம்மா அப்பா, பலருக்கு டாடி மம்மி.

நான் அம்மா அப்பா! நீங்கள் எப்படி?

கொசுறு

சரி.. எத்தனை பேரு உங்கள் தொலைபேசியில் “Amma, Appa” என்று உங்கள் அம்மா, அப்பா எண்ணைப் பதிவு செய்து வைத்துள்ளீர்கள்? 🙂 .

https://www.facebook.com/giriblog

தொடர்புடைய கட்டுரை

அக்காவின் அன்பு தெரியுமா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

  1. தமிழ் உறவுப்பெயர்களில் அழைப்பதுதான் சிறப்பாகவும் நெருக்கமாகவும் இருக்கும். என் பையன் ‘ஏ அப்பா’ என்று சமயத்தில் கூப்பிடும்போது இருக்கும் நெருக்கம் ‘டாட்’ என்று கூப்பிடுவதில் இல்லை. உறவுகளை அந்த அந்த உறவுப் பெயரால் அழைப்பதுதான் நன்றாக இருக்கும். (சிலர் பெயர் சொல்லுங்கள் என்று சொன்னாலும்).

    ஆமாம், தம்பி மனைவி, மச்சினனின் மனைவி இவர்களுக்கெல்லாம் தமிழில் என்ன உறவு முறை?

    • நல்ல பதிவு கிரி. நான் அனைத்திலும் உங்களோடு உடன்படுகிறேன்.நானும் அவ்வாறே அலைபேசியில் சேமித்து வைத்துள்ளேன்.

      //ஆமாம், தம்பி மனைவி, மச்சினனின் மனைவி இவர்களுக்கெல்லாம் தமிழில் என்ன உறவு முறை?

      தம்பி மனைவி = கொழுந்தியாள்

      மச்சினனின் மனைவி = தங்கை

      இதுதான் எங்கள் தஞ்சை வட்டார வழக்கம்.

  2. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்.. என்னும் பாடலை பள்ளி பருவத்தில்படிக்கும் போது ஒருமுறை கூட ரசித்தது கிடையாது. ஆனால் நாட்கள் செல்ல, செல்ல மொழியின் மீது கொண்ட காதல் அதிகமான போது, இத்தனை காலம் வீணடிக்கப்பட்டதை எண்ணி வருந்தினேன். அன்றே தீர்மானித்து விட்டேன்.

    தமிழின் மீது நான் கொண்ட காதலை என் சந்ததிக்கு நிச்சயம் கற்று கொடுக்க வேண்டும் என்று. இதில் வருத்தமான நிகழ்வு சுற்றி உள்ள பல நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் இது பிடிக்கவில்லை என்பது தான். வீட்டில் டாடி மம்மி, ஆன்ட்டி அங்கிள் இந்த கலாச்சாரத்தை புகுத்த நான் அனுமதிக்கவில்லை.

    சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பினும், என் பையனின் ஆர்வம், ஒத்துழைப்பு அதிகமாக இருப்பது மகிழ்வான ஒன்று. நீங்கள் கேட்ட பாடலாக தான் இருக்கும், மீண்டும் ஒருமுறை கேட்டு பாருங்கள்.. (கள்ளி காட்டில் பிறந்த தாயே.. படம் : தென்மேற்கு பருவக்காற்று.) அம்மாவை பற்றிய பாடலாக இருப்பினும், குழந்தை பருவத்தில் முதலில் உச்சரித்த வார்த்தை அம்மா என்பதால் இந்த பாடல் மிகவும் பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி கிரி.

  3. @நெல்லைத்தமிழன்

    எங்கள் கொங்கு பகுதியில் அண்ணன் மனைவி – அண்ணி, தம்பி மனைவி கொழுந்தியாள்

    நடைமுறை பேச்சு வழக்கில் தம்பி மனைவியை பெயர் கூறி தான் அழைப்பார்கள்.

    மச்சினன் மனைவி தங்கச்சி தான்.. இவரையும் பெயர் கூறி தான் அழைப்பார்கள்.

    @யாசின் “நாட்கள் செல்ல, செல்ல மொழியின் மீது கொண்ட காதல் அதிகமான போது, இத்தனை காலம் வீணடிக்கப்பட்டதை எண்ணி வருந்தினேன்”

    எனக்கு இது அடிக்கடி தோன்றும். ச்சே படிக்கும் போது இப்படி வீணடித்து விட்டோமே என்று கடுப்பா இருக்கும்.

    “தமிழின் மீது நான் கொண்ட காதலை என் சந்ததிக்கு நிச்சயம் கற்று கொடுக்க வேண்டும் என்று. இதில் வருத்தமான நிகழ்வு சுற்றி உள்ள பல நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் இது பிடிக்கவில்லை என்பது தான்.”

    🙁 தற்போது கொஞ்சம் மாற்றம் கண்டு வருவதாக உணருகிறேன்.. இந்தி திணிப்பால்.

    “சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பினும், என் பையனின் ஆர்வம், ஒத்துழைப்பு அதிகமாக இருப்பது மகிழ்வான ஒன்று.”

    மகிழ்ச்சி 🙂

  4. எனக்கு ஒரு சந்தேகம்..
    நண்பனை எதுக்கு மச்சான் மச்சி னு கூப்பிடுறோம்..!? நிறைய உறவுகள் பெயர்கள் இருட்கு தமிழில்..ஆனா அப்படி அந்த மச்சான் மாப்ள உறவின் பெயர மட்டும் ஏன் நண்பர்களை சொல்றோம்..
    மச்சான் உறவின் சிறப்பு என்ன..!?
    plz ..பதிலை வேண்டி…!!

  5. மச்சான் என்பது இளையவரை குறிக்கும் சொல்லாகவும், நெருக்கமான சொந்தமாகவும் கருதப்படுவதால் இருக்கலாம்.

    சித்தப்பா, மாமா போன்ற உறவுகள் வயதில் மூத்தவராக உள்ளது அதே மச்சான், மாப்ள என்பது நெருங்கிய இளைய உறவாக கருதப்படுவதால் இருக்கலாம்.

    உண்மையான காரணம் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here