ஏன் நம்மிடம் பொய் சொல்கிறார்கள்?

2
ஏன் நம்மிடம் பொய் சொல்கிறார்கள்?

பொன்னான நிகழ்காலம் புத்தகம் பற்றி எழுதிய போது 30 – 50 கட்டுரைகள் எழுதும் அளவுக்குப் புத்தகத்தில் தகவல்கள் உள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன் என்று கூறி இருந்தேன், அதிலிருந்து 6 வது கட்டுரை. Image Credit

பொய்

ஒருவர் பொய் சொல்வதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளது.

சில நியாயமானவையாக இருக்கலாம், சில பொய்கள் குற்றங்களை மறைக்கக் கூறுவதாக இருக்கலாம்.

இதில் இரண்டாம் வகைப் பொய்யைப் பார்ப்போம்.

ஏன் நம்மிடம் பொய் சொல்கிறார்கள்?

ஒரு சம்பவத்தைக் கூறினால், சம்பந்தப்பட்டவர் கோபப்படலாம், திட்டலாம், புரிந்து கொள்ளாமல் போகலாம், பிரச்சனையை மேலும் சிக்கலாக்கலாம்.

சொல்ல வரும் கருத்தை உள்வாங்காமல் போகலாம், முக்கியமாக மன்னிக்கத் தயாராக இல்லாதவராக இருக்கலாம்.

இது போன்ற சூழ்நிலைகளில் பொய் சொல்கிறார்கள்.

இதற்கு என்ன செய்வது?

முதலில் செய்த தவறை தைரியமாகக் கூற வேண்டும் என்றால், சம்பந்தப்பட்டவர் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும்.

தவறுகளை மன்னித்து, திரும்ப அதைச் செய்து விடக் கூடாது என்று அக்கறையாகத் தவறை விளக்குபவராக இருக்க வேண்டும்.

முக்கியமாக, கோபப்படாமல் எதனால் தவறு நேர்ந்தது என்பதைக் காது கொடுத்துக் கேட்பவராக இருக்க வேண்டும்.

இது போன்றவராக இருப்பவரிடம் பொய் கூற வேண்டிய தேவை இருக்காது.

தவறைக் கூற கூச்சப்படுபவர்கள் தனிப்பிரிவினர் ஆனால், மேலும் நம்மை நொந்து விடச் செய்து விடுவார் என்ற பயத்தைக் காட்டுபவராக இருக்கக் கூடாது.

குழந்தைகள்

பெரியவர்கள் பொய் கூறினாலும் அவர்களுக்குத் தான் என்ன செய்தோம் என்று தெரியும். எனவே, அடுத்த முறை தவறை திருத்திக்கொள்வார்கள்.

பின்னர் தெரிய வரும் போது ஏதாவது கூறி சமாளித்துக்கொள்வார்கள். பெரிய சிக்கலானால் அதற்குரிய பிரச்சனையை எதிர்கொள்வார்கள்.

ஆனால், இருப்பதிலேயே ஆபத்தானது குழந்தைகள் கூறும் பொய்கள்.

பள்ளியில் நடக்கும் சிறு சிறு பிரச்சனைகளுக்குக் கூறும் பொய்யும் தவறு என்றாலும், அதை விட முக்கியமானது பெரிய தவறுகள்.

பிள்ளைகளுக்குத் தாங்கள் செய்யும் தவறுகளிலிருந்து வெளியே வரத்தெரியாது.

பள்ளி பருவத்தில் குழந்தைகள் தவறுகளைச் செய்வார்கள் ஆனால், அதைப் பெற்றோரிடம் கூறினால் திட்டுவார்கள் என்று பயந்து கூற மாட்டார்கள்.

ஆனால், பின்னாளில் மிகப்பெரிய சிக்கலாகவும், அனைவருக்கும் அவமானத்தைத் தேடி தரும் சம்பவமாகவும் அமைந்து விடும்.

பின்னர் நம் பையன் / பெண்ணா இதுபோலச் செய்தது! என்று வருத்தப்படுவதால் பயனில்லை.

எனவே, கண்டிப்பு தேவை தான் ஆனால், பிள்ளைகள் தாங்கள் செய்த தவறுகளைக் கூறப்பயப்படும் அளவுக்கான கண்டிப்பு எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

பிள்ளைகள் பெற்றோரிடம் தைரியமாகக் கூறும் அளவுக்கான நம்பிக்கையைப் பெற்றோர்கள் கொண்டு வரவில்லை என்றால், அதனால் எதிர்காலத்தில் மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

காரணம், தற்காலச் சூழ்நிலை அவ்வாறாக உள்ளது.

தவறுகள் நடப்பதற்கான சூழல்கள் அதிகரித்துள்ள நிலையில், எளிதாக அணுகக்கூடிய சூழ்நிலை இருந்தால் மட்டும் பிள்ளைகள் மறைக்காமல் கூறுவார்கள்.

எளிதாக விளக்க முடியுமா?

ஒருவரிடம் மட்டும் பிரச்சனைகளைக் கூற வேண்டும், பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றும். எதனால் என்று யோசித்து இருக்கிறீர்களா?

பலபேர் இருக்கையில் நாம் ஏன் குறிப்பிட்ட ஒருவரை தேர்ந்தெடுக்கிறோம்?!

அதாவது இன்னொருவரிடம் கூற முடியவில்லை ஆனால், அதே இவரிடம் கூற முடிகிறது என்றால், எதோ ஒன்று உங்களை அவரிடம் ஈர்த்து இருக்கிறது.

அது உங்கள் பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேட்பவராக இருக்கலாம், பிரச்சனையைக் கேட்டு மகிழாமல் ஆறுதலும், ஆலோசனையும் கூறலாம்.

இதே தான் பொய்க்கும். கூறினால், புரிந்து கொள்வார் என்று நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும்.

எனவே, ஒருவர் உங்களிடம் பொய் கூறக் கூடாது என்றால், திறந்த மனதுடன் இருக்க வேண்டும், கூறினால் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கையைச் சம்பந்தப்பட்டவருக்குக் கொடுத்து இருக்க வேண்டும்.

இப்படி இருந்தால் மட்டுமே தவறு செய்து இருந்தாலும், அதை மறைக்காமல் கூறுவார்.

மேற்கூறியதில், மையக்கருத்து மட்டும் சுவாமி திரு சச்சிதானந்தா அவர்கள் கூறியது. குழந்தைகளுக்கான நிகழ்வை இதோடு கூறுவது பொருத்தமாக இருக்கும் என்பதால், நானாக நுழைத்துக்கொண்டேன்.

தொடர்புடைய கட்டுரை

உண்மை பேசுவது கடினமா?

2 COMMENTS

 1. கிரி , உண்மையில் இந்த பதிவின் சாராம்சம் எல்லோருடைய வாழ்விலும் நாம் எதிர்கொள்ளவும் ஒரு நிகழ்வு.. நிச்சயம் நாம் வளர்ந்த சூழ்நிலையும், வாலிப பருவத்தில் நாம் எதிர்கொள்ளும் சமூக சுழலும், திருமணத்திற்கு பின் நிச்சயம் குடும்ப சுழலும் பொறுத்து தான் அமைகிறது. பொய்யே சொல்லக்கூடாது என்று நினைத்தாலும் சிறு சிறு பொய்கள் மட்டுமே தக்க சமயத்தில் என்னை குடும்ப சுழலில் காப்பதாக உணர்கிறேன்.. பொய்கள் சிறிதாக இருக்கலாம் ஆனால் சமயத்தில் அதன் விளைவுகள் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் காலத்தை முன்பே கணித்து மனைவிடம் மட்டும் பொய்கள் அவ்வப்போது சொல்வதுண்டு.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 2. @யாசின்

  “பொய்யே சொல்லக்கூடாது என்று நினைத்தாலும் சிறு சிறு பொய்கள் மட்டுமே தக்க சமயத்தில் என்னை குடும்ப சுழலில் காப்பதாக உணர்கிறேன்.”

  பொய்யே சொல்லாமல் இருக்க முடியாது ஆனால், எந்த மாதிரியான இடத்தில சொல்கிறோம் என்பதே முக்கியம்.

  பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
  நன்மை பயக்கும் எனின்

  என்று வள்ளுவரே கூறி இருக்கிறார் 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here