பொன்னியின் செல்வன் பாகம் 1 (2022)

6
பொன்னியின் செல்வன் பாகம் 1

பொன்னியின் செல்வன் பாகம் 1 கதை ஏற்கனவே விரிவாக எழுதி விட்டதால், எப்படி எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களுக்குள் செல்கிறேன். Image Credit

பொன்னியின் செல்வன் பாகம் 1

பொன்னியின் செல்வன் புத்தக விமர்சனத்தில் பின்வருமாறு கூறி இருந்தேன்.

எத்தனை கோடி செலவு செய்து இதைத் திரைப்படமாக எடுத்தாலும், படிப்பதில் கிடைக்கும் ஒரு அற்புத உணர்வு நமக்குக் கிடைக்காது என்பது நிச்சயம்.

இதைத் திரைப்படமாக எடுக்க ஒரு முறை இயக்குநர் மணிரத்னம் முயற்சித்ததாகப் படித்தேன். தயவு கூர்ந்து இதைத் திரைப்படமாக எடுத்து இந்த நாவலை அசிங்கப்படுத்தி விடாதீர்கள்.

என்னால் கற்பனையில் கூட அதை ஜீரணிக்க முடியவில்லை. இது யாராலுமே சாத்தியமில்லாத செயல்.

படத்தின் விமர்சனத்தை சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால்,

கதையாகச் சரியாக உள்ளது, காட்சிகளில், கதாப்பாத்திரங்களில் மாற்றுக்கருத்துள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.

மணிரத்னம்

திரைப்படம் வெளியாகும் முன்பே பல சர்ச்சைகள் ஏற்பட்டு விட்டதால், படம் நன்றாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது.

இதனால், விமர்சனங்கள் கதையைச் சிதைக்கவில்லை என்று வந்தால், பார்ப்பது, இல்லையென்றால் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்து இருந்தேன்.

காரணம், புத்தகம் படித்து என் கற்பனையில் காட்சிகளாக வைத்துள்ளதை இக்காட்சிகள் சிதைத்து விடக் கூடாது என்பதற்காக.

கதைப்படி தான் எடுத்துள்ளார்கள் என்று நண்பர்கள் பலர் கூறிய பிறகே பார்க்க முடிவு செய்தேன்.

படம் பார்த்த பிறகு சரியாக எடுக்கவில்லை என்று தோன்றவில்லை ஆனால், திருப்தி இல்லை, கொண்டாட்டமான மன நிலையில்லை.

இப்பவும் என் கற்பனையில் உள்ள பிரம்மாண்டத்தை, கதாபாத்திரங்களைத் திரைப்படம் மிஞ்சவில்லை.

ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

பொன்னியின் செல்வன் பற்றித் தன் வலைத்தளத்தில் பின்வருமாறு கூறி இருந்தார்.

பொன்னியின் செல்வன் திட்டமிடப்படும்போதே ஒரு செயற்கையான தொழில்நுட்பப் படமாக அமையக் கூடாது, முழுக்க முழுக்க யதார்த்தமாகவே இருந்தாக வேண்டும் என வரையறை செய்யப்பட்டு எடுக்கப்பட்டது.

வரைகலைத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் படங்கள் முதல் பார்வைக்கு ஒரு பிரமிப்பை உருவாக்கினாலும் ஓராண்டிலேயே கேலிப்பொருளாக ஆகிவிடும்.

இது வரலாறு, இது அப்படி ஆவது என்பது நமக்கே நாம் இழிவு தேடிக்கொள்வது.

வரைகலை நுட்பம் (special effects) சில ஆண்டுகளில் பழையதாகிவிடும். மிகையாக இருந்தால் வேடிக்கையாக மாறிவிடும்.

இந்தப் படம் இருபதாண்டுகளாவது அவுட் டேடட் (outdate) ஆகக் கூடாது, அடுத்தத் தலைமுறை பார்க்க வேண்டும் என்றார் மணிரத்னம்.

இது மணிரத்னத்தின் கனவு. அது காலத்தில் நீடித்து நிற்க வேண்டும் என்றார்.

இன்று பார்ப்பவர்களில் எளிமையான ஒரு சாரார் வழக்கமான வரைகலை உத்திகளில் செய்யப்படும் நம்பமுடியாத சாகசங்களை எதிர்பார்த்து ஏமாற்றமடையலாம்.

ஆனால், மறுபடியும் பார்ப்பவர்களால் படம் காலத்தைக் கடக்க வேண்டும் என்று எண்ணினார்.

மணிரத்னம் கூறியது சரியா?

உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் மணிரத்னம் கூறியது சரியே!

தொழில்நுட்பம் எப்போதுமே சில வருடங்களில் ஏற்படும் முன்னேற்றங்களால் பழைய காட்சிகள் நகைப்புரியதாக மாறி விடும் வாய்ப்புள்ளது.

இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளது, அனைவருக்கும் தெரிந்தது.

ஆனால்..

ஹீரோயிசம் காட்டப்பட வேண்டியதில்லை என்பது வழக்கமான கதைகளுக்குச் சரி ஆனால், அரசர்கள் காட்சியில் எப்படிப் பொருந்தும்?!

காட்சிகளில் பிரம்மாண்டம் இருந்தாலே நமக்குப் பெருமை.

மணிரத்னம் மிகையாக எடுக்க வேண்டியதில்லை ஆனால், கல்கி கூறியதை எடுத்து இருக்கலாமே! நாவலைத்தானே படமாக எடுக்கிறார்.

கல்கி கூறியதை எடுக்க மிகப்பெரிய பொருட்செலவு ஆகும் என்றால், அதற்காக ஊராட்சி தலைவர் ரேஞ்சுக்கு அரசனை காட்டுவது எப்படிச் சரியாகும்?

அருண்மொழி வர்மன் போகும் போது 10 பேர் இருக்கிறார்கள். பழுவேட்டரையர் வரும் போது எந்த ஆரவாரமுமில்லை, பரபரப்புமில்லை.

அருண்மொழிவர்மன் வந்தியத்தேவன் சண்டையிடும் போது வீரர்கள் தேமேன்னு பார்த்துக்கொண்டுள்ளார்கள்.

இந்த இடத்தில் ஜெயமோகன் சொன்னதை மணிரத்னம் தவிர்த்து இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இதைச் செய்ய எதற்கு வரைகலை?

இதையெல்லாம் ஹீரோயிசம் என்று நீக்கி விட்டார்களா?!

சுருக்கமாக, பொன்னியின் செலவன் விழாவில் அருண்மொழிவர்மன் அறிமுகம் எப்படி இருக்கும் என்று ரஜினி வர்ணித்து இருந்தது போலக் காட்சியமைப்பை எதிர்பார்க்கிறேன்.

புத்தகத்தில் உள்ளதை தான் எதிர்பார்த்தேன், இதையும் மீறிய ஹீரோயிசத்தை அல்ல.

குந்தவை பாடலை ரசிக்கும் காட்சியில் சாதாரணக் காட்சியமைப்புகளாக உள்ளது.

இது போல ஏராளமான காட்சிகள் உள்ளது.

கதாப்பாத்திரங்கள்

கல்கியின் எழுத்தில் ரசித்த கதாபாத்திரங்கள் மிகச்சாதாரணமாக உள்ளது.

பழவேட்டரையரின் உடற்பலம், அவரின் கர்ஜனைகள், மிரட்டல்கள், கோபமான பார்வை எப்படி அசத்தலாக இருக்கும்!

ஆனால், சரத்குமார் புலிக்குப் பதிலாகப் பூனை போல உள்ளார். சின்னப் பழுவேட்டரையராக வரும் பார்த்திபன் பரவாயில்லை.

சரத்குமாரை குறை கூற முடியாது காரணம், இயக்குநர் சொன்னதை அவர் செய்துள்ளார். வேறு யார் நடித்து இருந்தாலும் இதே போலத்தான் இருக்கும்.

ஆழ்வார்க்கடியான் கதாப்பாத்திரம் நாவலில் அற்புதமாக இருக்கும் ஆனால், இதில் ஒரு நகைச்சுவை நடிகர் அளவுக்கே உள்ளது.

வசன உச்சரிப்பும் அக்காலமும் இக்காலமும் கலந்துள்ளது.

வந்தியத்தேவன்

சத்தியமா கார்த்தியை எல்லாம் வந்தியத்தேவன் போல நினைக்கவே முடியவில்லை.

மணிரத்னம் வரைகலை செய்ய வேண்டியதில்லை, ஹீரோயிசம் செய்யத் தேவையில்லை ஆனால், கார்த்தி, ஜெயம் ரவியை உடற்பயிற்சி செய்யச் சொல்லி இருக்க வேண்டாமா?

ஒரு போர் வீரன் எப்படி இருப்பான்?! அதை மனதில் நிறுத்த வேண்டாமா?!

ஜெயம் ரவியாவது பரவாயில்லை, கார்த்தி உடற்கட்டு ரொம்ப மோசம்.

எவ்வளவு சுவாரசியமான கதாப்பாத்திரம்?! எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? எத்தனை பேர் ரசிகராக உள்ளார்கள்?

ஆனால், இதனுடைய முக்கியத்துவம் யாருக்கும் தெரியவில்லையா?!

கதாப்பாத்திரத்துக்காகக் கார்த்தி மெனக்கெடவே இல்லை! இரண்டு கன்னத்திலும் இரண்டு இட்லியை வைத்த மாதிரி உள்ளார்.

முகத்தில் எப்போதும் எதற்கெடுத்தாலும் சிரிப்பு, செம்ம கடுப்பு தான் வந்தது.

மற்ற படங்களுக்கு உடலை வருத்தி மாற்றுகிறார்கள் ஆனால், ஒரு சோழ வரலாற்றையே பிரதிபலிக்கப்போகிறோம் என்றால் எவ்வளவு அர்ப்பணிப்புத் தேவை!

இவர்களுக்கு இதெல்லாம் ஒரு கதாப்பாத்திரம் அவ்வளவே! ஆனால், அதில் உள்ள பெருமையை, உணர்ந்தவர்கள் மட்டுமே அறிவார்கள்.

விக்ரம் த்ரிஷா

இப்படத்திலேயே எனக்குத் திருப்தியை கொடுத்த முக்கியக் கதாப்பாத்திரங்கள் விக்ரம் மற்றும் த்ரிஷா மட்டுமே!

விக்ரம் எப்போதுமே தனது உடற்தகுதியை சிறப்பாகக் கவனிப்பவர். அதோடு இக்கதாபாத்திரத்தையும் சிறப்பாகச் செய்து இருக்கிறார்.

இவரின் சிறு வயது கதாப்பாத்திரத்துக்கு இவரின் மகன் துருவை கூடப் பரிசீலித்து இருக்கலாம்.

பாண்டியனை கொல்லும் காட்சியில் கதவின் பின்னே நிற்கும் இடத்தில் விக்ரம் செம மாஸாக உள்ளார்.

முன்பு த்ரிஷா மீது எந்த நம்பிக்கையும் இல்லை ஆனால், முற்றிலும் மாறாக நடித்துள்ளார். அலட்டல் இல்லாமல், மிகை நடிப்புச் செய்யாமல் பேசியுள்ளார்.

ஐஸ் சிறந்த அழகி என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால், நந்தினி கதாப்பாத்திரம் என்பது அழகுடன் ஆபத்தும், வன்மமும், சூதும் கலந்து இருப்பது.

ஆனால், ஐஸ் அழகுடன் வெறுமை தான் உள்ளது. எப்போதும் எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் உள்ளார்.

ஜெயம் ரவி பொருத்தமாக உள்ளார். உடற்பயிற்சியில், கம்பீரத்தில் கவனம் செலுத்தி இருந்தால், மேலும் சிறப்பாக இருந்து இருக்கும்.

சிவ பக்தர்கள்

சோழர்கள் எவ்வளவு பெரிய சிவ பக்தர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆனால், சிவனை வைத்து ஒரு முக்கியக் காட்சி கூட இல்லை.

ஆதித்ய கரிகாலனைத்தவிர யார் நெற்றியிலும் திருநீர் பட்டை இல்லை. எதோ பேருக்குக் கொஞ்சம் வைத்துள்ளார்கள்.

தெரியாதவர்களுக்கு, அருண்மொழி வர்மன் தான் பின்னாளில் ராஜராஜ சோழனாக புகழப்பட்டார்.

மீமில் வந்தது போலப் புத்தரைப் பிரம்மாண்டமாகக் காட்டத்தெரிந்த மணிரத்னத்துக்குச் சிவனைக் காட்ட தோன்றவில்லை பார்த்தீர்களா!

முதல் பாகத்தில் தஞ்சாவூர் கோவிலைக் காட்ட முடியாது, காரணம் இதன் பின்னரே கோவில் கட்டப்பட்டது ஆனால், வேறு கோவில்களே இல்லையா?!

இவையல்லாமல் மற்ற காட்சிகளில் வரும் இந்து தொடர்பான உண்மை காட்சிகளுக்கே வெற்றிமாறன் போன்றவர்கள் கதறுகிறார்கள்.

குறைந்த பட்சம் இவர்களை அலற விட்டதுக்காவது மணிரத்னத்துக்கு நன்றி.

பெருமை

வரைகலையில் பிரம்மாண்டத்தைக் காட்ட வேண்டாம் என்று மணிரத்னம் நினைத்துள்ளது சரி ஆனால், அதற்காகப் பிரம்மாண்டமே இல்லையென்றால் எப்படி?!

அரசன் என்றால் நான்கு பேருடன் சுற்றிக்கொண்டு இருப்பவரா?

சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என்று யாராக இருந்தாலும் தமிழர்கள் தான். எனவே, யாரை பிரம்மாண்டமாகக் காட்டினாலும் பெருமை தான்.

ஹீரோயிசத்தை நீக்குகிறேன் என்று அனைவரையும் மணிரத்னம் சப்பையாகக் காட்டியுள்ளார், விக்ரம் தவிர்த்து.

ஆதித்ய கரிகாலன் இயல்பிலேயே கோபக்காரன், முரட்டுச் சுபாவம் உடையவன். எனவே, விக்ரம் தப்பித்தார். இல்லையென்றால், அவரும் சாதாரணமாகக் காட்டப்பட்டு இருந்து இருக்கலாம்.

பாகுபலி போலக் காட்ட வேண்டியதில்லை ஆனால், வீரமாகக் காட்ட வேண்டாமா?

ஹீரோயிசம் தேவையில்லை சரி.. கம்பீரம் கூட ஒரு அரசனுக்கு இல்லையென்றால் எப்படி?!

அவர்கள் உடல் மொழியில் எந்தப் பெருமையும் தோன்றவில்லை.

அரசர்கள், தளபதிகள் பொங்கல் சாப்பிட்டுட்டு மந்தமா சுத்திட்டு இருப்பது போல உள்ளார்கள்.

கப்பலில், படகில் புலி அடையாளத்தைக் காட்டும் போது, புலிக்கொடி மட்டும் ஏன் தவிர்க்கப்பட்டது? வரலாற்றில் இருப்பது தானே!

பாகுபலி Vs பொன்னியின் செல்வன் ஒப்பீடு சரியா?

மிகத்தவறானது.

பாகுபலி ராஜமௌலியின் கற்பனை, வேறு யாருக்கும் தெரியாது. எனவே, அவர் எப்படி வேண்டும் என்றாலும் எடுக்கலாம்.

ஆனால், பொன்னியின் செல்வன் அப்படியல்ல.

உண்மையில் நடந்தது, கல்கியால் புனைவு சேர்க்கப்பட்டுப் பல லட்சம் பேரால் படிக்கப்பட்டது. எனவே, மணிரத்னம் பாகுபலி போல் காட்ட முடியாது.

எனவே, ஒப்பீடு செய்வது இயலாத ஒன்று, இரண்டுமே வெவ்வேறு தளம்.

இசை

ரகுமான் இசை இக்காலகட்ட இசை போல உள்ளது, பண்டைய காலகட்டத்தைப் பிரதிபலிக்கவில்லை.

தற்காலப் படங்களுக்கு ரகுமான் குரல் பொருந்தலாம் ஆனால், வரலாற்றுப் படங்களுக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை.

இதைக் கோச்சடையான் பாடல்கள் விமர்சனத்திலேயே கூறி இருப்பேன்.

கோச்சடையானுக்குக் கொடுத்த இசையின் தரத்தில் பாதிக் கூட இதில் இல்லை. வைரமுத்து இல்லாதது நன்கு தெரிகிறது.

வைரமுத்துவை பிடிக்காது என்றாலும், அவரின் திறமையைக் குறைத்து மதிப்பிடமுடியவில்லை.

பின்னணி இசை எந்தவிதத்திலும் கவரவில்லை. இதற்கும் மணிரத்னம் கட்டுப்பாடு / தடை போட்டு விட்டாரா?!

கலை ஒளிப்பதிவு

தோட்டாதரணியும் ரவிவர்மனும் அற்புதமாகச் செய்துள்ளார்கள்.

மணிரத்னம் வரைகலை (Special Effects) இல்லாமல் நேரடி இடங்களிலேயே எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால், அதற்காகக் கடுமையாக உழைத்துள்ளார்கள்.

காட்சிகளில் கூட்டம் இல்லாததுக்கு மணிரத்னம் காரணமாக இருக்கலாம் அல்லது பட்ஜெட் காரணமாக இருக்கலாம்.

தாய்லாந்தில் பல காட்சிகளை எடுத்துததாகச் செய்திகளில் படித்தேன், இலங்கை சம்பந்தப்பட்ட இடங்கள் இங்கே எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.

பேரலையில் சிக்கி கப்பல் மாட்டும் இடம் எடுக்கப்பட்ட Special effects சிறப்பாகக் கையாளப்பட்டு இருந்தது.

எண்ணங்கள்

பொன்னியின் செல்வன் படிக்காதவர்களுக்குக் கதாப்பாத்திரங்களின் பின்புலம் தெரியாததால், அவர்களுக்குச் சுவாரசியமாக இருக்கும், எதிர்பார்த்தது தான்.

படித்தவர்களில் என்னைப்போன்ற சிலருக்கு ஏமாற்றங்கள் உள்ளது.

தமிழ்நாட்டை, இந்தியாவை அளவு கடந்து நேசிக்கிறேன். எனவே, இவர்களைச் சராசரிக்கும் அதிகமான இடத்திலேயே வைத்துள்ளேன்.

இவர்கள் தமிழர்களின், இந்தியர்களின் பெருமை. எனவே, இவர்களைச் சாதாரணமாகக் காட்டுவதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.

படம் முடிந்த பிறகு ஒரு Excitement எனக்கில்லை, உடனடியாக மற்றவரிடம் பகிர வேண்டும் என்ற ஆர்வம் வரவில்லை.

மணிரத்னம்

இப்படத்தால், ராஜராஜ சோழன் பற்றிய புகழ் பலரை சென்றடைந்துள்ளது. வெற்றிமாறன் போன்றோர் மேலும் புகழை சேர்த்துள்ளார்கள்.

இதுவரை தெரியாமல் இருந்த ராஜராஜ சோழனின் பெருமைகள் பலரை சென்றடைந்துள்ளது. பலரும் ராஜராஜ சோழன் இவ்வளவு சாதனைகள் செய்துள்ளாரா! என்று வியக்கிறார்கள்.

ஆனந்த் மஹிந்திரா போன்றோர் மேலும் பலரிடம் கொண்டு சேர்க்கிறார்கள்.

வெற்றிமாறன், கமல் போன்றோரால் ராஜராஜ சோழன் எவ்வளவு பெரிய சிவ பக்தர் என்று வட இந்திய ஊடகங்களும், மக்களும் விவாதிக்கிறார்கள்.

இவையனைத்தும் பொன்னியின் செல்வன் எடுத்த மணிரத்னம் அவர்களால் சாத்தியமானது.

எனவே, எனக்குத் திருப்தியளிக்கவில்லையென்றாலும் படம் பலரை சென்றடைந்ததில், மிகப்பெரிய வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியே.

இறுதியாக, பொன்னியின் செல்வன் பாகம் 1 ல் ஏமாற்றம், வருத்தம் உள்ளது ஆனால், கோபம் இல்லை.

சரித்திர படங்களைக் குறிப்பாக முன்னரே பல லட்சம் பேரால் படிக்கப்பட்டு சிலாகிக்கப்பட்ட கதையை அனைவரும் திருப்தி ஆகும் படி எடுப்பது யாராலும் இயலாத செயல்.

எனவே, முடிந்தவரை சிறப்பாக எடுத்த மணிரத்னம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

OTT யில் வெளியாகும்போது நிச்சயம் உலகளவில் தமிழர், இந்தியர் பெருமை கொண்டு செல்லப்படும்.

SunNxt ல் வெளியாகிறது என்று நினைக்கிறேன். இதோடு அமேசான் அல்லது NETFLIX லிலும் வெளியிட்டால் மட்டுமே உலகளவில் பலரை சென்றடையும்.

பொன்னியின் செல்வன் பாகம் 1 இதுவரை பார்க்கவில்லையென்றால், குடும்பத்துடன் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

Directed by Mani Ratnam
Screenplay by Mani Ratnam, Elango Kumaravel
Dialogues by B. Jeyamohan
Based on Ponniyin Selvan by Kalki Krishnamurthy
Produced by Mani Ratnam, Subaskaran Allirajah
Starring Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Jayaram, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Prabhu, R. Sarathkumar, Vikram Prabhu, Prakash Raj, Rahman, R. Parthiban
Cinematography Ravi Varman
Edited by A. Sreekar Prasad
Music by A. R. Rahman
Production companies Madras Talkies, Lyca Productions
Release date 30 September 2022
Running time 167 minutes
Country India
Language Tamil

கொசுறு

பொன்னியின் செல்வனை Web Series ஆக எடுத்தால், அதிக முதலீடு தேவை, அதோடு அவற்றுக்கான வருமானம் கிடைப்பது எளிதல்ல.

தொலைக்காட்சி சீரியலாக எடுக்க முயற்சிக்கலாம். இரு வருடங்களுக்கு மேல் கொண்டு செல்ல முடியும்.

தொலைக்காட்சி என்பதால், விளம்பர வருமானம் கிடைக்கும்.

எனவே, முதலீடு செய்யப் பிரச்சனையிருக்காது, பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் யாராவது முயற்சிக்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

ராஜராஜ சோழன் | அரசர்களின் அரசன்

சோழப்படை சின்னம் ஏன் இல்லை?

பொன்னியின் செல்வன்

சங்கதாரா | ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. கிரி.. நான் இதுவரை பொன்னியின் செல்வன் நாவலை படிக்கவில்லை.. உங்கள் பதிவில் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு கூறி இருப்பேன்.. மிகவும் சுவாரசியமான நாவல், என நீங்கள் உட்பட பல பேர் கூறி கேட்டு இருக்கிறேன்.. இருப்பினும் என்னுடைய மனநிலை படிக்க தூண்டவில்லை.. எந்த புத்தகமாக இருந்தாலும் அதை படிக்க கூடிய மனநிலையில் ஒரு தெளிந்த நீரோட்டம் போல் இருக்கும் போது தான் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்..

    காரணம், கடமைக்கு படித்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இல்லை.. நான் வெகு சில புத்தகங்கள் மட்டுமே இதுவரை படித்து இருக்கிறேன்.. ஆனால் அவைகள் எல்லாம் மிகவும் ரசித்து விரும்பி படித்தவைகள்.. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட என் நண்பர் ஒருவர் மாத கணக்கில் பொன்னியின் செல்வனை அலுவலகத்தில் படித்ததாக கூறினார்.. அதுவும் ஒரு மிக பெரிய சாதனை போல எண்ணினார்.. என்னுடைய மனநிலைக்கு இது முற்றிலும் பொருந்தாது..

    நான் கிட்டத்திட்ட மணிரத்தினம் சார் இயக்கிய படங்கள் பார்த்து 20 வருடங்களுக்கு மேல் இருக்கும்.. அவர் இயக்கிய படங்களின் மீதான ஆர்வம் எனக்கு எப்போதோ குறைந்து விட்டது.. சரித்திர படங்களின் மீது இயல்பாகவே ஆர்வம் இருந்ததால், பொன்னியின் செல்வன் படம் திரையில் பார்த்தேன்.. நாவலை பற்றி எதுவும் தெரியாததால் படம் பிடித்து இருந்தது.. கதாபாத்திரங்களின் தேர்வில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாமோ?? என்ற ஒரு எண்ணம்.. முதல் பாதி முழுக்க கார்த்தியின் ஆதிக்கம்.. தொடர்ந்து அவரை மட்டும் பார்த்து கொண்டிருப்பதால் ஒரு சலிப்பும் ஏற்பட்டது..

    விக்ரம் மிகவும் மாஸாக இருந்தார்.. இந்த பாத்திரம் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.. பேராண்மை, தனி ஒருவனில் பார்த்த ஜெயம் ரவியா? இது என ஆச்சரியமாக இருந்தது.. நல்ல நடிகர்.. ஆனால் இது போன்ற ஒரு பாத்திரத்தை ஏற்க்க நல்ல உடல்மொழியும், நடிப்பும், குரலில் ஒரு கம்பீரமும் வேண்டும்.. தன் பாத்திரத்தை நிறைவாக செய்து இருந்தார்.. நந்தினியை விட குந்தவையின் பாத்திரம் எனக்கு நிறைவாக தோன்றியது.. திரிஷாவின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி இருந்தது..

    என்னுடன் படத்தை பார்த்த அலுவலக இலங்கை தமிழ் நண்பர், அந்த இலங்கை காட்சிகளை பார்த்து கடுப்பாகி விட்டார்.. இலங்கை அரசன், அவரின் படை, அந்த இடம் ஒன்று கூட பொருத்தமாக இல்லை என கூறினார்.. பின்பு நான் அவரிடம் படத்தின் பெரும்பான்மை காட்சிகள் தாய்லாந்தில் காட்சி படுத்தப்பட்டது என்று கூறினேன்..இருப்பினும் அவருக்கு மனது ஆறவேயில்லை.

    ஒரு சாதாரண ரசிகனாக, படத்தில் இது சரியில்லை.. இது சுமார்.. அதை அப்படி செய்து இருக்கலாம்.. இப்படி செய்து இருக்கலாம் என ஆயிரம் விளக்கங்கள் கூறலாம்.. ஆனால் தற்போதைய சூழலில் ஒரு படமெடுத்து, அதை திரைக்கு கொண்டு வருவது என்பது மிகவும் சவாலான காரியம்.. அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் / லைக்கா நிறுவனமும் பாராட்டுக்கு உரியவர்கள்..பாகுபலியுடன் இந்த படத்தை ஓப்பிடுவதை பற்றி உங்கள் கருத்து தான் என் கருத்தும்.. சரியான பார்வை..

    படத்தில் நடித்த எல்லா நடிகர்களும் தனிப்பட்ட முறையில் ஒரு திருப்தி நிச்சயம் இருக்கும்.. நம் மண்ணின் வரலாற்றை உலக அளவில் கொண்டு சேர்த்தது மிகப்பெரிய சாதனை.. MGR, கமல் இவர்கள் படமெடுக்க முயற்சித்தும், நடைபெறாமல் தற்போது இந்த முயற்சி கைகூடியதில் மகிழ்ச்சி.. தற்போது எடுக்கப்படாமல் இன்னும் சில ஆண்டுகளுக்கு பின் எடுக்க முயற்சித்து இருந்தாலும் படத்தின் பட்ஜெட், நடிகர்களின் கால்ஷீட் என் பல பிரச்சனைகள் உள்ளது.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. நண்பர் கிரி, தங்கள் தளத்தில் பின்னுட்டம் எழுதி நீண்ட நாட்கள் ஆகின்றது. ஆனால் தங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருகின்றேன்.

    உங்கள் பொன்னியின் செல்வன் திரைப்பட விமர்சனத்தைப படித்தவுடன் உடனே பின்னுட்டமிட அவல் வந்துவிட்டது, எனேன்றால் நீங்கள் பொன்னியின் செல்வன் புத்தகத்தை பற்றி பதிவிட்டபின்பு தன் எனக்கு சரித்திர நாவல்களை படிக்கும் ஆர்வமே ஏற்பட்டது.

    அதுவும் 1000, பக்கங்களுக் மேல் இருந்ததால் முதலில் பிரம்பிப்பாக இருந்தாலும் படிக்கப்படிக்க பக்கங்கள் தீர்ந்தது, எங்கே விரைவாக படித்து விடுவோமோ என்று ஒரு நாளைக்கு இவ்வளவு பக்கங்கள் என கட்டுப்பாடிட்டுப் படித்தேன்.

    அதன் பிறகு அமிஷ் அவர்கள் புத்தகங்கள். மற்றும் பல சரித்திர நாவல்களை தேடி படித்து வருகின்றேன் இப்பொழுதுகூட கடல்புறா நாவலை படித்துக் கொண்டிருக்கின்றேன்.

    ஆங்கிலப் படங்கள் மற்றும் சீரியல்கள் எனக்கு கொடுத்த பிரம்பிப்பை பல ஆண்டுகளுக்கு முன்பே அமரர் கல்கி தனது நாவலில் கொடுத்திருப்பதை பொன்னியின் செல்வன் புத்தகம் படித்த பிறகு உணர்ந்தேன்.

    இந்தப் புத்தகத்தை படிக்க பரிந்துரைத்த உங்களுக்கு எனது பல கோடி நன்றிகள்.பொன்னியின் செல்வன் புத்தகம் படிக்கும் போதே எனது கற்பனையில் நான் படத்தை எடுத்து விட்டேன்.

    மேலும் பட முன்னோட்டத்தை பார்த்தபிறகு இப்படத்தை பார்க்க தவிர்த்துவிட முடிவு செய்து விட்டேன்.

    காரணம், நடிகர்கள் தேர்வு, எனேன்றால் கல்கி அருள்மொழி, வந்தியத்தேவன் போன்றோருக்கு இளம் வயதக கூறிப்பிட்டு இருப்பார் ஆனால் இப்படத்தில் அனைவரும் கல்கி அவர்களின் கதபாத்திரங்களை விட வயதில் அதிகமாக (தந்தையை) போல் உள்ளர்கள்.

    முக்கியமாக பெரிய பலுவேட்டையராக சரத்குமாருக்கு, பதிலாக பார்த்திபன் நடித்திருந்தலும்கூட பொருந்தியிருக்கும்.

    மேலும் நாவலைப் படிக்கும்போது ஏற்படும் பிரம்மாண்டம் மற்று கதபாத்திரங்களின் உணர்வுகளின் வெளிப்பாடு இப்படத்தில் நிச்சயம் எதிர்பார்க்க முடியாது.

    இந்தப் படத்தை மணிரத்தினம் எனக்கென்னவோ தொலைக்காட்சியில் வரும் மகாபாரதம் தொடரைப் போல எடுத்திருப்பதாகவே என்னத் தோன்றுகின்றது.

    எது எப்படிஇருந்தாலும் பலரை பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படிக்க ஆர்வத்தை இப்படம் ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பாரி படத்தைச் சங்கர் இயக்கப் போவதாக கேள்விப்பட்டேன். இந்த படமாவது நிச்சயம் நல்ல தரத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

  3. @யாசின்

    “நான் இதுவரை பொன்னியின் செல்வன் நாவலை படிக்கவில்லை.”

    உங்களைப் படிக்க மீண்டும் பரிந்துரைக்கிறேன் 🙂 .

    “எந்த புத்தகமாக இருந்தாலும் அதை படிக்க கூடிய மனநிலையில் ஒரு தெளிந்த நீரோட்டம் போல் இருக்கும் போது தான் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்..”

    உண்மையே!

    “நான் கிட்டத்திட்ட மணிரத்தினம் சார் இயக்கிய படங்கள் பார்த்து 20 வருடங்களுக்கு மேல் இருக்கும்.”

    அப்படியா!

    கடைசியா ரோஜா தான் பார்த்தீங்களா? 🙂

    “முதல் பாதி முழுக்க கார்த்தியின் ஆதிக்கம்.. தொடர்ந்து அவரை மட்டும் பார்த்து கொண்டிருப்பதால் ஒரு சலிப்பும் ஏற்பட்டது..”

    நாவலிலேயே அப்படித்தான் இருக்கும்.

    உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டதுக்கு காரணம், வந்தியத்தேவன் போலத் தோன்றாமல் கார்த்தி போலத் தோன்றியது தான் 🙂 .

    “நந்தினியை விட குந்தவையின் பாத்திரம் எனக்கு நிறைவாக தோன்றியது.. திரிஷாவின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி இருந்தது..”

    எனக்கும் இதே கருத்து தான்.

    “இருப்பினும் அவருக்கு மனது ஆறவேயில்லை.”

    இலங்கை காட்சிகள் மேலோட்டமாகவே இருந்தது.

    “தற்போதைய சூழலில் ஒரு படமெடுத்து, அதை திரைக்கு கொண்டு வருவது என்பது மிகவும் சவாலான காரியம்.”

    சரியா சொன்னீங்க யாசின். இதனாலே இரண்டையும் குறிப்பிட்டேன்.

  4. @கார்த்திக்

    ” தங்கள் தளத்தில் பின்னுட்டம் எழுதி நீண்ட நாட்கள் ஆகின்றது. ஆனால் தங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருகின்றேன்.”

    நன்றி 🙂 .

    “நீங்கள் பொன்னியின் செல்வன் புத்தகத்தை பற்றி பதிவிட்டபின்பு தன் எனக்கு சரித்திர நாவல்களை படிக்கும் ஆர்வமே ஏற்பட்டது.”

    மிக்க மகிழ்ச்சி 🙂 .

    “எங்கே விரைவாக படித்து விடுவோமோ என்று ஒரு நாளைக்கு இவ்வளவு பக்கங்கள் என கட்டுப்பாடிட்டுப் படித்தேன்.”

    😀 பொன்னியின் செல்வனை வெறித்தனமா படித்து, ஒரே வாரத்தில் முடித்தேன்.

    “அதன் பிறகு அமிஷ் அவர்கள் புத்தகங்கள்.”

    இவரோட புத்தகங்கள் அருமை. Shiva Triology எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    “இப்பொழுதுகூட கடல்புறா நாவலை படித்துக் கொண்டிருக்கின்றேன்.”

    Kindle ல் இல்லாததால் படிப்பது தள்ளிபோய்க்கொண்டே உள்ளது.

    “ஆங்கிலப் படங்கள் மற்றும் சீரியல்கள் எனக்கு கொடுத்த பிரம்பிப்பை பல ஆண்டுகளுக்கு முன்பே அமரர் கல்கி தனது நாவலில் கொடுத்திருப்பதை பொன்னியின் செல்வன் புத்தகம் படித்த பிறகு உணர்ந்தேன்.”

    மாற்றுக்கருத்து இல்லாமல் வழிமொழிகிறேன். அதிலும் கப்பல் பேரலையில் சிக்கும் போது அவர் வர்ணித்து இருப்பது அட்டகாசமாக இருக்கும்.

    நானே அங்கே சிக்கிக்கொண்டது போல உணர்ந்தேன்.

    “பொன்னியின் செல்வன் புத்தகம் படிக்கும் போதே எனது கற்பனையில் நான் படத்தை எடுத்து விட்டேன்.

    ஹா ஹா ஹா சூப்பர் 🙂 . படித்த ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவம் இருக்கும்.

    “மேலும் பட முன்னோட்டத்தை பார்த்தபிறகு இப்படத்தை பார்க்க தவிர்த்துவிட முடிவு செய்து விட்டேன்.”

    பாருங்க கார்த்திக். கதையில் பெரியளவில் மாற்றமில்லை ஆனால், கதாபாத்திரங்கள் தான் திருப்தியளிக்கவில்லை.

    “இப்படத்தில் அனைவரும் கல்கி அவர்களின் கதபாத்திரங்களை விட வயதில் அதிகமாக (தந்தையை) போல் உள்ளர்கள்.”

    ஆமாம்.

    “முக்கியமாக பெரிய பலுவேட்டையராக சரத்குமாருக்கு, பதிலாக பார்த்திபன் நடித்திருந்தலும்கூட பொருந்தியிருக்கும்.”

    இதில் எனக்கு மாற்றுக்கருத்துள்ளது.

    கல்கி விவரிக்கும் உடல்வலிமையில் பார்த்திபன் 20% கூட இருக்க மாட்டார்.

    “எது எப்படிஇருந்தாலும் பலரை பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படிக்க ஆர்வத்தை இப்படம் ஏற்படுத்தி உள்ளது.”

    உண்மை தான்.

    “மேலும் பாரி படத்தைச் சங்கர் இயக்கப் போவதாக கேள்விப்பட்டேன். இந்த படமாவது நிச்சயம் நல்ல தரத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.”

    பார்ப்போம் 🙂 .

  5. Hi Giri

    How are you visiting your site after a long time. Was in chennai and I lost my old phone and I could not get in touch with you… (phone is a excuse in a way for I was held up with my family and other stuff for I visited after two years (Corona … Cause). I have read Ponniyin Selvan a number of times and I am surprised that we share the same views towards the film. Those who have not read the book may feel good about the movie people like us are not happy at the same time I do not want to criticize the way some characters were dropped and the way some characters were mixed (karuthiruman who comes only in the 5th part) I was happy at many places the dialogues were off kalki which gave me a satisfaction though the dialogues are not rendered by the original characters.. I think it will be a long note if I keep on adding points here take my number and add it on whats up and give a shout would like to chat with you.

    Kamesh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here