PPF என்று அழைக்கப்படும் Public Provident Fund தமிழில் பொது வருங்கால வைப்பு நிதி என்று கூறப்படுகிறது. Image Credit
PPF என்றால் என்ன?
தனியார், அரசுத்துறையில் பணி புரிபவர்களுக்கு PF (Provident Fund) இருப்பது போல, மற்றவர்களும் தங்களின் சேமிப்புக்கான பலனைப் பெற மத்திய அரசு வழங்கும் வாய்ப்பே PPF.
வழக்கமாக வங்கிகள் தரும் வட்டியை விடக் கூடுதல் வட்டியை மத்திய அரசு PPF க்கு வழங்குகிறது. இவ்வாறு வழங்கப்படும் வட்டி சதவீதம் ஒவ்வொரு காலாண்டுக்கும் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மாறும்.
நிதியாண்டின் இறுதியில் (மார்ச் 31) வட்டித்தொகை வழங்கப்படும்.
கணக்கு யார் துவங்கலாம்?
எந்த வயதினரும் துவங்கலாம். 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு (Minor) பெற்றோர் / பாதுகாப்பாளர் மூலமாகத் துவங்கலாம்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) இக்கணக்கு துவங்க முடியாது ஆனால், NRI ஆகும் முன்பே துவங்கியவர்கள் தொடரலாம்.
எங்கே துவங்கலாம்?
தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது தபால் நிலையங்களில் துவங்கலாம்.
ICICI, HDFC போன்ற தனியார் வங்கிகளும் சிறப்பான சேவையை வழங்குகின்றன. வங்கிக்குச் செல்லாமலே கணக்கைத் துவங்க முடியும்.
திட்ட காலம் என்ன?
- 15 ஆண்டுகளுக்கான திட்டம், இடையில் பணத்தை எடுக்க முடியாது. மேலும் 5 வருடங்களுக்கு, ஆவணத்தை நிரப்பிக் கொடுத்து நீட்டிக்கலாம்.
- 20 ஆண்டுகளைக் கடந்தும் கணக்கை நீட்டிக்கலாம் ஆனால், முன்பே ஆவணத்தை நிரப்பி அனுமதி பெற்று இருக்க வேண்டும்.
- நீட்டிக்கும் போது முழுப்பணத்தையும் தொடர வேண்டியதில்லை, 60% பணத்தை எடுத்துக்கொண்டு மீதியை தொடரலாம்.
- ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த பணத்தில் 50% எடுக்க முடியும் ஆனால், இது சரியான முடிவல்ல.
- 5 வருடங்களில் தேவை காரணமாகக் கணக்கை முடித்துக்கொள்ளலாம் ஆனால், இதற்கான வழிமுறைகள் கடினமானது.
- ஆண்டுக்கு 12 முறை பணம் செலுத்த முடியும்.
- துவக்க காலத்தில் அதிகப் பணம் முதலீடு செய்யப்பட்டால், இறுதியில் கூடுதல் வட்டி கிடைக்கும்.
நன்மைகள் என்ன?
- வங்கிகளின் சேமிப்புத்திட்டங்களை (FD / RD / Savings) விட கூடுதல் வட்டி. எனவே, இதில் முதலீடு செய்வது இலாபகரமானது.
- மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பாதுகாப்பானது.
- இடையில் எடுக்கக் கட்டுப்பாடுகள், நெருக்கடிகள் உள்ளதால், 15 வருடங்களைக் கடக்கும் போது முதிர்ச்சி தொகை, பெரிய செலவுகளுக்கு உதவியாக இருக்கும்.
- ₹1.5 லட்சம் வரை வரி (Section 80c) சலுகையுள்ளது.
- முதிர்ச்சி காலத்தில் கிடைக்கும் முழுத் தொகைக்கும் வரியில்லை.
- மூன்று வருடங்களுக்குப் பிறகு PPF தொகை மீது கடன் பெறலாம்.
PPF பரிந்துரைகள்
- ₹1.5 இலட்சம் வரை வருடம் சேமிக்க முடியும் என்றாலும், குறைந்த பட்சமாகச் சேமிப்பவர்களுக்கும் பலனை அளிக்கக்கூடியது.
- எனவே, அனைவரும் இத்திட்டத்தில் இணையலாம்.
- குறைந்த பட்சம் வருடத்துக்கு ₹500 செலுத்த வேண்டும். அதிகப் பட்சம் ₹1,50,000 வரை செலுத்தலாம்.
- இதற்கு மேலும் செலுத்தலாம் ஆனால், ₹1,50,000 வரைக்கான தொகைக்கு மட்டுமே வட்டி கிடைக்கும்.
- ஒவ்வொரு மாதத்தின் 1 – 5 தேதிக்குள் பணம் செலுத்துவது நல்லது.
- இவ்வளவு தொகை குறிப்பிட்ட நாளில் செலுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லாததால், கையில் பணம் இருக்கும் போது முதலீடு செய்யலாம்.
- சிறு தொகையையும் செலுத்தலாம்.
- குழந்தைகளுக்கும் கணக்குத்துவங்கி அவர்கள் கணக்கிலும் ஒவ்வொரு மாதமும், சிறப்பு நாட்களிலும் (பிறந்த நாள்) பணம் செலுத்தி வரலாம். இது அவர்களுக்குச் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணரவைக்கும்.
- 15 வருடங்களுக்குப் பணத்தை எடுக்க முடியாது என்பதால், (எடுக்க விதிமுறைகள் அதிகம்) உறுதியான சேமிப்பாக இருக்கும்.
- குறிப்பாகத் திருமணமானவர்கள் கணக்குத் துவங்கினால், அவர்கள் குழந்தைகளின் மேற்படிப்புச் செலவுக்குச் சரியான தொகையாகக் கிடைக்கும்.
ஒரே இடத்தில் மொத்த சேமிப்பையும் முதலீடு செய்வது தவறான செயல். எனவே, மாற்று வழிகளுக்கான சிறந்த வாய்ப்புகளில் PPF கணக்கு ஒன்று.
இதுவரை PPF கணக்கில் முதலீடு செய்யவில்லையென்றால், முதலீடு செய்ய (சேமிக்க) முயற்சிக்கவும்.
தொடர்புடைய கட்டுரைகள்
தேசிய ஓய்வூதிய திட்டம் | National Pension System
கிரி, பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.. சேமிப்பு என்ற வார்த்தையை கேட்கும் போது சிறு வயதில் நான்காம் வகுப்பு பாட புத்தகத்தில் சேமிப்பின் அவசியம் குறித்து ஒரு பாடம் இருக்கும். பாடத்தில் “வளவன்” என்ற பாத்திரம் இருப்பதாக நினைவு.. வாழ்க்கையில் சேமிப்பு என்பதற்கும் எனக்கும் தொலைதூரமாகி போய் கொண்டிருக்கிறது..
அடிப்படையில் மிக சாதாரணமான குடும்பத்திலிருந்து வந்ததால் பணத்தின் அருமையும், அது இல்லாமல் இருக்கின்ற போது ஏற்படுகின்ற வலியும், பணம் அதிகம் இருக்கும் போது வர வேண்டிய பணிவும் எனக்கு புரியும்.. ஆனால் என்னுடைய பிரச்சனை சேமிப்பு தான்.. மாத ஊதியத்தில் சிறு சிறு தொகை சேமித்து வந்தாலும் ஏதோ ஒரு தேவைக்காக சேமிப்பு தொகை கரைந்து போகிறது.. என்னுடைய 3/4 ஆண்டு சேமிப்பை எடுத்து சொந்த தொழில் செய்த போது கடலில் கரைத்த பெருங்காயமாய் கரைந்து போனது..
சரி நம்ம கை தான் சரியில்லை.. மனைவி ஊருக்கு சென்ற போது, என் செலவுக்கு போக மீதியை மாத, மாதம் மனைவியின் வங்கி கணக்கில் சேமிக்க ஆரம்பித்தேன்.. இரண்டு ஆண்டு மொத்த சேமிப்பும் தவிர்க்க முடியாத ஒரு செலவுக்கு எடுத்து கொடுப்பது போல் சூழ்நிலை அமைந்து விட்டது.. (கலகலப்பு சந்தானம் காமெடி தான் நினைவுக்கு வந்தது ” பேசாம பருத்தி மூட்டை குடோன்லே இருந்து இருக்கலாம்னுன்னு” என்னோட வங்கி கணக்கிலே சேமித்து இருக்கலாம்)
கடந்த முறை ஊருக்கு சென்ற போது 50 வயதை நெருக்கிய ஒரு சீனியர் நண்பர் வெளிநாடுகளில் இருக்கும் நபர்கள் சம்பாரிக்கும் தருணத்தில் எப்படி சேமிக்க வேண்டும் என, மிக சரியான ஒரு ஆலோசனையை எனக்கு வழங்கினார்.. நெற்றிப்பொட்டில் அடித்தது போல் இருந்தது.. 10/12 ஆண்டுகளில் நான் எங்கும் கேட்காத ஒரு ஆலோசனை அது.. அதை கேட்ட பிறகு எனக்கு ஒரு தெளிவு பிறந்தது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
“மாத ஊதியத்தில் சிறு சிறு தொகை சேமித்து வந்தாலும் ஏதோ ஒரு தேவைக்காக சேமிப்பு தொகை கரைந்து போகிறது..”
இது அனைவருக்கும் பொதுவானது தான்.. இதையும் தாண்டி சேமிப்பதே திறமை.
“என்னுடைய 3/4 ஆண்டு சேமிப்பை எடுத்து சொந்த தொழில் செய்த போது கடலில் கரைத்த பெருங்காயமாய் கரைந்து போனது..”
நான் சம்பாதித்தது எல்லாம் கடனுக்கே சரியா போனது. 40 வயதில் தான் எல்லா கோட்டையும் அழித்து திரும்ப துவங்கினேன் 🙂 .
“பேசாம பருத்தி மூட்டை குடோன்லே இருந்து இருக்கலாம்னுன்னு”
🙂
“10/12 ஆண்டுகளில் நான் எங்கும் கேட்காத ஒரு ஆலோசனை அது.. அதை கேட்ட பிறகு எனக்கு ஒரு தெளிவு பிறந்தது.”
எனக்கு முன்பு இருந்தே சேமிப்பின் மீது தெளிவு உண்டு ஆனால், கடன் காரணமாக எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கே சரியாகப்போனது.
அனைத்தையும் முடித்த பிறகே 40 வயதிலிருந்து சேமித்து வருகிறேன்.
இதனுடன் நண்பர்களின் ஆலோசனையும் நிச்சயம் உண்டு. அவர்களின் பரிந்துரைகளில் எனக்கு ஏற்புடையதாக உள்ளவற்றை செயல்படுத்தியுள்ளேன், இலாபத்தையும் பெற்றுளேன்.
எனவே தான், என் அனுபவங்களை மற்றவர்களுக்கும் கூறுகிறேன்.
தற்கால தலைமுறையிடம் சேமிப்பே இல்லை. இது குறித்து பின்னர் விரிவாக எழுதுகிறேன்.
கிரி, கடந்த சில வருடங்களாக நான் PPF ல் முதலீடு செய்து வருகிறேன். வருடதிற்க்கு ஒரு முறை செய்வதாக இருந்தால், ஏப்ரல் மாதத்தில் 1-5 தேதிக்குள் செய்தால், Interest முழுமையாக கிடைக்கும். கடந்த சில வருடங்களாக மத்திய அரசு இதன் interest யை குறைத்துள்ளது.
@மணிகண்டன்
“கடந்த சில வருடங்களாக மத்திய அரசு இதன் interest யை குறைத்துள்ளது.”
இது தவிர்க்க முடியாது.
வங்கிகளுக்கான பணத்தேவை அதிகரிக்கும் போது தான் வட்டி அதிகரிக்கும். வளர்ந்த, வளரும் நாடுகளுக்கு இப்பிரச்சனை தவிர்க்க முடியாது.