இசையமைப்பாளர் ஆதித்யன்

2
இசையமைப்பாளர் ஆதித்யன்

முதல் படத்தில் அதிரடியாகக் கவனம் பெற்ற இசையமைப்பாளர்கள் வரிசையில் இசையமைப்பாளர் ஆதித்யன் ஒருவர். Image Credit

இசையமைப்பாளர் ஆதித்யன்

சமூகத்தளங்கள் இல்லாத காலத்திலேயே அமரன் படத்தின் பாடல்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அப்படி இப்படி வெற்றியல்ல அசுரத்தனமான வெற்றி.

அறிமுகப்படத்தில் தமிழ்நாடு முழுக்க அறிந்த நபராகி விட்டார் ஆதித்யன்.

கார்த்திக் பாடிய வெத்தலைபோட்ட சோக்குல மற்றும் சந்திரரே சூரியரே பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஊரில் உள்ள அனைத்து இசை கூடங்களிலும் இவையே பாடிக்கொண்டு இருந்தன.

பாடல்கள் ஏற்படுத்திய மிகப்பெரிய எதிர்பார்ப்பைப் படம் ஏற்படுத்தத் தவறியதால், படம் தோல்வி அடைந்து விட்டது.

ஒருவேளை இப்படம் வெற்றி பெற்று இருந்தால், ஆதித்யன் இசை வாழ்க்கை வேறு மாதிரி மாறியிருக்கலாம்.

இதன் பிறகு இசையமைத்த படங்கள் சொல்லிக்கொள்ளும்படியில்லை.

சீவலப்பேரி பாண்டி

அமரன் அளவுக்கு இல்லை ஆனால், படம் வரும் முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை இசையால் ஏற்படுத்திய படம். அதோடு இக்கதை உண்மை கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதும் எதிர்பார்ப்புக்கு முக்கியக் காரணம்.

இக்கதை கதாப்பாத்திரத்தில், கதையில் பல விமர்சனங்கள் இருந்தன.

கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி வெள்ளாள மாணவர் விடுதியில் தங்கி படித்துக்கொண்டு இருந்த சமயம். கோபி நாகையா திரையரங்கில் வெளியானது.

உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டே பார்த்த படம் சீவலப்பேரி பாண்டி. ரொம்ப நேரம் கழித்து Extra Chair கிடைத்த பிறகு அமர்ந்தேன்.

தலைவர் படத்தைக் கூட இது போல இடம் கிடைக்காமல் பார்த்தது இல்லை! திருவிழா போலக் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து படத்தைப் பார்த்தார்கள்.

ஒவ்வொரு பாடலும் மாஸ் வெற்றி. நீங்கள் நம்புறீங்களோ இல்லையோ இன்றுவரை இப்பாடல்களை மிக விருப்பமாகக் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

ஆதித்யன் இசை வாழ்க்கையில் பெரிய வெற்றி படம் சீவலப்பேரி பாண்டி மட்டுமே!

இப்படத்தின் மாபெரும் வெற்றியால் பாதிக்கப்பட்டவர் நெப்போலியன் தான் 🙂 . இவரின் அடுத்தப் படங்களில் அருவாளோடு அலைய வைத்து விட்டார்கள் 😀 .

90’s பாடல்கள்

எனக்கு 90’s பாடல்கள் மீது அலாதி விருப்பம். இசையமைப்பாளர்களின் பொற்காலம்.

சோடை போன ஒரு இசையமைப்பாளரைக் கூடக் கூற முடியாது. ஏதாவது ஒரு படமாவது அனைவரையும் கவனிக்க வைத்து இருப்பார்கள்.

சீவலப்பேரி பாண்டி வந்த நேரத்தில் காதலன் படமும் வந்தது. காதலன் படப்பாடல்கள் எவ்வளவு பெரிய வெற்றி என்று சொல்லத்தேவையில்லை.

அப்போது TDK D90 கேசட்டில் (ஒரு பக்கம் 9 பாடல்கள்) ஒரு பக்கம் சீவலப்பேரி பாண்டி இன்னொரு பக்கம் காதலன் பாடல்கள் (இவற்றோடு மேலும் சில சூப்பர் ஹிட் பாடல்கள்) பதிவு செய்து வார்டன் கந்தசாமி அவர்களிடம் கெஞ்சி போடக் கூறுவோம்.

ரகுமான் பாடல்கள் குறைந்த எண்ணிக்கையிலும் (நேரம் / நீளம் காரணமாக), மற்ற இசையமைப்பாளரின் பாடல்களை அதிக எண்ணிக்கையிலும் பதிவு செய்யலாம்.

மறக்க முடியாத நினைவுகள். விடுமுறை நாட்களில் இப்பாடல்கள் Play செய்தால், மாணவர் விடுதியே கொண்டாட்டமாக இருக்கும்.

அப்போது மாணவர்கள் அவரவர் பதிவு செய்த கேசட்டை கொடுக்கலாம். வார்டன் விருப்பப்பட்டால் Play செய்வார். அப்போது என் இந்தக் கேசட் சூப்பர் ஹிட்.

சீவலப்பேரி பாண்டியில் ஒவ்வொரு பாடலும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. அனைத்துமே பிடித்த பாடல்கள்.

மற்ற படங்கள்

இதன் பிறகு வந்த பாடல்கள் அமரன், சீவலப்பேரி பாண்டி போல மொத்த பாடல்களும் சூப்பர் ஹிட் வரிசையில் இணையவில்லை என்றாலும், ஒரு சில பாடல்கள் கவனம் பெற்றது.

ஒட்டுமொத்த பாடல்களும் கவனம் பெற்றது என்றால், ‘ரோஜா மலரே’ படத்தைக் கூறலாம், அதில் ‘அழகோவியம் புதிதானது’ பாடல் பலரால் விரும்பப்பட்டது.

அசுரன் படத்தில் வந்த ‘வத்திக்குச்சி பத்திக்கிச்சு’ பாடல் இளசுகளிடையே பிரபலம்.

மாமன் மகள் படத்தில் ‘சுப்கே சுப்கே’ பாடல் போன்ற குறிப்பிடத் தக்க பாடல்கள் பலரும் அறிந்ததாக உள்ளன.

அமரன் படத்தை இயக்கிய ராஜசேகர் அவரின் பெரும்பாலான படங்களுக்கு ஆதித்யனையே இசையமைப்பாளராக நியமித்தார்.

2K கிட்ஸ்க்கு ஆதித்யன் பாடல்கள் பரிட்சயம் இருக்காது ஆனால், தற்போது அமரன், சீவலப்பேரி பாண்டி பாடல்களைக் கேட்டாலும் அவர்களுக்குப் பிடித்த பாடல்களாக மாறி விடும் சக்தி கொண்டது.

ஆதித்யன் பெரியளவில் வெற்றி பாடல்களைக் கொடுக்கவில்லையென்றாலும், அமரன், சீவலப்பேரி பாண்டி படங்களின் மூலம் தன்னை எவருமே மறக்க முடியாதபடி செய்து விட்டார்.

2017 ம் ஆண்டு ஆதித்யன் மறைந்தாலும் அவருடைய இசை என்றும் அவரது நினைவுகளைச் சுமந்துகொண்டு இருக்கும்.

கொசுறு

இசையமைப்பாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் கடமைப்பட்டு உள்ளேன்.

இசையும், பாடல்களும் எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. இசை இல்லையென்றால், என்ன ஆவேன் என்றே தெரியவில்லை.

அதிலும் குறிப்பாக 90s பாடல்கள் என் இளமை காலங்களைக் கால இயந்திரத்தில் சென்று பார்க்க இலவசமாக உதவிக்கொண்டே உள்ளது 🙂 .

ஒவ்வொரு பாடலுக்கும், படத்துக்கும் எனக்கு ஒரு கதையுண்டு.

பொன்னியின் செல்வன் நாவல் அத்தியாயம் போல இன்னும் ஒரு பாடல், இன்னும் ஒரு பாடல் என்று கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றும்.

இசை ஒரு அற்புதமான உணர்வு. அந்த உணர்வு எனக்கு இருப்பதில், இன்னும் சிறு வயதிலிருந்து அதே போலத் தொடர்வதில் மிக மகிழ்ச்சி.

தொடர்புடைய கட்டுரைகள்

தேனிசைத் தென்றல் தேவா

இசையமைப்பாளர் வித்யாசாகர்

சலீம் கவுஸ் | A Underrated Actor

இளையராஜாவை கலாய்த்த பாக்யராஜ்

கவிஞர் புலமைப்பித்தன் | நீ ஒரு காதல் சங்கீதம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி.. பதிவை படிக்கும் போது மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது.. காரணம் நானும் கிட்டத்திட்ட இந்த மனநிலையில் தான் பல வருடமாக இருந்து வருகிறேன்.. சில பாடல்கள் நிச்சயம் என்னை வேறு உலகில் பறக்க வைக்கும்.. பிடித்த பாடலை கேட்கும் போது என்னுள் உள்ள சோகம், கவலை, வலிகள் எல்லாம் மறக்கடிக்க படுகிறது.. இது முற்றிலும் ஒரு போதை. அதனால் அதனுள் முழவதும் என்னை நுழைத்து கொள்ளாமல் எப்போதும் பார்த்து கொள்வேன்..

    கடந்த இரண்டு மாதத்தில் ஒரு பாடல் கூட கைபேசியில் கேட்க சந்தர்ப்பம் அமையவில்லை.. தற்போது முற்றிலும் என் மனநிலையை மாற்ற முயல்கிறேன்.. நேரம் கிடைக்கும் போது நிறைய படிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.. அழகோவியம் புதிதானது முதன் முதலில் கேட்ட சமயத்தை தற்போதும் நினைவு கூற முடியும்..பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின்

    “இது முற்றிலும் ஒரு போதை. அதனால் அதனுள் முழவதும் என்னை நுழைத்து கொள்ளாமல் எப்போதும் பார்த்து கொள்வேன்.”

    இது போதையா என்று தெரியவில்லை ஆனால், வீட்டிலிருந்தால் இசை இருக்கும் அல்லது திரைப்படம் இருக்கும்.

    “கடந்த இரண்டு மாதத்தில் ஒரு பாடல் கூட கைபேசியில் கேட்க சந்தர்ப்பம் அமையவில்லை.”

    நீங்க தான் ஊருக்குப் போய்ட்டீங்களே 🙂 இதற்கெல்லாம் நேரமேது. ஊருக்குச் சென்றாலே 40 நாட்கள் நான்கு நாட்களைப்போலக் கடந்து விடும்.

    “அழகோவியம் புதிதானது முதன் முதலில் கேட்ட சமயத்தை தற்போதும் நினைவு கூற முடியும்.”

    🙂 ரசித்த பாடல். இப்பவும் பிடிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here