தமிழ்நாடு வெதர் மேன் | தனி ஒருவன்

3
தமிழ்நாடு வெதர் மேன்

ணையத்தைப் பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் பரிட்சயம் என்றால் அது Tamilnadu Weather Man என்று அழைக்கப்படும் “பிரதீப் ஜான்”, செல்லமாக PJ 🙂 .

தமிழ்நாடு வெதர் மேன்

2015 டிசம்பரில் சென்னையை புரட்டிப்போட்ட மழையின் போது அறிமுகமானவர்.

ஃபேஸ்புக்கில் எப்படியோ அறிமுகமானது இவரது பக்கம். இவர் அறிவிப்புகள் வானிலை அறிக்கை மையம் கொடுப்பதற்கு ஈடாக இருந்ததால், அட! என்று வியப்பு.

அன்று முதல் மிக முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கவில்லை என்றாலும், கண்ணில் பட்டால் கவனிக்கும் பக்கமானது.

பின்னர் அப்படியே தொடர்ந்து மழை என்றாலே இவர் பக்கத்தை மட்டுமே பார்க்கும் அளவுக்குக் கலக்கி வருகிறார்.

கொடுக்கும் தகவல்களை வறட்சியாக இல்லாமல் சுவாரசியமாகக் கொடுப்பார் [Damaal dumeel, rain pinni pedaleduthufying 🙂 ].

Passion

இவர் என்ன வேலை பார்க்கிறார் என்று தெரியவில்லை ஆனால், அவரது விருப்பம் வானிலை சம்பந்தப்பட்டது என்பது மட்டும் அனைவரும் அறிந்தது.

எனவே, விருப்பப் பணியில் இல்லை என்றாலும், மனதில் உள்ள விருப்பத்தைச் சிலரால் விட்டுக்கொடுக்க முடியாது.

எதோ ஒரு கட்டத்தில் நம்மை அறியாமலே நம் திறமை / விருப்பம் வெளிப்படும். அட! இது நல்லா இருக்கே.. என்று அதன் மேல் காதலாகி விடுவோம்.

பின் அது குறித்து மேலும் மேலும் தெரிந்து கொண்டு நம்மை மேம்படுத்திக் கொள்வோம். அது குறித்தே நம் எண்ணங்கள் சுழன்று கொண்டு இருக்கும்.

இதன் பெயர் தான் Passion 🙂 .

Passion என்பதற்கும் ஆர்வக்கோளாறு என்பதற்கும் பெரிய வித்யாசம் உண்டு. ஆர்வக்கோளாறு என்பது தற்காலிகமானது Passion என்பது நிரந்தரமானது.

புகழ் போதை

நாம் என்ன தான் மற்றவர்களிடம் புகழை தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை என்று வசனம் பேசினாலும், நம் மனதில் ஒரு ஓரத்தில் இவை இருந்து கொண்டே இருக்கும்.

மிக எச்சரிக்கையாக இல்லையென்றால் நம் நிம்மதியையே அழித்து விடும்.

குடும்பம், நம் உடல் நலம், முதன்மைப் பணி, மற்றவைக்கு ஒதுக்கும் நேரம் போன்றவற்றுக்குப் பிறகே இந்த Passion யை வைத்துக்கொள்ள வேண்டும்.

இதில் தெளிவாக இருந்தால், என்றுமே வெறுப்பு, சலிப்பு, மன அழுத்தம், கோபம் வராமல் நம் Passion யைத் தொடரலாம் 🙂 .

சுருக்கமாக, நம்மை நாமே நெருக்கடிக்கு ஆளாக்கிக்கொள்ளக் கூடாது.

விமர்சனங்கள்

பொது வெளி என்று வந்து விட்டாலே முதலில் நாம் எதிர்கொள்ளப்பழக வேண்டியது விமர்சனங்களைத் தான். அறிமுகம் இல்லாதவரைப் பிரச்சினை இல்லாமல் இருக்கும்.

ஓரளவு பிரபலம் ஆனால், நம்மைப் புரட்டிப்போட்டு விடும்.

துவக்கத்தில் இதைச் சமாளிப்பது என்பது சாதாரண விசயமில்லை. பிரதீப் இதை எதிர்கொள்வது தவிர்க்கவே முடியாது.

ஒருமுறை பிரதீப்பை பின்தொடருபவர்,

நீங்க சென்னைக்கு மட்டுமே சொல்றீங்க மற்ற மாவட்டங்களுக்குச் சொல்வதில்லை அதனால், நீங்கள் Tamilnadu Weather Man என்பதற்குப் பதிலாக Chennai Weather Man என்று மாற்றிக்குங்க” என்று கூறி இருந்தார்.

பலர் மூளை என்ற ஒன்றை கழற்றி விட்டே இணையத்தில் சுற்றுவதால், இது போன்ற விமர்சனங்களைத் தவிர்க்க முடியாது.

உண்மையில் அந்தச் சமயத்தில் சென்னையில் தான் மழை குறித்த தகவல்கள் பரவலாக இருந்தது. எனவே, அது குறித்த தகவல்களைக் கூற முடிந்தது.

அதோடு அவர் Tamilnadu Weather Man என்ன.. International Weather Man கூட வைத்துட்டு எதையும் சொல்லலாம் 🙂 .

விருப்பம் இருந்தால் படி.. இல்லையா.. Unlike பண்ணிட்டு போயிட்டே இரு.

Read: எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் இழப்புகள்

தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து இடங்களிலும்

கடந்த வருடங்களில் முன் கூட்டியே மழை தகவல் கொடுத்துப் பலருக்கு உதவி இருக்கிறார். கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து கால நிலை கொடுத்து அசத்தினார்.

சமீபத்தில் குஜராத், ராஜஸ்தானில் மழை செமத்தியாக அடிக்கப் போகிறது என்று முன்கூட்டியே தகவல் கொடுத்தார்.

இதைப் பார்த்த நம்ம மக்கள் அந்த ஊர் நண்பர்களுக்கு, குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து எச்சரிக்கைப் படுத்தினார்கள்.

ஒரு சம்பவத்தைக் கூறியே ஆக வேண்டும் 🙂

ஒரு நாள் மனைவி அழைத்து “ஏங்க! மழை வரும்னு ஏன் சொல்லல.. பாருங்க.. துணி எல்லாம் நனைந்து விட்டது!” என்று கோபமாகி விட்டார்.

இது என்னடா வம்பா இருக்கு! என்றாகி விட்டது 🙂 .

பிரதீப் ஃபேஸ்புக்கில் மழை பற்றிய செய்தி பகிர்ந்தால், மனைவியை அழைத்துக் கூறி விடுவேன்.

இதனால், துணி காயப்போட்டு இருந்தால் எடுத்து விடுவார். மழை வருவது போல இருந்தால், என்னை அழைத்துக் கேட்பார்.

நானும் பிரதீப் என்ன போட்டு இருக்காரோ அதைக் கூறி வரும் வராது என்று தெரிவித்து விடுவேன்.

ஒருநாள் நான் கவனிக்கவில்லை அதனால் சொல்லவில்லை.. ஆனால், மழை வந்து விட்டது. இதுக்குத் தான் சண்டை. என்ன கொடுமை சார் 🙂 .

நேரா இங்க தான் வரீங்க போல..

பிரதீப்! நீங்க எங்களுக்குச் செய்யும் உதவிக்கு அளவே இல்லை. அலுவலகம், சுற்றுலா, வெளியே செல்லும் போது என்று எப்போதும் உங்கள் தகவல் உதவுகிறது.

குறிப்பாக 20 / 30 நிமிடங்கள் பெய்யும் என்று கூறுவது, முன்னேற்பாடாகத் திட்டங்களை முன் கூட்டியே மாற்றிக்கொள்ள உதவுகிறது.

கபாலியில் வருவது போல “நேரா இங்க தான் வரீங்க போல.. ” என்பது மாதிரி, மழை வருகிற மாதிரி இருந்தால், நேரா உங்க ஃபேஸ்புக் பக்கம் தான் வருகிறோம் 🙂 .

மழை ஆசிர்வாதம்

விகடன் பேட்டி என்று நினைக்கிறேன், உங்கள் திருமணத்தன்று மழையென்று கூறி இருந்தீர்கள். இதை விட ஒருவருக்கு ஆசிர்வாதம் என்ன இருக்க முடியும்!?

மேலும் பெரிய உயரங்களைத் தொட உங்கள் ரசிகர்களின் சார்பாக வாழ்த்துகள். உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு எங்கள் நன்றிகள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

 1. இதுவரை இவரை பற்றிய எந்த தகவல்களும் எனக்கு தெரியாது. தற்போது இவரை பற்றிய செய்திகளை படிக்கும் போது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. (நம் கட்டுப்பாட்டில் Passion இருக்க வேண்டும், அதன் கட்டுப்பாட்டில் நாம் சென்று விட்டால் நம் சுதந்திரம், நிம்மதி பறி போய்விடும்.) சில நண்பர்களை நேரில் கண்டு இருக்கிறேன். நீங்கள் கூறியவை 100 க்கு 100 உண்மை. அறிமுகத்திற்கு நன்றி கிரி.

 2. மிகச்சிறப்பாக செயல்படுகிறார்.
  மழை பெய்வதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பே உத்தேசமாக கூறிவிடுகிறார். அது மிகவும் பயனுள்ளதாய் உள்ளது.
  20 நாட்களுக்கு முன்பே இப்போது பெய்யும் மழை பற்றி கூறியிருந்தார்.

  இதே போல் கடந்த மாசிமாதம் பெய்த கோடை மழை பற்றியும் கூறியிருந்தார்.

 3. @யாசின் நீங்கள் தமிழ்நாட்டில் இல்லையாததால், உங்களுக்கு இவரின் தேவையில்லை. இங்கே இருந்து இருந்தால், அறிந்து இருக்க வாய்ப்புண்டு.

  @காத்தவராயன் சென்னையில் இவரின் குறிப்புகளின் மூலமே நான் முன்னேற்பாடாக இருந்து கொள்கிறேன் 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here