டிவிஎஸ் ஜுபிடர் | அசத்தல் வண்டி

5
Jupiter அசத்தலான டிவிஎஸ் ஜுபிடர்

டந்த 2019 ஜூன் மாதம் வாகனம் வாங்கலாம் என்று முடிவாகி, பல வாகனங்களைப் பரிசீலித்து டிவிஎஸ் ஜுபிடர் தேர்வானது.

மனைவி இதையே பரிந்துரைத்தார். இந்த வண்டியை வாங்கும் வரை எனக்குப் பெரியதாக விருப்பமில்லை / ஆர்வமில்லை.

தெரிந்தவரை (Mechanic) அழைத்துக்கொண்டு சென்றேன். எனக்குக் கறுப்பு நிறம் தான் பிடிக்கும் என்பதால், இதையே தேர்வு செய்தேன்.

ஜூபிடர் வகைகள்

ஜூபிடர், ஜூபிடர் ZX, ஜூபிடர் ZX DISC, ஜூபிடர் Classic

நான் வாங்கியது டிவிஎஸ் ஜுபிடர் Basic Model. இதில் மட்டுமே கறுப்பு நிறம் உள்ளது.

கறுப்பு நிறம் பெரும்பாலானவர்களுக்குப் பிடித்தமானது.

எனவே, இந்நிறத்தை மற்ற மாடல்களுக்கும் கொண்டு வர வேண்டும். கறுப்பு நிறத்துக்காகவே Basic Model வாங்கினேன்.

ஜூபிடர் ZX, ஜூபிடர் ZX DISC இந்த இரண்டிலும் கால் வைக்கும் பகுதி வெளிர் நிறத்தில் உள்ளதால், விரைவில் அழுக்காகி விடும்.

இப்படி ஏன் வடிவமைத்தார்கள் என்பது புரியவில்லை!

எப்படியுள்ளது டிவிஎஸ் ஜுபிடர் ?

முழுமையான மன நிறைவைக் கொடுத்த வாகனம்.

இந்த மாடலில் ஒரே ஒரு குறை Kilo meter Reset வசதியில்லை. எப்போதுமே எங்காவது சென்றால், அப்பகுதிக்கு எவ்வளவு கிலோ மீட்டர் ஆனது என்று பார்ப்பேன்.

பெட்ரோல் போட்டால், குறிப்பிட்ட இடம் செல்ல வண்டி எவ்வளோ கிமீ ஓடியது என்று கணக்கிட எளிதாக இருக்கும்.

இந்த வசதி இல்லாதது மட்டுமே குறையாக இருந்தது, மற்றபடி எதுவுமில்லை.

உயரம் குறைந்தவர்களுக்குக் கால் எட்டுவதில் சிரமம் இருக்கும்.

ஓட்ட எப்படியுள்ளது?

செமையா இருக்கு. கோவை செல்ல வேண்டி இருந்தது (வீட்டிலிருந்து 80 கிமீ) அக்கா, “தம்பி! ஜூபிடரிலேயே போலாமா” என்று கேட்டார்கள்.

அவ்வளவு தூரம் செல்லும் எண்ணமே சுத்தமாக இல்லை ஆனால், அக்காவே கேட்குறாங்க, போய்த்தான் பார்ப்போம் என்று முடிவு செய்து போனோம்.

 • இடுப்பு வலி, கை வலி என்று எதுவுமே இல்லை. வண்டி பட்டாசாக உள்ளது.
 • 30 – 40 கிமீ (இருவராக) ஓட்டினால் உட்காரும் இடம் மட்டும் எரிச்சலாக இருக்கும்.
 • எனவே, வண்டியை நிறுத்தி ஓரிரு நிமிடங்கள் நின்று விட்டுப் பின்னர் எடுத்துச் செல்ல வேண்டும். இது ஜூபிடர் வண்டியல்ல எந்த வண்டிக்கும் பொருந்தும்.
 • Pickup செமையாக உள்ளது. தடுமாற்றம் இல்லாமல் வண்டியை எடுக்க முடிகிறது.
 • கைகளுக்குச் சரியான தூரத்தில் “Handlebar” உள்ளதால், ஓட்டும்போது Balance சரியாக உள்ளது. பெண்களுக்கு ஓட்டவும் மிக வசதியாகவுள்ளது.
 • வண்டியின் வடிமைப்பு அசத்தலாக, சிக்குன்னு சிறுத்தைக் குட்டிபோல உள்ளது 🙂 .
 • குறிப்பிடத்தக்க முக்கியமான வசதி, பெட்ரோல் போட இருக்கையைத் திறக்க வேண்டிய அவசியம் இல்லாமல், வெளிப்பகுதியிலேயே போட்டுக்க முடியும்.
 • தலைக்கவசம் மற்றும் சில பொருட்களை இருக்கை அடியே வைக்க இட வசதியுள்ளது.
 • வாகன உரிமம், காப்பீடு போன்றவற்றை இருக்கையின் கீழே சொருகி வைக்க வசதியுள்ளது.
 • பின்னால் அமர்பவருக்கு மிக வசதியாகவுள்ளதாக மூன்று அக்காக்களுமே கூறி விட்டார்கள்.
 • வண்டியைத் துடைத்தால் 70 நாட்களாகியும் புது வண்டியைப் போலப் பளபளக்கிறது.
 • Tubeless Tyre உள்ளது.
 • வார இறுதிகளில் ஓட்டி மட்டுமே 1700 கிமீ, 70 நாட்களில் அடைந்து விட்டது.

மூன்று முறை கோவையும் (80 + 80) ஒரு முறை ஈரோடும் (40 + 40) இவையல்லாமல் குண்டேரிப்பள்ளம் (இரு முறை), பண்ணாரி (இரு முறை), கொடிவேரி, கள்ளிப்பட்டி போன்ற இடங்களுக்குச் சென்று வந்தேன்.

என்ஜின் செட் ஆவதற்காக அதிகபட்சம் 60 கிமீ & பெரும்பாலும் 40 கிலோமீட்டரிலும் ஓட்டினேன்.

Dhimbam

பண்ணாரி திம்பம்

பண்ணாரி சென்றபோது திம்பத்துக்கு (27 கொண்டை ஊசி வளைவுகள்) திடீர் முடிவாகச் சென்று வந்தோம். எந்த முக்கலும் முனகலும் இல்லாமல் அசத்தலாக வண்டி சென்றது.

தோராயமாக லிட்டருக்கு 55 கிமீ கிடைக்கிறது, பின்னர் அதிகரிக்கலாம்.

ஒரே சமயத்தில் ₹300 க்கு பெட்ரோல் (ஆகஸ்ட் 2019) போட முடிகிறது. ₹300 க்கு போட்டால், 220 கிமீ தோராயமாகக் கிடைக்கிறது.

பெட்ரோல் தீரப்போகிறது என்றால் எச்சரிக்கை விளக்கின் மூலம் நம்மை எச்சரிக்கைப்படுத்துகிறது.

சென்னையில் உள்ள அக்கா, ஜூபிடர் வாங்கப்போவதாகவும், வண்டி ஓட்ட ரொம்ப நன்றாக உள்ளதாகவும் கூறினார்.

தற்போது தொலைவான இடத்து உறவினர் வீடு செல்லலாம் என்றால், உடனே கிளம்பி விடுகிறேன் 🙂 . எங்காவது வண்டியை ஓட்டிக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது.

அதிலும் “பங்களாபுதூர்” வயல்கள், வாய்க்கால்கள் வழியாகச் செல்வது சொர்க்கம் 🙂 .

பயணக் குறிப்புகள் (ஜூலை 2019)

வாகனம் வாங்க திட்டமிருந்தால், ஜூபிடர் தாராளமாக வாங்கலாம். தாறுமாறாகப் பரிந்துரைக்கிறேன். டிவிஎஸ் என்பதால், பராமரிப்பு மிக எளிது, செலவு குறைவு.

இதை ஆர்வக்கோளாறில் கூறவில்லை, 1700 கிமீ ஓட்டியதற்குப் பிறகே இதைக் கூறுகிறேன்.

5 வருட காப்பீடு*, RTO பதிவுடன் கோபியில் ₹73,000 வந்தது (*ஜூன் 2019).

டிவிஎஸ் நிறுவனம் பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கியுள்ள தற்போதைய நிலையில், நான் ஒரு வண்டியை வாங்கி, அவர்களின் ஒரு தயாரிப்புக்கு இப்படியொரு கட்டுரை எழுதவும் வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சி.

நம்ம ஊரு வண்டி டிவிஎஸ் 🙂 .

கொசுறு

700 கிமீ ஓடியபிறகு “First Service” க்காக அழைத்தார்கள், வண்டியைக் கொடுத்து 90 நிமிடங்களில் பெற்றுக்கொண்டேன். வண்டியைக் கழுவி கொடுத்ததோடு பெரியதாக எதுவும் செய்த மாதிரி தெரியவில்லை.

வழக்கம்போல எண்ணெய் மாற்றிக்கொடுத்தார்கள், கட்டணத்துடன்.

ஒரு வாரம் கழித்து ஒரு பெண் அழைத்து “சார் வண்டி எப்படி உள்ளது? ஏதாவது பிரச்சனை உள்ளதா?” என்று விசாரித்தார்.

நான் “வண்டி சூப்பரா இருக்கு” என்றதும் அவர் குழம்பி விட்டார்.

பெரும்பாலும், “ஓகே ங்க, எதுவும் பிரச்சனையில்லை அல்லது இந்தப் பிரச்சனையுள்ளது” என்பார்கள்.

நான் சூப்பரா இருக்கு என்றதும், எதோ தவறா புரிந்து கொண்டது போல, திரும்பக் கேட்டார்.

ஆமாங்க, வண்டி சூப்பரா இருக்கு.. ஓட்டுறதுக்கு செமையா இருக்கு” என்றேன்.

அவர் மகிழ்ச்சியடைந்தது இந்தப்பக்கம் தெரிந்தது 🙂 . “தேங்க்ஸ் சார். எதுவும் பிரச்சனைன்னா சொல்லுங்க” என்றார். “கண்டிப்பா” என்றேன்.

வண்டி பிரச்சனையானால், ஏன்டா இவனுக்கு வண்டியை விற்றோம்! என்று நினைக்க வைத்து, “அடப்பாவி! அன்னைக்கு அப்படி சொன்னான்.. இன்னைக்கு நம்மை இப்படி கொல்லுறானே” ன்னு நினைப்பாங்க 😀 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

 1. Superb கில்லாடி. பைக்ல போகும் போது ஹெல்மெட் போட மறந்துறாதீங்க 🙂

 2. Giri, Thanks for this article. Same scenario at my home. I’m planning to buy a new two wheeler to replace my TVS excel.
  I will definitely try TVS jupitor 🙂

 3. கிரி,
  மிகவும் அழகாக கூறி உள்ளீர்கள். ஆனால் நெடுநாட்களாக ஒரு விஷயம் TVS தயாரிப்புகள் மீது 2 குற்றச்சாட்டுகள் . இவர்கள் தங்களுடைய தயாரிப்புகளை ௨ வருடம் மட்டுமே வைத்திருப்பார்கள் என்று நீண்ட நாட்கள் முன்பு இவர்களுடைய சுசூகி சாமுராய் என்று ஒரு வண்டி வந்தது அது பார்ப்பதற்கும் ஓட்டுவதுற்கும் நன்றாக இருந்ததால் அதை வாங்க முடிவு செய்தேன் ஆனால் அப்பொழுது என்னை விட வயதி மிகவும் மூத்த அலுவளுக நண்பர் ஒருவர் இந்த காரணத்தை சொல்லி வாங்க வேண்டாம் என்று கூறினார் . அந்த சமயம் சிற்சில காரணங்களுக்கு வண்டி வாங்குவது தள்ளி போனது பின்பு வாங்கலாம் என்று போனால் சாமுராய் காணாமல் போய்விட்டார். இதே போல் ஷோகன் என்ற வண்டியும் காணாமல் போய்விட்டது நடுவில் விக்டர் என்று ஒரு வண்டியை கொண்டு வந்தார்கள் நன்றாக விற்பனை ஆனது திடீரென்று அதுவும் காணாமல் போய் விட்டது . நானும் சாமுராய் மறந்து ஹோண்டா passion வாங்கி 18 வருடங்கள் ஓட்டினேன்
  இரண்டாவது — பாகங்கள் தரமானதாக இருக்காது என்றும் பினிஷிங் சுமாராக தான் இருக்கும் அதிகபட்சமாக 5 வார்டுடங்கள் தாக்கு பிடிக்கும் என்று எனது நண்பர் கூறுவது உண்டு –இந்த காரணம் TVS மட்டும் அல்ல பஜாஜ் பொருந்தும்

 4. கிரி, படிக்க படிக்க ரொம்ப சுவாரசியமாகவும், ஆர்வமாகவும் இருந்தது.. கல்லுரியில் படிக்கும் போது ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டெர் வாங்க வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு!!! நண்பர்கள் யாராவது லிப்ட் கொடுத்த கூட வண்டியில் ஏற மாட்டேன்.. (காரணத்தை சொல்ல மாட்டேன்) ஏதாவது சொல்லி தவிர்ப்பேன்.. உண்மையான காரணம் சொந்தமா வண்டி வாங்கி ஓட்ட வேண்டும் என்ற கனவு மட்டுமே!!! (சில தருணங்களில் பொல்லாதவன் தனுஷ் போல அவமானப்பட்டதும் உண்டு)..

  வெளிநாடு வந்து எல்லோருடைய ஆசைகளையும் பூர்த்தி செய்து, எனக்காக கனவுக்கான பணத்தை சேமித்து 2009 இல் ஸ்பிளெண்டெர் வாங்க போகும் தருணத்தில், நண்பன் ஒருவனுக்கு வேலைக்காக அவசர பண உதவி தேவைபட்டது.. எல்லா வழிகளும் மூடிவிட நான் உதவினேன்.. உதவினேன் என்பதை விட என் கனவை கலைத்தேன் என்று தான் சொல்ல வேண்டும்..

  அந்த நிகழ்வுக்கு பின் பல லட்சங்கள் சம்பாரித்தலும் வண்டி வாங்க முடியவில்லை!!! நான் ஊருக்கு நிரந்தரமாக வரும் போது வாங்கி கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.. தற்போது நினைத்து பார்த்தாலும் கொஞ்சம் வருத்தமாக இருக்கும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 5. @விஜய் கேப்டன் இரண்டு தலைக்கவசம் வாங்கி வைத்துள்ளேன் 🙂 .

  @மணிகண்டன் வாங்குங்க.. செமையா இருக்கு

  @சரவணன் தகவலுக்கு நன்றி 🙂 . பார்க்கிறேன்.. என்னுடைய வண்டி எத்தனை வருடங்கள் வருகிறது என்று.

  @யாசின் அடடா.. என்ன ஒரு சோகம்.

  யாசின் உங்களுக்கும் எனக்கும் ஒரு பொருத்தம் உள்ளது 🙂 .

  என்னுடைய விருப்ப வண்டியும் ஸ்ப்லெண்டர் தான் 🙂 . நான் 2007 ல் வண்டி வாங்கிய போது ஸ்ப்லெண்டர் + தான் இருந்தது. தற்போது அதை என் அக்கா கணவர் ஒட்டிக்கொண்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here