சேமிப்புப் பழக்கம் இந்தியர்களிடையே அதிகம் ஆனால், பலர் சேமிக்கப் பணமில்லை என்று கூறி வருகிறார்கள். Image Credit
சேமிப்பது கடினமா?
சிங்கப்பூரில் 8 வருடங்கள் இருந்த போதும் அங்கே இருந்து சென்னை வந்த பிறகும் பலரையும் சந்தித்துப் பேசியுள்ளேன்.
ஆனால், பலரும் இன்னும் கடனில் இருப்பதாகவே கூறி வருகிறார்கள். இதில் என்ன வியப்பு என்றால் வெளிநாட்டிலேயே 10+ வருடங்களுக்கு மேலிருந்தும் கடனில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
இதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே. ஒன்று திட்டமிடாதது, இரண்டாவது தேவைகளை அதிகரித்துக்கொண்டே செல்வது.
இதன் காரணமாகவே சேமிக்க முடியவில்லையென்று காரணம் கூறுகிறார்கள்.
ஒரு சின்னக் கணக்கு
எவ்வளவு சம்பாதித்தும் பணமில்லை என்று கூறுபவர்களுக்கு ஒரு கணக்கு. இது கற்பனை கணக்கல்ல, நடந்த கணக்கு.
இத்தளத்தைப் படிப்பவர்களுக்கு தெரிந்து இருக்கும் கடனை அடைப்பதற்காகவே சிங்கப்பூர் சென்றேன். ஐடி பணியிலிருந்தேன், பணிக்காலம் 2008 – 2015.
இந்த வருடகாலத்தில் அப்பாவின் மொத்தக் கடனையும் கட்டி, எங்கள் ஊர் கோபியில் வீட்டையும் கட்டியுள்ளேன்.
கடனை அடைப்பதற்காக மட்டுமே வெளிநாடு சென்றதால், அங்கேயே தொடர விருப்பமில்லாததாலும், இந்தியாவிலிருக்கவே விருப்பப்பட்டதாலும் 2015 இறுதியில் இந்தியா திரும்பி விட்டேன்.
நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ கடன் எதுவும் இல்லாமல், சம்பாதித்த மொத்தப்பணத்தையும் அதாவது துவக்க காலத்திலிருந்து (2001) சரியாக முதலீடு செய்து இருந்தால் குறைந்தபட்சம் 3+ கோடி வைத்து இருப்பேன்.
ஆனால், கடனைக்கட்டி, வீட்டையும் கட்டிய பிறகு மேலும் வெளிநாட்டிலிருந்து சேமிக்க விருப்பமில்லாததால் ஊருக்கே திரும்பி விட்டேன். எனவே, சம்பாத்தியம் SGD யிலிருந்து INR க்கு மாறி விட்டது.
எனவே, இங்குள்ள வரி மற்றும் மற்ற இதர செலவுகளால் சிங்கப்பூரில் இருந்த போது சேமித்த அளவு 100% வாய்ப்பில்லாதது.
ஆனாலும் குறிப்பிடத்தக்க அளவு சேமித்துள்ளேன், இதற்கு மனைவி, பசங்க ஒத்துழைப்பு முக்கியமாக இருந்தது.
சேமிப்பு அதிகரிக்க காரணம் சரியான நண்பர்களின் ஆலோசனையே. இவர்கள் இல்லையென்றாலும் சேமித்து இருப்பேன் ஆனால், மிகக்குறைவாக இருக்கும்.
எனவே, சேமிப்பது முக்கியமில்லை, எப்படி சேமிக்கிறோம் என்பதே!
2016
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது 2016 முதல் சேமித்தது மட்டுமே என் வாழ்நாள் சேமிப்பு. எனக்கு வேறு எந்த வருமானமும் இல்லை, மாத ஊதியம் மட்டுமே!
அதாவது எல்லாக் கோட்டையும் அழித்து முதலிலிருந்து 2016 ம் ஆண்டு முதல் ஆரம்பித்தது என் சேமிப்பு வாழ்க்கை.
இதை என் துறை தொடர்பாகப் பணி புரிபவர்களுடனே ஒப்பீடு செய்துள்ளேன். அதாவது ஐடி பணி ஊதியத்தையும், மிகக்குறைவான ஊதியம் கிடைக்கும் பணியையும் ஒப்பீடு செய்யவில்லை.
அப்படியென்றால், பெற்றோர் கடனோ, வேறு பணப்பொறுப்புகளோ அல்லாதவர்கள், வெளிநாட்டில் சம்பாதித்தவர்கள், துவக்கத்திலிருந்து PF போன்றவற்றையும் பெற்று வருபவர்கள் எவ்வளவு சேமித்து இருக்க முடியும் என்று கணக்கிடுங்கள்.
ஆனால், இன்னும் பலர் கடனாளியாகவே இருக்கிறார்கள்! அல்லது கையில் பணமே இல்லை என்கிறார்கள்.
சத்தியமாகப் புரியவில்லை! எல்லோரும் அப்படி என்ன தான் செலவு செய்கிறார்கள்?! எப்போதுமே பணப்பற்றாக்குறையிலேயே இருக்கிறார்கள்.
திட்டமிடல்
தற்போது Mutual Fund, Share, PPF, NPS, Superannuation, அஞ்சல் சேமிப்புத் திட்டம், Gold Bond, FD, செல்வமகள் சேமிப்புத்திட்டம் என்று ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.
ஆனால், ஏதாவது காரணம் கூறி, சம்பாதிக்கும் அனைத்துப் பணத்தையும் சேமிக்காமல் செலவு செய்து வருகிறார்கள். கேட்டால், என்ன செலவு ஆகிறது என்றே தெரியவில்லை என்கிறார்கள்.
பலருக்கு எதிர்காலம் குறித்த பயமே இல்லையென்று புரிகிறது. பயமில்லை என்பதை விட அலட்சியமே அதிகமாக உள்ளது.
ஐடி துறையில் 15 வருடங்களுக்கும் மேலாக இருப்பார்கள் ஆனால், அவர்களின் அவசரத் தேவைக்கு 5 லட்சம் தேவையென்றால் இருக்காது.
அனைத்தையும் என்ன தான் செய்கிறார்கள்?!
வீட்டுக் கடன் கட்டுபவர்களும், கொஞ்சம் சேமித்தே ஆக வேண்டும். இல்லையென்றால், நெருக்கடி காலத்தில் சிரமமாக இருக்கும்.
மாதாமாதம் கட்டாயச் சேமிப்பு (Like SIP) இல்லையென்றால், எவ்வளவு பணம் இருந்தாலும் அதற்குச் செலவு தயாராக இருக்கும்.
எனவே, கையில் பணம் இருந்தால் சேமிப்போம் என்று இருந்தால், உங்களால் எக்காலத்திலும் சேமிக்க முடியாது. பணிக்காலம் முடிந்த பிறகு சேமிப்பு இல்லையென்றால், நினைப்பது போல எதிர்காலம் எளிதாக இருக்காது.
கையில் பணம் இருந்தாலே அதற்காவே எதாவது செலவு வரும். இதனாலயே அவசரத்தேவைக்கு மட்டும் வைத்துக்கொண்டு மீதியை சேமிப்பில் போட்டு விடுவேன்.
பணவீக்கம்
எதிர்காலப் பணவீக்கத்தைக் கணக்கிட்டால், குறைந்தபட்சம் மாதம் ₹50,000 செலவுக்குத் தேவை. மருத்துவச் செலவுகள், வீட்டு வாடகை வராமல் இருந்தால்.
எனவே, இதையொட்டி சேமிப்பு திட்டமிடலை செயல்படுத்துங்கள்.
பணமில்லையென்றால் ஒவ்வொரு நாளும் நரகமாகி விடும், பிள்ளைகள் கூட உதவிக்கு வர மாட்டார்கள். அவர்களாலும் முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள்.
எனவே, எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ளாதீர்கள்.
தற்போது 25+ வயதில் உள்ளவர்கள் சரியான முறையில் திட்டமிட்டு சேமித்தால், உங்களால் கற்பனை செய்ய முடியாத அளவு சேமிக்க முடியும்.
அதாவது ஊதியத்தின் மூலம் மட்டுமே! இதைச்செய்யாமல் பிற்காலத்தில் வருத்தப்பட்டுப் பயனில்லை.
எப்போதுமே யார் ஆலோசனை கூறினாலும் இளம் வயதில் ஏற்க தோன்றாது ஆனால், 40+ தாண்டியதும் தான் இவையெல்லாம் புரிய வரும். புரிந்தவர்கள் தப்பித்தீர்கள் மற்றவர்கள் அசிங்கப்பட்டு நிற்பீர்கள்.
மேற்கூறியதை வைத்து அனைத்தையும் சேமித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதல்ல, சேமிக்கவும் செய்யுங்கள் அதே சமயம் அளவான கொண்டாட்டங்களையும் தொடருங்கள்.
அளவான கொண்டாட்டம், சரியான முதலீடு, சேமிப்பு அடுத்தவரை எதிர்பார்க்காமல் உங்கள் வாழ்க்கையைச் சீராக நடத்த உதவும்.
பலரும் நினைப்பது போலச் சேமிப்பது கடினமா? என்றால், இல்லை என்பதே சுருக்கமான பதில்.
கொசுறு
சேமிப்பது எவ்வளவு அவசியமோ அதே போலச் சொத்துச் சேர்க்கிறேன் என்று தற்கால வாழ்க்கையைத் தொலைத்துக்கொள்ளாதீர்கள்.
வெறித்தனமாகச் சேர்த்த சொத்தை இறுதிக்காலத்தில் அனுபவிக்க அனைவருக்கும் கொடுத்து வைப்பதில்லை.
எனவே, நிச்சயமில்லாத எதிர்கால வாழ்க்கைக்காக நிகழ்கால வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள்.
இதற்காக இறுதியில் வருத்தப்பட்டு எதுவும் ஆகப்போவதில்லை.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. இந்த கட்டுரையை படிக்கும் போது காலம் கடந்து நிறைய விஷியங்கள் தற்போது தான் தெளிவாக புரிகிறது.. என்னுடைய பழக்கம் என் தேவைக்கு வேண்டியதை மட்டும் நான் செலவு செய்தாலும், உதவி தேவைப்படுபவர்களுக்கு, அவர்களின் கடினமான சூழலில் பலருக்கு நான் உதவி இருக்கிறேன்.. சிலர் என்னை ஏமாற்றி கூட உதவி பெற்றவர்கள் உண்டு.. அதை நான் ஏமாற்றமாக எண்ணவில்லை..
கடந்த சில வருடமாக சில கசப்பான அனுபவத்தால் (சொந்த தொழில் தோல்வி + கொரோனவினால் அலுவலக பிரச்சனை + குழந்தைகளின் எதிர்காலம்) என சில தனிப்பட்ட காரணங்களினால் என் சேமிப்பு முழுவதும் குடும்பத்திற்காக மட்டும் என்ற கருத்தில் கொண்டு சேமித்து வருகிறேன்.
பல சமயம் சக்தியையும் / உங்களையும் குறித்து நான் எண்ணுவது உண்டு.. சக்தி கடுமையான சூழ்நிலையும் மிகவும் நிதானமாக கையாளுகிறார்.. சிரமம் இருந்தாலும் தன்னை தானே செதுக்கி கொள்கிறார்..
நீங்களும் ஊருக்கு சென்ற பின் பலவற்றை மிகவும் தெளிவாக யோசித்து கவனமான செய்கிறீர்கள்.. வெளிநாட்டு வாழ்க்கை + சொந்த ஊர் இரண்டும் இருவேறான துருவங்கள்.. சரியான முடிவை நீங்கள் எடுத்து, சரியான பாதையில் நீங்கள் பயணிப்பதை கண்டு நான் பல முறை பிரமித்து இருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி கிரி.
நானும் கன்னா பின்னாவென்று செலவு செய்து இப்போது 35 வந்தில் உள்ளேன். இனியாவது SIP மூலமாக அடுத்த 15 வருடங்களுக்கு மாதம் 10ஆயரம் முதல் 20 ஆயரம் வரை அதில் முதலீடு செய்து 15 வருடங்களுக்கு பிறகு லாபம் பார்க்கலாம் என நினைக்கிறேன். பலரும் SIP இல் 15 வருடங்கள் முதலீடு செய்தால் நல்ல லாபம் என்கிறார்கள். நீங்களும் SIP ஐ பற்றி எழுதுங்கள். நன்றி
@யாசின்
“உதவி தேவைப்படுபவர்களுக்கு, அவர்களின் கடினமான சூழலில் பலருக்கு நான் உதவி இருக்கிறேன்.. சிலர் என்னை ஏமாற்றி கூட உதவி பெற்றவர்கள் உண்டு”
இதற்கு தான் நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்.
இதை தானமாக எடுத்துக்கொள்ளாமல் உதவியாக எடுத்துக்கொள்ளலாம்.
உதவி செய்வது தவறில்லை ஆனால், அதை சரியான நபருக்கு சரியாக செய்கிறோமா என்பதே முக்கியம்.
“அதை நான் ஏமாற்றமாக எண்ணவில்லை.”
ஒருவேளை இதைத்தான் அவர்கள் அனுகூலமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறன். எனவே, கவனமாக இருங்கள்.
“என் சேமிப்பு முழுவதும் குடும்பத்திற்காக மட்டும் என்ற கருத்தில் கொண்டு சேமித்து வருகிறேன்.”
சரியான முடிவு. இதை தொடரவும்.
“நீங்களும் ஊருக்கு சென்ற பின் பலவற்றை மிகவும் தெளிவாக யோசித்து கவனமான செய்கிறீர்கள்.”
காரணம், நான் இழந்தது அதிகம் யாசின். அவற்றைக் கூறினால் நம்ப கூட மாட்டார்கள்.
எனவே தான் எச்சரிக்கையாக உள்ளேன். நானாக பெரியளவில் தவறு செய்யவில்லை ஆனால், ஏமாந்தது தான் அதிகம்.
தலைவர் சொல்வது போல ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே குற்றவாளி. எனவே, அனுபவமாக எடுத்துக்கொண்டு, அதன் பிறகு எச்சரிக்கையாக உள்ளேன்.
அதற்கு நண்பர்கள் உதவியாக உள்ளனர்.
@ஹரி
“SIP மூலமாக அடுத்த 15 வருடங்களுக்கு மாதம் 10ஆயரம் முதல் 20 ஆயரம் வரை அதில் முதலீடு செய்து 15 வருடங்களுக்கு பிறகு லாபம் பார்க்கலாம் என நினைக்கிறேன்.”
3 வருடங்களிலேயே உங்களுக்கு இலாபம் கிடைக்கும். 15 வருடங்களில் மிகப்பெரிய இலாபம் கிடைக்கும்.
“பலரும் SIP இல் 15 வருடங்கள் முதலீடு செய்தால் நல்ல லாபம் என்கிறார்கள். ”
உண்மை தான். முதல் 3 வருடங்கள் கை வைக்கக் கூடாது. அப்போது தான் சந்தை பெரியளவில் நட்டத்தை ஏற்படுத்தினாலும் மைனஸில் செல்லாது.
“நீங்களும் SIP ஐ பற்றி எழுதுங்கள்”
ஏற்கனவே எழுதியுள்ளேன் https://www.giriblog.com/how-mutual-fund-is-beneficial/