இந்து சங்கி இந்துத்துவா வித்தியாசங்கள் என்ன?

8
இந்து சங்கி இந்துத்துவா

ங்கி என்பதைப் பற்றி எழுத ரொம்ப காலமாகவே நினைத்தும் தள்ளிப்போய்க் கொண்டு இருந்தது ஆனால், தற்போது ஐஸ்வர்யா பேசியது சர்ச்சையானதால் எழுதலாம் என்றே இக்கட்டுரை. Image credit

சங்கி

சங்கி என்ற வார்த்தை ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங் (சங்கம்) மற்றும் சங் பரிவார் என்ற வார்த்தைகளிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வார்த்தை அடையாளம் வட மாநிலங்களில் இயல்பானது ஆனால், தமிழகத்தில் சங்கி என்ற வார்த்தையை எதோ கெட்ட வார்த்தை போல, மத வெறியர்கள் போல திமுக, இடது சாரிகள் மாற்றி விட்டனர்.

எனவே தான் இந்துக்களும் தன்னை சங்கி என்று கூறினால், எதோ அசிங்கப்படுத்தி விட்டதைப் போல, நான் சங்கி இல்லையென்று மறுக்க வேண்டியதாகி விடுகிறது.

புரிதல் இல்லாத ஐஸ்வர்யா பிரச்சனையும் மேற்கூறியதே.

ஆம்! நான் சங்கி தான்

இந்து மதத்தை விமர்சித்தவர்களைக் கேள்வி கேட்டதால் முன்பு என்னைச் சங்கி என்று பலர் குறிப்பிட்ட போது ஐஸ்வர்யா போலக் கோபமே ஏற்பட்டது.

என் மதத்தை நேசிக்கிறேன், மற்றவர் விமர்சிக்கும் போது பதிலடி கொடுக்கிறேன் ஆனால், என்னைச் சங்கி என்று கூறுகிறார்களே என்ற கோபம் ஏற்பட்டது.

காரணம், சங்கி என்பது பொதுப்புத்தியில் மதவெறியன் போலச் சித்தரிக்கப்பட்டு இருந்தது, இருக்கிறது.

எனவே, இதே ஐஸ்வர்யா போல, ‘நான் சங்கி இல்லை‘யென்று மறுத்து வந்தேன் ஆனால், நாளடைவில் இந்து மதத்தின் மீதான விமர்சனம் என்பதை தாண்டி அவதூறாக மாறிய பிறகு ‘ஆம்! நான் சங்கி தான்‘ என்று கூற ஆரம்பித்தேன்.

அவமதிப்பு தொடரும் போது இந்து மதத்தின் மீதான பற்று இதனாலயே அதிகரித்தது.

பின்னர் கிடைத்த புரிதலாலே, சங்கி என்று கூறினால், அதைப் பெருமையாக நினைத்தேன். ‘ஆம்! நான் சங்கி தான் அதற்கென்ன?!‘ என்று கேள்வி கேட்டேன்.

கேள்வி கேட்டவர்களிடம் பதில் இல்லை.

இந்து சங்கி இந்துத்துவா என்ன வித்தியாசங்கள்?

பலரும் சங்கி என்பதை ஒரு தவறான வார்த்தையாக நினைக்கிறார்கள் ஆனால், அவர்களே ஒரு சங்கி நிலையில் தான் உள்ளார்கள் என்பதை அறியாமலே!

இந்து என்பதை ஒரு பிரிவாகவும், சங்கி & இந்துத்துவாவை ஒரு வகையாகவும் பிரிக்கலாம். இதில் எதுவுமே கேவலம், அவமானம் கிடையாது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறேன்.

இந்து மதத்தை, இந்துக் கடவுளை ஒருவர் இழிவு படுத்துகிறார், இதற்கு ஒரு படி மேல சென்று ஆபாசமாகச் சிலர் விமர்சிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

மேற்கூறிய நிகழ்வுக்கு,

  • எந்த எதிர்ப்பையும் காட்டாமல், எந்தச் சலனமும் இல்லாமல் சுருக்கமாக, சொரணையே இல்லாமல் கடந்து சென்றால், அவர் இந்து.
  • சமூகத்தளங்களில் காட்டமான விமர்சனங்களை, எதிர்வினைகளை வைப்பவர்கள் சங்கி. இப்பிரிவில் நான் வருவேன்.
  • விமர்சிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், வழக்கு தொடுப்பது, நேரடியாகச் சென்று போராட்டம் நடத்துபவர்கள் இந்துத்துவா. எடுத்துக்காட்டாக, இந்து அமைப்புகள்.

இவர்கள் மத மாற்றத்தையும் தடுத்து, தைரியமாகக் கேள்வி கேட்கிறார்கள். அதாவது என்னால் செய்ய முடியாததை ஆனால், செய்ய நினைப்பதை செய்கிறார்கள்.

இவ்வளவு தான் வித்தியாசம்.

இந்து மதத்துக்கு மட்டும் ஏன்?

மேற்கூறிய அடையாளம் இல்லாமல், அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் மேற்கூறிய நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் மதத்துக்கு ஒன்றென்றால் கேள்வி கேட்கிறார்கள், போராட்டம் நடத்துகிறார்கள்.

ஆனால், அதையே இந்துக்கள் செய்தால் இழிவா? மத வெறியனா?

மற்ற மதத்தினர் அவர்கள் மதத்துக்காகக் கேள்வி கேட்கலாம், போராடலாம் ஆனால், இந்துக்கள் செய்தால், சங்கி, இந்துத்துவா என பல்வேறு பட்டங்களா?

என்னங்க அநியாயம் இது!

மதவாதி

2010 ல் இந்துக்கடவுளை ஓவியர் ஜாஹிர் ஹுசைன் ஆபாசமாக வரைந்த போது கோபம் வந்து கேள்வி கேட்டதால், என்னை மதவாதி ஆக்கி விட்டார்கள்.

இதே மற்ற மதத்தை, கடவுளை வேறொருவர் இழிவு செய்தால், கேள்வி கேட்காமல் இருப்பார்களா? எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பார்களா?

இந்துக்களுக்கு எந்த உரிமையும் இல்லையா? மண்ணு மாதிரி இருக்க வேண்டுமா?

இதெல்லாம் எந்த வகையில் நியாயம்! தனது எதிர்ப்பை நாகரீகமான முறையில் தெரிவிக்கக் கூட ஒரு இந்துக்கு உரிமையில்லையா?!

கோவிலுக்குப் போனாலே சங்கி!

இது முற்றிப்போய் கோவிலுக்குப் போனேன் என்று ஸ்டேட்டஸ் போட்டாலே, திருநீர் வைத்து நிழற்படம் பகிர்ந்தாலே சங்கி என்று கூறும் நிலைக்கு வந்து விட்டது ஆத்திரத்தைக் கிளப்புகிறது. தேசியவாதி என்றாலே சங்கி.

இப்படி இந்துக்களைத் தலையில் கொட்டி கொட்டி அனைத்தையும் சகித்து செல்ல வேண்டும் என்பதை இயல்பாக்கி தங்கள் எண்ணத்தைச் சாதிக்கிறார்கள்.

இதன் மூலம் இந்துக்களைப் பிரிக்கிறார்கள், வாக்கரசியலில் ஆதாயம் தேடுகிறார்கள். இந்து வாக்கு வங்கி என்ற ஒன்றை உருவாக விடாமல் தடுக்கிறார்கள்.

எப்படியொரு உளவியல் தாக்குதல் பாருங்கள்!

எதிர் கேள்வி கேட்டால், அவரைப் பயமுறுத்தி, தனிமைப்படுத்தி, அவமானப்படுத்தி அமைதியாக்கும் முறையைத் திமுகவினர், இடது சாரியினர் செய்கிறார்கள்.

திமுக

திமுகவில் உள்ள இந்துக்கள் கட்சிப் பாசத்துக்காக தன் இந்து மதத்தையே எந்தக்கூச்சமுமின்றி இழிவுபடுத்துகிறார்கள்.

எனக்கு மிகத்தெரிந்த ஒரு திமுக இந்து நபர், ‘இந்து என்றால் திருடன்‘ என்று அவரது தலைவர் கூறியதை கூறி பாஜகவை விமர்சிக்கிறார்.

பாஜகவை விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் உள்ளது ஆனால், தன் மதத்தையே இழிவுப்படுத்துகிறோம் என்பதையே உணராத திமுக நபராக உள்ளார்.

உணராத என்பதை விட அதைச் சரியென்று நினைக்கிறார்.

இதை அவர் கூறிய போது மனசே உடைந்து விட்டது. ‘இனிமேல் அரசியல் பற்றி என்னிடம் பேசாதீர்கள்‘ என்று உறுதியாகக் கூறி விட்டேன்.

மூளைச் சலவை

இந்நிலையில் தான் பல இந்துக்கள் உள்ளனர் குறிப்பாக திமுகவில் உள்ள இந்துக்கள்.

எனக்கு மற்ற மதங்களைப் பற்றிப் பயமில்லை ஆனால், மூளைச்சலவை செய்து தன் கண்ணையே குத்த வைக்கும் திமுக தான் மிகப்பெரிய ஆபத்தாகக் கருதுகிறேன்.

திராவிடக் கட்சிகள் ஆட்சியை விட்டுச்சென்றாலே, இந்து மதம் மிகச்சிறப்பாகத் தமிழகத்தில் வளர்ச்சியடையும். வெறுப்புணர்வு, இருள் விலகி வெளிச்சம் பிறக்கும், இந்துக்களும் தங்களை பெருமையாக உணரும் நிலை வரும்.

இதன் பிறகு இப்பெயர் பாகுபாடுகள் இருக்காது, தேவைப்படாது.

இந்து ஆதரவாளர்களுக்கு ஒரு கேள்வி

மற்றவர்கள் ஆயிரம் கூறட்டும் ஆனால், இப்பெயரைக் கூறினாலும் பெருமையடைய வைக்க ஏன் எந்த முயற்சிகளையும் இந்து ஆதரவாளர்கள் எடுக்கவில்லை?

இதற்கான முயற்சிகளை எடுக்காததாலே சாதாரண இந்துக்கள் இப்பெயரை இழிவாக கருதும் நிலைக்குச் செல்கிறது. இவர்களைக் குறை கூறி என்ன பயன்?

இங்கே பொதுப் புத்தியில் பெருமையை விட இழிவுபடுத்துவதே ஓங்கி இருக்கிறது. எனவே, ஐஸ்வர்யா போன்றவர்கள் என் அப்பா சங்கி இல்லை என்கிறார்.

மற்ற மதங்களை ஆதரிப்பவர்கள், கேள்வி கேட்பவர்கள், போராடுபவர்கள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள். எனவே, இந்துக்களுக்கு மட்டும் தனி அடையாளம் கொடுத்துப் பிரிப்பது உள்நோக்கமே.

என்ன முயற்சி எடுக்கப்பட்டது?

முதலில் சங்கி என்ற பெயரை அனைவரும் பெருமையாக கூறும் படி மாற்றுங்கள்.

ட்விட்டரில் ஒருவர் Sanghi Prince என்று பெயரை வைத்துள்ளார். ஐஸ்வர்யாவை திட்டிய எத்தனை பேர் இவரைப் போலப் பெருமையாகக் கூறுகிறீர்கள்?

எதோ அன்றைக்கு மட்டும் ‘நான் சங்கி’ என்று ட்ரெண்ட் செய்தால் போதுமா?!

மோடி செய்த நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லாமல், எதிர்கட்சிகளிடம் சண்டை போட்டுக்கொண்டு இருப்பதைப் போல உள்ளது.

ஐஸ்வர்யா போன்று கூறுபவர்களை விமர்சிப்பதால், சராசரி இந்து, ‘இனிமேல் நான் சங்கி என்று கூறுவேன்‘ என்று வந்து விடுவாரா?! முதலில் பெயருக்கு மரியாதையை உருவாக்குங்கள், இந்துக்கள் தானாகவே பெருமையாக கூறுவார்கள்.

இதன் பிறகு இப்பெயரை வைத்து இழிவுபடுத்துவதும் தானாகவே நின்று விடும்.

சங்கி என்று கூறுவதில் எனக்குப் பெருமையே!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. அருமையான பதிவு. உங்கள் பல பதிவுகளை வாசிக்கும்பொழுது , என் மனதில் உள்ளதை அப்படியே எழுதுகின்றீர்களோ என்று தோன்றுகிறது.

    மேலும் இப்பதிவில், கீழ்கண்ட உங்கள் விளக்கம், தரமான விளக்கம்

    (எந்த எதிர்ப்பையும் காட்டாமல், எந்தச் சலனமும் இல்லாமல் சுருக்கமாக, சொரணையே இல்லாமல் கடந்து சென்றால், அவர் இந்து.)

    (சமூகத்தளங்களில் காட்டமான விமர்சனங்களை, எதிர்வினைகளை வைப்பவர்கள் சங்கி. இப்பிரிவில் நான் வருவேன்.)

    (விமர்சிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், வழக்கு தொடுப்பது, நேரடியாகச் சென்று போராட்டம் நடத்துபவர்கள் இந்துத்துவா. எடுத்துக்காட்டாக, இந்து அமைப்புகள்.)

  2. இந்த திமுகவும் கம்னியூஸ்ட்களும் திக வும் செய்வதை பார்த்தால் அவ்வளவு காண்டாய் வரும். அதை எப்படி திருப்பி அடிப்பது என்று வருவதில்லை. ஆகையால் உங்கள் கருத்துக்களை பரவலாக பலருக்கு பரப்பி சற்று ஆறுதல் கொள்கிறேன்..

  3. கிரி, ஐஸ்வர்யா பேசியது பேசியது என்ன என்று நான் பார்க்கவில்லை.. ஆனால் இந்த சங்கி என்ற வார்த்தையை கடந்த சில வருடங்களாக தான் அதிகம் கேட்டு வருகிறேன். இந்த பதிவில் முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது.

    ஆம்! நான் சங்கி தான் : நீங்கள் சந்தித்தவைகளை உணர்ந்து கொள்ள முடிகிறது. நீங்கள் உங்கள் மதத்தை அதிகம் நேசிக்கும் போது, உங்களை குறித்து அடுத்தவர்க்கு சந்தேகம் எழும் போது உங்கள் நிலையை குறித்து விளக்க வேண்டிய அவசியம் இல்லை. விளக்க நேரிட்டால் எத்தனை பேருக்கு பொது வெளியில் விளக்க முடியும்..

    கேள்வி கேட்டவர்களிடம் பதில் இல்லை : நிச்சயம் ஒரு போதும் இவர்களிடம் பதில் திரும்பி வராது. அப்படி பதில் வந்தாலும் “அது ஏதோ உப்பு சப்பு” இல்லாத பதிலாக தான் இருக்கும்.

    இந்து, சங்கி, இந்துத்துவா : நீங்கள் கொடுத்த விளக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

    கோவிலுக்குப் போனாலே சங்கி! : இது முற்றிலும் தவறான புரிதல் என நான் எண்ணுகிறேன். எல்லோருக்கும் அவரவர் மதத்தை குறித்த நம்பிக்கை உண்டு. அது சரியா? தவறா? என்பது அவரவரின் தனிப்பட்ட விஷியம். ஒரு மதத்தின் கோட்பாடுகளை பின்பற்றுபவரை தவறு என்று இன்னொருவர் எவ்வாறு கூற இயலும்.

    இந்து என்றால் திருடன் : நீங்கள் குறிப்பிட்ட நண்பருக்கு சரியான புரிதல் என்பது இல்லை.. திமுக கடந்த 50 / 60 ஆண்டுகளான தான் இருக்கிறது.. ஆனால் இந்து மதம் பல நூற்றாண்டுகளாக இருக்கின்ற ஒன்று.. இன்னும் பல இடங்களில் இதற்கான வரலாற்று சான்றுகள் நம் கண் முன்னே இருக்கிறது..நாளை கால ஓட்டத்தில் திமுக காணாமல் போகலாம்.. ஆனால் இந்து மதம் உலகம் உள்ளவரை இருக்கும்..

    மூளைச் சலவை : வரும் இளைய தலைமுறையினர்க்கு சரியான புரிதல் இருந்தால் நிச்சயம் இந்த நிலை எதிர்காலத்தில் மாறும்.. அரசியல் கட்சிகள் நாம் எந்த மதத்தை சார்ந்து இருக்க வேண்டும், எதை பின்பற்ற வேண்டும் என்ற எந்த கட்டுப்பாட்டையும் விதிக்க முடியாது.. விதிக்கவும் கூடாது.

    ஒரு இந்தியனாக இந்த நாட்டில் பிறந்ததற்காக பெருமை படுகிறேன். இங்கே மரணித்து போகவும் எண்ணுகிறேன். ஒரு தமிழனாக இங்கு பிறந்து, தமிழ் மொழியை கற்க ஒரு வாய்ப்பு கிடைத்ததால் கோடி புண்ணியம் செய்தது போல உணர்கிறேன்..

    என் மதத்தை நேசிப்பது போல , எல்லா மதங்களையும் நேசிக்கிறேன்.. அடுத்த மதங்களை பின்பற்றுபவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன்.. எல்லா மனிதர்களிடம் அன்பு கொள்ள விழைகிறேன். என் புரிதல்களை என் அடுத்த சந்ததிகளுக்கு கடத்த எண்ணுகிறேன்.

  4. முன்பெல்லாம் சங்கீதா என்று பெயர் இருப்பவரை சங்கி என்று கூப்பிடுவது வழக்கம் , ஆனால் இன்று அப்படி கூப்பிட்டால் அவர் கேலிக்கு உள்ளாவார்.

    கொசுறு : நடிகர் விஜய் மனைவியும் ஒரு சங்கிதான், அவர் பெயரும் சங்கீதா என்பதால் .

  5. கிரி, நான் முன்பு கூறியது போல பெரும்பான்மையான இந்துக்களுக்கு இந்து மதத்தை பற்றிய ஒரு தெளிவான புரிதல் இல்லாதது தான் காரணம். இந்து மதத்தை குழந்தைகளுக்கு இளம் வயதில் குடும்பமோ அல்லது நிறுவனமோ(சரியான) அறிமுகம் செய்வது கிடையாது. அவர்கள் பள்ளியிலயோ கல்லூரியிலோ பிற மத நண்பர்கள் கேட்கும் எளிய கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல், தாழ்வுணர்ச்சிக்கு தள்ளப்படுகிறார்கள். தன் மதத்தின் மேல் விலகளும் ஏற்படுகிறது. அப்படி இருந்தவன் தான் நானும்.

    இளம் வயதில் இருக்கும் வேகமும் வெறுப்பும் ஒரு படி மேலே சென்று நான் இந்து அல்ல, எனக்கு மதம் தேவை இல்லை, கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்ற சட்டையை போட்டுக் கொள்ள வைக்கிறது. இது ஒரு நடிப்பு மட்டுமே. இந்து மறுப்பாளர்கள் பெரும்பாலும் 40 வயதை தொடும்போது பக்தி மார்க்கத்தை நோக்கி வருவதை காணலாம். இந்த வயதில் பெரும்பாலும் வாழ்கையின் இன்ப துன்பங்களை பார்த்த பின் , நம்மை மீறிய சக்தி இந்த பிரபஞ்சத்தை இயக்குகிறது என்ற புரிதல் வர தொடங்குகிறது. தேடல் உள்ளவர்கள் ஆன்மீகம் நோக்கி செல்கிறார்கள். பெரும்பாலோனோர்கள் அறிதல் முறையை தவிர்த்து, பூரண பக்தி மட்டும் பற்றி கொண்டு இந்து மத ஆசாரங்கள் சடங்குகள் ஆகியவற்றை பின்பற்றுகிறார்கள்.

    தமிழ்நாட்டில் சங்கி என்றால் மத வெறியன் என்ற பிம்பம் தான் உள்ளது. இந்த அரசியல் தொடரும் பொது, பெரும்பாலான இந்துக்கள் பிஜேபி கட்சி பக்கம் செல்வார்கள். இவர்கள் ராமனை தான் இழிவு படுத்துவார்கள். முருக கடவுளையோ, திரௌபதி அம்மனையோ, மாரியம்மனையோ இழிவு செய்தால் மக்கள் எதிர்ப்பார்கள் என்று தெளிவாக தெரியும். இங்கே பெரும்பான்மை சாதிமக்கள் வழிபடும் கடவுளாக இருந்தால் மட்டும் தான் விமரிசிக்க படாமல் இருப்பார். அரசியல்வாதிகளுக்கு எல்லாமே வோட்டு கணக்கு தான். 2021 தேர்தலிலே இது தொடங்கி விட்டது என்று நினைக்கிறேன். பிற மத வேட்பாளர்கள் கூட இந்து கோவில்களுக்கு சென்றதும் , பரப்புரையில் வெற்றி வேலை தூக்கியதும் அதனால் தான்.

    நான் என்னை “இந்துத்துவன்” என்று கூறுவேன். என் ஆன்மிக தேடலுக்கு பல வழிகளை திறந்து வைத்து இருக்கும் இந்து ஞான மரபை, ரிஷிகளை, ஞானிகளை வணங்குபவன்,தொடர்பவன். எனக்கு கடவுள் இல்லையென்பவனும் எல்லாம் சிவன் மயம் என்பவரும் ஒன்றே. என் மதம் தான் பெரியது என்று சொல்பவர்களிடம் எனக்கு விவாதிக்க ஒன்றும் இல்லை. அவர்கள் தான் எனக்கு தெரிந்து மதவெறியர்கள். அதே போல் எந்த அரசியல் கட்சியும் காப்பாற்றும் அளவுக்கு இந்து மதம் ஒன்றும் வலுவில்லாதது இல்லை. இந்து மதத்தின் வேர்கள் ஆழமாக உள்ளது. ஞானிகளும் ரிஷிகளும் இந்த புண்ணிய பூமியிலே பிறந்து அதை நிரூபித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

  6. @சரவணன் & வெ. பத்மநாபன் நன்றி 🙂

    @யாசின்

    “நீங்கள் உங்கள் மதத்தை அதிகம் நேசிக்கும் போது, உங்களை குறித்து அடுத்தவர்க்கு சந்தேகம் எழும் போது ”

    இது சந்தேகம் இல்லை யாசின். அவர்கள் கருத்துக்கு மாற்று கருத்து கூறினால், இது போன்ற உளவியல் தாக்குதல்.

    “விளக்க நேரிட்டால் எத்தனை பேருக்கு பொது வெளியில் விளக்க முடியும்..”

    அதனால் தனிக்கட்டுரை எழுதிய பிறகு இது போன்ற கருத்துகள் வருவதில்லை.

    https://www.giriblog.com/neautral-is-possible-or-not/

    “இது முற்றிலும் தவறான புரிதல் என நான் எண்ணுகிறேன்”

    புரிதல் இல்லை யாசின். இவர்களின் சித்தாந்த வெறுப்பு.

    இவர்களுக்கு எல்லாமே தெரியும், தெரிந்தும் செய்கிறார்கள். இவர்களுக்கு பிடிக்காததை மற்றவர்களும் செய்யக்கூடாது என்ற எண்ணம்.

    “ஒரு மதத்தின் கோட்பாடுகளை பின்பற்றுபவரை தவறு என்று இன்னொருவர் எவ்வாறு கூற இயலும்.”

    இது தான் நடந்து கொண்டுள்ளது.

    “நீங்கள் குறிப்பிட்ட நண்பருக்கு சரியான புரிதல் என்பது இல்லை.”

    இது கட்சி பாசம், வெறி. தான் உள்ள கட்சியின் கருத்தை மற்றவர்களிடம் திணித்தல்.

    அதாவது உடன்பாடு இருக்காது என்று தெரிந்தும் அதை கூறுவது.

    இவர் என் நண்பர் அல்ல, வயதில் மூத்தவர், உறவினர் 🙂 .

    “வரும் இளைய தலைமுறையினர்க்கு சரியான புரிதல் இருந்தால் நிச்சயம் இந்த நிலை எதிர்காலத்தில் மாறும்’

    மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.

    “என் மதத்தை நேசிப்பது போல , எல்லா மதங்களையும் நேசிக்கிறேன்.. அடுத்த மதங்களை பின்பற்றுபவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன்.. எல்லா மனிதர்களிடம் அன்பு கொள்ள விழைகிறேன். என் புரிதல்களை என் அடுத்த சந்ததிகளுக்கு கடத்த எண்ணுகிறேன்.”

    நீங்கெல்லாம் வேறு லெவல் யாசின்.

    உங்களைப் போன்றவர்களே அனைத்து மதங்களிலும் இருந்து விட்டால் பிரச்சனைகளே இருக்காது.

    இத்தளத்தில் மத ரீதியான கட்டுரைகளை வரம்பு மீறாமல், ஓரளவு கட்டுப்பாடுடன் எழுதுகிறேன் என்றால் அதற்கு மிக முக்கியக்காரணங்களில் நீங்களும் ஒருவர்.

    உண்மையைக்கூறினால், உங்கள் அன்பும், புரிதலுமே என் கோபத்தை கட்டுப்படுத்தி எழுத வைக்கிறது.

  7. @Unmai vilambi

    “முன்பெல்லாம் சங்கீதா என்று பெயர் இருப்பவரை சங்கி என்று கூப்பிடுவது வழக்கம் , ஆனால் இன்று அப்படி கூப்பிட்டால் அவர் கேலிக்கு உள்ளாவார்.”

    உண்மை தான் 🙂 .

  8. @மணிகண்டன்

    “கிரி, நான் முன்பு கூறியது போல பெரும்பான்மையான இந்துக்களுக்கு இந்து மதத்தை பற்றிய ஒரு தெளிவான புரிதல் இல்லாதது தான் காரணம்.”

    உண்மை தான் மணிகண்டன்.

    எப்போதுமே பாதுகாப்பான நிலையில் இருக்கும் போது அதற்கான தேவை இருக்காது. எனவே, தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதில்லை.

    “அவர்கள் பள்ளியிலயோ கல்லூரியிலோ பிற மத நண்பர்கள் கேட்கும் எளிய கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல், தாழ்வுணர்ச்சிக்கு தள்ளப்படுகிறார்கள்.”

    உண்மை.

    “இளம் வயதில் இருக்கும் வேகமும் வெறுப்பும் ஒரு படி மேலே சென்று நான் இந்து அல்ல, எனக்கு மதம் தேவை இல்லை, கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்ற சட்டையை போட்டுக் கொள்ள வைக்கிறது. இது ஒரு நடிப்பு மட்டுமே.”

    இதை தான் அர்த்தமுள்ள இந்து மதத்தில் கண்ணதாசன் அவர்கள் அழகாக கூறி இருப்பார்.

    “இந்து மறுப்பாளர்கள் பெரும்பாலும் 40 வயதை தொடும்போது பக்தி மார்க்கத்தை நோக்கி வருவதை காணலாம். இந்த வயதில் பெரும்பாலும் வாழ்கையின் இன்ப துன்பங்களை பார்த்த பின் , நம்மை மீறிய சக்தி இந்த பிரபஞ்சத்தை இயக்குகிறது என்ற புரிதல் வர தொடங்குகிறது. ”

    100% உண்மை.

    நான்கு பக்கம் கஷ்டம் வந்தால் நாத்திகனும் ஆத்திகன் ஆகி விடுவான் என்பார்கள்.

    அது போல, இளமை காலத்தில் பாதுகாப்பு இருப்பதால், பொறுப்புகள் குறைவு என்பதால், எப்போதுமே தெனாவெட்டாக இருப்பார்கள்.

    ஆனால், திருமணம் ஆகி, பொறுப்புகள் கூடி, எதிர்கால கவலை வரும் போது கடவுள் நம்பிக்கை தானாகவே வந்து விடுகிறது.

    அதோடு நீங்கள் கூறுவது போல தேடலும் அதிகமாகி விடுகிறது.

    எனக்கு சிறு வயதிலும் கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால், தற்போது அதிகமாக உள்ளது. வயது ஒரு முக்கியக்காரணம்.

    “தமிழ்நாட்டில் சங்கி என்றால் மத வெறியன் என்ற பிம்பம் தான் உள்ளது.”

    100%

    “இந்த அரசியல் தொடரும் பொது, பெரும்பாலான இந்துக்கள் பிஜேபி கட்சி பக்கம் செல்வார்கள். ”

    தற்போது இது தான் நடந்து கொண்டுள்ளது. இதன் வீரியம் புரியும் போது திமுக தனது பரப்புரை பலனிக்கவில்லை என்பதை உணரும் ஆனால், காலம் கடந்து இருக்கும்.

    “இவர்கள் ராமனை தான் இழிவு படுத்துவார்கள். முருக கடவுளையோ, திரௌபதி அம்மனையோ, மாரியம்மனையோ இழிவு செய்தால் மக்கள் எதிர்ப்பார்கள் என்று தெளிவாக தெரியும். ”

    அப்படியும் முருகனை, கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தினார்களே.

    இழிவுபடுத்தியவன் இன்னமும் சுதந்திரமாக இன்னும் சுற்றிக்கொண்டு உள்ளானே!

    ஆனால், முன்பை விட தற்போது குறைந்துள்ளது, பயம் வந்துள்ளது. இதற்கு காரணம், இந்துக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு.

    “அரசியல்வாதிகளுக்கு எல்லாமே வோட்டு கணக்கு தான். 2021 தேர்தலிலே இது தொடங்கி விட்டது என்று நினைக்கிறேன். பிற மத வேட்பாளர்கள் கூட இந்து கோவில்களுக்கு சென்றதும் , பரப்புரையில் வெற்றி வேலை தூக்கியதும் அதனால் தான்.”

    ஒரு காலத்தில் இந்து வாக்கு வங்கி உருவாகும். அப்போது கூட வேண்டாம், பாஜக வெற்றி பெற்றாலே இவர்கள் காவடி எடுக்கவும் தயங்க மாட்டார்கள்.

    சிறுபான்மையினர் பாசம் எல்லாம் அவர்கள் வாக்கு இவர்கள் வெற்றிக்குத் தேவை எனும் போது மட்டுமே!

    ஒரு வகையில் சிறுபான்மையினரும் இந்துக்கள் போல முட்டாள்களே.

    எனவே, அரசியல் கட்சிகள் குறிப்பாக திமுக இவர்களை நன்கு பயன்படுத்திக்கொள்கிறது.

    “என் மதம் தான் பெரியது என்று சொல்பவர்களிடம் எனக்கு விவாதிக்க ஒன்றும் இல்லை. அவர்கள் தான் எனக்கு தெரிந்து மதவெறியர்கள். ”

    சரியாகக் கூறினீர்கள்.

    தன் மதத்தைப் போற்றுவது, உயர்த்துவது, பின்பற்றுவது தவறில்லை ஆனால், தன் மதம் மட்டுமே சிறந்தது என்று வரும் போது தான் சிக்கலாகிறது.

    “அதே போல் எந்த அரசியல் கட்சியும் காப்பாற்றும் அளவுக்கு இந்து மதம் ஒன்றும் வலுவில்லாதது இல்லை.”

    இதில் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது.

    தற்போது பாஜக இல்லையென்றால், தற்போதுள்ள நிலை இருக்காது. ராமர் கோவில் வந்து இருக்காது. ஞானவாபி, மதுரா வராது. பெருமையாக கொண்டாடும் சூழ்நிலை இருக்காது.

    இது போன்று கூற ஏராளமான தகவல்கள் உள்ளது. மோடி மூன்றாம் ஆட்சி இதை விடத் தெளிவாக உணர்த்தும்.

    தமிழ்நாட்டையே எடுத்துக்கொண்டால், திமுக இன்னும் 30 வருடங்கள் ஆட்சியில் உள்ளது என்றால், இந்து மதம் என்பது பெயரளவில் மட்டுமே இருக்கும்.

    காரணம், இந்து மதத்துக்கு எதிராக எவ்வளவு மோசமாக செயல்பட முடியுமோ அவ்வளவையும் செய்து வருகிறார்கள்.

    ஏராளமான மத மாற்றம் நடந்து இருக்கும், இந்துக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கும்.

    இந்து மதம் வலுவானதாக இருக்கலாம் ஆனால், இந்து மக்கள் வலுவானவர்களாக குறிப்பாக தமிழக மக்கள் இல்லை.

    தற்போது மாற்றம் கண்டு வருவது மகிழ்ச்சி.

    “இந்து மதத்தின் வேர்கள் ஆழமாக உள்ளது. ஞானிகளும் ரிஷிகளும் இந்த புண்ணிய பூமியிலே பிறந்து அதை நிரூபித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.”

    தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here