உண்மை பேசுவது கடினமா?

5
உண்மை பேசுவது கடினமா?

ண்மை பேசுவது கடினமா? என்ற கேள்வி பலருக்கு தோன்றி இருக்கும். பலர் அதை முயன்று இருக்கவே மாட்டார்கள். Image Credit

பொய் கூறுவது

சின்ன விஷயமோ பெரிய விஷயமோ எதற்காக இருந்தாலும் நாம் அனைவருமே பொய் கூறுவது இயல்பாகி விட்டது.

அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம், அதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட நியாயம் கூட இருக்கும்.

ஒரு நாளில் பல்வேறு நேரங்களில் பல்வேறு விஷயங்களுக்காக விருப்பப்பட்டோ அல்லது விருப்பப்படாமலோ பொய் கூற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பொய் என்பது வாழ்வில் இயல்பான ஒரு நடவடிக்கையாகி விட்டது.

கண்ணதாசன்

பொய் கூறுவதை எனக்குத் தவிர்க்க வேண்டும் என்று முன்பு தோன்றியதே கிடையாது. ஏனென்றால், அது தவறு என்ற எண்ணமே வந்தது இல்லை.

ஆனால், அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகம் படித்த பிறகு, அதில் கண்ணதாசன் அவர்கள் இரகசியமில்லா வாழ்க்கை பற்றி விளக்கி இருந்தது மிகக்கவர்ந்தது.

அதாவது, இரகசியமே இல்லையென்றால், அது எப்படிப்பட்ட அற்புதமான வாழ்க்கை என்பதைப் பற்றி விளக்கியிருந்தார்.

யாருக்காகவும் பயப்படவேண்டியதில்லை, இவருக்குத் தெரிந்து விடுமோ என்ற யோசனையில்லை, தெரிந்து விட்டால் பிரச்சனையாகுமோ என்ற கவலையில்லை.

கண்ணதாசன் கூறியது ரொம்பப் பிடித்தது. படித்ததோடு கடந்து விடாமல் பின்பற்றிப்பார்ப்போம் என்று முயற்சித்தேன்.

இதையொட்டியே என் நடவடிக்கைகளையும், பேச்சையும் அமைத்துக்கொண்டேன்.

துவக்கத்தில் சிரமமாக இருந்தாலும், முன்பே என்னையறியாமலே சிலவற்றைப் பின்பற்றி வந்ததால், இதன் படி மாறுவது கடினமாக இல்லை.

எதையும் யாருக்காகவும் மறைக்க வேண்டியதில்லை, இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்ற உணர்வு அற்புதமாக இருந்தது.

அப்படியென்றால் தனிப்பட்ட விவரங்களையும் வெளிப்படையாக வைத்துக்கொள்வீர்களா? என்று கேட்காதீர்கள் 🙂 .

அது இரகசியமல்ல, பாதுகாப்பு. இரண்டும் வெவ்வேறு.

குடும்பத்திலும், நண்பர்களிடத்தும் பெரும்பாலும் மறைத்தது இல்லை. எனவே, எங்கே உள்ளேன், என்ன செய்வேன் என்று அனைவரும் எளிதாக ஊகிக்க முடியும்.

எப்படி முடிவு எடுப்பேன் என்று என்னை அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.

இரகசியமாக வைத்துக்கொள்வது ஒன்று மட்டுமே! என்னிடம் ஒரு விஷயத்தைக் கூறி, இதை மற்றவரிடம் கூறாதீர்கள் என்றால் கூற மாட்டேன்.

உண்மை பேசுவது கடினமா?

இல்லை என்பதே என் பதில்.

இரகசியமே இல்லாமல் இருப்பது பழகியவுடன், உண்மையை மட்டுமே பேச முயற்சித்தால் என்ன என்று தோன்றியது ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை.

காரணம், தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டு வந்தது.

எனவே, கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு பெரும்பாலும் பொய் சொல்லாமல் தவிர்க்கிறேன் ஆனால், முழுவதும் முடியவில்லை, அது முடியும் என்று தோன்றவும் இல்லை. 

அந்த அளவுக்குப் போகும் எண்ணமும் எனக்கில்லை 🙂 .

இவ்வாறு மாறிய பிறகு நெருக்கடியாகும் என நினைத்த பல சம்பவங்கள் ஒன்றும் இல்லாமல் ஆனது வியப்பையளித்தது.

இதற்குப் பொருத்தமான நடந்த உண்மை சம்பவத்தைக் கூறலாம் ஆனால், தனிப்பட்ட விவரங்களையும் பகிர வேண்டியதாக உள்ளதால் கூற முடியவில்லை.

தற்போது ஏதாவது பொய் கூறினால், இதைக்கூறாமல் இருக்கலாமே! என்ன நடந்து விடப்போகிறது?! என்ற எண்ணமே தோன்றுகிறது.

நேர்மையாக இருக்க முடிந்தாலும், உண்மை மட்டுமே பேசுவது எளிதாக இல்லை ஆனால், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் முயற்சிப்பதை வழக்கமாக்கியுள்ளேன்.

மனசாட்சிக்கு மிகப்பயப்படுவேன் அதனாலும் மேற்கூறியவற்றைப் பின்பற்றுவது எனக்கு எளிதாக இருந்து இருக்கலாம்.

உண்மை பேசினால் ஒரு பெரிய வசதி எதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. கூகுளால் ஏற்படும் மறதிக்கு எனக்கு இது வசதியாக உள்ளது 🙂 .

புத்தகம் படித்ததால் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வர முடிந்ததோடு இம்மாற்றங்கள் பலனளித்து உதவுகிறது என்பதே முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியது.

அனுபவங்களால் நம் தவறுகளைத் திருத்திக்கொள்ள முடிவது போல, புத்தகங்களைப் படிப்பதால் சில தவறுகளை உணர முடியும்.

உணருவது பெரிய சாதனையல்ல, உணர்ந்ததைப் பின்பற்றி நாம் நம்மை மாற்றிக்கொள்கிறோமா என்பதே முக்கியம்.

எனவே, சிலவற்றை முடியாது என்று முயற்சிக்காமலே இருக்காதீர்கள். முயற்சித்துப்பாருங்கள், அற்புதங்களைக் காணலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

புத்தகம் படிப்பதால் பயன் உண்டா?

நேரம் சரியில்லையென்றால் என்ன செய்வது?

அடுத்தவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்?

செய்த தவறுக்காக வருந்துகிறீர்களா?!

அர்த்தமுள்ள இந்து மதம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. உண்மையை பேசுவது, உண்மையாக நடந்து கொள்வது மிகவும் சிறந்த பழக்கம். முடிந்த வரையில் உண்மையாக நடந்து கொள்கிறேன்.

    நன்பர்கள் இருக்கிறார்கள். கடன்
    எடுத்தால் திருப்பி தரும் வழக்கம் இல்லை. கையில் ஓரளவு பணம் இருந்தாலும் கடன் கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டிய நிலமை. இந்த நிலையில் என்ன செய்வது?🥲

  2. கிரி, நீங்கள் கூறுவது போல இந்த விஷியத்தில் அவரவர்க்கு அவரவரது நியாயம்.. என்னை பொறுத்தவரை பெரும்பாலும் சொந்த வாழ்வில் பொய் சொல்வதில்லை.. சூழ்நிலைக்கு சகுந்தவாறு சிறு, சிறு பொய்கள் மனைவியிடம் மட்டும் சொல்வதுண்டு..

    திருமணம் நிச்சயித்த புதிதில் மனைவியிடம் பேசும் போது, நீங்கள் யாரையாவது விரும்பி இருக்கிறீங்களா? என்று கேட்டார். பொய் சொல்லி பின்பு பிரச்சனையாகி விட போகிறது என்பதால், நான் உண்மையை சொல்ல வேண்டும் என நினைத்து “ஆம்” என்று கூறி, முன்னாள் காதலியை பற்றி பட்டும், படாமல் கூறினேன்.. (இன்னொரு காரணம் : நான் மொக்கை இல்ல!!! என்னோட கெத்தை காட்ட, என்னையும் ஒரு பெண் காதலித்து இருக்கிறார் என்று மனைவிக்கு தெரிய வேண்டும் என்பதால் கூறினேன்).. ஆனால் நான் எதற்காக இந்த உண்மையை மனைவியிடம் கூறினேன் என்று வருத்தப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.. பேசாம பொய் சொல்லி இருக்கலாமோ??? என்றும் நினைத்ததும் உண்டு..

    எல்லா சமயத்திலும் உண்மையாக இருக்கும் போது life balance பண்ண முடியாதது போல அமைகிறது..என் பக்கம் தப்பு சரி என வாதிடவில்லை.. ஆனால் 100% உண்மையாக இருக்கும் போது தனிப்பட்ட வாழ்விலும், சமுதாயத்திலும் சில சறுக்கல்களை கையாள வேண்டி வருகிறது .. குறிப்பாக நண்பர்களுக்கு கொடுக்கும் கடன், உறவினருக்கு செய்யும் உதவி, உதவி பெற்ற பின் நம்மை உதாசீனப்படுத்துவது, அவர்கள் தேவைக்கு நம்மை பயன்படுத்துவது என பல நிகழ்வுகள்.. நான் நினைப்பதை சரியாக சொல்ல தெரியவில்லை..

    அலுவலகத்திலும் பொய்கள் சொல்வதுண்டு.. குறிப்பாக Accounts dept இல் இருப்பதால் நிறுவனத்தின் சூழலை கருத்தில் கொண்டு சொல்லும் பொய்கள் அதிகம்.. குறிப்பாக supplier க்கு பணம் கொடுக்க வேண்டி வரும் போது பல சமயம் இது போல தர்மசங்கடம் ஏற்படுவது உண்டு.. நம்ம பொய் தான் சொல்கிறோம் என்று தெரிந்து பொய் சொல்லும் போது, எதிராளியை face பண்ணவே கூச்சமாக இருக்கும். இருந்தாலும் ஒரு “வெட்டியான் அவனோட மகனின் இறப்புக்கு குழி வெட்டுவது” போல் நினைத்து கொண்டு என்னை நியாயபடுத்தி கொள்கிறேன்..

    (இரண்டு வாரத்திற்கு முன் சம்பவம் : குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நாங்க காசோலை கொடுக்க வேண்டும், 4/5 முறை போனில் எப்படியோ சமாளித்து, (தற்போது நிறுவனத்தில் நிதி சிக்கல் இருக்கிறது) இறுதியில் அடுத்த வாரம் தருவதாக உறுதி அளித்தேன்.. ஆனால் அவர் (பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்) இன்று நிச்சயம் காசோலை வேண்டும்.. நான் உங்கள் அலுவலகத்துக்கு வருகிறேன் என்ற போது, ஒரு பதட்டத்தில் நான் இன்று உடல் நிலை சரியில்லாமல் அலுவலகம் செல்லவில்லை என்றேன்.. என் உயரதிகாரியும் விடுமுறையில் இருப்பது அவருக்கு தெரியும்.

    (எனக்கு உடல் நிலை சரியில்லை என்பது உண்மை. ஆனால் அலுவலகம் செல்லவில்லை என்பது பொய்) அவரும் சரி அடுத்த வாரம் வந்து நான் காசோலையை வாங்கி கொள்கிறேன் என்றார்.. அடுத்த 2 மணி நேரத்திற்கு பின் எதிர்பாராமல், நான் அவரை வேறு இடத்தில் (அலுவலக சீருடையில்) தற்செயலாக சந்திக்கிறேன்.. ஆனால் மனிதர் உண்மையில் “ஜென்டில் மேன்” தான், என் உடல் நிலையை பற்றி விசாரித்தாரே தவிர, காசோலையை பற்றியும், நான் கூறிய பொய்யை பற்றி ஏதும் கேட்க வில்லை ..

    எனக்கு தான் அவரை எதிர்கொள்ள சங்கடமாக இருந்தது.. அவர் எதார்த்தமாக இருந்தார்..எந்த ரத்த சம்பந்தமும் இல்லாத, வேறு நாட்டை சேர்ந்த ஒருவர் “என்னிடம் கனிவாக பேசியது உண்மையில் மிக பெரிய அனுபவமாக பார்க்கிறேன்.. வயதில் என்னை விட பெரியவர்.. இந்த நிகழ்வை ஒரு பெரிய பாடமாக எடுத்து கொண்டேன்.. மீண்டும் இந்த தவறை எப்போதும் செய்ய கூடாது என்று அந்த கணமே முடிவெடுத்தேன்.. கண்டிப்பாக மீண்டும் இந்த தவறை எப்போதும் செய்ய மாட்டேன்..
    ===================================================
    எனவே, கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு பெரும்பாலும் பொய் சொல்லாமல் தவிர்க்கிறேன் ஆனால், முழுவதும் முடியவில்லை, அது முடியும் என்று தோன்றவும் இல்லை.

    எனவே, சிலவற்றை முடியாது என்று முயற்சிக்காமலே இருக்காதீர்கள். முயற்சித்துப்பாருங்கள், அற்புதங்களைக் காணலாம்.

    இரண்டு கருத்தையும் ஏற்று கொள்கிறேன் கிரி..

  3. புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மைவாய்மையால் காணப் படும் is one of my favorite kurals. What matters is, are we able to tell the truth in crucial matters. That is the acid test and that will tell how much of our brain is clean and how much filth is inside.

  4. @யாசின்

    “சூழ்நிலைக்கு சகுந்தவாறு சிறு, சிறு பொய்கள் மனைவியிடம் மட்டும் சொல்வதுண்டு..”

    அனைவருமே இதை செய்வார்கள். தவிர்க்க முடியாது.

    சில விஷயங்களுக்கு உண்மை கூறினால், அதை புரிந்து கொள்ளாமல், மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடுவார்கள்.

    எனவே அதை ஒரு பொய்யோடு நல்லது.

    “100% உண்மையாக இருக்கும் போது தனிப்பட்ட வாழ்விலும், சமுதாயத்திலும் சில சறுக்கல்களை கையாள வேண்டி வருகிறது ”

    இது யாராலும் முடியாது என்றே நினைக்கிறேன் யாசின். என்னால் முடியாது.

    “குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நாங்க காசோலை கொடுக்க வேண்டும், 4/5 முறை போனில் எப்படியோ சமாளித்து, (தற்போது நிறுவனத்தில் நிதி சிக்கல் இருக்கிறது) இறுதியில் அடுத்த வாரம் தருவதாக உறுதி அளித்தேன்..”

    மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் பொய் சொல்லக்கூடாது என்றால், அந்த வேலையையே செய்ய முடியாது என்று தான் அர்த்தம்.

    எனவே, தவிர்க்க முடியாத காரணங்களில் சொல்லத்தான் வேண்டும்.

    நம் பொய்யால பிறர் [பாதிக்கப்படுகிறார்கள் என்றால் யோசிக்கலாமே தவிர மற்றபடி இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து குற்ற உணர்வுக்கு ஆளாக வேண்டியதில்லை.

    ” மனிதர் உண்மையில் “ஜென்டில் மேன்” தான், என் உடல் நிலையை பற்றி விசாரித்தாரே தவிர, காசோலையை பற்றியும், நான் கூறிய பொய்யை பற்றி ஏதும் கேட்க வில்லை ..”

    சிலர் இப்படியும் இருக்கவே செய்கிறார்கள்.

    ரங்கா சொன்னது போல நன்மைக்காக பொய் சொல்வதில் தவறில்லை என்று திருவள்ளுவரே சொல்லி இருக்கார் எனவே கவலைப்பட வேண்டாம் 🙂 .

  5. @Muhammad Fahim

    ” கடன் எடுத்தால் திருப்பி தரும் வழக்கம் இல்லை. கையில் ஓரளவு பணம் இருந்தாலும் கடன் கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டிய நிலமை. ”

    நெருக்கடியான நிலை தான். எனக்கும் இது போல ஏற்பட்டுள்ளது. கடன் தராமல் இருந்தது இல்லை ஆனால், தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டு இருக்கும் போது இது போல தொடர்ச்சியாக தர முடியாது என்று கூறி விடுவேன்.

    சில நேரங்களில் ரொம்ப நல்லவராக இருப்பது சிக்கலில் விட்டு விடும்.

    இதனால் குறிப்பிட்ட பணம் அப்படியே வெளியில் தங்கி விடுகிறது.

    உங்க கருத்தை யாசின் கருத்து என்று நினைத்து அவருக்கு பதிலளித்து விட்டேன். மன்னிக்க 🙏

    தற்போது தான் கவனித்து திருத்தினேன் 🙂

    Mohammed ன்னு பார்த்தாலே யாசின் என்றே நினைத்துக் கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here