தற்போது பணியில் இருக்கும் அனிதா நிறுவனத்துக்கும் வசுந்தரா கஜோல் நிறுவனத்துக்கும் தனுஷால் முட்டிக்கொள்கிறது. கஜோல் ஈகோ காரணமாகப் பிரச்னை ஏற்படுகிறது.
இப்பிரச்சனையைத் தனுஷ் எப்படிச் சமாளிக்கிறார் என்பது தான் கதை.
வேலையில்லா பட்டதாரி 2
திமிர் பெண் கதாப்பாத்திரம் என்றாலே விஜயசாந்தி (மன்னன்), ரம்யா கிருஷ்ணன் (படையப்பா) பிரதிபலிக்காமல், நினைவுபடுத்தால் நடிக்க வைப்பது மிகச் சிரமம்.
எப்படி நடித்தாலும் இவர்களின் நினைவு வந்த விடும், நானும் இதை எதிர்பார்த்தேன். Image Credit
ஆனால், அப்படி எந்த நினைவும் வராத மாதிரி கஜோல் அட்டகாசமாக மிகை நடிப்பில்லாமல் (ஒரு காட்சி தவிர) நடித்து இருக்கிறார். இதில் யாரை பாராட்டுவது நடித்த கஜோலையா இயக்கிய சவுந்தர்யாவையா?!
கஜோல் கெட்டவராகப் காட்டப்படவில்லை, அவர் பிரச்சனையாக அவரது ஈகோ தான் காட்டப்படுகிறது (மன்னன் விஜயசாந்தி போல).
கஜோலிடம் தனுஷ் போட்டியாகப் பேச, கஜோல் அவரைத் தனக்குச் சரி போட்டியாக நினைக்கவே கடுப்பாகும் கதாப்பாத்திரம்.
இவனெல்லாம் ஒரு ஆளு இவன் எல்லாம் எனக்கு எதிரியா? என்பது போல 🙂 .
ஏனென்றால், தனுஷ் ஊழியர் கஜோல் நிறுவன முதலாளி. எனவே, கஜோல் நினைப்பதில் தவறில்லை.
தனுஷ் & அமலா பால் சண்டை
இப்படத்திலேயே என்னைக் கவர்ந்த சில விஷயங்களில் தனுஷ், அமலா பால் சண்டை. பல கணவர்களின் புலம்பலைச் செமையாகக் காட்டி இருக்கிறார்கள் 🙂 🙂 .
அமலா பால் சத்தம் போட்டுக்கொண்டே இருப்பதைக் கண்டு கடுப்பாகி தனுஷ் சமுத்திரக்கனியிடம் [கையா முய்யா கையா முய்யா 😀 ] சொல்வது செம்ம செம்ம.
மனைவியை நினைத்து நினைத்துச் சிரித்துக்கொண்டு இருந்தேன் 🙂 .
ஒரு காட்சியில் தனுஷ் அமலா பாலிடம் பேச முயற்சிக்கும் போது “நான் வந்து… இல்ல… அது… மழை…” என்று கூற வருவதைப் பொருட்படத்தாமல் அமலா பால் பேசிக்கொண்டே இருந்து, தனுஷ் சொல்ல வந்ததை முழுதா சொல்லவே விட மாட்டார்.
தொலைபேசியை வைத்த பிறகு சமுத்திரக்கனியிடம் “என்னைப் பேசவே விடவில்லை” என்று அமலா பால் கூற.. என்னால் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை 🙂 .
ஒவ்வொருமுறையும் தனுஷ் சமாதானப்படுத்த நினைத்து இன்னும் பிரச்னை பெரிதாவது கலகலப்பு.
தங்க புஷ்பம்
சில வசனங்கள் முதல் பாகத்தில் வருவதே வருகிறது இருப்பினும் உறுத்தாத அளவுக்குத் தான் உள்ளது.
விவேக் “தங்க புஷ்பம்” நகைச்சுவை அடிக்கடி வந்தாலும், அவரின் முகப் பாவனைகள் சிரிக்க வைக்கின்றன.
ஒரு பெரிய ஒப்பந்தத்தை முடிக்கக் கஜோல் சென்று எதோ கடனுக்குனு பேசுவார். என்ன தான் பெரிய நிறுவன உரிமையாளர் என்றாலும், இது போல விளக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.
என்னமோ இவர் ஒப்பந்தம் கொடுப்பது போல உள்ளது. இக்காட்சியில் இவர் நடிப்புச் செயற்கையாக (இவர் கதாப்பாத்திரத்தை முன்னிறுத்த) இருந்தது.
தனுஷ் அவரது அம்மா பற்றிப் பேச ஆரம்பிக்க சமுத்திரக்கனி, “ஆஹா! இவன் அம்மா செண்டிமெண்ட் ஆரம்பித்துட்டான்யா!” என்று தெறித்து ஓடுவது செம 🙂 .
குடி
குடிக்கும் காட்சிகளைக் குறைத்து இருக்க வேண்டும்.
தனுஷ் தனக்கு சிறு வயது ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். சவுந்தர்யாவது இதைக் கவனத்தில் எடுத்து இருக்க வேண்டும்.
நகைச்சுவைக்காக வைத்து இருந்தாலும், விலாவரியாக இல்லாமல் வேறு மாதிரி சுருக்கமாக காட்டி இருக்கலாம்.
படத்துக்கு இசை பிரச்சனை. பின்னணி இசை பாடல்கள் என்று அனைத்துமே சுமார் தான். அதிரடியாக இருந்து இருந்தால், படத்துக்குக் கூடுதல் பலமாக இருந்து இருக்கும். பவர் பாண்டியில் கலக்கியவர் இதில் சறுக்கி விட்டார்.
முதல் இரு பாடல்களின் காட்சிகள் திணிக்கப்பட்டதே! பாடல்களே அதில் தேவை இல்லை. குறைந்த பட்சம் முதல் பாடல் காட்சி அவசியமே இல்லை.
தனுஷுக்கு உதவும் நபராக இயக்குநர் பாலாஜி வருகிறார். இவர் இந்த அளவுக்கு இறங்கி வந்து உதவுவதெல்லாம் நம்புகிற மாதிரி இல்லை.
இறுதியில் நிறுவன ஷேர் மாற்றிக் கொடுப்பதை ஓரளவு நியாயப்படுத்தி இருக்கிறார்கள்.
2015 சென்னை வெள்ளத்தை இறுதிப்பகுதிக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். கஜோலை துவக்கத்தில் இருந்தே, ஈகோ கதாப்பாத்திரமாகத் தான் காட்டுகிறார்கள், கெட்டவராக இல்லை.
எனவே, இறுதியில் அவரது அலுவலகத்தில் நடக்கும் காட்சிகள் இதெல்லாம் நடக்க வாய்ப்புள்ளதா என்று நினைக்க வைத்தாலும், காட்சி அமைப்புகள் சுவாரசியமாக இருப்பதால், பெரிய குறையாக நினைக்கத் தோன்றவில்லை.
இறுதிக் காட்சியில் நீட்டி முழக்காமல் அழகாக முடித்து விட்டார்கள். வாழ்த்துகள் சவுந்தர்யா!
படம் ரொம்ப ரொம்பப் பிடித்தது. குடும்பத்துடன் அடுத்த வாரம் திரும்பச் செல்ல இருக்கிறேன்.
படத்தின் விமர்சன விமர்சனம்
கடந்த வாரம் ஒரு குழு நண்பர்களுடன் நண்பர் தினத்தைக் கொண்டாடி, இந்த வாரம் இன்னொரு குழு நண்பர்களுடன் செல்லத் திட்டமிட்டு “நிபுணன்” படத்தை முன் பதிவு செய்ய நினைத்துப் படமில்லாததால், வேலையில்லா பட்டதாரி 2 முன் பதிவு செய்தேன்.
பலர் படம் மொக்கை, சரியில்லை, போர் என்று கூற, நண்பர்கள் தின கொண்டாட்ட நாள் சொதப்பிய கடுப்பில் முன் பதிவு செய்து மாட்டிக்கொண்டோமே! என்று செம்ம காண்டாகி விட்டது.
நண்பர்களும் இதையே கூற, ரத்தும் செய்ய முடியாது என்பதால், வேறு வழி இல்லாமல் கடுப்பான மனநிலையிலேயே சென்றோம்.
இதோடு பலர் இதை வைத்து MEME போட்டதால், சுத்தமாகப் பார்க்கும் விருப்பமே போய் விட்டது.
ஆனால், படம் அசத்தலான பொழுது போக்குப் படம். அதிகளவில் லாஜிக் எதிர்பார்க்காமல் ஒரு பொழுதுபோக்கான படம் என்ற அளவில் பார்த்தால், நிச்சயம் ஏமாற்றாது.
சிலர் படம் பார்க்காமலே மற்றவர்கள் சொல்வதைப் பரப்புவதால், பொதுவான மனநிலையாக VIP 2 உள்ளது.
பலர் சொல்லும் அளவுக்கெல்லாம் நிச்சயம் படம் மோசமில்லை. ரசிக்கத் தகுந்த படமே!
முதல் பாகத்தில் இளைஞர்கள் மட்டுமே ஆனால், இதில் தனுஷ் திருமணமான கதாப்பாத்திரம் எனவே, திருமணமானவர்கள் மற்றவர்களை விட ரசிக்க முடியும்.
இது மட்டுமே பெரிய வித்யாசம்.
தனுஷ் மேல யாருக்கு என்ன கடுப்பு என்று தெரியவில்லை. சும்மாவே கிளப்பி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
“தொடரி” படத்தைத் திட்டினால், கலாய்த்தால் நியாயம் இருக்கிறது. “வேலையில்லா பட்டதாரி 2” எந்த நியாயமுமில்லை பலர் கிண்டலடிக்கும் அளவுக்கு.
படம் பார்த்து முடித்து நான் நினைத்தது “அடப்பாவிகளா! இவர்களை நம்பி போகாமல் இருந்து இருந்தால், ஒரு நல்ல பொழுதுபோக்குப் படத்தைத் தவறவிட்டு இருப்பேன்” என்பதைத் தான்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை, எண்ணங்கள் எனவே, மற்றவர்கள் கருத்து எப்படியோ! எனக்கு மிகப் பிடித்தது. உங்களையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
சூப்பர் ☺️
தற்போதைய மனநிலையில் எந்த படத்தையும் பார்க்கும் சூழல் இல்லை.. நிலைமை கொஞ்சம் சரியாகி விடும்போது இந்த படத்தை பார்க்கவேண்டும். ஒரு புதிய தொழில் தொடங்கலாம் என கடந்த ஒரு மாதமாக வேறு திசையில் கவனத்தை செலுத்தமுடியவில்லை..
ஒரே தொழிலுக்குகே இப்படின்னா?????? பல பெரிய தொழில் அதிபர்களை நினைத்தால்… பிரமிப்பாக இருக்கிறது… அதுக்குளே வீட்டம்மா!!!! என்ன சரியா சாப்பிடமாட்டறிங்க???? ஏதோ சிந்தனையாகவே இருக்கீங்க????… முடியல கிரி… நம்மளும் எப்ப தான் தொழில் அதிபரா??? மாறுவது….
@யாசின் தொழிலதிபரா! மகிழ்ச்சி 🙂
தொழில் தமிழ்நாட்டுலயா தற்போது உள்ள நாட்டிலா? 🙂 என்னுடைய மனமார்ந்த முன்கூட்டிய வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் யாசின் அண்ணா சீக்கிரம் தொடங்குங்க
நன்றி கார்த்திக்…