கடந்த ஞாயிறு மதியம் லிட்டில் இந்தியா சென்று சாப்பிட்டு விட்டு வரும் போது, நான் செல்ல வேண்டிய பேருந்து என் ஒரு நிமிட தாமதத்தில் கிளம்பிச் சென்றதை வெறுப்புடன் பார்த்துக் கொண்டே சென்று பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்தேன்.
இது மாதிரி எனக்கு மட்டும் தான் ஆகுதா? இல்லை எல்லோருக்கும் ஆகுதா? எனக்கு சொல்லி வைத்த மாதிரி எப்போதும் நடக்குது.
எவ்வளவு சீக்கிரம் வந்தாலும் இதே தான் நடக்குது.
பேருந்து
அடுத்த பேருந்து ரொம்ப காத்திருக்க வைக்காமல் சிறிது நேரத்திலேயே வந்து விட்டது. ஞாயிறு மதியம் என்பதாலோ என்னவோ 23 கூட்டமே இல்லாமல் இருந்தது.
அப்பாடா! என்று உள்ளே நுழைந்தால் (இரட்டை அடுக்குப் பேருந்து) கீழ் தளத்தில் ஆறு பேர் அமர்ந்து இருந்தார்கள் அதில் இரு சீனர்கள் ஒருவர் மலாய் என்று நினைக்கிறேன் மூவர் தமிழர்கள்.
வழக்கம் போல கடைசி இருக்கையில் சென்று அமர்ந்தேன்.
நம்ம ஊர் பேருந்தில் ஒருமுறை இப்படி ஆர்வத்தில் உட்கார்ந்து, பேருந்து குழியில் இறங்கி ஒரு ஜம்ப் அடித்த போது நான் கூரையைத் தொட்டு வந்ததால், அதிலிருந்து விபரீத ஆசை வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.
தமிழர்
அருகில் 35 – 40 வயதுள்ள தமிழர் ஒருவர் நாகரீகமாக உடையணிந்து கையில் இருந்த துளசி மாலையில் உள்ள துளசியை ஒவ்வொன்றாக உருட்டிக்கொண்டு இருந்தார்.
அட! ரொம்ப பக்தியாய் இருப்பார் போல என்று நினைத்துக்கொண்டு வழக்கம் போல மொபைலில் ரீடர் மற்றும் ஃபேஸ்புக் படிக்க ஆரம்பித்தேன்.
பேருந்தில் கூட்டம் இல்லாததால் அமைதியாக இருந்தது, பேருந்து எஞ்சின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தது.
ஐந்து நிமிடம் சென்று இருக்கும், சென்னையின் பிரபலமான “நல்ல” வார்த்தையான “ங்கோ” வை ஆரம்பித்து “ஏன்டா! நீ பெரிய புடுங்கியா?” என்று சத்தம் வந்ததும் தூக்கி வாரிப்போட்டு விட்டது.
ஏனென்றால் அங்கே இருந்த தமிழ் ஆள் நான் ஒருவன் மட்டுமே!
நாம ஒண்ணுமே பண்ணலையே நம்மை எதுக்கு திட்டுறான் என்று நிமிர்ந்து பார்த்தால், நம்ம பக்திமான் தான் யாரையோ மொபைலில் அர்ச்சனை செய்து கொண்டு இருந்தார்.
பட்டை கொட்டை
அடப்பாவி! நெற்றியில் திருநீர் பட்டை, கையில் கொட்டைனு பக்தி ரசமா இருந்தானே! அவனா நீ? என்று அதிர்ச்சியில் நான் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே…
“உன்னை எல்லாம் கொல்லாம விட்டு வைத்து இருக்கேன் பாரு.. அது என் தப்புடா!” என்று சத்தமாக கூறியதும் [கத்தியதும்] கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து இருந்த இரு தமிழ்ப் பெண்கள் பயத்துடன் அவரைப் பார்க்க, மற்ற மூவரும் இவர் என்ன பேசுகிறார் என்று புரியாமல் விழிக்க…
ஆஹா! நமக்கு இன்னைக்கு நேரம் சரியில்ல போல என்று நினைத்து அவரைப் பார்த்தேன்.
“அவனுக்கு (Censored)” என்று மறுபடியும் ஆரம்பிக்க, ஐயையோ! இவன் இன்னைக்கு நம்ம காதுல ரத்தம் பார்க்காம போக மாட்டான் போல இருக்கே! என்று பயத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
வண்டை வண்டையாய் தொடர்ந்து திட்டிக்கொண்டு இருந்தார்.
அப்படியா! மாப்ளே
எனக்கு அந்த இடமே நரகம் போல ஆகி விட்டது. எனக்கு பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொண்டால் செம டென்ஷன் ஆகி விடும்.
அதுவும் அந்த நபர் நம்மைச் சார்ந்தவராக இருந்தால் இன்னும் கடுப்பாகிடும்.
நம்மாளுங்க, பக்கத்துல மற்றவங்க இருக்காங்களே என்ற குறைந்த பட்ச நாகரீகம் கூட இல்லாமல், எதிர் முனையில் இருப்பவருக்கு நேரடியாகவே கேட்கும் படி வரட்டுக் கத்து கத்திட்டு இருப்பாங்க.
அப்படியா! மாப்ளே… னு ஆரம்பித்து அவனுக குடும்பக் கதை / அவன் மேல் அதிகாரி / நண்பன் கூட சண்டைப் போட்டது என்று அனைத்தையும் அந்தப் பேருந்தில் இருக்கிறவங்க அனைவருக்கும் சொல்லிடுவாங்க. வர கடுப்புல வாயில கத்தியை விட்டுச் சுழட்டனும் போல இருக்கும்.
பேசாம மேலே போய் உட்கார்ந்துக்கலாமா! என்று யோசனை வந்தது.
ஆனால், பார்க்க ஆள் வேற ஒரு டைப்பாக இருந்ததால் மேலே வந்து ஏன்டா! நான் பேசுனது உனக்கு எப்படி இருக்கு.. மேலே போய் உட்கார்ந்துட்டே…! என்று திட்டிடுவாரோ என்று பயம் வேறு [நம்ம கற்பனை கொஞ்சம் ஓவராத்தான் இருக்கோ!].
மனதில் தைரியத்தை! வரவழைத்துக்கொண்டு அப்படியே கண்டுக்காத மாதிரியே உட்கார்ந்து கொண்டேன்.
ஒரு 15 நிமிஷம் தன்னுடைய போதனைகளை முடித்து நிறுத்தினார். எனக்கு மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருந்தது.
சும்மா இல்லாம அவரைப் பார்க்க.. என்னைப் பார்த்து “இவனுகளுக்கு நான் யார்னு தெரியலை..!” என்று கூற.. [வெயிட் காட்டுறாராமா].
மொபைல் உதவி
ஏன்டா! வெண்ணை வெட்டி நீ யார்னு எனக்கே தெரியாதேடா! அவனுகளுக்கு தெரியுமான்னு எனக்கு எப்படிடா தெரியும் என்று நினைத்துக் கொண்டு, அவரைப் பார்த்து அசடு வழிந்து புன்னகைத்து!! விட்டு மறுபடியும் மொபைலை பார்க்க!! குனிந்து கொண்டேன்.
சில ஆபத்து நேரங்களில் மொபைல் இப்படி கூட உதவுது பாருங்க!
திரும்பவும் எதோ திட்டிக்கொண்டு இருந்தார்.
ம்ஹீம்! நான் அவர் பக்கம் திரும்பலையே… ஒரு சீனர் இவரை அமைதியாகப் பார்த்துக் கொண்டே இருந்தார், என்ன நினைத்தாரோ!
எனக்கு எப்படா நான் இறங்கும் இடம் வரும் என்றாகி விட்டது.
கொஞ்ச நேரம் போனது, பக்திமான் நகர்ந்து என்னருகில் வந்தார்! எனக்கு நிஜமாகவே உதறல் ஆகி விட்டது.
டேய் கிரி! இன்னைக்கு உனக்கு சங்கு தாண்டி என்று முடிவே செய்து விட்டேன்.
இந்த கேலாங் ரோடு எப்படி போகணும்?
அன்று ஞாயிறு என்றாலும் எனக்கு “சனி” தான் போல என்று நினைத்துக்கொண்டேன். “இந்த கேலாங் ரோடு எப்படி போகணும்?” என்று கேட்டார்.
இதைக் கேட்டு எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
இவர் சென்ட்ரலிலிருந்து மைலாப்பூர் கிட்ட வந்து கொண்டு இருக்கிறார் ஆனால், பூந்தமல்லி ரோடு போவது எப்படின்னு கேட்டா உங்களுக்கு எப்படி இருக்கும்?
அப்படித் தான் எனக்கும் இருந்தது. ஆளும்.. அவன் மண்டையும் என்று செம கடுப்பாகி விட்டது.
இரண்டுமே சம்பந்தமே இல்லாத இடத்தில் இருக்கிறது, அதோட இவர் வருவதே ஏறக்குறைய இவர் கேட்கும் இடம் அருகிலிருந்து தான்.
இவர் மீது இருந்த பயத்தையும் மீறி.. வந்த கடுப்பில் “ஹலோ! கேலாங் ரோடு இங்க எங்கங்க இருக்கு.. இது Tampines” என்றவுடன்..
ம்ம் அப்படியா! சரி அடுத்த ஸ்டாப் ல இறங்கிக்கிறேன் என்றார்.
டேய்! நீ இப்பத்தான் இப்படியா இல்ல எப்பவுமே இப்படியா என்று கேட்கத் தோன்றியது ஆனால், நான் கேட்டு இருக்க மாட்டேன் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும் 🙂 .
கீழ்ப்பாக்கம்
நம்ம ஊர்ல கீழ்ப்பாக்கம் போகிறேன் என்று கூறினால் எப்படி நக்கல் அடிப்பாங்களோ அது மாதிரி சிங்கப்பூரில் கேலாங் [Gaylang]. இந்த இடம் பாலியல் தொழிலும் நடக்கும் இடம்.
இங்க போகிறவர்கள் அனைவரும் இதுக்கு தான் போவார்கள் என்று அர்த்தமல்ல ஆனால், இந்த இடம் சொன்னால் கிண்டலடிக்கப்படுவதுண்டு.
இவர் பேசியதை வைத்து இவர் எதுக்குப் போகிறார் என்று கற்பனைக் குதிரையை அதற்குள் சூப்பர் சானிக் வேகத்தில் விரட்டினேன்.
குதிரை தாறுமாறாக சென்றதால், பின்னர் வேண்டாம் என்று நிறுத்தி விட்டேன் 😀 .
வடிவேல்
எனக்கு, அவர் இறங்கியவுடன் செம சிரிப்பு. நான் சிரிப்பதைப் பார்த்து அந்த இரு பெண்களும் சிரித்தார்கள்.
அவர்கள் ஒருவேளை இவர் இறங்கினாரே என்று நான் சிரித்ததாக நினைத்து இருக்கலாம், அது ஒரு வகையில் உண்மை என்றாலும், உண்மையான காரணம் வடிவேல் காமெடி.
வடிவேல் கிட்ட “தவசி” படத்தில் ஒருத்தர் முகவரி கேட்டு அவரை ஒரு வழி ஆக்குவாரே! அது தான் நினைவிற்கு வந்தது.
வடிவேல்… இவன் நல்லாத்தானே இருந்தான்! ஏன்டா! இப்படி… என்று கூறுவாரே!
எனக்கு இது நினைவிற்கு வந்தவுடன் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு 🙂 .
வடிவேல் இருந்த நிலையில் தான் நான் இருந்தேன். என்ன… அடி வாங்கல! அவ்வளவு தான் 🙂 .
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கலக்குறிங்க கில்லாடி, என்கிட்டே சொல்லிக்கிட்டு இருக்குற மாதிரியே இருந்துச்சு.. கடைசிவரைக்கும் சிரித்துகொண்டே இருந்தேன்.
கலக்கல்.
– விஜய்
கலக்கல் பதிவு கிரி… சொந்த அனுபவங்களை சொல்லி சந்தோஷபடுவதில் (துன்பமோ / இன்பமோ) ஏற்படும் ஆனந்தம் அதிகமே…அந்த பஸ்ல நானும் TRAVEL பண்ண FEELING வருது,.. இது போல சில அனுபவம் எனக்கும் உண்டு கிரி.. ஹிந்தி படங்களை பொறுத்தவரை நமது ரசனையும் அவர்களது ரசனையும் முற்றிலும் வேறுபடும்.. சில படம் ரொம்ப சுமாரா தான் இருக்கும்… ஆனால் மெகா ஹிட் சொல்லுவாங்க… மரியான் படம் பார்க்க ஆர்வமா இருக்கு…பகிர்வுக்கு நன்றி கிரி..
எனக்கும் ரான்ஜனா முதல் பாதி புடிச்சிருந்தது. ரகுமான் மியூசிக் கலக்கல். ரீரெகார்டிங் எல்லாம் நச்.
கிரி, நீங்க சப்போர்ட்டா?:) அப்படின்னா இந்த short film பாருங்க.
http://www.youtube.com/watch?v=MRr2iFr9hq0
மொக்கையான short film-தான்; ஆனா இதுல ஒரு பஞ்ச் செம சூப்பர் –
“.. ஒவ்வொரு சோல்ஜரும், யூனிபார்ம் போட்ட சப்போர்ட் இன்ஜினியர்; ஒவ்வொரு சப்போர்ட் இன்ஜினியரும் ah ஃபார்மல்ஸ் போட்ட சோல்ஜர்…” செம்ம டயலாக் அது.
பதிவு கலக்கல் ரகம்
உங்களோட எழுத்துல பயண கட்டுரைகள், அனுபவம் எந்த form ல இருந்தாலும் அழகு தான்
– அருண்
அனைவரின் வருகைக்கும் நன்றி