இணையத் தரத்தைக் கூகுள் மேம்படுத்தி வருகிறது. தற்போது வந்துள்ள Google Page Experience மாற்றம் இணைய அனுபவத்தை மேம்படுத்துவது.
Google Page Experience
உலகளவில் கூகுள் தேடுதல் மூலமாக இணையத் தளத்துக்குச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகம். சமூகத்தளங்களின் மூலமாகச் செல்பவர்களைவிடக் கூகுள் தேடுதல் மூலமாகச் செல்பவர்கள் அதிகம்.
உலகளவில் தேடுதல் சந்தையில் 92% (2021) கூகுள் வைத்துள்ளது என்றால், இதன் பலத்தை அறியலாம். Image Credit
எனவே, கூகுள் ஒரு மாற்றத்தைச் செய்கிறது என்றால், உலகளவில் அதன் தாக்கம் இருக்கும்.
இணையத் தரத்தை மேம்படுத்தவும், பயனாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கவும், தனது Algorithm ல் சீரான இடைவெளியில் மாற்றங்களைச் செய்து கொண்டு வரும்.
கூகுள் செய்த மாற்றத்தையொட்டி தளத்தை நடத்துபவர்கள், அதன் படி தங்களின் தளத்தில் மாற்றங்களை செய்வார்கள்.
தற்போது செய்துள்ள மாற்றம் Google Page Experience. இதைப்பார்க்கும் முன் Google AMP என்னவென்று பார்ப்போம்.
Google AMP (Accelerated Mobile Pages)
மொபைல் பயன்பட்டாளர்களுக்கு வேகமான இணைய அனுபவத்தைத் தரக் கூகுளால் கொண்டு வரப்பட்டதே Google AMP.
கூகுள் தேடுதலிலிருந்து தளங்களை வேகமாகத் திறக்க உருவாக்கப்பட்டதாகும்.
கூகுள் தேடுதலை மொபைல் மூலமாகச் செய்தால், சில தளங்களின் அருகே மின்னல் குறியீடுடன் ஒரு அடையாளம் இருக்கும். அத்தளம் வேகமாக இருக்கும்.
புரியும்படி கூறுவதென்றால்,
ஃபேஸ்புக் செயலியைப் பயன்படுத்தினால், அதில் சில செய்தி கட்டுரைகள் மின்னல் குறியீடுடன் (Instant Article) இருக்கும், அவை வேகமாகத் திறக்கும் (தற்போது இக்குறியீட்டை நீக்கி விட்டனர்).
காரணம், செய்தி தளத்தின் பக்கங்களை ஃபேஸ்புக் தன் தளத்தில் சேமிப்பதால்.
இதுபோல ஒரு வசதி தான் Google AMP. தளங்களின் விவரங்களைக் கூகுள் வைத்து (Cache) இருக்கும்.
Google AMP செயல்படுத்துவதற்கு, பராமரிப்பதற்குக் கடினமாக இருப்பதால், பலரும் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.
தனியுரிமையைப் (Privacy) பாதிப்பதாக ஐரோப்பா நாடுகளில் சர்ச்சை எழுந்தது.
எனவே, கொஞ்சம் கொஞ்சமாக Google AMP தேவையைக் கூகுள் குறைத்து வந்தது.
தற்போது கிட்டத்தட்ட இதற்கு மாற்றாக Google Page Experience என்ற வசதியைக் கொண்டு வந்துள்ளது.
Google Page Experience
தளங்களின் தரத்துக்கு ஏற்ற மதிப்பெண் வழங்கும் Page Experience முறையைக் கூகுள் கொண்டு வந்துள்ளது.
ஒரு தளம் எவ்வளவு வேகமாக உள்ளது? படிக்க எப்படியுள்ளது? பாதுகாப்பானதாக உள்ளதா? (https), திறக்கும்போது நகராமல் உள்ளதா?
என்பன போன்றவற்றை வரையறையாகக் கொண்டு வந்துள்ளது.
நகராமல் உள்ளதா என்றால் என்ன?
இணையத் தளத்தைத் திறந்து ஒரு சுட்டியை (Link) க்ளிக் செய்யும்போது அது நகர்ந்து விட வேறொன்றை தவறுதலாக க்ளிக் செய்வது.
அதோடு அளவற்ற விளம்பரங்கள் தோன்றினால் படிப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். இது போன்ற நிகழ்வுகள் இணைய அனுபவத்தை வெறுக்க வைக்கிறது.
எனவே, இவற்றை முறைப்படுத்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.
இனி மேற்குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்றி அதிக மதிப்பெண்கள் பெறும் தளங்கள் மட்டுமே கூகுள் பரிந்துரையில் முன்னணியில் இருக்கும்.
இதை மட்டும் செய்தால் போதுமா?! அப்படியென்றால் இதெல்லாம் பின்பற்றாத நல்ல தளங்கள் நிலைமை என்ன ஆகும்? என்பதையும் பரிசீலிப்பதாக கூகுள் கூறுகிறது.
தொழில்நுட்பரீதியில் அனைத்துமே ஒரு தளத்தில் சிறப்பாக இருந்தும், அதில் உள்ள கட்டுரைகள் குப்பையாக இருந்தால் என்ன பயன்?
எனவே, இதற்கான Algorithm ம் இருக்கும் ஆனால், ஒட்டுமொத்தமாக இணைய அனுபவம் மேம்பட்டதாக இருக்கும்.
மொபைல் பயன்பாடு அதிகரித்து வருவதால், இதையொட்டியே கூகுள் தேடுதல் வடிவமைப்புகளும், மாற்றங்களும் இனி இருக்கும்.
சுருக்கமாக, இனி மொபைல் இணைய பயன்பாடு இணையத்தை ஆளப்போகிறது.
பயனாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
பயனாளர்கள் என்றால் யார்? படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் தான்.
நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஜூன் 15 2021 வாக்கில் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் பார்வையிடும் தளங்கள் மேம்பட்டதாக மாறிக்கொண்டு வரும்.
இனி மின்னல் குறியீட்டுக்குப் பதிலாக, Page Experience குறியீடு வரும். இக்குறியீடு உள்ள சுட்டியைத் திறந்தால் சிறந்த இணைய அனுபவத்தைக் கொடுக்கும்.
தளத்தை வைத்து இருப்பவர்கள் (என்னைப் போல) பயனாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, தளத்தின் படிக்கும் அனுபவத்தை மேம்படுத்த வேண்டும்.
கூகுள் அறிவிப்பையொட்டி ஏற்கனவே இத்தளத்தில் மாற்றங்கள் செய்தாகி விட்டது.
கூகுள் செய்த தவறு
2015 ம் ஆண்டில் கூகுளால் Google AMP ஆரம்பிக்கப்பட்டது. 6 வருடங்களில் ஏராளமான உழைப்பை கொடுத்தும் பயனற்றதாக மாறி விட்டது.
தற்போது செய்துள்ள Page Experience கட்டுப்பாடை 2015 லிலேயே செய்து இருந்தால், உலக இணையம் இந்நேரம் மிகச்சிறப்பானதாக மாறி இருக்கும்.
காரணம் என்ன?
AMP என்பது கூகுளின் கட்டுப்பாட்டில் இருப்பது (Open Source என்றாலும்), Page Experience என்பது எக்கட்டுப்பாட்டிலும் இல்லை.
தளத்தைச் சிறப்பாக வைத்து இருந்தால் போதுமானது. தனியாக வேறு எதையும் செயல்படுத்த வேண்டிய கட்டாயம், நெருக்கடியில்லை.
இக்கட்டுப்பாடு, மதிப்பெண் வழங்கும் முறை எவரையும் சார்ந்து இல்லை என்பதால், அனைவரிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இதிலும் பிரச்சனைகள் வருமா? என்பதை வரும் காலம் தான் கூறும்.
தோராயமாக இரு வருடங்களில் இணையத் தளங்களின் வேகம், வடிவமைப்பு, படிக்கும் அனுபவம் ஆகியவை உலகளவில் பல மடங்கு மேம்பட்டு இருக்கும்.
இணைய அனுபவத்தை மேம்படுத்தக் கூகுள் எடுத்த இம்முயற்சிக்கு வாழ்த்துகள்.
கொசுறு
இத்தளத்தில் (giriblog) படிக்கும் அனுபவம் எப்படியுள்ளது? எதுவும் சிரமம் இருந்தால் குறிப்பிடவும், சரிப்படுத்த முயற்சிக்கிறேன்.
மேற்கூறியது தளத்துக்கு வந்து படிப்பவர்களுக்கானது, Dailyhunt உட்பட மற்ற வசதிகளில் இத்தளத்துக்கு வராமல் படிப்பவர்களுக்கானது அல்ல.
தொடர்புடைய கட்டுரைகள்
facebook Instant Article | தெறிக்கும் வேகம்
முகவரியில் “HTTPS” இல்லையா..! தெறிச்சு ஓடிடுங்க 🙂
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
நண்பர் கிரி,தங்கள் தளம் ஆரம்பம் முதலே, படிப்பதற்கும் சரி,பக்கங்கள் வேகமாகத் திறப்பதற்கும் நன்றாகவே இருக்கின்றது.சில வருடங்களுக்கு முன்பு கமெண்ட் செய்வதில் சிறு பிரச்சனை எனக்கு ஏற்பட்டது ஆனால் தற்போது அது போல் எதுவும் தங்கள் தளத்தில் நிகழவில்லை.இது போலவே தங்கள் தளம் எளிமையான முறையில் இருப்பது சிறப்பு.
இலகு தமிழில் விளக்கியமைக்கு மிக்க மிக்க நன்றிகள்.
எனக்கு தங்கள் தளத்தில் சிரமம் இருப்பதாகத் தெரியவில்லை
@கார்த்திக் நீங்கள் கூறுவது சரி தான். ஓரிரு வருடங்களுக்கு முன்பு கருத்திடுவதில் பிரச்சனையிருந்தது.
மேலும் அதை எப்படி சரி செய்வது என்பது தெரியவில்லையாததால் சரி செய்ய முடியவில்லை.
பின்னர் வேறொரு Theme மாற்றி, மாற்றங்களைச் செய்த பிறகு சரியானது. தற்போதைய வடிவமைப்பு முழுக்க நானே கற்றுக்கொண்டு உருவாக்கியது,
தளத்தை இன்னும் வேகமாக்க இன்னொரு வசதியைச் செயல்படுத்த வேண்டும் ஆனால், அதில் தொழில்நுட்ப பிரச்னையுள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள் சரி செய்த பிறகு இங்கும் செயல்படுத்தி விடுவேன்.
அதன் பிறகு கூடுதல் வேகமாக திறக்கும்.
@மதிசுதா நன்றி 🙂
நண்பர் கிரி,கருத்திடும் பகுதியில் கருத்திட்ட பின்பு அதை மீண்டும் சரி செய்ய எடிட் வசதி ஏற்படுத்தினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்,ஏனென்றால் சிலசமயம் கருத்துக்களை சரி பார்க்கும் முன்பே பதிவேற்றம் செய்து விடுகிறேன் மீண்டும் அதை சரி செய்ய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
உங்கள் பெயரே காரத்திக்கா.. நான் இவ்வளவு நாட்களாக கார்த்திக் என்றே அழைத்து வருகிறேன் 😀 எழுத்துப்பிழை என்று நினைத்துக்கொண்டேன்.
காரத்திக் நியூமராலிஜி படி எதுவும் மாற்றிக்கொண்டீர்களா? இல்லை பெயரே அது தானா?
நீங்கள் கூறும் பிரச்சனை புரிகிறது.
பிரச்சனை என்னவென்றால் சிலர் விவாதத்தில் ஒன்றை பேசிவிட்டு பின்னர் தாங்கள் கூறியதை மாற்றி விடுவார்கள். புதிதாக ஒருவர் படித்தால் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பாகிறது.
History உடன் மாற்ற முடியுமா என்று முயற்சிக்கிறேன்.
நண்பர் கிரி, பெயர் மாற்றம் நியூமராலிஜிக்காக இல்லை, சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்று ஒரு சிறு புள்ளியை எடுத்துவிட்டேன்(சும்மா ஒரு தமாசுக்கு)😁😁,உண்மையில் புதிய உலவியை (அதங்க browser) பயன்படுத்தியபோது தங்கள் தளத்திற்காக பெயரை சேமிக்கட்டுமா என்றது, சரி என்று விட்டு விட்டேன் முதலில் ஏற்பட்ட புள்ளிப் பிழை தொடர்ந்து வந்துவிட்டது, தவறை சுட்டிக்காட்டிய தங்களுக்கு மிக்க நன்றி👍👍 .50 வருடத்திற்கு முன்பு இருந்து இன்று பிறக்கப்போகும் குழந்தை வரை இதையே (கார்த்திக்) பெயராக வைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஐந்தில் ஒருவருக்கு இந்த பெயர் வைப்பார்கள் போல,எனது பெயரை ஒரு முறை அழைத்தால் திரும்பமாட்டேன், இரண்டு மூன்று முறை கூப்பிட்டால் தான் திரும்பி என்னைத்தான் கூப்பிடுகிறார்களா என்று பார்ப்பேன், ஏனென்றால் பலமுறை என்னைதான் கூப்பிடுகின்றார்கள் என நினைத்து பல்பு வாங்கி இருக்கிறேன். இதில் சிறுவர்கள் கூட அடக்கம்😔, நடிகர் சந்தானம் கூறுவதைப் போல “அவனவன் வேறு வேறு பெயரை வைத்துக் கொண்டு சந்தோஷமா இருக்கான் நான் மட்டும் இந்த ஒரு பெயரை வைத்துக்கொண்டு படும் பாடு இருக்கே….”😭😭.
நீதி:
எழுத்துப் பிழையை சரி செய்ய பின்னூட்டப் பகுதியில் எடிட் செய்யும் வசதி வேண்டும்.
ஆகா 🤩🤩🤩 எடிட் செய்யும் வசதி வந்துவிட்டது மிக்க நன்றி🙏🙏, ஆனாலும் குறுகிய நேரத்திற்கு தான் இருக்கும் போல 😑.
Google Page Experience தகவலுக்கு நன்றி கிரி.. உங்கள் தளத்தின் அனுபவத்தை பற்றி கேட்டு இருந்திங்க, என்னை பொறுத்தவரை தற்போது இருப்பது, நன்றாகவும் , எளிதாகவும் இருக்கிறது..எந்த மாற்றமும் வேண்டாம் என எண்ணுகிறேன்..
கருத்திடும் பகுதியில் ஆங்கிலத்தில் type (தங்கிலீஷ்) செய்யும் போது அது தமிழில் மாறும்.. நான் பல வருடமாக அப்படித்தான் என் கருத்துக்களை பகிர்ந்தேன்.. ஆனால் கடந்த சில வருடமாக இது போல செய்ய முடியவில்லை.. நான் கூகிள் குரோம் பயன்படுத்துகிறேன்.. பிரச்சனை என் புறமா? இல்லை தளத்திலா? என்று தெரியவில்லை.. விவரம் கூறவும்..
ஒரே சின்ன குறை மட்டும் தெரியுது..(சும்மா காமெடி) முன்பெல்லாம் பல பேர்கிட்ட கம்பு சுத்திகிட்டு இருப்பீங்க !!! தற்போது கம்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு அமைதியா கடந்து சென்று விடுறிங்க..பழைய சில பதிவுகளை பார்க்கும் போது சும்மா.. விடாம இறங்கி, இறங்கி அடிச்சி இருக்கீங்க!!!! தற்போது அதை படிக்கும் போது உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை ஏற்படுகிறது..
(தற்போதைய வடிவமைப்பு முழுக்க நானே கற்றுக்கொண்டு உருவாக்கியது..) உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன்.. சமீபத்தில் நினைவு கூர்ந்த வரிகள் : யாரிடமே போட்டியிட விரும்பாதவன், தன்னிடமே தோற்று விடுவான்.. ) நன்றி கிரி..
@காரத்திக் நீங்கள் கேட்ட எடிட் வசதியைத் தற்போது செயல்படுத்தியுள்ளேன்.
10 நிமிடங்கள் வரை கருத்திட்டதை திருத்த முடியும். அதைத் தாண்டி விட்டால், செய்ய முடியாது.
இந்த கால அளவை வைக்கவில்லையென்றால், பின்னர் விவாதங்களின் இடையே கருத்தை மாற்றிக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.
நன்றி
@யாசின் “என்னை பொறுத்தவரை தற்போது இருப்பது, நன்றாகவும் , எளிதாகவும் இருக்கிறது..எந்த மாற்றமும் வேண்டாம் என எண்ணுகிறேன்..”
நன்றி யாசின் 🙂
“கருத்திடும் பகுதியில் ஆங்கிலத்தில் type (தங்கிலீஷ்) செய்யும் போது அது தமிழில் மாறும்.. நான் பல வருடமாக அப்படித்தான் என் கருத்துக்களை பகிர்ந்தேன்.. ஆனால் கடந்த சில வருடமாக இது போல செய்ய முடியவில்லை”
முன்பு அப்படி வைத்து இருந்தேன் ஆனால், Theme மாற்றியபிறகு அதைக் கொண்டு வர முடியவில்லை.
https://chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab?hl=en
இதை க்ரோமில் நிறுவிக்கொள்ளுங்கள். க்ரோம் பயன்படுத்தும் எந்தத் தளத்திலும் தமிழ் உட்பட நமக்குத் தேவைப்படும் மொழிகளில் எழுத முடியும்.
இதைத் தான் நான் பயன்படுத்தி வருகிறேன்.
“முன்பெல்லாம் பல பேர்கிட்ட கம்பு சுத்திகிட்டு இருப்பீங்க !!! தற்போது கம்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு அமைதியா கடந்து சென்று விடுறிங்க.”
😀 உண்மையைக் கூறினால், தற்போது கருத்திடுபவர்கள் குறைவு. பலரும் சமூகத்தளங்களுக்கு நகர்ந்து விட்டார்கள்.
எனவே, இங்கே படிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.
எப்பாவது யாராவது வருவார்கள், அவ்வப்போது நடந்து கொண்டு தான் உள்ளது. குறிப்பா தலைவர் பற்றிய கட்டுரை என்றால், அங்கே நிச்சயம் சண்டை இருக்கும் 🙂 .
தற்போது கருத்திடுபவர்கள் குறைந்தது ஏமாற்றம் தான் ஆனால், கால மாற்றத்தில் ஏற்றுக்கொள்ள கூடியதே.
எனக்குத் தான் நீங்க இருக்கீங்களே 😀 .
“பழைய சில பதிவுகளை பார்க்கும் போது சும்மா.. விடாம இறங்கி, இறங்கி அடிச்சி இருக்கீங்க!!!! தற்போது அதை படிக்கும் போது உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை ஏற்படுகிறது..”
🙂 நானும் எப்பாவது பார்க்கும் போது தோன்றும். ரணகளமாக இருந்தது.
கிரி, சமீபத்தில் சக்தியுடன் பேசி கொண்டிருக்கும் போது நான் உங்களை பற்றி அவரிடம் கூறியது : கிரியை பொறுத்தவரை எழுதுவதில் அலாதி விருப்பம் கொண்டவர்.. யார் படிக்கிறாங்கலோ ? இல்லையோ… கருத்துக்களை பகிர்கிறார்களோ இல்லையோ.. அவரோட தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக எழுதி கொண்டிருக்கிறார்.. (இன்னும் எழுதுவார்).. என்றாவது ஒரு நாள் அவர் எழுதியது போதும் என்று அவரது மனதிற்கு தோன்றும் போது எழுத்து தடைப்படலாம் … அந்த கடைசி பதிவு வரை என்னுடைய தொடரல் நிச்சயம் இருக்கும்..
ஒரு குறிப்பிட்ட வேலையை ஒரு மனிதன் ஒரு நாள் / ஒரு ஆண்டு / 2 ஆண்டு / 5 ஆண்டு என செய்யலாம்.. நிச்சயம் 10 ஆண்டுகளுக்கு மேல் செய்யும் போது ஒரு வித சலிப்பு ஏற்படுவது இயல்பு!!! ஆனால் கிட்டதிட்ட 13/14 ஆண்டுகளுக்கு மேல் சலிப்பில்லாமல், இன்னும் உற்சாகமாக எழுதி கொண்டிருக்கிறார்.. நிச்சயம் உங்களை ஊக்குவிப்பது என் கடமையாக கருதுகிறேன்.. மேலும் நிறைய பயனுள்ள கலவையான தகவல்களை இந்த தளத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்..
என்னுடைய சோர்வான தருணங்களில் சில பதிவுகள் என் மனதிற்கு மிகவும் நெருக்கமாய் இருந்து இருக்கிறது.. இதில் தெரிந்து கொண்ட சில படங்களை பார்க்கும் போது மகிழ்ச்சி கடலில் மிதந்து இருக்கிறேன்.. உங்கள் எழுத்துக்கள் பாலை நிலத்தில் ஒற்றை ஆளாக நின்றவனுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து இருக்கிறது.. சுருங்க கூறின் உங்கள் எழுத்துக்கள் என்னை செம்மைப்படுத்தி கொண்டிருக்கிறது .. உங்கள் எழுத்து பயணம் தொடரும் வரை.., நான் தொடர்ந்து வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது.. நன்றி .
@யாசின் “அந்தக் கடைசி பதிவுவரை என்னுடைய தொடரல் நிச்சயம் இருக்கும்”
நன்றி யாசின் 🙂 .
“கிட்டதிட்ட 13/14 ஆண்டுகளுக்கு மேல் சலிப்பு இல்லாமல், இன்னும் உற்சாகமாக எழுதிக் கொண்டிருக்கிறார்”
இடையில் சில நேரங்களில் சலிப்பு ஏற்பட்டது உண்மை ஆனால், அது ஒரு வாரம் கூட இருந்ததில்லை. திரும்ப உற்சாகமாகி விடுவேன்.
ஆனால், உங்களைப் போல 10+ வருடங்களாக கருத்திடுபவரையும் நான் கண்டதில்லை. எவருமே ஓரு கட்டத்தில் கை விட்டுப் படிப்பதை மட்டும் தொடர்வார்கள்.
ஆனால், 95% கட்டுரைகளில் கருத்திடுவது என்பது உண்மையிலேயே பெரிய விஷயம். மிக்க நன்றி.
என் கட்டுரைகளில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இன்னும் உங்களை மோசமாக எண்ண வைத்துத் தவிர்க்க வைக்கவில்லை என்ற அளவுக்கு எழுதுகிறேன் என்பதே எனக்குச் சாதனையாக உள்ளது.
என் கருத்தை மனசாட்சிக்கு உட்பட்டே எழுதுவேன், தவறு என்று தோன்றினால் நானே நினைத்தாலும் என்னால் எழுத முடியாது.
எனவே, இதுவரை மற்றவர்கள் நினைப்பது பற்றிக் கவலைப்படாமல் சுதந்திரமாக எழுதுகிறேன். தவறு என்று தோன்றினால், ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருப்பதால், கவலையில்லை.
படிப்பவர்களுக்குச் சலிப்பை தந்து விடக் கூடாது என்று பல தலைப்புகளில் மாற்றி மாற்றி எழுதுவேன்.
முடிந்தவரை ஒரே மாதிரி / ஒரே தலைப்பில் எழுதக் கூடாது என்பதை 2010 ல் இருந்து பின்பற்றி வருகிறேன்.
எழுதுவது குறைந்தால் நேரமின்மையால் / குடும்ப சூழ்நிலை காரணமாக மட்டுமே இருக்கும். தற்போது வீட்டில் யாரும் இல்லை. எனவே, நிறைய எழுதுகிறேன்.
“மேலும் நிறைய பயனுள்ள கலவையான தகவல்களை இந்தத் தளத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்..”
உண்மையில் பலவற்றை எழுதுவதற்காக அதிக உழைப்பை கொடுத்துள்ளேன். சுருக்கமாக இங்கே எழுத நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்.
இத்தளம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. இத்தள வடிவமைப்பு, தொழில்நுட்பம் உட்பட.
புதிதாக என்ன எழுதலாம் என்ற யோசனையே இருக்கும். எதிர்கால திட்டங்கள் நிறைய உள்ளது. எனவே, அடுத்த 10 வருடங்களுக்கு நிறுத்த வாய்ப்பே இல்லை 🙂 .
முக்கியமாக வடமாநில பயணம் சென்று பயணக்கட்டுரை எழுத வேண்டும் என்பது, என் பல வருட கனவு.
அமெரிக்கா சென்று எழுத வேண்டும் என்பதும் உண்டு ஆனால், பொருளாதார சூழல் காரணமாக முடியவில்லை.
“உங்கள் எழுத்துப் பயணம் தொடரும் வரை.., நான் தொடர்ந்து வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது”
நன்றி யாசின் 🙂 . இணைந்தே பயணிக்கக் கடவுள் அருள் புரிவாராக.
நண்பர் கிரி,தங்கள் பார்வை தெளிவில்லாமல் போகும் வரை ,தங்கள் கைகள் நடுங்கும் வரை (வயோதிகத்தின் காரணமாக)தங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கவேண்டும்,நண்பர் யாசின் கூறுவதை அப்படியே வழிமொழிகிறேன்,தொடர்ச்சியாக கருத்திடவில்லை என்றாலும் தங்கள் தளத்தை தொடர்ந்து பல ஆண்டுகளாகவே படித்து வருகின்றேன்.என்னைப் போலவே பலரும் இருக்கிறார்கள்,சில சமயம் தனிமையை உணரும் போது தங்கள் தளத்திற்கு வந்து படித்தால் ஒரு சிறந்த நண்பருடன் உரையாடிக் அனுபவமே கிடைக்கும்,தாங்கள் தொடர்ச்சியாக எழுத எங்களைப் போன்றோரின் பிரார்த்தனை என்றும் உங்களுடன் இருக்கும்.
@கார்த்திக்
“புதிய உலவியை (அதங்க browser) பயன்படுத்தியபோது தங்கள் தளத்திற்காக பெயரை சேமிக்கட்டுமா என்றது, சரி என்று விட்டு விட்டேன் முதலில் ஏற்பட்ட புள்ளிப் பிழை தொடர்ந்து வந்துவிட்டது”
ஓ! சரி 🙂
“ஆகா 🤩🤩🤩 எடிட் செய்யும் வசதி வந்துவிட்டது மிக்க நன்றி🙏🙏, ஆனாலும் குறுகிய நேரத்திற்கு தான் இருக்கும் போல 😑.”
முன்னரே குறிப்பிட்டது போல, எழுத்துப்பிழை இருந்தால் அதைத் திருத்த 10 நிமிடங்கள் போதுமானது.
எப்போது வேண்டும் என்றாலும் திருத்தலாம் என்றால், விவாதங்களில் கருத்துகளை மாற்றிகுழப்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.
இது ஆரோக்கியமான விவாதமாக இருக்காது.
“தங்கள் பார்வை தெளிவில்லாமல் போகும் வரை ,தங்கள் கைகள் நடுங்கும் வரை (வயோதிகத்தின் காரணமாக) தங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கவேண்டும்”
நன்றி கார்த்திக் 🙂 .
தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.