நினைவுத்திறன் குறைபாடு தற்போது வயதானவர்களுக்கு மட்டுமல்ல, 30+ வயதினருக்கு மேற்பட்டவர்களுக்கும் பொதுவான பிரச்சனையாகக் காணப்படுகிறது. நினைவுத்திறன் அதிகரிக்க வழிகள் என்னவென்று பார்ப்போம்.
நினைவுத்திறன் பிரச்சனை ஏன் ஏற்படுகிறது?
- அதிகளவில் திறன்பேசி பயன்படுத்துவது. Image Credit
- கூகுள் அதிகளவில் பயன்படுத்துவது.
- பதட்டம், தூக்கமின்மை, எதிர்காலப் பயம், மன அழுத்தம்.
- அதிகளவு தேவையற்ற செய்திகள் / தகவல்கள் படிப்பது.
- முன்பு படிப்பதற்கோ, கேட்பதற்கோ செய்திகள் குறைவு, தொலைபேசி எண்கள் அதிகமில்லை ஆனால், தற்போது அனைத்தும் குவிந்துள்ளது.
- ஃபேஸ்புக் ஒரு முறை சென்றால், நூற்றுக்கணக்கான தகவல்களை, செய்திகளைக் காண்கிறீர்கள். அனைத்தையும் மூளை கிரகிக்க முடிவதில்லை.
மேற்கூறியவை முக்கியக்காரணங்களாகக் கூறப்படுகிறது.
நினைவுத்திறன் குறைபாட்டைத் தவிர்ப்பது எப்படி?
திறன்பேசி பயன்பாட்டைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும். அதோடு அனைத்துக்கும் கூகுளையே நாடாமல், நீங்களே யோசித்து நேரமானாலும் பரவாயில்லை என்று சொந்த முயற்சியில் கொண்டு வர வேண்டும்.
முடிந்தவரை அடுத்தவர் உதவி இல்லாமல், எதையும் கண்டறிய வேண்டும்.
குறைந்த பட்சம் 7 மணி நேர தூக்கம் அவசியம்.
மேற்கூறிய பதட்டம், மன அழுத்தம், பயம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
இவையல்லாமல் சில பயிற்சிகள்
ஒரு செயலை மறக்க மிக முக்கியக்காரணம், ஒன்றை கேட்கும் போதோ, செய்யும் போதோ முழு மனதுடன் அல்லது ஈடுபாட்டுடன் அல்லது கவனத்துடன் செய்வதில்லை.
எடுத்துக்காட்டுக்கு, வீட்டைப் பூட்டும்போது, பூட்டியதை மனதில் பதியும் படி உறுதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால், வெளியே கிளம்பிய பிறகு பூட்டினோமா இல்லையா என்ற சந்தேகம் வரும்.
ஆசிரியர் கூறுவதைக் கவனத்துடன் கேட்கவில்லை என்றால், மனதில் பதியாது.
வாழ்க்கை துணை கூறியதை அரைகுறையாகக் கேட்டுக்கொண்டு கடைக்குச் சென்றால், சில தவறுகள் ஏற்படும் அல்லது வேறு மாற்றி வந்து விட நேரும்.
எனவே, எதையும் மனதில் பதியும்படி செய்ய வேண்டும், கேட்க வேண்டும்.
இதைச் செயல்படுத்திப் பார்த்தேன், இது வேலை செய்கிறது. வீட்டை / வண்டியைப் பூட்டினோமா இல்லையா என்று சந்தேகம் வரும். தற்போது மிகக்குறைந்து விட்டது.
தொடர்ச்சியாகப் பின்பற்றும்போது இப்பிரச்சனை சரியாகும் என்று நினைக்கிறேன்.
நினைவுத்திறன் அதிகரிக்க வழிகள்
நினைவுத்திறனை அதிகரிக்க ஒருவர் கூறிய இன்னொரு வழி என்னவென்றால், இரவு தூங்கும் முன்பு காலையில் எழுந்தது முதல் இரவு நீங்கள் படுக்கும் வரை செய்த செயல்களை நினைத்துப் பார்க்க வேண்டும், ஒன்றை விடாமல்.
எடுத்துக்காட்டுக்கு, காலையில் படுக்கையை விட்டு எழுந்தோம், பல் துலக்கச் சென்றோம் என்பதில் ஆரம்பித்து மாலை வீட்டுக்கு வந்து என்னென்ன செய்தீர்கள் என்பது வரை ஒன்றுவிடாமல் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தொடர்ச்சியாகச் செய்யும்போது, நினைவுத்திறன் கூடுவதை உணரலாம்.
எனக்கு ஒரு பிரச்னை, படுத்தவுடன் தூங்கிவிடுவேன். எனவே, காலை 10 – 11 மணி நிகழ்வுகளை நினைத்துக்கொண்டு இருக்கும் போதே தூக்கம் வந்து விடுகிறது 🙂 .
இதனால், படுக்கும் முன்பு அமர்ந்து கொண்டே இதைப் பயிற்சி செய்து வருகிறேன்.
எனக்கு நினைவுத்திறன் பிரச்னை உள்ளது. காரணம், கூகுள், நிறையப் படிப்பது, சில விஷயங்களை முழு மனதோடு கேட்பது / செய்வதில்லை. சில நேரங்களில் குறிப்பிட்ட ஒருவரின் பெயர், திரைப்படத்தின் பெயர் ஆகியவை மறந்து விடும்.
சில நிமிடங்களுக்குப் பிறகே நினைவுக்கு வரும். இதற்குத்தான் பயிற்சி செய்து வருகிறேன்.
எனவே, நீங்களும் நினைவுத்திறன் பயிற்சியைத் தொடர்ந்தால், மாற்றம் காணலாம்.
தொடர்புடைய கட்டுரைகள்
“Amazon Echo / Google Home” பிரச்சனைகள்!
நினைவுத் திறன் ஏன் பாதிக்கப்படுகிறது?
கொசுறு
என் தளத்தைப் படிக்கும் சுகன்யா ஒரு கட்டுரையைப் படிக்கக் கொடுத்தபோது அதில் ஒரு செயலை மனதில் பதியும்படி செய்வது பற்றி விளக்கி இருந்தார்கள்.
எனக்குப் பயனுள்ளதாக இருந்ததால், இதனுடன் இன்னும் கொஞ்சம் கூடுதல் தகவல்களுடன் கட்டுரையாகக் கொடுத்துள்ளேன். நன்றி சுகன்யா.
கிரி, நீங்க குறிப்பிட்ட நினைவு திறன் மற்றும் கவன சிதறல் குறைபாடு எனக்கும் இருக்கிறது.. தற்போது கொஞ்சம் அதிகமாக இருப்பதாகவே உணர்கிறேன்.. இதற்காக குறிப்பிட்ட காரணம் தெரியவில்லை.. நீங்கள் குறிப்பிட்ட அதிகளவில் திறன்பேசி பயன்படுத்துவது.
==========
கூகுள் அதிகளவில் பயன்படுத்துவது.
பதட்டம், தூக்கமின்மை, எதிர்காலப் பயம், மன அழுத்தம்.
அதிகளவு தேவையற்ற செய்திகள் / தகவல்கள் படிப்பது.
==========
இதை எதையுமே நான் செய்வதில்லை!!! இருப்பினும் குறைபாடுக்கான காரணம் தெரியவில்லை.. ஒரு சின்ன விஷியம், போன வாரம் ஒரு நபரை தற்செயலாக உணவகத்தில் பார்த்தேன்.. பார்த்தவுடன் இருவரும் ஹலோ சொல்லி 5 நிமிடம் பேசிக்கொண்டோம்.. பின்பு நான் அவருக்கு தெரியாமல் அவரை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.. இதைப்பார்த்த என் நண்பன் எதற்கு என்று கேட்டான்???
இவரை எனக்கு தெரியும், ஆனால் எப்படி பழக்கம், பெயர் மற்ற விவரம் ஏதும் நினைவில் இல்லை.. அவரிடமே கேட்டவும் சங்கடமாய் இருந்தது, அதற்காக தான் புகைப்படம் எடுத்தேன் என்று கூறினேன்.. ஒரு வாரம் மேல் ஆகி விட்டது.. நானும் நினைவில் வரும் போது புகைப்படத்தை பார்ப்பேன்.. ஆனால் அவரை குறித்த எந்த நிகழ்வும் நினைவில் வரவில்லை.. இது என்னுடைய முதல் அனுபவம்.. எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது..
கடந்த 24 ஆன்டுகளில் நடந்த பல கிரிக்கெட் போட்டிகள் இன்னும் நெஞ்சில் பதிந்து இருக்கிறது.. தற்போது நடந்த நிகழ்வுகளை நினைவில் கொள்ள முடியவில்லை.. பள்ளி பருவத்தில் நடந்த பல நிகழ்வுகளும், அப்படியே மனதில் இருக்கிறது.. பல நண்பர்களுடன் பேசி கொண்டிருக்கும் போது கூட பள்ளி, கல்லுரியில் நடந்த பல சுவாரசியமான நிகழ்வுகளை நான் விவரிப்பதை கண்டு சில நண்பர்கள் ஆச்சரியம் கொள்வதுண்டு..
சக்தியுடன் 2005 இல் எப்படி நட்பு ஏற்பட்டது என்பது என் நினைவில் இன்னும் இருக்கிறது… ஆனால் 2010 இல் இணையத்தில் உங்கள் அறிமுகம் எப்படி ஏற்பட்டது என்று என் நினைவில் இல்லை.. யோசித்துப் பார்த்தாலும் தெரியவில்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..
யாசின் இதை நீங்க சொன்னவுடன் சித்ரா லட்சுமணன் நேர்முகத்தில் ஏவிஎம் சரவணன் கூறியது தான் நினைவுக்கு வந்தது.
அவர் அந்தக்கால பட வெளியீட்டு தேதி, படம் ஓடிய நாட்கள், அப்போதைய நபர்களின் பெயர்கள் என்று அனைத்தையும் தவறு இல்லாமல் கூறி அசத்தினார்.
இது பற்றிச் சித்ரா லட்சுமணன் கேட்ட போது, பழையது எல்லாம் நினைவில் உள்ளது ஆனால், நேற்று நடந்தது நினைவில் இல்லை என்றார்.
எனக்கு இது குழப்பமாக உள்ளது. எனக்கும் இது போல ஆகியுள்ளது. என்ன காரணமாக இருக்கும்?
மனதில் பதியும்படியான நிகழ்வாக இல்லையா? அல்லது அக்கறை இல்லாமல் கேட்கிறோமா?