ஹா(ர்)ரன் சைக்கோக்கள்

4
ஹா(ர்)ரன் சைக்கோக்கள்

ந்தியாவில் எங்கே சென்றாலும் சகிக்கவே முடியாத ஒரு இம்சை, வாகன ஓட்டிகள் (ஹா(ர்)ரன் சைக்கோக்கள்) எழுப்பும் ஹாரன் ஒலி.

சாலையில் யாருமே இல்லையென்றாலும், முன்னே நகரவே முடியாது என்று 100% தெரிந்தாலும் ஹாரன் தான்.

இந்தச் சைக்கோக்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை. Image Credit

ஹா(ர்)ரன் சைக்கோக்கள்

சென்னையில் வாகனம் ஓட்டும் போது நெரிசலை கூடச் சகித்துக்கொள்ளலாம் ஆனால், சனியனை மடியில் கட்டிக்கொண்டு சுற்றுவது போல எங்கே சென்றாலும் ஹாரனை அலற விட்டுச் சாகடிக்கிறார்கள்.

நானும் என்னுடைய அக்கா பையனும் கோபியில் வாகனத்தில் செல்லும் போது, நாங்கள் இருவர் ஒரு வாகனத்தில், இன்னொருவர் அவரது வாகனத்தில் அவ்வளவே! அவ்வளவு பெரிய சாலையில் வேறு எவருமே இல்லை.

ஆனாலும், ஹாரனை அடித்துக்கொண்டே சென்று கொண்டு இருந்தார். “மாம்ஸ் யாருமே இல்லாத சாலையில் யாருக்கு இவர் ஹாரன் அடிக்கிறார்?” என்று கேட்டான்.

விரல் அனிச்சையாகவே ஹாரனை அடித்துக்கொண்டுள்ளது, அவருக்கே ஹாரனை அடித்தபடி செல்கிறோம் என்ற உணர்வே இல்லை.

இவர் போலத் தான் பெரும்பான்மையோர் உள்ளனர்.

ஆண்டவனுக்கே வெளிச்சம்

சென்னையில் சிக்னலிலிருந்து 100 அடி தொலைவில் நெரிசலில் நிற்பார்கள். பச்சை விளக்கு ஒளிர்ந்ததும் / ஒளிரும் முன்பே ஹாரன் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

எவ்வளவு தான் ஹாரன் அடித்தாலும் நமக்கு முன்னால் உள்ளவர்கள் நகர்ந்தால் தான் நாமும் நகர முடியும் என்ற அடிப்படை அறிவு இல்லை.

அப்புறம் ஏன் ஹாரன்? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

மேலை நாடுகளில் ஹாரன் ஒலி எழுப்பப்பட்டால், அது அதிசய நிகழ்வு. உடனே ஹாரன் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்ப்பார்கள்.

காற்று மாசு மட்டுமே மோசமானதல்ல, ஒலி மாசுபாடும் மிக மிக மோசமானதே!

Manhole

சென்னையில் வழியெங்கும் Manhole. திடீர் பள்ளம், மேடு வழக்கமானது.

எப்படி வேகமாகச் சென்றாலும் அதிகபட்சம் 5 / 10 நிமிடங்கள் முன்னே செல்லலாமே தவிர, பெரியளவில் வித்யாசம் இருக்காது. இதற்கேன் பேய் மாதிரி போகணும்? பதட்டம் ஆகணும்?!

நெரிசலாக இருந்தால், 30 / 40 கிமீ தான் என்னுடைய வேகம். சாலை காலியாக இருந்தால், 50 கிமீ வரை செல்வேன். இது பதட்டத்தைக் குறைக்கிறது, கோபத்தைத் தவிர்க்கிறது.

வேகமாகச் சென்றால், Manhole போன்றவற்றை எதிர்பார்க்க முடியாமல், மேடு பள்ளத்தில் ஏறி இறங்கி கடுப்போடு ஓட்ட வேண்டியது இருக்கும். போதாததுக்கு இந்த ஹாரன் சைக்கோக்கள்.

வாகனம் ஓட்டும் போது அவ்வப்போது ஒன்று தோன்றும், “ஏதாவது அதிசயம் நிகழ்ந்து கிறுக்கனுக மாதிரி ஹாரன் அடிப்பவர்கள் ஹாரன் செயலிழந்து விடாதா!” என்று  😀 .

தொடர்புடைய கட்டுரை

எழுத்தாளர் சாரு நிவேதிதா சில வருடங்களுக்கு முன்பு எழுதியது நினைவுக்கு வந்தது. எதனால் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை உளவியல் ரீதியாக விளக்கி இருந்தேன்.

நமக்கு ஏன் பொறுமையில்லை?

4 COMMENTS

 1. நாம் பயன்படுத்தும் பொருள் என்பது நமக்கும் அதன் மூலம் மற்றவர்களுக்கு தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற அடிப்படை எண்ணம் உருவாக வேண்டுமானால் கொஞ்சமாவது அடிப்படை அறிவு இருக்க வேண்டும். தற்போது பலருக்கும் பொருளாதாரம் வளரும் அளவிற்கு அறிவு வளர்வதில்லை. வளர்த்துக் கொள்ளவும் விரும்புவதும் இல்லை. ஹாரன் அடித்தால் ஆயிரம் ரூபாய் என்று ஒரு சட்டம் கொண்டு வந்து பாருங்கள். திடீர் அறிவு வந்து விடும். எண்ணம் போல வாழ்வு.

 2. இதில் நீங்கள் உங்களின் அக்கா பையனை திட்டுவதாலோ இல்லை பக்கத்தில் கார் ஓட்டுபவரை திட்டுவதாலோ எந்த பயனுமில்லை. அவர்கள் கடந்த தலை முறையிடம்தான் இதனை கற்றார்கள். நான் கார் ஓட்ட கற்றது நியூசிலாந்தில். அங்கத்தய மக்கள் ஹேர்ன் அடிப்பதை குற்றமாக நினைப்பார்கள். நீங்கள் தேவையில்லாமல் அடித்தால் தன்னுடய காரை நிறுத்திவிட்டு வந்து கேள்வி கேட்பார்கள் சில சமயத்தில். அதே குணம்தான் எனக்கு இப்போது உள்ளது. யாராவது எனக்கு ஹேர்ன் செய்தால் கோபம் வரும். வீடு வந்து சேரும்வரை ஏன் அவர் அடித்தார் என்று சிந்தித்துக்கொண்டே இருப்பேன். இது வரைக்கும் நான் அதிக பட்சம் ஒரு 5 தடவைதான் ஹோர்ன் இனையே உபயோகப்படுத்தியிருக்கிறேன். யாராவது குறுக்கால் போனால் கூட திட்டுவேனே தவிர கூடிய மட்டும் ஹேர்ன் இனை பயன்படுத்தமாட்டேன். அதே போல மேலை நாடுகளிலும் இது போல ஒரு சிலர் உள்ளார்கள். என்னுடய நண்பர்களில் ஒருவருடன் வாரத்தில் 2 தடவை கார் பூலிங்கில் வேலைக்கு போவேன். அவர் 50 வேகம் உள்ள் வீதியில் யாராவது 50 போனல் கூட ஹேர்ன் செய்வார். 60-70 இல் போகவேண்டும். அதுவரை 4 தடவை ரிக்கட் வாங்கியும் அடங்கவில்லை.

 3. நிச்சயம் கவனிக்க வேண்டிய பதிவு!!! ஆனால் நம்ம ஊரை பொறுத்தவரை யாரும் அதிகம் கவனம் கொள்வதில்லை.. குறிப்பாக 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.. வெளிநாட்டில் சட்டம் கடுமையாக இருப்பதால், எல்லோரும் சாலை விதிகளை கண்டிப்பாக பின்பற்றித்தான் ஆக வேண்டும்.. நமது ஊரில் நிலை அதுபோல இல்லை.. சட்டம் கடுமையாக்கும் போது மட்டுமே தவறுகள் குறையும்.. தற்போது எனது கிராமத்தில் கல்லுரி மாணவர்கள் தெருவுக்குள்ளே நடுஇரவில் பைக்கில் ரேஸ் வைத்து செல்கின்றனர்.. எனது துரத்து உறவினரின் 21 வயது பையன், 6 மாதம் முன்பு விபத்தில் இறந்தான்.. ரேஸ் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது… இவர்களுக்கு சொல்லி புரியவைத்தாலும், கேட்ட கூடிய மனநிலை அவர்களுக்கு இல்லை.. குடும்பத்தின் சூழ்நிலை அவர்களுக்கு புரியவில்லை… நேற்று பிறந்துபோல் தான் இருக்கிறது என் பையனுக்கு 7 வயது ஆரம்பிக்க போகிறது.. இவனின் எதிர்காலத்தை நினைத்தால் கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது.. இந்த வருடம் குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விடலாம் என்று எண்ணியுள்ளேன்.. பையனை அரசு பள்ளியில் அல்லது உள்ளுரில் எதாவது ஒரு பள்ளியில் சேர்க்கலாம் என்பது என் விருப்பம்.. ஆனால் மனைவியிடம் சொன்ன உடனே வீட்டில் மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது.. நான் கண்ட உலகத்தை என் பையனும் காண வேண்டும் என்பது எனது ஆவல்..பொறுத்து இருந்து பார்ப்போம்..

 4. @ஜோதிஜி மிகச்சரி. எண்ணம் போல வாழ்வு 🙂 . அடுத்தவருக்கு தொல்லையாக இருக்கும் என்ற விஷயத்தையே மறந்து விட்டார்கள்.

  @ப்ரியா என்னது அக்கா பையனை திட்டினேனா? சரியா கட்டுரையை படி ப்ரியா.

  கடந்த தலைமுறையினரிடம் கற்றார்களா?

  இதென்ன புது கதை. அடிப்படை அறிவுக்கும் கடந்த தலைமுறைக்கும் என்ன சம்பந்தம்?

  கடந்த தலைமுறையினர் தான் பல நல்ல பழக்கங்களையும் சொன்னார்கள். அதை ஏன் பின்பற்றவில்லை?

  தேவையற்று ஹாரன் அடிப்பது தவறு என்பது அடிப்படை அறிவு. இதற்கும் மற்றவர்களுக்கும் சம்பந்தமில்லை. இது தனி ஒழுக்கம்.

  நமக்கே தெரியணும்!

  நான் ஹாரன் அடிக்கவே மாட்டேன், வெகு சில நேரங்களில் மட்டுமே பயன்படுத்தியுள்ளேன். இதனால் அவசரத்துக்கு ஹாரன் எங்கே உள்ளது என்று குழப்பமாகி Start button யை அமுக்கிட்டு இருந்து இருக்கேன் 🙂 .

  மேலை நாடுகளில் பயன்படுத்த மாட்டார்கள் என்றால், பெரும்பான்மை தான். எங்கே சென்றாலும் சில கிறுக்கன்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

  @யாசின் ஜோதிஜி சொன்ன மாதிரி அபராதம் விதித்தால் அவனவனுக்கு அடிப்படை அறிவு தானாக வந்து விடும் 🙂

  மூன்றாம் உலகப்போர் 😀 😀

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here