வணக்கம் சென்னை!

7
வணக்கம் சென்னை!

காலி குடங்களுடன் வறட்சியான சென்னை என்னை வரவேற்கும் என்று நினைத்து இருந்தால், நீந்தி வரும் படி செய்து விட்டது. வணக்கம் சென்னை 🙂 . Image Credit

விடுமுறை முடிந்து கடந்த வாரம் தான் பணியில் இணைந்தேன். தற்போது என் அக்காவின் வீட்டில் தற்காலிகமாக இருக்கிறேன்.

இதன் பிறகு பசங்களுக்குப் பள்ளியைத் தேட வேண்டும். இதை நினைத்தால் செம்பரம்பாக்கம் ஏரித்தண்ணீரில் மாட்டிக்கொண்டது போலக் கிறுகிறுக்கிறது.

நமக்குன்னு ஒண்ணு கிடைக்காமையா போய்டும்!

திகில் காட்சிகள் 😀

சிங்கப்பூரில் இருந்து வந்த பிறகு என்னுடைய விருப்பப் படங்களான திகில் ஹாரர் படங்கள் பார்க்க முடிவதில்லை.

இக்குறை சென்னை வந்த பிறகு சரியாகி விட்டது. தினமும் அலுவலகம் செல்வதே எனக்குத் திகில் பட அனுபவத்தைத் தருகிறது 🙂 .

தண்ணீர் பிரச்சனை ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் நம்ம மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள் கதி கலக்குகிறார்கள்.

மேடவாக்கம் பகுதியில் ஆறு போலப் பாய்ந்து வரும் தண்ணீரைத்தாண்டி எப்படிச் செல்வது என்று யோசித்தால், நாலு பேரு டபக்குனு வந்து “அப்படிப் போங்க இப்படிப் போங்க” என்று தானாக வந்து உதவுகிறார்கள். சென்னை டா! 🙂

என்ன தான் தண்ணீர் பிரச்சனை அரசாங்கம் பிரச்சனை அது இது என்று ஆயிரம் இருந்தாலும் சென்னை மக்களின் உதவும் குணம் இருக்கே…! அது மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறது.

இது போன்ற சமயங்களில் உதவி கேட்கும் முன்னே உதவத் தயாராக இருக்கிறார்கள்.

பைக்கில் செல்லும் போது “த்தா…பார்த்துப் போடா!” என்று அன்பாக அறிவுரையும் வழங்குகிறார்கள் 🙂 🙂 .

தீபாவளி

விடுமுறையில் ஊரில் தீபாவளியை சிறப்பாக என் குடும்பத்துடன் எங்கள் கிராமத்து வீட்டில் கொண்டாடினோம். செம்மையா இருந்தது 🙂 .

மழை தூறிக்கொண்டே இருந்ததால் கோவிலுக்கு மற்றும் உறவினர்கள் வீட்டுக்குச் செல்ல முடியவில்லை.

எங்க வீட்டில் நான் வைத்த மரம் அழகாக வளர்ந்ததோடு பூக்களைக் கொட்டி வருகிறது. வருகிறவர்கள் அனைவரும் கேட்டு வருகிறார்கள்.

கண்ணு பட்டுடும் போல இருக்கு 🙂 . ஏகப்பட்ட பட்டாம்பூச்சி, தேனீ தேன் எடுக்க வருகிறது.

பட்டாம்பூச்சி எப்படி தேன் எடுக்கிறது என்பதை மிக மிக அருகில் இருந்து பார்த்தேன். நல்ல நிழற்பட கருவி இருந்தால், செமையாகப் படம் எடுக்கலாம்.

ஒரே சமயத்தில் 10 – 15 பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டு இருப்பது அந்த இடத்தையே அழகாக்கி வருகிறது.

ஏரிக்குள் சென்னை

சென்னையில் ஏரிக்குள்ளே வீட்டைக் கட்டியவர்கள் நிலை பரிதாபமாகி விட்டது.

1 கோடி போட்டு “வில்லா” வாங்கியவர்களும் அதைக் கட்டிய தொழிலாளர்களும் ஒரே இடத்தில் தங்க வேண்டிய நிலை. பரிதாபமாக இருந்தது.

செம்மஞ்சேரி பகுதியில் கழுத்தளவு தண்ணீர். இக்கதையை எழுதினால் எனக்கு ஒரு தனிப்பதிவு தான் வேண்டும். நேரடி அனுபவம். 

சென்னையில் பெரும்பாலான இடங்களில் நீங்கள் காண்பது மழைத்தண்ணீர் அல்ல, அவை ஏரித் தண்ணீரே!

எப்படியோ இன்னும் கொஞ்ச காலத்துக்கு நமக்குத் தண்ணீர்ப் பிரச்சனை இல்லையெனும் போது மகிழ்வாக இருக்கிறது உடன் பல TMC தண்ணீரை வீண் செய்து விட்டோம் எனும் போது வருத்தமாக இருக்கிறது.

நண்பர்கள் 

அலுவலகத்தில் பழைய நண்பர்களைச் சந்தித்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் பலர் எந்தத் தளத்தில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

காஃபி குடிக்க, சாப்பிடச் செல்லும் போது பலரைச் சந்தித்து வருகிறேன்.

சிங்கப்பூரில் தனியாக இருந்து விட்டு இங்கே நண்பர்களுடன் இருப்பது மகிழ்ச்சி.

மழையால் அறை நண்பர்களைச் சந்திக்க முடியவில்லை. இந்த வாரம் சந்திப்பேன். தொலைபேசியில் பெரும்பாலானவர்களைத் தொடர்பு கொண்டு விட்டேன்.

தலைவர் “சிவாஜி”ல சொல்ற “Is this Chennai?” மாதிரியெல்லாம் இல்லை. எட்டு வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதே மாதிரி தான் “சென்னை” உள்ளது.

மெட்ரோ ரயில் பணி பாதையை மாற்றி விட்டுள்ளது. சில புதிய கட்டிடங்கள் உருவாகியுள்ளன.

மற்றபடி எனக்கு அதே சென்னை தான். பெரிய மாற்றம் விலைவாசி மட்டுமே!

எழுத நிறைய இருக்கிறது ஆனால், எழுதுவதற்கான சூழ்நிலை தான் அமையவில்லை 🙂 . அவ்வப்போது எழுதுகிறேன். தொடர்பில் இருங்கள்.

தொடர்புடைய கட்டுரைBye Bye சிங்கப்பூர் –> வணக்கம் சென்னை

7 COMMENTS

  1. கடந்த சில நாட்கள் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புது விதமான அனுபவமாக இருந்து இருக்கும். புகைப்படத்தில் உள்ள மரம் அழகாக இருக்கிறது. என்ன மரம் என்று சொல்லவும். தளத்துக்கு ஒரு மாதம் விடுமுறை மிகவும் அதிகம். மீண்டும் பதிவை பார்த்ததில் அதிக மகிழ்ச்சி கிரி. Chennai உங்களுக்கு பழகிய இடமாக இருந்தாலும், குழந்தைகள் உடல் நலத்திலும், குடும்ப பாதுகாப்பிலும் கொஞ்சம் அதிகமாக கவனம் எடுத்து கொள்ளவும்.

  2. வாங்க அண்ணா வாங்க ….. ஒரு மாதமா உங்க பதிவு வராம ஒரே காண்டு ஆயிடிச்சு.. என்னடா இவரு சென்னை வரேன் நு சொன்னாரு .. எந்த அறிகுறியும் தென் படலை … ஒரு வேல அடிச்ச மழைக்கு தாக்கு பிடிக்க முடியாதுன்னு எங்கனா ஓரமா ஒதுங்கிட்டாரா ன்னு நினைச்சிட்டேன்.

    ம்ம்ம்ம் ரொம்ப தாமதம் னா நீங்க
    தீபாவளிக்கு இங்க இருந்து இருந்திங்க ஒரு பதிவு போட்டு இருக்கலாம் இல்ல … ஏன் இப்படி பண்றீங்க…. இனியாவது கொஞ்சம் பொறுப்பா இருங்க …

    சென்னையில் இருப்பவர்கள் பெரும்பாலனவர்கள் நம்ம ஊர்க்காரங்க அதான் நம்மள பாத்ததும் நாம கேக்காமலே நமக்கு உதவி பண்றாங்க … ஆனால் உண்மையான சென்னை வாசிகளில் ஒரு சிலர் நம்ம சுத்தல்ல விடுவாங்க இல்லனா நாம உதவி கேட்கும் போது மட்டும் காத கழட்டி தனியா வச்சிடுவாங்க …. பாத்து சூதனமா இருங்க அண்ணா …..

    இனி வரும் நல் காரியங்களுக்கும் வாழ்த்துக்கள் …

    : குறிப்பு ::: சென்னையில் வேலை செய்ய ஆரம்பித்ததற்கு ட்ரீட் (விருந்து அல்லது சரியான தமிழ் பெயர் தெரியாது மன்னிச்சு ) கொடுக்கவும் அண்ணா

  3. உங்க பதிவுக்காக எவ்வளவு நாள் வெயிட் பண்ணுறது ….. Welcome to Chennai

  4. தமிழ்நாடு வந்த பிறகு முதல் போஸ்ட்? வீட்டிற்கு முன் வைத்துள்ளது என்ன மரம்?

  5. சென்னை உங்களை அன்புடன் (மழையுடன்) வரவேற்கிறது….. கொஞ்ச காலம் உங்களுக்கு சென்னையையும் சிங்கப்பூரையும் இணைத்து பார்த்து கடுப்பாகும்…. நீங்கள் சென்னையில் முன்னமே வசித்து இருப்பதால் சீக்கிரமே பழகிவிடும்….

  6. எப்படி யோசித்தாலும் ஒரே ஒரு வார்த்தைதான் தோன்றுகிறது : Enjoy!
    சந்தோஷமாக நோக்கினால் பழகிவிடும் (:-)
    எருமை போலவே இருக்கவேண்டும் என்பது நம் தமிழக மக்களின் ஆசை.

    சென்னையில் பள்ளிகள் சேர்க்கை விண்ணப்பங்கள் சாதரணமாக செப்டம்பரிலேயே கொடுக்க தொடங்கி விடுகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here