சைக்கிள்களுக்கான வரவேற்பு குறைந்து இனி அவ்வளோ தான் என்று நினைத்த தருணத்தில் உடற்பயிற்சி என்ற பெயரில் திரும்ப விஸ்வரூபம் எடுத்து வருவது மகிழ்ச்சி. Image Credit
சைக்கிள்
வெரிகோஸ் பிரச்சனை இருந்ததால், காலுக்கு வேலை கொடுக்க உடற்பயிற்சி நிலையம் செல்லலாம் என்று முடிவு செய்து சென்றாலும், கொரோனா ஊரடங்கால் இரு முறை தடையானது.
அதோடு பணமும் வீணானது.
இதனால், எளிமையான வழியாகச் சைக்கிள் வாங்கலாம் என்று பலரின் ஆலோசனையில் Decathlon BTWIN Model சைக்கிள் வாங்க முடிவு செய்தேன்.
₹4999 ல் இருந்த விலை, வாங்கலாம் என்று திட்டமிட்டவுடன் ராசிப்படி ₹1000 உயர்ந்து ₹5999 ஆகி விட்டது.
எனக்கு நினைவு தெரிந்து BSA SLR சைக்கிள் (வெள்ளை டயர் பார்டர்) ₹900 க்கு வாங்கியுள்ளேன். தற்போது துவக்க மாடலே ₹3000 விலைக்கு வந்து விட்டது.
BTWIN Cycle
பெரியவர்களுக்கு (L Size) விலை குறைந்த சைக்கிள் என்றால் இது தான்.
வாங்க முடிவு செய்த பிறகு தான் தெரிகிறது, சைக்கிள் மட்டும் ₹5999 அதன் பிறகு Stand, Bell உட்பட அனைத்துமே கூடுதல் கட்டணம் கொடுத்து வாங்க வேண்டு என்று.
அடப்பாவிகளா! இதென்னடா பித்தலாட்டமா இருக்குனு விசாரித்தால், எங்கும் இதே தானாம்.
பைக்கில் செல்லும் போதே ஹார்ன் அடிக்க மாட்டேன், சைக்கிளுக்கு எதற்கென்று பெல் வாங்கவில்லை. Stand (₹699) & Lock (₹249) மட்டும் வாங்கிக்கொண்டேன்.
சிலர் குஷன் சீட், தண்ணீர் பாட்டில் வைக்க வசதி என்று வாங்குவார்கள்.
Mudguard மழைக்காலங்களில் கட்டாயம் தேவை.
இல்லையென்றால், சட்டை பின்புறம் நாறி விடும். மழைக்காலங்களில் வெளியே செல்வதைத் தவிர்த்ததால் இதை வாங்கவில்லை.
மழை தூறலிலும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்குக் கட்டாயம் Mudguard தேவை.
இதனுடன் ToolKit தனியாக வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் தேவைப்படும்போது இருக்கை உயரத்தை கூட்ட, குறைக்க முடியும்.
மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
எப்படியுள்ளது?
சைக்கிள் அக்டோபர் 2021 வாங்கினேன். மழைக்காலம் என்பதால், சில நாட்கள் ஓட்ட முடியவில்லை.
மெரினா கடற்கரையில் காலையில் 30 நிமிடங்கள் (7 கிமீ ) ஓட்டுகிறேன். வீடு –> கலங்கரை விளக்கம் –>அண்ணா சமாதி –> கலங்கரை விளக்கம் –> வீடு.
மெரினா சாலை பார்க்க நேராக, சமமாக இருந்தாலும் ஏற்ற இறக்கமாகவே உள்ளது. சைக்கிள் ஓட்டும் போது தான் தெரிகிறது 🙂 .
சைக்கிள் வாங்கிய கதை பெரும் நகைச்சுவையாகி விட்டது.
அண்ணாசாலையில் உள்ள (அறிவாலயம் அருகில்) Decathlon ல் தான் வாங்கினேன். அங்கே இருந்து வீடு 4+ கிலோமீட்டர் என்பதால், நானே ஓட்டி வந்து விடலாம் என்று முடிவு செய்தேன். இல்லையென்றால் டெலிவரிக்குக் கூடுதல் கட்டணம்.
சைக்கிள் ஓட்டிப் பல காலமாகி இருந்ததாலும், பழக்கம் இல்லை என்பதாலும் வீட்டுக்குள் வருவதற்குள் நாக்கு தள்ளி விட்டது. இனி கொஞ்ச தூரம் ஓட்டினால் வாந்தியே வந்து விடும் போலாகி விட்டது 😀 .
புதுச் சைக்கிள் என்பதால், Cycle Chain இறுக்கமாக இருந்ததால், வண்டி நகரவே மாட்டேங்குது. எல்டாம்ஸ் சாலையைக் கடப்பதற்குள் கண்ணைக் கட்டி விட்டது.
எப்படா வீடு வரும் என்றாகி விட்டது.
ஓரிரு நாட்கள் கடினமாக இருந்தது, பின்னர் எளிதாகி விட்டது. தற்போது எளிதாக ஓட்ட முடிகிறது ஆனால், காலையில் நேரம் தான் குறைவாக உள்ளது.
7.30 க்கு அலுவலகம் கிளம்பி விடுவேன் என்பதால், அதற்குள் அனைத்தையும் முடிக்க வேண்டி இருப்பதால், நேரம் போதவில்லை.
5 மணிக்குச் சைக்கிள் எடுத்தால் மட்டுமே கூடுதல் நேரம் ஓட்ட முடியும்.
BTWIN Cycle வாங்கலாமா?
பயிற்சிக்காக வாங்குபவர்கள், அதிகச் செலவு செய்ய விருப்பமில்லாதவர்கள் தாராளமாக வாங்கலாம்.
இதிலேயே விலைக்குத் தகுந்த படி பல்வேறு வகையான, வசதிகளுடனான சைக்கிள்கள் உள்ளது.
BTWIN Basic சைக்கிளில் இரண்டு / மூன்று முறை மிதித்தால் கடக்கும் தூரத்தை, விலை அதிகமுள்ள சைக்கிள் ஒரு முறை மிதித்தாலே கடக்கிறது.
கடற்கரை சாலையில் சைக்கிள் ஓட்டுபவர்கள் அதிகம், அதில் பல்வேறு வகையான, Advanced Model Cycle வைத்துள்ளவர்கள் செம வேகமாகப் பறக்கிறார்கள்.
எனக்கு வேகம் தேவையில்லை, எவ்வளவு மிதிக்கிறேன் என்பதே முக்கியம் என்பதால், இதுவே எனக்குப் போதுமானது.
வண்டியும் சிக்குன்னு சிறுத்தை குட்டி மாதிரி உள்ளது 🙂 . என் தேவைக்கு 100% பொருத்தமானது.
எனவே, தேவையைப் பொறுத்து என்ன மாடல் சைக்கிள் தேவையோ அதை வாங்கிக்கொள்ளலாம். ₹30,000 த்தை தாண்டியும் விலையில் சைக்கிள்கள் உள்ளன!
இதுவரை வாங்கியதில் Kindle மட்டுமே பயன்பாடு குறைவாக உள்ளது. காரணம், தற்போது அதிகத் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டு இருப்பதால், படிப்பதற்கு நேரமில்லை, ஆர்வமில்லை.
வாங்கிய மற்ற அனைத்து சாதனங்களும், பொருட்களும் மிக உதவியாகவும், சரியான முடிவாகவும் அமைந்தது மகிழ்ச்சி.
தொடர்புடைய கட்டுரைகள்
டிவிஎஸ் ஜுபிடர் | அசத்தல் வண்டி
Sony HT-RT3 Real 5.1ch Dolby Digital Soundbar
Amazfit GTS Smart Watch வாங்கலாமா?
Vu Premium (55 inch) Ultra HD (4K) Android TV Review
அமேசான் Kindle ஏன் வாங்க வேண்டும்?!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
Super Giri….Cycling in the morning is best way to start the day. There are lot of cycling groups in Chennai. They will do long rides on weekends, like going till Mutukadu and back. You may also look into WCCG (we are chennai cycling group) for their activities. Good luck.
After long years i see your comment 🙂 . Hope you are fine.
Yeah I heard too but I’m not interested to go long distance. Its next level of cycling and didn’t reach yet.
I am doing good Giri…thank you. I keep reading your posts, but commenting in tamil seems bit difficult for me. So i am not giving any comments. And you are maintaining same decent blogging since i know you from Singapore stay. Keep up the good work Giri.
கிரி.. சைக்கிளை பற்றி நினைத்தாலே மனம் துள்ளும்.. பள்ளி பருவத்திலும், கல்லூரி பருவத்திலும் என்னுடைய நாட்கள் சைக்கிளுடன் தான் சென்றது.. இதுவரை சொந்தமாக ஒரு சைக்கிள் கூட வாங்கவில்லை.. சின்ன வயசுல புது சைக்கிள் வாங்க வேண்டும் என்று ரொம்ப ஆசை, ஆனால் வீட்டோட சூழ்நிலையின் காரணத்தால் வாங்கவில்லை..என்னுடைய ஆசையை யாரிடமும் கூறியதும் இல்லை..
கிரிக்கெட் மேட்ச் விளையாட பக்கத்து ஊருக்கெல்லாம் போகும் போது சைக்கிள் பயணம் தான்.. ரெண்டு வருடத்துக்கு முன்பு விடுமுறையில் கிரிக்கெட் விளையாட ஜூனியர் பசங்க கூட போன போது, கிரௌன்ட்ல இருக்குற ஆட்களை விட பைக்குகள் அதிகம்.. நண்பர்களிடம் பேசும் போது கூட விளையாட்ட சொன்னேன் (மச்சான் நம்ம விக்கி கார்க் பால் (18 ரூபாய்) வாங்கி விளையாட்றதுக்குள்ள நாக்கு தள்ளிடும், இப்ப பசங்க பாருடா சும்மா ஜம்முனு இருக்கான்னு)..
எங்க ஏரியாவுல நான் ஒரு பெரிய புறா வியாபாரி (கமிஷன் இல்லாத வியாபாரி).. எங்க தாத்தாவோட சைக்கிளை எடுத்துக்கிட்டு சுற்றி இருக்குற 18 பட்டிக்கும் பயணம் மேற்கொள்வேன்.. புறா வாங்குவது, விற்பது, பேரம் பேசுவது எல்லாம் மணிக்கணக்கில் நடக்கும்..
வியாபாரம் நல்ல படியா முடிஞ்சி சும்மா சைக்கிளில் ஜெட் வேகத்தில் வீடு திரும்பும் போது வாசலிலே தாத்தா நிலத்துக்கு போகறதுக்காக காத்திருப்பர்.. எங்கடா போனேன்னு கேட்கும் போது பச்சையா பொய் சொல்லுவேன், டியூசன் போய்ட்டு வந்தேன்.. அதையும் நம்பிட்டு சரி சரி னு நிலத்துக்கு கிளம்புவார்..
(தற்போது நான் மனைவிக்கு போன் பண்ணும் போது என் பையன் எப்பாவது எடுப்பான்.. அதுவும் இரண்டு ரிங்க்கு அப்புறம் தான்.. என்னடா போன்ல கேம் விளையாடுறயா என கேட்கும் போது “ஆன்லைன் கிளாஸ்” நடக்கும் போது யார் கேம் விளையாடுவா?? என கேள்வியை நம்ம பக்கம் திருப்புவான்.. சத்தியமா கர்மா இருப்பது உண்மையே!!! நான் எங்க தாத்தாகிட்ட சொன்னத என் பையன் எங்கிட்ட சொல்றான்..
ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் சைக்கிள் அனுபவம் புதைந்து கிடக்கும்.. எல்லோருடைய சைக்கிள் அனுபவத்தையும் தனி தனியா ஒரு பெரிய புத்தகத்தையே போடலாம்.. காதல், மகிழ்ச்சி, துரோகம், வலி, ஏமாற்றம், காத்திருப்பு, ஏக்கம், வெற்றி, தோல்வி,விளையாட்டு,அரட்டை,துக்கம் என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் சைக்கிளின் பங்கு கண்டிப்பாக எல்லோருக்கும் இருக்கும்..
பள்ளி விட்ட பத்தாவது நிமிடம் காதலியை பார்க்க பதின்ம வயதில் சைக்கிளில் புறப்பட்ட கோடி இளைஞர்களில் அடியேனும் ஒருவன்.. காதலியின் கடைக்கண் பார்வை நம்மீது வீசி விட வேண்டுமென சைக்கிளை ராக்கெட் வேகத்தில் செலுத்தும் போது, செயின் கழண்டி போகும் போது வருகின்ற வலிகளை வர்ணிக்க உலகத்தில் எந்த மொழியிலும் எழுத்துக்கள் இல்லை..
என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு மகிழ்ச்சியான, சோகமான தருணங்களில் சைக்கிள் கூடவே ஒரு நண்பனை போல் இருந்திருக்கிறது.. உண்மையில் அந்த அனுபவங்களை நினைத்து பார்த்தால் மனது மகிழ்ச்சியாக இருக்கும்..
“இதுவரை வாங்கியதில் Kindle மட்டுமே பயன்பாடு குறைவாக உள்ளது. காரணம், தற்போது அதிகத் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டு இருப்பதால், படிப்பதற்கு நேரமில்லை, ஆர்வமில்லை.”
என்ன கிரி பொசுக்குனு இப்படி சொல்லிடீங்க !!! படிப்பதை விட வேண்டாம்.. திரைப்படங்களை விட அதிகமாக பயன் படிப்பதில் உள்ளது.. நீங்கள் புதிய புத்தகங்களை படிப்பதற்கு பதில், நீங்கள் விரும்பி படித்த புத்தகத்தை திரும்ப படிக்கும் போது உங்கள் ஆர்வம் மீண்டும் கூடலாம்.. முயற்ச்சி செய்யவும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
நீங்க இப்ப ஏன் ஒரு சைக்கிள் வாங்கக்கூடாது?
“எங்க ஏரியாவுல நான் ஒரு பெரிய புறா வியாபாரி”
இதை சொன்னதும் கரகாட்டக்காரன் கவுண்டர் நகைச்சுவை நினைவுக்கு வந்தது.. ஆமா..இவர் பெரிய கப்பல் வியாபாரி 😀
புறா மீதான உங்கள் காதல் நன்கு அறிவேன்.
“என்னடா போன்ல கேம் விளையாடுறயா என கேட்கும் போது “ஆன்லைன் கிளாஸ்” நடக்கும் போது யார் கேம் விளையாடுவா?? என கேள்வியை நம்ம பக்கம் திருப்புவான்.. சத்தியமா கர்மா இருப்பது உண்மையே!!! நான் எங்க தாத்தாகிட்ட சொன்னத என் பையன் எங்கிட்ட சொல்றான்..
🙂 🙂 அனைவருக்கும் நடப்பது. என் பசங்களும் இதே கதை.. டேய்! நானே பெரிய டகால்ட்டி என்கிட்டையே கொளுத்தி போடுறியான்னு கேட்டால், சிரிப்பானுக.
“காதலியின் கடைக்கண் பார்வை நம்மீது வீசி விட வேண்டுமென சைக்கிளை ராக்கெட் வேகத்தில் செலுத்தும் போது, செயின் கழண்டி போகும் போது வருகின்ற வலிகளை வர்ணிக்க உலகத்தில் எந்த மொழியிலும் எழுத்துக்கள் இல்லை..”
டெலிகேட் பொசிசன் 🙂 .
“என்ன கிரி பொசுக்குனு இப்படி சொல்லிடீங்க !!! படிப்பதை விட வேண்டாம்.. திரைப்படங்களை விட அதிகமாக பயன் படிப்பதில் உள்ளது..”
புத்தகம் படிக்க பிடிக்கும் யாசின் ஆனால், அதை விட திரைப்படங்களை பார்க்க ரொம்ப பிடிக்கும். வெறித்தனமான ரசிகன்.
விட்டால், நாள் முழுக்க பார்த்துட்டே இருப்பேன்.
கடந்த 6 மாதங்களாக படமே பார்க்க முடியவில்லை.. (மொத்தமே 8 படங்கள் தான் பார்த்தேன்) பசங்க இருந்ததால்.
தற்போது யாரும் இல்லை எனவே இது போல ஒரு வாய்ப்பு கிடைக்க ஒரு வருடம் ஆகும்.
எனவே, படமாக பார்த்து தள்ளிக்கொண்டுள்ளேன். படிக்க பல முறை முயற்சித்தும் திரைப்பட ஆர்வமே வெற்றி பெறுகிறது. 🙂 .
விரைவில் படித்து எழுதுகிறேன்.
கிரி, இந்த முறை 2 மாதங்கள் ஊரில் இருப்பதால் ஒரு சைக்கிள் வாங்கலாம் என்பது என் எண்ணம்.. அப்படியே ஆறு, நிலம் சுத்தலாம், காலை உடற்பயிற்சிக்கு பயனா இருக்கும் என்பது என் எண்ணம்.. மனைவிக்கு புதுசா ஒரு பைக் வாங்கலாம் என்ற எண்ணம்.. (வீட்டில் சொந்தமா சைக்கிளோ / பைக்கோ இதுவரை இல்லை)..
நான் திரும்பி இங்கு வந்த பின் பைக் சும்மா தான் வீட்டில் இருக்கும் என்பதாலும், தற்போது மேல் வீட்டு வேலை நடப்பதால் ஒரு பெரிய தொகையை அதில் செலவழிக்க ஆர்வம் இல்லை..கடைசியில் இருவரது ஆசையும் நடக்காமல், எங்க மாமனாரோட பழைய டிவிஎஸ் ஜூபிடர் தான் இரண்டு மாதம் விடுமுறையில் உதவியது..
யாசின் நான் கூறியது தற்போது நீங்க இருக்கும் இடத்தில், இந்தியாவில் அல்ல 🙂 .