மாளிகப்புரம் (2022 மலையாளம்) | ஐயப்பனைக் காண முடியுமா?

2
மாளிகப்புரம்

டவுள் சார்ந்த படங்கள் தற்போது வருவதில்லை, அக்குறையை மாளிகப்புரம் படம் 100% தீர்த்து வைத்துள்ளது. Image Credit

மாளிகப்புரம்

ஐயப்பனை பற்றித் தனது பாட்டி கூறிய கதைகளைக் கேட்ட கல்யாணிக்கு ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கிறது.

8 வயதான கல்யாணிக்கு இன்னும் ஓரிரு வருடங்கள் சென்றால் மலைக்குச் செல்ல முடியாது, மேலும் 40 வருடங்கள் ஆகும். எனவே, பேத்தியை அழைத்துச்செல்லும்படி தனது மகனிடம் அறிவுறுத்துகிறார்.

சபரி மலைக்குச் செல்ல ஆயத்தமாகும் நேரத்தில் கல்யாணியின் தந்தை இறந்து விடுவதால், கல்யாணிக்கு ஐயப்பனை காண்பது தடையாகி விடுகிறது.

ஐயப்பனை கல்யாணி கண்டாளா இல்லையா என்பதே மாளிகப்புரம்

சபரிமலை

இதுவரை சபரிமலைக்கு 10 முறை சென்றுள்ளேன். இடையில் பல ஆண்டுகளாகச் செல்லவில்லையென்றாலும், அக்குறையை இப்படம் தீர்த்தது என்றே கூற வேண்டும்.

கடைசியாகச் சென்ற போது பார்த்ததை விடச் சபரிமலை அழகு கூடியுள்ளதாகவும், சுத்தமாகவும் உணர்கிறேன். ஒருவேளை கூட்டமில்லாத நேரத்தில் எடுத்ததால் அப்படித் தோன்றுகிறதா என்று தெரியவில்லை.

தமிழகத்தில் முன்பெல்லாம் ஏராளமான சாமி படங்கள் வரும் ஆனால், இன்றைய இயக்குநர்கள் இவற்றில் ஆர்வம் காட்டாததால் இவ்வகைப் படங்கள் பெருமளவு குறைந்து விட்டன.

மாளிகப்புரம் கதை போலவே ஏராளமான கதைகள் தமிழில் முன்பு வந்துள்ளன. இவையெல்லாம் இப்படத்தைப் பார்க்கும் போது நினைவுக்கு வந்து சென்றது.

ஒரு காலத்தில் அம்மன் (தெலுங்கு மொழிமாற்றம்) படம் தமிழகத்தில் அசாதாரணமாக ஓடியது பலருக்கு நினைவிருக்கலாம்.

கல்யாணி / பியூஸ்

இந்தச் சிறுமி அவ்வளவு அட்டகாசமாக நடித்துள்ளார். எப்படி இவ்வளவு அழகாக நடிக்க வைத்தார்கள் என்று வியப்பாக இருந்தது!

எங்குமே செயற்கைத்தனம் இல்லாமல், மிக இயல்பாக அனைவரையும் கவரும் படி நடித்துள்ளார். எவ்வளவு அருமையான முகப் பாவனைகள்!

மகிழ்ச்சி, அழுகை, அதிர்ச்சி, ஏக்கம், அன்பு என்று அனைத்தையும் கலந்து கட்டி நடித்துள்ளார். கல்யாணி “ஐயப்ப்ப்ப்பா” என்று கூறுவது அழகோ அழகு.

கல்யாணிக்குத் துணையாக அவளது நண்பன் பியூஸ். இருவரும் படத்தைத் தங்களது சுட்டித்தனங்களால் குறிப்பாகப் பியூஸ் விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறார்கள்.

ஐயப்பதாஸ்

சிறுமிகளைக் கடத்தும் கும்பல் (pedophile) கல்யாணியைக் குறி வைக்கிறது. அவர்களிடமிருந்து இருவரையும் காப்பாற்றும் நபராக ஐயப்பதாஸ் நடித்துள்ளார்.

பொருத்தமான தேர்வு, ஐயப்பன் போலவே உள்ளார்.

கல்யாணி, பியூஸிடம் ஐயப்பதாஸ் பழகும் விதமும், அவர்களை அரவணைத்து அழைத்துச் செல்லும் முறையும் எவரையும் கவரும்.

சண்டைக்காட்சிகளிலும், நடனத்திலும் கவனிக்க வைக்கிறார்.

எப்படி இக்குழந்தைகள் ஐயப்பதாஸிடம் உடனே ஒட்டிக்கொள்கிறார்கள் என்பதற்கான காரணம் புரியவில்லை.

திரைக்கதை

துவக்கத்திலிருந்தே கதை சுவாரசியமாகச் செல்கிறது. அதிலும், இவர்கள் இருவரும் ஐயப்பனைப் பார்க்க வீட்டை விட்டு ஓடிப்போனதும், படம் போவதே தெரியவில்லை.

ஐயப்பதாஸை துவக்கத்தில் வேறு மாதிரி காட்டி இறுதியில் வேறு மாதிரி எதார்த்தமாகக் கொண்டு வந்தது ரசிக்கும்படி இருந்தது, இறுதி வசனங்களும் அழகு.

மொத்தப்படமே இரண்டு மணி நேரம் தான். எனவே, தேவையற்ற காட்சிகள், இழுவை என்று எதற்குமே வாய்ப்பு இல்லாமல் கச்சிதமாக முடித்துள்ளார்கள்.

சொல்லப்போனால், அடடா! அதற்குள் முடிந்து விட்டதே என்று இருந்தது. மிக மிக எளிமையான கதை, ₹100 கோடியை வசூலித்துள்ளார்கள்!

இப்படத்துக்கு அதிகப் பட்சம் ₹5 கோடி செலவாகி இருக்கலாம் ஆனால், வசூல் அதைவிடப் பல மடங்கு. A Clean Blockbuster.

இசை ஒளிப்பதிவு

பின்னணி இசை கவனிக்க வைக்கிறது குறிப்பாக, ஐயப்பதாஸ் வந்த பிறகு அவரது காட்சிகளில் பின்னணி இசை மாஸ் காட்டுகிறது.

பாடல்களும் ரசிக்கும்படி உள்ளது, எரிமேலியில் வரும் பாடல் கூடுதலாக ரசிக்க வைக்கிறது. பின்னணி இசைக்குப் போட்டியாக ஒளிப்பதிவு அசத்தலாக உள்ளது.

வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள், அடர்த்தியான மரங்களினூடே பேருந்து பயணிக்கும் ட்ரோன் காட்சிகளில் மனம் கொள்ளை கொள்கிறது.

கேரளா என்றாலே மரங்கள் நிறைந்தது அதிலும் சபரிமலை பயணம் என்றால் கூடுதல் அழகு. வழியெங்கும் பசுமையாக, பம்பா நதியுடன் ரம்மியமாக இருக்கும்.

காட்சிகள் பளிச்சென்று வண்ணமயமாகக் குறிப்பாக எரிமேலியில் வரும் பாடல் காட்சிகள் உள்ளன.

பின்னணி இசை, ஒளிப்பதிவு இரண்டுமே அசத்தல்.

யார் பார்க்கலாம்?

அனைவரையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

விஜய் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பாகி விட்டதாகக் கூறினார்கள். இதுவரை பார்க்கவில்லை என்றால் பார்க்கப் பரிந்துரைக்கிறேன் குறிப்பாகக் குழந்தைகளுடன்.

ஒரே மாதிரியான திரைப்படங்களைப் பார்த்துச் சலித்த மனதுக்கு குட்டீஸ்களாலும், இயற்கையாலும் மாளிகப்புரம் மயிலிறகால் வருடுவது போல உள்ளது.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு திருப்தியாகப் பார்த்த படம்.

Hotstar ல் தமிழில் காணலாம். HD Print ல் பளிச்சென்று அட்டகாசமாக உள்ளது.

Directed by Vishnu Sasi Shankar
Written by Abhilash Pillai
Produced by Anto Joseph, Venu Kunnappilly
Starring Unni Mukundan, Saiju Kurup, Ramesh Pisharody, Manoj K. Jayan, Renji Panicker, T.G. Ravi, Sampath Ram
Narrated by Mammootty
Cinematography Vishnu Narayanan
Edited by Shameer Muhammed
Music by Ranjin Raj
Release date 30 December 2022
Running time 121 minutes
Country India
Language Malayalam

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. கிரி, சின்ன வயசுல சாமி படங்களும் / சரித்திர பார்ப்பதில் ஒரு அலாதி இன்பம்.. குறிப்பாக மந்திர தந்திர காட்சிகள் நம்மை அந்த பருவத்தில் அதிசயிக்க வைக்கும்..அம்மன் படத்தை தொலைக்காட்சியில் பார்த்து மிரண்டு போய் துக்கத்தை தொலைத்த பல இரவுகள் உண்டு.. எனக்கு மட்டுமல்லாமல் என் வயதை ஒத்த பல சிறுவர்களுக்கு இந்த அனுபவம் நிச்சயம் இருக்கும்.

  வில்லனின் மிரட்டலான நடிப்பு, அம்மனாக நடித்த சிறுமியின் அசத்தாலான நடிப்பு என சுவாரசியமான பல விஷியங்கள் இந்த படத்தில் உண்டு.. எனக்கு தெரிந்த வரை இந்த படம் தான் அமைத்து சாமி படங்களுக்கு முன்னோடியாக இருக்கும் என எண்ணுகிறேன்.. இந்த படத்தை தழுவி இதன் பின்பு பல படங்கள் வந்தது.. மீண்டும் அம்மன் பார்ட் 2 அதே மிரட்டலுடன் வந்தால் படம் வெற்றி பெறும் என்பது என் கணிப்பு.. இடையில் சரித்திர படமே வராமல் ஒரு பாகுபலி வந்து வெற்றி பெற்றது போல இதுவும் வெற்றி பெறும்..

  சரித்திர கதைகள், மாயாஜால கதைகள், வரலாற்று பின்னணி கொண்ட கதைகள் இது போன்ற படங்கள் வெற்றி பெற முதன்மை காரணம், சாதாரண எளிய மனிதர்களால் செய்ய முடியாததை படத்தின் நாயகன் செய்வதை போலி என தெரிந்தும் அதை உள்மனம் உண்மை என ஏற்று கொள்ளும் விதம் படம் அமைந்தால் படம் வெற்றி.. சிறிது சறுக்கினாலும் படம் தோல்வி தான்..

  மாளிகப்புரம் இந்த படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் கொஞ்ச நாட்களுக்கு முன்பு பார்த்தேன்.. படம் எனக்கு பிடித்து இருந்தது.. படத்தின் ஒளிப்பதிவு, சிறுமியின் நடிப்பு, படத்தின் நாயகனின் நடிப்பு நன்றாக இருந்தது.. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இது போல படங்கள் அவ்வப்போது வந்தால் சமூகத்திற்கு நல்லது.. வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும் நல்ல தயாரிப்பாளர்கள் இது போன்ற படங்களை எடுக்க வேண்டும்..

 2. @யாசின்

  “வில்லனின் மிரட்டலான நடிப்பு, அம்மனாக நடித்த சிறுமியின் அசத்தாலான நடிப்பு என சுவாரசியமான பல விஷியங்கள் இந்த படத்தில் உண்டு.. எனக்கு தெரிந்த வரை இந்த படம் தான் அமைத்து சாமி படங்களுக்கு முன்னோடியாக இருக்கும் என எண்ணுகிறேன்”

  இதற்கு முன்னரும் பல படங்கள் ரசிக்கும் படி வந்துள்ளன.

  இதில் ரம்யா கிருஷ்ணனின் கிராபிக்ஸ் காட்சிகள் அற்புதமாக அமைந்து இருந்தது. தற்போது பார்த்தாலும் வியக்கும்படி அமைத்துள்ளார்கள்.

  ரம்யா கிருஷ்ணன் அதற்கு பொருத்தமாக இருந்தார்.

  அதோடு சிறுமி என்று வரும் போது கூடுதல் செண்டிமெண்ட் உள்ளது. இவற்றுடன் திரைக்கதை சிறப்பாக அமைந்தது.

  எனவே, அனைத்துமே சரியாக அமைந்ததால் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

  “மீண்டும் அம்மன் பார்ட் 2 அதே மிரட்டலுடன் வந்தால் படம் வெற்றி பெறும் என்பது என் கணிப்பு.”

  வெற்றிபெறலாம் ஆனால், அந்த வெற்றி சாத்தியமில்லை என்றே நினைக்கிறன்.

  “சாதாரண எளிய மனிதர்களால் செய்ய முடியாததை படத்தின் நாயகன் செய்வதை போலி என தெரிந்தும் அதை உள்மனம் உண்மை என ஏற்று கொள்ளும் விதம் படம் அமைந்தால் படம் வெற்றி”

  சரியாக கூறினீர்கள். பல படங்கள் வெற்றி பெறுவது இக்காரணங்களாலே. நம்மால் முடியாததை நம் பிம்பமாக இன்னொருவர் செய்கிறார் என்று நினைத்தால், அப்படம் வெற்றி.

  “படத்தின் ஒளிப்பதிவு, சிறுமியின் நடிப்பு, படத்தின் நாயகனின் நடிப்பு நன்றாக இருந்தது.”

  எனக்கும் பிடித்தது. ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான கதை.

  “வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும் நல்ல தயாரிப்பாளர்கள் இது போன்ற படங்களை எடுக்க வேண்டும்..”

  அனைத்துப் படங்களுக்கும் திரைக்கதையை முக்கியம்.

  திரைக்கதை சரியாக அமைந்தால் எப்படமும் வெற்றி பெறும். மாளிகப்புரம் படமே சாட்சி.

  இப்படம் 100 கோடி வசூலிக்கிறது என்றால், திரைக்கதையே காரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here