விலங்கு | தமிழ் வெப் சீரிஸ் | கொலை செய்தது யார்?

2
விலங்கு

மிழ் வெப் சீரிஸ் பல வந்து இருந்தாலும், பெரிய வெற்றிப் பெறாமல், மக்களின் கவனிப்பை பெறத்தவறியது. இக்குறையை விலங்கு சரி செய்துள்ளது.

விலங்கு

தலை துண்டிக்கப்பட்டு ஒருவர் காட்டில் கொலை செய்யப்படுகிறார். காவல்துறையினர் சென்று விசாரித்துக் கொண்டு இருக்கும் போது தலை காணாமல் போய் விடுகிறது. Image Credit

யார் கொலை செய்தது என்பதே பிரச்சனையாக இருக்கும் நிலையில், தலை காணாமல் போனது மிகப்பெரிய பிரச்சனையாகி விடுகிறது.

இறுதியில் தலையைக் கண்டு பிடித்தார்களா? யார் செய்தது? என்பதைப் பரபரப்பாகக் கூறுகிறது விலங்கு.

காவலர்கள் வாழ்க்கை

காவலர்கள் வாழ்க்கையைப் பல திரைப்படங்கள் கூறி இருந்தாலும், போகிற போக்கில் அவர்கள் வலியை அனைவரும் உணரும் படி அற்புதமாக எடுத்துள்ளார்கள்.

காவல்துறையைப் பலரும் பல விதமாக எண்ணினாலும், அவர்கள் அடக்குமுறை குறித்த விமர்சனங்கள் இருந்தாலும் அவர்களுக்கும் குடும்பம், பிரச்சனைகள் உள்ளது என்பதை இயல்பாகக் கூறியுள்ளார்கள்.

பணிச்சுமை, நெருக்கடி, அரசியல் என்று அனைத்தையும் விளக்கியுள்ளார்கள்.

ஒருவரின் கஷ்டத்தைக் கூறுவதில் இரண்டு வகையுள்ளது.

இப்படிக் கஷ்டப்பட்டேன், படுகிறேன் என்று புலம்பலாகக் கழிவிரக்கமாகக் காட்சிப்படுத்துவது ஒருவகை.

நேரடியாகக் கூறாமல் காட்சிகளினூடே கூறுவது இரண்டாவது வகை. விலங்கு கவனிக்கப்பட்டது இரண்டாம் வகைத் திரைக்கதையால்.

மக்கள் அடுத்தவர்களின் கஷ்டத்தை, புலம்பலை, பார்த்தியா! எனக்கு எவ்வளோ கஷ்டம் என்பதைப் பார்க்க, கேட்கத் தயாராக இல்லை ஆனால், அதையே நம் பிரச்சனைகளோடு பொருந்தும் படி கூறினால் கவனிப்பார்கள்.

இதில் வரும் காவலர்கள் பிரச்சனை, விமல் குடும்பப்பிரச்சனை ஒவ்வொரு வீட்டிலும் நடப்பதாலே அனைவரையும் கவர்ந்து நம்மை அதோடு பொருத்த முடிகிறது.

குறிப்பிடத்தக்கவர்கள்

கைதிகளை விசாரிக்கும் முறையை விசாரணை படத்திலேயே பார்த்து இருந்தாலும், இதில் இன்னும் இயல்பாக உள்ளது.

நகைச்சுவை நடிகரான பாலா இதில் மிரட்டியிருக்கிறார்.

Transformation ன்னு சொல்வதற்குப் பாலா மிகப் பொருத்தமாக உள்ளார். ப்ப்பா! என்ன ஒரு நடிப்பு. பலர் இவர் மீது காண்டாகி இருப்பது இவரின் நடிப்புக்கான வெற்றி.

நகைச்சுவை கதாப்பாத்திரம் செய்து கொண்டு இருந்தவரை இது போலப் பார்க்கத் தாறுமாறாக உள்ளது. இவருக்குள் இப்படியொரு நடிப்பா என்று வியக்க வைத்து விட்டார்.

பாவம் புண்ணியம் பார்த்தால், உண்மையை வெளியே கொண்டு வர முடியாது என்பது விசாரணையில் தெரிய வருகிறது.

விசாரணை சில நேரங்களில் சரியாக வருகிறது, சில நேரங்களில் தவறாக முடிந்து விடுகிறது. விசாரிக்கவும் தனித்திறமை வேண்டும்.

பல வருடங்களாகப் பெயர் சொல்லிக்கொள்ளும்படி கதாப்பாத்திரம் இல்லாமல் தவித்த விமலுக்கு விலங்கு தீர்வாகி உள்ளது.

மென்மையான காவல் அதிகாரி கதாப்பாத்திரம். அதோடு மனைவி இனியாவுடனான அன்பு என்று இருவருமே அசத்தியுள்ளார்கள்.

விமல் பணிச்சுமை காரணமாக எதிர்நோக்கும் குடும்பப் பிரச்சனைகளுக்குப் பரிதவிக்கும் நடிப்பு அபாரம். விமல் பல காலத்துக்குத் தன் நடிப்பை பெருமையாக நினைக்கலாம்.

ரொம்ப இயல்பாக, ஒவ்வொரு சாதாரணப் பொதுஜனத்தையும் தனது நடிப்பால் பிரதிபலிக்கிறார்.

இதில் கொலையாளியாக வந்துள்ளவர் அருமையான நடிப்பு. அப்பாவியாக வந்து இறுதியில் அடேங்கப்பா! என்று மிரட்டியுள்ளார்.

முனீஸ்காந்துக்குப் பெரியளவில் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் அளவுக்கு வாய்ப்பில்லை, வந்து செல்கிறார்.

மூத்த அதிகாரிகளாக வருபவர்கள் நடிப்புக் கொஞ்சம் கூட நடிப்பு போல இல்லாமல், அவ்வளவு இயல்பாக உள்ளது. உண்மையாகவே இவர்கள் காவல் அதிகாரிகளோ! என்று நினைக்க வைக்கிறது.

ஒவ்வொரு கொலையாக விமல் கூற, மனோகர் யப்பா முடியலடா! என்று களைப்பாகி கலங்குவது எவரையும் சிரிக்க வைக்கும்.

ஒளிப்பதிவு & பின்னணி இசை

ஒளிப்பதிவு & கலை மிகச்சிறப்பாக உள்ளது. உண்மையான காவல்நிலையம் போலவே உள்ளது. அதோடு எடுக்கப்பட்ட காட்சிகளும் நாடகத்தன்மையுடன் இல்லாமல் வெகு இயல்பாக உள்ளது.

பின்னணி இசையும் அசத்தல். குறிப்பாகக் கிராமத்து இசைக்கு, அவர்கள் வாழ்க்கை முறையிலான இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

தரமான ஒலிப்பெருக்கியில் பார்த்தால் (கேட்டால்) அற்புதமான அனுபவத்தைத் தரும்.

ஒரு கிராமத்தில் விசாரணை எப்படி நடக்குமோ அதையொட்டி எடுத்துள்ளார்கள். தேடலுக்கு நாயை ஏன் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி வருகிறது.

இது போலச் சில கேள்விகள் உள்ளது ஆனால், அதைக்கேட்டால் பார்க்கும் போது சுவாரசியம் இருக்காது. எனவே, தவிர்க்கிறேன்.

சாதி பிரச்சனையும் போகிற போக்கில் சொல்லப்படுகிறது.

இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் பிரூஸ் லீ தோல்விக்குப் பிறகு எடுத்தப்படம். அறிமுக விழாவில் தோல்விப்படத்தை எடுத்ததற்காக அடைந்த அவமானங்களைக் கூறி பேச முடியாமல் கண் கலங்கினார்.

யார் பார்க்கலாம்?

ஐந்து இடங்களுக்கு மேல் கெட்ட வார்த்தை வருகிறது, அடல்ட் காட்சிகளும் வருகிறது. குடும்பத்துடன் பார்க்க முடியாது.

விலங்கு & 6 Underground இரண்டுமே சிறுவர்களும் பார்க்க விரும்பும் கதை ஆனால், இரண்டிலுமே சில காட்சிகளால் அவர்களுக்குக் காட்ட முடியாத நிலையாகிறது.

படம் முழுக்கவே அப்படித்தான் என்றால், சமாதானப்படுத்திக்கொள்ள முடியும் ஆனால், ஓரிரு காட்சியால் மொத்தமுமே பார்க்க முடியாமல் போவது ஏமாற்றமளிக்கிறது.

இயல்புக்காக இக்காட்சிகள் வைக்கப்பட்டதாகக் காரணம் கூறினாலும், குறைந்தபட்சம் வார்த்தைகளை Mute செய்து இருக்கலாம். புரிந்துகொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

மற்றபடி அனைவரையும் பார்க்கப்பரிந்துரைக்கிறேன்.

Zee 5 ல் காணலாம்.

Genre Crime thriller
Written by Prasanth Pandiyaraj
Directed by Prasanth Pandiyaraj
Starring Vemal, Ineya, Bala Saravanan, Munishkanth
Music by Ajesh
No. of seasons 1
No. of episodes 7
Producer P. Madan
Cinematography Dinesh P
Editor Ganesh Siva
Production company Escape Artists
Original network Zee5
Original release 18 February 2022

தொடர்புடைய திரை விமர்சனம்

Aranyak | Series | கொலைகளைச் செய்வது யார்?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. நேற்று ஒரு நண்பனிடம் விலங்கு சீரிஸ் பற்றி பேசி கொண்டிருக்கும் போது, நீங்கள் குறிப்பிட்டது போலவே சொன்னான்.. ஒரு தோல்வியினால் துவண்டு கொண்டிருக்கும் போது ஒரு வெற்றி கிடைக்கும் போது அதன் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது.. கிட்டத்திட்ட விமலின் நிலையும், இயக்குனர் நிலையும் ஒன்று தான்.. கட்டாயம் ஒரு வெற்றியை பெற்றாக வேண்டிய நிலையில் இருந்தனர்..

    இதன் தொடர்ச்சியாக இருவர்க்கும் படங்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.. களவாணி, வாகை கூடவா படத்தில் விமலின் யதார்த்தமான நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.. தற்போதும் இந்த இரு படங்களின் காட்சிகளை பார்ப்பதுண்டு.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின்

    “கிட்டத்திட்ட விமலின் நிலையும், இயக்குனர் நிலையும் ஒன்று தான்.. கட்டாயம் ஒரு வெற்றியை பெற்றாக வேண்டிய நிலையில் இருந்தனர்..”

    உண்மை தான்.

    களவாணி சூப்பர்..ரொம்ப இயல்பா இருக்கும்.. அதோட விமலுக்கு நன்கு பொருந்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here