சுழல் | தமிழ் வெப் சீரீஸ் | யார் குற்றவாளி?

2
சுழல்

லரது பாராட்டைப் பெற்ற தமிழ் சீரீஸ்களில் விலங்குக்குப் பிறகு சுழல் இடம்பிடித்துள்ளது. Image Credit

சுழல்

யூனியன் தலைவரான பார்த்திபனுக்கும் நிறுவன முதலாளி ஹரிஷ் உத்தமனுக்கும் இடையே மோதல், இதனோடு பார்த்திபன் பெண்ணும் காணாமல் போகிறார்.

இறுதியில் என்ன ஆனது என்பதே சுழல்.

ஒரு பரபரப்பான த்ரில்லர் சீரீஸுக்கே உண்டான அனைத்து அம்சங்களையும் கொண்டு இறுதிவரை சலிப்பாக்காமல் நம்மைப் பார்க்க வைத்துள்ளது.

மயான கொள்ளை

கோவை அருகே சாம்பலுர் என்ற கிராமத்தில் நடப்பதாகக் கதை வருகிறது.

அவர்கள் ஊரின் மயானக்கொள்ளை என்ற திருவிழா 9 நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவை இக்கதையுடனே இணைத்துத் துவக்கத்திலிருந்து இறுதி வரை கொண்டு வந்துள்ளார்கள்.

மயானக்கொள்ளை என்ற திருவிழா உண்மையிலேயே நடந்ததா?! என்று எண்ண வைக்கும் அளவுக்குப் படமாக்கியுள்ளார்கள்.

வழக்கமாகத் திரைப்படங்களில் திருவிழா என்றால், கூட்டம், பலூன், இராட்டினம், ஐஸ் வண்டி, தேர் இவற்றைக்காட்டி திருவிழா நடப்பதாகக் காட்டி இருப்பார்கள்.

ஒரு உண்மையான திருவிழாவையே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதற்காக இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் பாராட்டித்தள்ள வேண்டும்.

எப்படி எடுத்தார்கள்?! மிரட்டலாக உள்ளது.

தெருக்கூத்து கலைஞர்களுக்கும் வாய்ப்புக்கொடுத்ததோடு அவர்களைத் தரமாகப் பயன்படுத்தி, நம் பண்பாட்டை உலகளவில் எடுத்துச்சென்றுள்ளார்கள்.

மயானக்கொள்ளை பகுதியைப் பற்றி எழுதினாலே தனிக் கட்டுரை எழுத முடியும் 🙂 .

பொருத்தமான கதாப்பாத்திரங்கள்

இதில் யாரையுமே இக்கதாப்பாத்திரத்துக்குப் பொருத்தமில்லாதவர் என்று கூற முடியவில்லை. எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்?!

பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி, சந்தான பாரதி, ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் என்று ஒவ்வொருவரும் தங்கள் பங்கை மிகை நடிப்பு இல்லாமல் வழங்கியுள்ளார்கள்.

இதில் வியப்படைய வைத்தது ஷ்ரேயா ரெட்டி தான். ப்பா! என்ன மாதிரியான நடிப்பு! மிரட்டலான பெண் காவல் அதிகாரியைக் கண்முன்னே நிறுத்தியுள்ளார்.

பெண் காவலராக உள்ளவர்கள் சிலர் அதிலும் பெரிய பொறுப்பில் உள்ளவர் தன் வீட்டிலும் கொஞ்சம் கூடுதல் அதட்டலாகவும், அதிகாரமிக்கவராகவும் இருப்பார்.

இதிலும் ஸ்ரேயா ரெட்டி கணவர் பிரேம்குமாரிடம் அதே போல நடந்து கொள்வார்.

விசாரணைக்காக மலையில் ஜீப்பிலிருந்து இறங்கி கம்பீரமாக ஸ்ரேயா ரெட்டி நடந்து வரும் ஒரு காட்சி செம்ம கெத்தாக இருந்தது.

இவருக்கு ஏன் தமிழ் திரையுலகம் சரியான வாய்ப்பை வழங்கவில்லை?! திறமையானவர்களைத் தமிழ் திரையுலகத்தினர் பலர் கண்டுகொள்வதே இல்லை என்பது சலிப்பாக உள்ளது.

சலீம் கவுஸை பலர் கண்டுகொள்ளாமல் போனது இன்னும் எனக்குச் சமாதானமாகவில்லை.

இவர்களோடு காப்பீடு அதிகாரியாக வரும் சந்தான பாரதியின் நடிப்பும் அசத்தல் ஆனால், காப்பீடு அதிகாரி இந்த அளவுக்கு விசாரணை செய்வாரா?!

ஸ்ரேயா ரெட்டி வலது கரமாக வரும் கதிர் நடிப்பை பொருத்தமாக, இளமையின் வேகத்தில் அவர் கதாப்பாத்திரத்தை இயக்குநர் கொண்டு சென்றது பாராட்டத்தக்கது.

கதிர் ஐஸ்வர்யா ராஜேஷ் உறவு புரிந்து கொள்ள முடியாததாக உள்ளது குறிப்பாகக் கதிர் எண்ணத்தில்.

கதை

த்ரில்லர் கதைகளில் எழுதப்படாத விதி, நமக்கு யார் மீதெல்லாம் சந்தேகம் வருகிறதோ அவர் குற்றவாளியாக இருக்க மாட்டார், சுழலிலும் அதே.

ஒருத்தர் விடாமல் அனைவர் மீதும் சந்தேகம் வருகிறது 🙂 .

பாதிக்கப்பட்ட பார்த்திபன் மகள், என்ன தான் மற்றவர்களிடம் இயல்பாகப் பழகுவதில்லை என்றாலும், எந்தப் பாதிப்பும் இல்லாத சராசரி பெண்ணைப் போலவே அவரது உடல்மொழிகள் உள்ளன.

அதாவது பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அமைதியாகவோ, மன அழுத்தத்திலோ, இறுகிய முகத்துடனோ இருப்பார்கள் ஆனால், இவர் அப்படியில்லை.

கதிர் விசாரிப்பது துவக்கத்தில் சாதாரணமாக இருந்தாலும், போகப்போகப் பொறுப்பான நபராக வழக்கு விஷயத்தில் ஈடுபாடு காட்டுவதும், ஷ்ரேயா ரெட்டிக்கு உதவியாக இருப்பதும் சிறப்பு.

காதல் காட்சிகளின் நீளத்தைக் குறைத்து இருக்கலாம், இப்பகுதி மட்டுமே கொஞ்சம் சலிப்பை தந்தது.

ஹரிஷ் உத்தமனுக்குப் பொருத்தமான வேடம், தன் தேர்வை நியாயப்படுத்தியுள்ளார்.

பார்த்திபன் யூனியன் தலைவர் என்பதால் அவ்வப்போது ‘தோழர் தோழர்‘னு சொல்வது தான் காதில் குச்சியை விட்டுக் குடைவது போல உள்ளது 🙂 .

ஒளிப்பதிவு

இந்தச் சீரீஸில் பாராட்டப்பட வேண்டியவர்களுள் ஒளிப்பதிவாளரும் ஒருவர். அப்படியொரு இயல்புத்தன்மையைக் கண்முன் நிறுத்தியுள்ளார்.

எங்குமே செயற்கைத்தன்மை தெரியவில்லை. குறிப்பாக மயானக்கொள்ளை காட்சிகள் எல்லாம் கண்ணில் ஒத்திக்கொள்ளலாம், தரமான ஒளிப்பதிவு.

மலைப்பகுதி, கிராமம் சார்ந்த பகுதி என்பதாலும் ஒளிப்பதிவில் இயல்புத்தன்மை காட்ட கூடுதல் வாய்ப்பு, அதைச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.

எப்படி எடுத்து இருப்பார்கள்?! என்ற வியப்பிலிருந்து என்னால் இன்னமும் வெளியே வரமுடியவில்லை.

பின்னணி இசை

சீரிஸ் முழுக்க எப்படி ஒளிப்பதிவு சிறப்போ அதே போலப் பின்னணி இசையும் அட்டகாசம். இந்த இரண்டுக்காகவுமே திரும்ப பார்க்க நினைத்துள்ளேன்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமாகி நடந்து வரும் (மயானகொள்ளை) காட்சியில் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் செம மாஸாக இருந்தது.

ஒரு மாஸ் நடிகரின் அறிமுகம் போல ஆனால், இயல்பாகக் காட்சி அமைத்து இருந்தார்கள். இரு முறை ரீவைண்ட் செய்து பார்த்தேன் 🙂 .

இயக்கம்

புஷ்கர் காயத்ரி பிரம்மா அனுசரண் அனைவரும் இணைந்து அற்புதமான சீரீஸை வழங்கியுள்ளார்கள்.

தற்போது எடுக்கப்படும் சீரீஸ்கள் உலகளவில் பலரை சென்றடைகிறது.

அவ்வாறு செல்லும் போது நம் பண்பாடு, பழக்க வழக்கமும் செல்லும். அதனோடு மயானக்கொள்ளை போன்ற நிகழ்வுகளும் அவர்களை அடையும் என்பது மகிழ்ச்சி.

இந்தியில் வந்த Aranyak சீரீஸ் போலச் சில ஒற்றுமைகள் உள்ளது. இரண்டுமே மலைப்பகுதி, பெண் அதிகாரிகள், விசாரணை, த்ரில்லர்.

இன்னொரு ஒற்றுமை இரண்டு சீரீஸுமே சூப்பர் 🙂 . மயானக்கொள்ளையை அற்புதமாக எடுத்ததற்காகச் சுழல் ஒரு படி மேல்.

கதையின் மையக்கருத்தை கூறாததற்குக் காரணம், இது தெரியாததினாலே பார்க்கச் சுவாரசியமாக இருந்தது.

தெரிந்து இருந்தால், சிலவற்றை ஊகிக்க முடிந்து இருக்கலாம். எனவே, இதுவரை தெரியாதவர்கள் மேலும் தெரிந்து கொள்ளாமல் சீரீஸை பார்க்கவும்.

த்ரில்லர் கதைக்கு விமர்சனம் எழுதுவது தான் ரொம்பக் கடினம்.

கதையும், காட்சியையும் சொல்ல முடியாது, கதாபாத்திரங்களையும் ரொம்ப விளக்க முடியாது ஆனால், அதன் சிறப்பைக் கூற வேண்டும். Delicate Position 🙂 .

யார் பார்க்கலாம்?

அனைவரும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

ஏற்கனவே பலர் பார்த்து இருப்பீர்கள், பார்க்க வில்லையென்றால், அவசியம் பார்க்கவும்.

Amazon Prime ல் காணலாம்.

Created by Pushkar–Gayathri
Written by Pushkar–Gayathri
Directed by Bramma G, Anucharan Murugaiyan
Starring R. Parthiban, Aishwarya Rajesh, Kathir, Harish Uthaman, Sriya Reddy
Music by Sam C. S.
Country of origin India
Original language Tamil
No. of seasons 1
No. of episodes 8
Cinematography Mukeswaran
Editor Richard Kevin
Running time 40- 50 minutes
Production company Wallwatcher Films
Release
Original network Amazon Prime Video
Original release 17 June 2022

கொசுறு (தகவல் உதவி WikiPedia)

மயானக் கொள்ளை திருவிழா சிவராத்திரியை அடுத்த மாசி மாத அமாவாசையன்று தமிழகத்தில் உள்ள அங்காள பரமேசுவரி ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது.

இவற்றில் மேல்மலையனூர் கோவிலில் கொண்டாடப்படும் மயானக் கொள்ளை முதன்மையானதாகும்.

மீனவர்கள் வணங்கும் தெய்வமாக அங்காள பரமேசுவரி அம்மன் விளங்குவதால் இக்கொண்டாட்டங்கள் முதன்மையாக மீனவ சமுதாயங்களில் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது.

தொடர்புடைய சீரீஸ்கள்

விலங்கு | தமிழ் வெப் சீரிஸ் | கொலை செய்தது யார்?

Aranyak | Series | கொலைகளைச் செய்வது யார்?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, பொதுவாக வெப் தொடர் எதையும் நான் ஆர்வமாக பார்ப்பதில்லை . ஆனால் மிர்சாபூர் பார்த்த பிறகு என் எண்ணத்தை கொஞ்சம் மாற்றி கொண்டேன்.. விலங்கும் பார்த்தேன்.. ஆனால் சுழலில் ஏற்பட்ட பீலிங் எனக்கு விலங்கில் ஏற்படவில்லை.. இரண்டு கதைகளும் வேறுபட்ட கதைக்களங்கள்.. கதாபாத்திரங்களின் பலமும் வேறு.. சுழல் நிச்சயம் ஒரு மாறுபட்ட அனுபவத்தை கொடுத்தது.. கதாபாத்திரங்களின் தேர்வும் நன்றாக இருந்தது..

    சின்ன, சின்ன கேள்விகள் (ஐஸ்வர்யா ராஜேஷ் போலீசுக்கு முன் கேரளா செல்வது..etc) இருந்தாலும் எல்லாவற்றையும் கடந்து சுழல் சிறப்பாக இருந்தது.. ஸ்ரேயா ரெட்டி திருமணத்திற்கு பிறகு அதிகம் எந்த மொழியிலும் நடிக்க வில்லை என்று நினைக்கிறேன்.. திமிரு படத்தில் இவரது நடிப்பு தாறுமாறு.. சுழலிலும் தான் பாத்திரத்தை நிறைவாக செய்து இருப்பார்.. இவருக்கு அடுத்தபடி ஹரிஷ் உத்தமன் தந்தையாக வரும் பெரியவரின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.. ஒரு நிறுவன முதலாளியின் உடல்மொழி இவருக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தது.. விபத்துக்காக கூறிய காரணமும் ஏற்றுக்கொள்ளும் படி இருந்தது..

    (இவர்களோடு காப்பீடு அதிகாரியாக வரும் சந்தான பாரதியின் நடிப்பும் அசத்தல், ஆனால், காப்பீடு அதிகாரி இந்த அளவுக்கு விசாரணை செய்வாரா?!) நிச்சயம் இருக்கலாம் கிரி.. எந்த காப்பீட்டு நிறுவனமும் மிக பெரிய தொகையை எளிதாக கொடுத்து விட மாற்றார்கள் கிரி.. குறிப்பாக தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்.. இந்தியாவில் எனக்கு இது குறித்து முழுமையாக தெரியவில்லை.. இங்கு எங்கள் நிறுவனத்திலே 12 ஆண்டுகளுக்கு முன் ஒரு தீ விபத்து ஏதேச்சையாக நடந்தது.. முறையாக விசாரணை செய்து, இழப்பீடு வெகு சீக்கீரம் கிடைத்தது..
    ===================================================
    எங்குமே செயற்கைத்தன்மை தெரியவில்லை. குறிப்பாக மயானக்கொள்ளை காட்சிகள் எல்லாம் கண்ணில் ஒத்திக்கொள்ளலாம், தரமான ஒளிப்பதிவு. உண்மை கிரி..
    ===================================================
    நிறைய கூறிக்கொண்டு போகலாம்.. நீங்கள் கூறுவது போல் “எதுவுமே தெரியாமல் பார்க்கும் போது” அதன் சுவாரசியத்தை இன்னும் ரசிக்கலாம்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின்

    “விலங்கும் பார்த்தேன்.. ஆனால் சுழலில் ஏற்பட்ட பீலிங் எனக்கு விலங்கில் ஏற்படவில்லை”

    அப்படியா! விலங்கு பட உருவாக்கம் என்னை மிகக்கவர்ந்தது.

    “ஐஸ்வர்யா ராஜேஷ் போலீசுக்கு முன் கேரளா செல்வது”

    நானும் நினைத்தேன்.

    “ஹரிஷ் உத்தமன் தந்தையாக வரும் பெரியவரின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது”

    ஆமாம். சரியான கதாப்பாத்திர தேர்வு. சிறப்பாக செய்து இருந்தார்.

    “எந்த காப்பீட்டு நிறுவனமும் மிக பெரிய தொகையை எளிதாக கொடுத்து விட மாற்றார்கள் கிரி.. குறிப்பாக தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்”

    நானும் இது தான் நினைத்தேன். பெரிய தொகை என்பதால் இருக்கலாம் என்று நினைத்தேன்.

    காவல்துறை போல விசாரணை செய்தது தான் இப்படி நடக்குமா என்று தோன்ற வைத்தது.

    “நீங்கள் கூறுவது போல் “எதுவுமே தெரியாமல் பார்க்கும் போது” அதன் சுவாரசியத்தை இன்னும் ரசிக்கலாம்”

    🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here