Amazfit GTS Smart Watch வாங்கலாமா?

5
Amazfit GTS Smart Watch

20+ வருடங்களாகக் கைக்கடிகாரம் கட்டவில்லை. இரு காரணங்கள் ஒன்று, மொபைல் மூலமாகவே நேரத்தைப் பார்ப்பதால், இன்னொன்று என் கைக்குப் பொருத்தமாக இல்லை என்ற என் எண்ணம். Amazfit GTS Smart Watch எப்படியுள்ளது?

Huami Amazfit GTS Smart Watch (Obsidian Black)

ஸ்மார்ட் வாட்ச் வாங்க முடிவாகியதும், எதை வாங்கலாம் என்று தேடியதில் Amazfit GTS Smart Watch பொருத்தமாக இருந்தது. Image Credit

இதை விடக் குறைவான விலையில் இருந்தவை தரம் குறைந்தவையாகவும், வாட்ச் போலத் தோற்றமளிக்காமலும் இருந்தன.

ஸ்மார்ட் வாட்ச் தேவை என்ன?

பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் வாட்ச் வாங்குவதற்குக் காரணம், எவ்வளவு தூரம் நடக்கிறோம், நம் உடல்நிலை குறித்த விவரங்கள் (இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு) போன்றவற்றைத் தெரிந்து கொள்வதற்காக.

இதனுடன் நேரம், தேதி, நாள், காலநிலை, மொபைலுக்கு வரும் அறிவிப்புகளை (Notification) தெரிந்து கொள்வதற்காக. நான் வாங்கியது இதற்காகவே.

உடல்நிலை குறித்துத் தினமும் தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் இல்லை, அதோடு அவ்வாறு அடிக்கடி பார்ப்பது சரியானது அல்ல.

Amazfit GTS Smart Watch பயனுள்ளதாக இருந்ததா?

வாங்கும் போது சிறு சந்தேகத்திலேயே வாங்கினேன், முழுமையாகப் பயன்படுத்துவோமா?! என்று.

உடல்நிலை விவரங்களைத் தெரிந்துகொள்ள வாங்க வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன் ஆனால், இதன் முக்கியப் பயனே இவை தான்.

முன்பே என் தேவைகளைத் தெளிவுபடுத்திக்கொண்டு வாங்கியதால், முழு மனநிறைவை அடைந்தேன், கூறப்போனால் கூடுதல் மகிழ்ச்சி அடைந்தேன்.

என் கைக்கு மிகப்பொருத்தமாக இருந்ததில் மிகத் திருப்தி 🙂 .

Zepp செயலி

ஸ்மார்ட் வாட்சை முழுமையாகப்பயன்படுத்த Zepp செயலி அவசியம். முன்பு AmazFit என்ற பெயரில் இருந்தது, தற்போது Zepp என்று பெயரை மாற்றி விட்டார்கள்.

இச்செயலி மூலமே அனைத்தையும் பார்க்க / கட்டுப்படுத்த முடியும்.

என்னென்ன பயன்கள்?

  • நேரத்தை மொபைலில் பார்க்க முடியும் என்றாலும், நேரம், தேதி, கிழமையை உடனடியாகப் பார்க்க வசதியாக உள்ளது.
  • மொபைல் Bluetooth உடன் இணைப்பதால், நம் மொபைலுக்கு வரும் அறிவிப்புகளை (Notification) இதில் காணலாம்.
  • குறுந்தகவல் (SMS), அழைப்புகள், மின்னஞ்சல் (Outlook / Gmail), சமூகத்தளங்களின் அறிவிப்புகள் ஆகியவை வரும்.
  • அழைப்பை மறுக்க, Mute செய்ய முடியும் ஆனால், பேச முடியாது.
  • வாகனத்தில் செல்லும் போதே யார் அழைக்கிறார் என்பதைப் பெயருடன் கவனிக்க முடியும். முக்கியமான அழைப்பாக இருந்தால், நிறுத்திப் பேசலாம், தேவையில்லையென்றால் புறக்கணிக்கலாம்.
  • Google Calender ல் இருந்து வரும் நினைவூட்டல்கள் (Reminder) அல்லாது வாட்சிலேயே நாம் நினைவூட்டல்களைச் சேர்க்கலாம். இவை எனக்கு மிகப்பயனுள்ளதாக உள்ளது.
  • Vibration போதுமான அளவுக்கு உள்ளது.
  • தூக்க வழக்கங்களைக் கூறுகிறது. ஆழ்ந்த உறக்கம், எத்தனை முறை எழுந்தோம், எவ்வளவு நேரம் தூங்கினோம் போன்றவற்றை Zepp செயலியில் காண முடியும்.
  • அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தால், ‘You have been sitting for too long‘ என்று கூறுகிறது.
  • Waterproof உள்ளது.
  • GPS வசதியுள்ளது ஆனால், நான் பயன்படுத்தவில்லை.

மற்ற தகவல்கள்

இவையல்லாது சில வசதிகள் உள்ளது ஆனால், செயல்படுத்த முடியவில்லை. இருப்பினும், இவை எனக்கு அவசியமில்லா வசதிகளே.

  • Zepp செயலியில் நம் விருப்பப்படி Watch Display வை மாற்ற முடியும் ஆனால், Zepp செயலியில் குறைவான அளவே உள்ளது.
  • AmazFIT GTS Watch Faces செயலியை நிறுவிக்கொண்டால், வித விதமான வகையில் மாற்றிக்கொள்ள முடியும்.
  • பேட்டரி 9 நாட்களுக்கு வருகிறது. இது ஒவ்வொருவரின் பயன்பாட்டைப் பொறுத்து மாறுபடும்.
  • AmazFIT தரும் சாதனத்தின் மூலமாகவே சார்ஜ் செய்ய முடியும். இது தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ வேறு கிடைப்பது கடினம் என்பது குறை.
  • 1.30 மணி நேரத்தில் சார்ஜ் ஆகும்.
  • ஒரே சமயத்தில் இரு Bluetooth சாதனங்களைப் பயன்படுத்த முடிகிறது.
  • Mobile Bluetooth எப்போதும் (24 மணி நேரங்களும்) ஸ்மார்ட் வாட்சுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
  • வெயில் வெளிச்சத்திலும் நேரம் மற்ற தகவல்கள் தெளிவாகத் தெரிகிறது.

இறுதியாக, நான் எதிர்பார்த்த வசதிகள் உள்ளன, எதிர்பார்த்தத்துக்கும் மேலும் சில இருந்தது மகிழ்ச்சி.

இரு மாதங்களாகப் பயன்படுத்திய பிறகே இதை எழுதியுள்ளேன்.

என்ன விலை?

விலை ₹9,999. தள்ளுபடியில் ₹7,650 க்கு வாங்கினேன். ₹9,999 க்கு வாங்குவது வீண். எனவே, தள்ளுபடியில் வாங்குவதே சரி.

இதன் அடுத்த வெளியீட்டில் Oxygen Level போன்றவை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவை தேவையென்றால், முயற்சிக்கலாம்.

மற்றபடி மேற்கூறிய மாடலே போதுமானது, அனைத்து வசதிகளும் உள்ளது.

நடப்பது, தூக்கம் போன்றவற்றைக் கண்காணிப்பது சரி ஆனால், மிக அதிகமாக உடல்நிலை பற்றிய விவரங்களைப் பார்ப்பது சரியல்ல.

அவை நம்மை நிம்மதியிழக்க வைக்கும்.

எனவே, மேற்கூறிய அளவில் பயன்படுத்தினால் மிகச்சிறப்பான சாதனம்.

கடந்த காலங்களில் வாங்கிய TVS Jupiter, Amazon Kindle, SONY Speaker யைத் தொடர்ந்து AmazFIT Smart Watch மிகுந்த திருப்தியை அளித்துள்ளது.

இச்சாதனத்தை வாங்க –> Link

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

5 COMMENTS

  1. i’m using Honor Band 4 (Mobile: Honor 9 Lite).

    But no GPS, BP and Oxy. monitoring

    Limited faces only (no customization)

    But I too very much satisfied with this product

  2. கிரி, இந்த பதிவு எனக்காகவே எழுதியது போல தோன்றுகிறது.. ஆறாவது / ஏழாவது படிக்கும் போது குளிக்கிற நேரத்த தவிர வாட்ச் (Q & Q எங்க மாமா சவூதியிலுருந்து வாங்கி கொடுத்தது, நண்பர்கள் மத்தியில் இப்படி தான் பந்தாவா சொல்லுவன்) கட்டாமல் இருந்தது இல்லை..12 வகுப்பின் போது அதே மாமா (அதே சவூதி…) ஆனால் வேற வாட்ச் (CASIO – BLACK RUBBER WATCH) செம்மையா இருக்கும்.. அப்பவே பௌலிங் போடும் போது வாட்ச் கட்டிக்கிட்டு தான் போடுவேன் (எங்க டீமோட பாஸ்ட் பௌலர் நான் தான் என்றால் நீங்க நம்பி தான் ஆக வேண்டும், வீட்ல கடிகாரம் கப் (வீர தழும்புகள்) எல்லாம் அடையாளமா இருக்கு, காசியப்பன் கடையில் வாங்கியது இல்ல). இன்று வரை கிரிக்கெட் விளையாடி கொண்டு தான் வருகிறேன்..ஆனால் இப்ப MEDIUM FAST பௌலர்..

    அதுக்கு அப்பறம் 2010 கல்யாணத்தின் போது கோட் போடும் (விண்ணை தாண்டி வருவாயா!!! “அன்பில் அவன்” பாட்டில் சிம்புவை நினைவில் கொள்ளவும்) போது கட்டினாதான் கெத்து என நண்பர்கள் கூற, ஒரு ரெண்டு மாசம் கட்டிட்டு ஊருக்கு திரும்பி வரும் போது மனைவியோட தம்பிகிட்ட பந்தாவா கொடுத்து விட்டு வந்துட்டேன். அப்பவே ஏங்க!!! COSTLY வாட்சை எதுக்குங்க??? தம்பிகிட்ட கொடுக்கிறிங்கன்னு பஞ்சாயத்து. (அவங்க தம்பிக்கு கொடுத்ததுக்கே இந்த நிலைமைனா, என் நண்பர்கள் யாரிடமாவது கொடுத்து இருந்தா “சேகர் செத்து இருப்பான் 2010 ல”)

    பத்து ரூபாய்க்கு துபாய் பஜார்ல வாங்கியதுனு, நான் மனைவி கிட்ட சொல்லல!!! ஏன்னா எனக்கு பொய் சொல்லறது பிடிக்காது)..போன வருஷம் என் மச்சான் வேலைக்கு இங்க வந்த போது கண்டுபுடுச்சி இருப்பான்.. ஆனால் ரொம்ப டீசன்டானவன் இதுவரை ஒரு வார்த்தை கேட்கவில்லை.. ஆனால் மனைவி மட்டும் இங்க வந்த பின்பு 100 தடவைக்கு மேல சொல்லி இருப்பாங்க!!!!

    தற்போது 2020 மூணு மாசம் முன்னாடி கூட படிச்ச, வேலை பார்த்த, ஊரில் தெரிந்த 40 வயசுக்குள்ள இருக்குறவங்களோட விக்கெட் விழும் போது, அடுத்து நம்ம விக்கெட் வீழ்ந்துற போகுதுன்னு வாக்கிங் போக நானும் நண்பனும் முடிவு செஞ்சோம். நண்பன்கிட்ட ஸ்மார்ட் வாட்ச் இருந்துச்சி.. எங்கிட்ட வாட்ச்சே இல்ல. தினம் நடைப்பயிற்சி முடிந்தவுடன் நண்பன் தகவல் சொல்லுவான்.. தினமும் பல மையில் நடக்கிறோம் என்ற பேரானந்தம்..சத்தியமா உனக்கு சாவே கிடையாதுடா யாசினு!! உள்ளுக்குள்ள பூரிப்பு… எமன் என் வீட்டு கதவை தட்டும் போது இன்னைக்கு நான் பிஸி!!! பக்கத்து வீட்டுக்காரன் Freeya இருக்கான் அவனை கூட்டிட்டு போ என்று சொல்லும் அளவுக்கு துணிச்சல்!!! எல்லாம் ஒரு மாதம் ஸ்மார்ட் வாட்ச் கொடுத்த புள்ளி விவர தைரியம்..!!! ஒரு மாதம் முடிந்த பின் நண்பனை காணாமல் போனவர்கள் பட்டியலில் தேடினேன்.. இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்..

    பிறகு தனியாக நடைப்பயிற்சி செல்ல தொடங்கினேன்.. ஒரு வாரம் சென்ற பின் மிகுந்த யோசனைக்கு பின் ஸ்மார்ட் வாட்ச் வாங்கலாமென்று அமேசான்ல் தேடினேன். எந்த மாடல் வாங்கலாம் என்று கொஞ்சம் குழப்பமாக இருந்த போது, (முன்பு முதலில் வாட்ச் கொடுத்தாரே அந்த மாமாவோட பையன் அமேசான்ல வேலை பாக்குறான்..) நான் ஸ்மார்ட் வாட்ச்சோட விலை, மற்ற விவரங்களை விசாரித்த பின் யாருக்கு என்று வினவினான்.. எனக்கு என்ற உடன் என்னிடம் சாம்சங் காலக்ஸி ஸ்மார்ட் வாட்ச் சும்மா இருக்கிறது என்று எனக்கு இலவசமாக கொடுத்தான்..(பாரி வள்ளலோட பரம்பரை போல)..

    விலையை விசாரிக்க போய் ஒரு தொலைப்பேசி அழைப்புல ஸ்மார்ட் வாட்ச்..தற்போது இரண்டு மாதமாக குளிக்கும் / தூங்கும் நேரம் தவிர வாட்ச் கையை விட்டு கழட்டுவது இல்லை.. ஆனால் நீங்க சொன்ன எந்த விஷியத்தையும் பயன்படுத்துவது இல்லை.. நேரம் பார்ப்பது, நடைப்பயிற்சி செல்லும் போது கட்டுவது.. இந்த பீளிங் கூட நல்ல தான் இருக்கு !!! “இளமை திரும்புதே” பாடல் BACKROUND இல் ஒலிப்பது போல் இருக்கிறது.. எனக்கும் ஸ்மார்ட் வாட்சிக்குமான ” அவன் ஒரு தொடர்கதை” இது தான்.. பின்னூட்டத்தை ரொம்ப நீட்டியதற்கு மன்னிக்கவும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @Varadaradjalou Pouvaragamourthy

    நிறைய பேர் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துறீங்க போல.. நான் தான் ரொம்ப தாமதம் 🙂

    @யாசின் நீங்க எப்படி ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு கதை வைத்து இருக்கீங்க 🙂 Amazing

    உங்களுடைய கிரிக்கெட் ஆர்வம் உண்மையிலேயே வியக்க வைக்கிறது.. ஏனென்றால், கிரிக்கெட் ஆர்வம் இருப்பவர்கள் கொஞ்ச வருடங்களுக்குப் பிறகு பார்க்க மட்டுமே செய்வார்கள் ஆனால், நீங்கள் இப்பவும் விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்!

    “அவங்க தம்பிக்கு கொடுத்ததுக்கே இந்த நிலைமைனா, என் நண்பர்கள் யாரிடமாவது கொடுத்து இருந்தா”

    ஹா ஹா ஹா அதென்னமோ பெரும்பாலான மனைவிகள் இதுபோலவே இருக்கிறார்களே.. எப்படி!

    “போன வருஷம் என் மச்சான் வேலைக்கு இங்க வந்த போது கண்டுபுடுச்சி இருப்பான்.. ஆனால் ரொம்ப டீசன்டானவன் இதுவரை ஒரு வார்த்தை கேட்கவில்லை.. ஆனால் மனைவி மட்டும் இங்க வந்த பின்பு 100 தடவைக்கு மேல சொல்லி இருப்பாங்க!!!!”

    ஹா ஹா செம.. யாசின் நீங்க உங்க மனைவி பற்றிச் சொல்லும் போது சிரிப்பு தாங்கல.. சரியான ஜோடி பொருத்தம்.

    உங்க மனைவியைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது.. உங்கள் நண்பர் சக்தியைச் சந்தித்தது போல 🙂 .

    “எமன் என் வீட்டு கதவை தட்டும் போது இன்னைக்கு நான் பிஸி!!! பக்கத்து வீட்டுக்காரன் Freeya இருக்கான் அவனை கூட்டிட்டு போ என்று சொல்லும் அளவுக்கு துணிச்சல்!”

    செம 😀

    “விலையை விசாரிக்க போய் ஒரு தொலைப்பேசி அழைப்புல ஸ்மார்ட் வாட்ச்”

    அதிர்ஷ்டக்காரர் இந்த விஷயத்தில் 😀 சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காது கிடைக்கும் போது .. அலாதியான உணர்வு கிடைக்கும்.

    “தற்போது இரண்டு மாதமாக குளிக்கும் / தூங்கும் நேரம் தவிர வாட்ச் கையை விட்டு கழட்டுவது இல்லை”

    தூங்கும் போது கழட்டாதீங்க..உங்க தூக்க விவரங்களை / வழக்கங்களை இதன் மூலம் அறியலாம்.

    “இளமை திரும்புதே” பாடல் BACKROUND இல் ஒலிப்பது போல் இருக்கிறது”

    ஹா ஹா யாசின் கலக்கல்

    கமெண்ட்.. பின்னி எடுத்து இருக்கீங்க. படித்துச் சிரித்துட்டு இருந்தேன் 🙂 .

  4. ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு கதை : இங்கு இருக்கின்ற எல்லா மனிதர்களுக்குள்ளும் கதைகள் இருக்கின்றன. அதை மீண்டும் மீண்டும் அசை போடுவது எனக்கு பிடித்தமான ஒன்று. பள்ளி, கல்லுரி காலங்களில் நடந்த பல நிகழ்வுகளை இன்றும் அசை போட்டு கொண்டு தான் இருக்கிறேன்..

    கிரிக்கெட் : விளையாட்டிலா வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. பேட்மிட்டன் விளையாடவும் ரொம்ப பிடிக்கும். நேரம் கிடைக்கும் போது விளையாடியும் வருகிறேன். ராகுல் டிராவிட் & சந்தர்பால் இரண்டு பேர்களை மட்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்ற ஆசை உண்டு..

    என் மனைவி : அதிஷ்ட தேவதை ..(எங்க அம்மா சொல்லுவாங்க!!!) கரடுமுரடா பயணப்பட்ட என் வாழ்க்கையை செம்மைப்படுத்தியது என் மனைவி மட்டும் தான் என்றால் மிகையாகாது.. திருமணமே செய்ய வேண்டாம் என்ற தீர்மானத்தை கொண்டிருந்த என் வாழ்வில் வீசிய வந்தம் அவள்.. அவளின் வருகை என் வாழ்வின் சந்திரோதயம்.. வாழ்வில் ஜெயித்தது நான் ஆனால் “வெற்றி” மனைவியோடது..நேரம் கிடைக்கும் போது சந்திப்போம்..

    அதிர்ஷ்டக்காரர் : வாழ்வில் பெற்றதை விட நான் இழந்தவைகள் அதிகம்.. வாழ்க்கையில் ஒருவன் அடைந்ததை கண்டு பொறாமைப்படாதீர்கள்.. அவன் இழந்ததைவைகள் உங்களுக்கு தெரியுமானால் அடைய வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு வராது) எங்கோ, எப்பவோ இணையத்தில் படித்தது.. மனதில் ஆழமாக பதிந்து விட்டது..என்னுள் எழும் பொறாமை தீயை அணைத்த வரிகள் இது..

    தூக்க விவரங்கள் : படுத்த 3 / 4 நிமிடத்துக்களே தூங்கிடுவேன். அதனால் இந்த விவரத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை..

  5. “வாழ்க்கையில் ஒருவன் அடைந்ததை கண்டு பொறாமைப்படாதீர்கள்.. அவன் இழந்ததைவைகள் உங்களுக்கு தெரியுமானால் அடைய வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு வராது”

    ஏற்கனவே ஒருமுறை கூறி இருக்கீங்க.

    “படுத்த 3 / 4 நிமிடத்துக்களே தூங்கிடுவேன். அதனால் இந்த விவரத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை.”

    நான் ஐந்து நொடிகளுக்குள்ளே தூங்கி விடுவேன் 🙂 . இது நான் தூங்குவது Light sleep or deep sleep என்று கூறுகிறது. எவ்வளவு தூங்கினேன், தூங்குகிறேன் என்பதையும் நாள் வாரியாக கூறுகிறது.

    இடையில் விழித்தாலும் அதுவும் பதிவாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!