புத்தகம் படிப்பதால் பயன் உண்டா?

5
Books புத்தகம்

புத்தகம் படிப்பதால் பயன் உண்டா? என்றால் நிச்சயம் உண்டு.

புத்தகம், அறிவை விசாலமாக்குகிறது, புதிய செய்திகளை, கருத்துகளைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.

ஏற்கனவே நாம் கொண்டுள்ள கருத்துகளில் மாற்றம் கொண்டு வருகிறது. புதிய கோணத்தைத் தருகிறது.

சிறு வயதில் இருந்த புத்தக ஆர்வம் (காமிக்ஸ்) பின்னர் நாவல்களாக விரிவாகியது. 18 வயதுக்குப் பிறகு ஆர்வம் குறைந்தது, அதற்குச் சூழ்நிலைகளும் காரணம்.

பின்னர் என் புத்தக ஆர்வத்தை மீட்டெடுத்தது பொன்னியின் செல்வன்.

இதன் பிறகு ஏராளமான புத்தகங்களைப் படித்து வருகிறேன், அதில் நாவல்கள், சுய மேம்பாட்டுக் கட்டுரைகள் என்று கலந்தே இருக்கும். Image Credit

எப்படிப்பட்ட புத்தகங்கள் படிக்கலாம்?

புத்தகங்கள் என்பது ஒவ்வொருத்தருடைய ரசனை, எண்ணங்கள் சம்பந்தப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கருத்துகள், எண்ணங்கள் இருக்கும்.

யாராக இருந்தாலும், எப்போதுமே ஒரே மாதிரியான புத்தகங்கள் படிப்பது சோர்வை அளிக்கலாம். புதிதாக எதையும் தெரிந்து கொள்ள முடியாது.

எனவே, பல தரப்பட்ட புத்தகங்களைப் படிப்பது நமக்குப் புதிய எண்ணங்களை, மாற்று கருத்துகளைக் கொண்டு வரலாம்.

எளிமையாகக் கூற வேண்டும் என்றால், ‘இது தான் சரி‘ என்று நாம் நினைத்து இருந்த கருத்துகள் தவறாகப் போகலாம்.

ஓ! இப்படியும் ஒரு கோணம் உள்ளதா?‘ என்று யோசிக்க வைக்கும்.

புத்தகங்கள் படிக்கும் போது முடிந்தவரை முன்முடிவுடன் படிப்பதை தவிர்ப்பது நல்லது. இவை நம்மை மேம்படுத்தாது.

குறிப்பிட்ட புத்தகம் என்ன சொல்ல வருகிறது என்று படிக்கும் முன்பே நமக்குத் தெரியும். பிடிக்காத உள்ளடக்கம் என்றால், கூடுமானவரை தவிர்த்து விடுவோம்.

அதையும் மீறிப் படிக்கிறோம் என்றால், எதோ ஒன்று கவர்ந்து இருக்கலாம். எனவே, அதை ஒதுக்காமல் தொடர முயற்சிக்கலாம்.

ஒரு புத்தகத்தில் அனைத்துமே நமக்குப் பிடிக்கும் என்று கட்டாயமில்லை.

எனவே, நமக்குத் தேவையான கருத்துகளை எடுத்துக்கொண்டு மற்றதைப் புறக்கணித்து விடலாம்.

சுய முன்னேற்றப் புத்தகங்கள்

நாவல்கள், விஞ்ஞானம், இலக்கியம், ஆன்மிகம் என்று ஏராளம் இருந்தாலும், சுய முன்னேற்றப் புத்தகங்களுக்கென்று ஏராளமான வாசகர்கள் உள்ளனர்.

இது போல ஏராளமான புத்தகங்கள் படித்து நிறைய மாற்றிக்கொண்டு இருக்கிறேன். என் எழுத்துக்களிலும் அவை உதவி புரிகின்றன.

விஜய் தொலைகாட்சி ‘நீயா நானா’வில் புத்தகம் படிப்பதால் அனுபவம் பெற முடியுமா? அனுபவத்தால் பெற முடியுமா? என்று விவாதம் நடைபெற்றது.

இரு பக்கமும் பல நியாயமான கருத்துகள் விவாதிக்கப்பட்டன.

அனுபவத்தால் பெற முடியும் என்பதில் சந்தேகமில்லை என்றாலும், புத்தகம் படிப்பதாலும் குறிப்பிடத் தக்க அளவில் பெற முடியும் என்பது உண்மை.

அனுபவப்பூர்வமாக உணர்ந்து இருக்கிறேன்.

Amazon Kindle

புத்தகமாக மட்டுமே படிப்பேன் என்று பிடிவாதமாகப் பலர் உள்ளனர் ஆனால், அவர்கள் Kindle அனுபவத்தைத் தவறவிட்டுக்கொண்டு உள்ளார்கள்.

Kindle படிப்பதால், ஏராளமான வசதிகள் உள்ளன. Kindle வாங்கிய பிறகு படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது.

எங்கு வேண்டும் என்றாலும் எளிதாக, ஏராளமான புத்தகங்களைக் கொண்டு செல்ல முடியும் என்பது இதன் ஆகச்சிறந்த பயன்.

பிடிவாதமாக இருப்பவர்கள் ஒரு முறை Kindle முயற்சித்துப் பாருங்கள்.

எனவே, புத்தகம் படியுங்கள். கருத்துகளை மேம்படுத்தி / சரிபடுத்திக் கொள்ளுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

அசுரன் – வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம் (என்னுள் ஏராளமான மாற்றங்களைக் கொண்டு வந்த புத்தகம்)

பொன்னியின் செல்வன் (புத்தக ஆர்வத்தை மீட்டெடுத்த புத்தகம்)

அமேசான் Kindle ஏன் வாங்க வேண்டும்?! (படிப்பதை எளிதாக்கிய சாதனம்)

புத்தக விமர்சனங்கள் (இதுவரை நான் படித்த புத்தகங்கள்)

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. கிரி, சிறு வயதிலிருந்து புத்தகங்களின் மீது காதல் அதிகம்.. குறிப்பாக அந்த பருவத்தில் ராணி காமிஸ் மற்றும் வரலாற்று புத்தகங்கள்.. நான் ஆறாவது படிக்கும் போதே பத்தாம் வகுப்பின் வரலாற்று புத்தகத்தை படித்து இருக்கிறேன்.. இந்த ஆர்வம் நாட்கள் செல்ல செல்ல வேறு கோணத்தில் திரும்பியது.. முதுகலை படிக்கும் போது வகுப்புக்கு சென்றதை விட அரசு நூலகத்திற்கு சென்றது தான் அதிகம்..

    ஆரம்பத்தில் நண்பர்கள் கொடுத்த ஆர்வத்தில், காலையில் 9 மணிக்கு நூலகம் சென்றால், மீண்டும் இரவு 7 மணிக்கு தான் திரும்புவேன்.. இடையில் மதிய உணவு கூட உண்ணாமல் படித்த பல நாட்கள் உண்டு.. ஆனால் இதை மட்டும் படிக்கவேண்டும், இதை படிக்க கூடாது என்ற விதிமுறை கிடையாது.. கையில் கிடைத்தவற்றை படிப்பேன்.. அதில் மூழ்கி போவேன்.. அந்த போதை அந்த நாட்களில் மிகவும் பிடித்து போனது..

    நண்பர்களிடம் பேசுவதை குறைத்து விட்டேன்.. கல்லுரிக்கும் எப்போதாவது செல்வதுண்டு.. தற்போது கூட அந்த நாட்களின் நிகழ்வுகளை நினைத்து பார்ப்பேன்.. அந்த நேரத்தில் அதிகம் விரும்பி படித்தது காரல் மார்ஸ் அவருடைய வாழ்க்கையை தான்.. கம்யூனிசமும் என்னை வெகுவாக கவர்ந்து.. ஜெர்மனியின் மீது கொண்ட காதல் என்றும் தொடர்கிறது..என்னை நானும் ஒரு கார்ல் மார்க்சாவே நினைத்து கொள்வேன்..

    அவருடைய அறை முழுதும் புத்தகங்கள் சிதறி கிடைக்கும், அடுக்கி இருக்காது.. பல கிழிந்த புத்தகங்கள், எப்போதும் புகைத்து கொண்டிருக்கின்ற சுருட்டு, கருப்பு காப்பி என அவரை போல் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதும் உண்டு.. அந்த நேரத்தில் தான் அவருடைய மனைவி ஜென்னியை பற்றியும் படித்தேன்.. என்றுமே மறக்க முடியாத ஒரு அரிதான பெண் என்றால் அது ஜென்னி தான் ..

    இன்றும் புத்தகம் படிக்கும் ஆர்வம் அப்படியே தான் இருக்கிறது.. ஆனால் மிக குறைவான நேரம் மட்டுமே ஒதுக்க முடிகிறது.. தற்போது கூட ஊரிலிருந்து வரும் போது நம்மாழ்வார் எழுதிய புத்தகங்கள் எல்லாம் வாங்கி வந்தேன்.. ஒரு புத்தகம் கூட படித்து முடிக்க முடியவில்லை.. நேரம் ஒரு காரணமாக இருந்தாலும் மனதும்,, மனநிலையும் முக்கிய காரணமாக நான் கருதுகிறேன்.. எல்லா நேரங்களிலும் புத்தகம் என்னால் படிக்க முடியாது..

    KINDLE நீங்க சொல்லி தான் எனக்கு தெரியும்.. ஆனால் இன்னும் வாங்கவில்லை.. ஏனோ வாங்க தோன்றவில்லை.. பொன்னியின் செல்வன் இது வரை படிக்கவில்லை.. எல்லாம் அது அப்படி இப்படி கொஞ்சம் மிகையாக கூறியதால் படிக்க தோன்றவில்லை.. சுருங்க கூறின் நண்பர்கள் கொஞ்சம் BUILD UP கொடுத்ததால் என்னவோ இது வரை படிக்க தோன்றவில்லை.. ஒரு வாசகராக இருக்கும் போது இந்த புத்தகத்தை படிக்கச் வில்லை என்றால் அவன் வாசகனே இல்லை என்ற தோற்றம் பரவலாக இருக்கிறது.. அதனால் இந்த புத்தகத்தை தவித்து மற்ற தெரிந்த புத்தகங்கள் ஓரளவிற்கு படித்து இருக்கிறேன்..

    ஆனால் கல்கியோட சோலைமலை இளவரசி படித்து இருக்கிறேன்.. நேர்த்தியான புத்தகம்.. திரைப்பட பாணியில் சொன்னால் அற்புதமான திரைக்கதை அமைப்பு.. இது வரை படிக்கவில்லை எனில் படித்து பார்க்கவும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. கிரி சில நாட்கள் கழித்து உங்கள் பக்கத்துக்கு வந்து உள்ளேன் இன்னும் இந்த பதிவை படிக்க வில்லை நீங்களும் உங்கள் குடும்பம் பொள்ளாச்சி மற்றும் சென்னை நலமாக இருக்கிறீர்கள் என்று பதிவு பார்த்தே தெரிந்து கொண்டேன்
    அதோடு நண்பர் யாசின் நலமாக உள்ளார் என்றும் தெரிந்து கொண்டேன்
    ஒர்க் பிரேம் ஹோம் இருப்பதால் வேலை பளு நிரம்பி விட்டது சாதாரணமாக அலுவலகத்தில் nerukku ner paathu pesi தெரிந்து கொள்ளும் விஷயம் ellam skype type adithu adithu maalvilai athanal பதிவு பற்றிய எனது கருது பின்னர் வந்து இடுகிறேன்
    நலம்

  3. @யாசின் வெறித்தனமா படித்து இருப்பீங்க போல 🙂

    பொன்னியின் செல்வன் அற்புதமான நாவல் யாசின். நீங்கள் படித்தால், முடிக்காமல் வைக்க மாட்டீர்கள். இப்புத்தகம் எழுதும் போது கல்கி கையில் எதோ மந்திரம் இருந்து இருக்கும் போல 🙂 . அவராலையே இது போல ஒரு நாவலைத் திரும்ப எழுத முடியவில்லை என்பதே இப்புத்தகத்தின் சிறப்பு.

    சோலைமலை இளவரசி தற்போது தான் கேள்விப்படுகிறேன். கிடைத்தால் படிக்கிறேன்.

    @சரவணன் நான் நலம் 🙂 நன்றி. பொள்ளாச்சி அல்ல.. கோபி .

  4. என்னுடைய தேடல்களெல்லாம் அறிவியல் மற்றும் வரலாறு… கயிறு இல்லாமல் நம்மை கட்டிப்போடும் திறன் புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!