அறம் கெட்ட துறை விலகினால் என்ன நடக்கும்?

2
அறம் கெட்ட துறை

கோவில்களை அறம் கெட்ட துறை அவர்களது திராவிட மாடல் பாணியில் பணம் காய்க்கும் மரமாக மட்டுமே பார்த்து வருகிறது. எதனால் இத்துறை ஒழிக்கப்பட வேண்டும் என்று பார்ப்போம். Image Credit

அறம் கெட்ட துறை

கோவிலைப் பராமரிப்பதற்காக உருவாக்கப்பட்ட துறை கோவில்களின் வளர்ச்சிக்குப் பெருமைப்படும் படி இதுவரை எதையும் செய்யவில்லை.

இவ்வளவு வருடங்களில் கிடைத்த பல ஆயிரக்கணக்கான கோடிகளில் ஒரு கோவில் கூடக் கட்டப்படவில்லை.

இவர்கள் கோவில் கட்டினால் எவ்வளவு கேவலமான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பதால், ஒருவகையில் இவர்கள் கட்டாததே நல்லது என்று தோன்றுகிறது.

பெரிய கோவில் உட்படப் பல நூற்றாண்டு பழமையான கோவில்களில், அதன் சிறப்பே தெரியாமல் ஆணி அடிப்பது, சுவரை உடைப்பது, டைல்ஸ் பதிப்பது, சிலையைச் சிதைப்பது என்று கண்ணீர் வர வைக்கிறார்கள்.

குரங்கு கையில் பூமாலை போல, கோவில் பழமை, சிறப்பு, பெருமை தெரியாதவர்களிடம் இந்துக் கோவில்கள் மாட்டிக்கொண்டு சீரழிகிறது.

இத்துறை அரசு ஊழியர்களுக்கு இது ஒரு பணி அவ்வளவே! ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.

பணம் சம்பாதிக்கும் துறை

தமிழக துறைகளில் சம்பாதிக்கும் துறைகளில் அறம் கெட்ட துறையும் ஒன்றாகும்.

கோவிலில் எப்படியெல்லாம் வசூலிக்க முடியுமோ அவ்வளவையும் செய்து பணம் சம்பாதிக்கும் துறையாக செயல்படுத்தி வருகிறார்கள்.

பக்தர்களின் பணத்தைக் கோவிலின் வளர்ச்சிக்கு, பராமரிப்புக்கு, ஊதியத்துக்குச் செலவழிக்காமல் அரசு தன் துறைக்குச் செலவழித்துக்கொண்டுள்ளது.

இவர்கள் ஏதாவது கட்டிடம் கட்டினால் கமிஷன் அடிக்கலாம் என்பதற்காகவே பல கோடிகளில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

அதிமுக எதுவுமே செய்யவில்லை ஆனால், திமுக அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று கோவில் பணத்தை வீணடித்து வருகிறார்கள்.

பழனி கோவில் வருமானத்தை வைத்துக் கோவிலை மட்டுமல்ல, பழனியையே திருப்பதி போல மாற்றி விட முடியும் ஆனால், பழனி கோவில் இதுவரை என்ன குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது?

எதற்கு சொத்து?

ஏற்கனவே இத்துறையைப் பற்றி எழுதி விட்டதால், புதிதாகப் படிப்பவர்களுக்காகச் சுருக்கமாகக் கூறுகிறேன்.

கோவிலின் பராமரிப்பு, வளர்ச்சிக்கு, கோவில் ஊழியர் ஊதியத்துக்கு பண்டைய காலத்தில் கோவிலுக்குப் பலரும் நிலத்தைத் தானமாக வழங்கினர்.

ஆனால், நிதி இதற்கு பயன்படுத்தப்படாமல், துறையின் செலவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இனோவா கார் வாங்கியதெல்லாம் இக்கணக்கில் தான்.

இன்றும் (2024) எங்கள் ஊரில் உள்ள கோவிலில் உள்ள ஒரு பூசாரிக்கு மாதம் ₹200 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. அப்பணமும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்கப்படுகிறது.

நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று தெரியும், இது உண்மை. இத்தலைமுறையோடு இவர்கள் முடிந்து விடுவார்கள், புதியதாக யாரும் வர மாட்டார்கள்.

பூசாரிக்கு ₹200 சம்பளம் ஆனால், அறம் கெட்ட துறை அதிகாரிக்கு ₹40,000 சம்பளம். கோவில் சொத்தின் நோக்கமே இங்கே சிதைக்கப்பட்டு விட்டது.

குடமுழுக்கு செய்வதாக கூறும் அறம் கெட்ட துறை மிகக் குறைவான பணத்தையே செலவு செய்கிறது. அப்பகுதி மக்களே பெரும்பான்மை செலவைச் செய்கிறார்கள்.

ஆனால், தாங்கள் செய்ததாக பெருமையடித்துக்கொள்கிறது அரசு. இது போல நூறு செய்திகளைக் கூற முடியும்.

அறம் கெட்ட துறை விலகினால் என்ன நடக்கும்?

 • இந்து மதம் பெருமளவில் வளர்ச்சி பெறும், திருவிழாக்கள் கொண்டாட்டமாக மாறும், இழந்த ‘கோவில்கள் மாநிலம்’ என்ற பெருமையைத் திரும்பப் பெறும். தமிழக அரசின் முத்திரையே கூறும் தமிழகம் எதற்குச் சிறப்பு என்று.
 • ஏராளமான புதிய கோவில்கள் உருவாகும். கோவில் திருவிழாக்கள் பெரியளவில் சுதந்திரமாகக் கொண்டாடப்படும்.
 • கோவில் பராமரிப்பு சிறப்பாக இருக்கும், பலரும் பங்களிப்பைக் கொடுப்பார்கள். திருப்பதி போல வளரும் வாய்ப்புள்ள கோவில்கள் பெரும் மாற்றம் அடையும்.
 • ஒரு கிறித்துவ பாதிரியாரிடம் ‘கிறித்துவ ஆலயங்கள் அரசு கட்டுப்பாட்டில் வந்தால் என்ன நடக்கும்?‘ என்று கேட்கப்பட்டது.
 • அதற்கு, ‘50% ஆலயங்கள் காணாமல் போய் விடும்‘ என்றார். இதன் இன்னொரு அர்த்தம் சம்பாதிக்க முடியாது என்பது. இவர் கூறுவது 100% சரியான கருத்து.
 • எனவே, இங்கேயும் இத்துறை இல்லையென்றால், தனிப்பட்ட நபர்கள் பலரும் கோவிலைச் சம்பாதிக்கும் ஒரு வழியாக உருவாக்குவார்கள் ஆனால், இந்து மதம் வளர்ச்சி அடைவதோடு கோவில்கள் சுதந்திரமாக இருக்கும்.
 • அதாவது, கெட்டதிலும் நல்லது என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான். தற்போது நடக்கும் தவறுகள் பணம் சார்ந்து மட்டுமல்ல இந்து மதத்தைச் சீர்குலைக்கும் முயற்சி.
 • திருடர்கள் எங்குமே இருப்பார்கள். அறம் கெட்ட துறை விலகினால், அனைத்துமே நேர்மையாக நடக்கும் என்பதில்லை ஆனால், மிகப்பெரிய அளவில் கோவில்கள் புத்துணர்வு பெறும், இந்து மதம் வளரும், கொண்டாடப்படும்.
 • தமிழகத்தின் அடையாளமாக உள்ள பழனி, மதுரை மீனாட்சி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் முருகன், தஞ்சை பெரிய கோவில்கள் போன்றவை மிகப்பெரிய அளவில் கவனம் பெறும், பக்தர்களுக்கு வசதிகள் கிடைக்கும்.

திராவிடத்திடம் கோவில் தொடர்ந்தால், கோவிலுக்கு அர்ச்சகர் கூட எதிர்காலத்தில் கிடைக்க மாட்டார்கள். தற்போதே இதில் மிகப்பெரிய சிக்கல் நிலவுகிறது.

திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்

திராவிடக் கட்சிகளுக்குக் குறிப்பாக திமுகக்கு வாக்களிக்கும் இந்துக்களின் ஒவ்வொரு வாக்கும் இந்து மதத்தை அழிக்கத் துணை போகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இவர்களின் நோக்கம், இந்து மதத்தின் புகழை, வரலாற்றை, பழம் பெருமையை, பண்பாட்டைச் சிதைப்பதே.

சமீபத்தில், வள்ளலாரின் அடையாளமான நெற்றி நிறைய திருநீறை அழித்து விட்டு, பால் நெற்றியாக படத்தை வெளியிட்டுத் திட்டு வாங்கினார்கள்.

எனவே, இவர்கள் நோக்கத்தில் தெளிவாகவே உள்ளார்கள், மக்கள் தான் இவர்களின் மோசமான எண்ணங்களைச் சரியாக உணர வேண்டும். கட்சிப்பாசத்துக்காக மதத்தை அழிக்கத் துணை போகாதீர்கள்.

அறம் கெட்ட துறையை நீக்குவதாகக் கூறும் பாஜகக்கு வாக்களிக்க ஒருவேளை வேறு காரணங்களால் விருப்பம் இல்லையென்றால், திராவிடக் கட்சியல்லாத, அவர்கள் கூட்டணியில் இல்லாத கட்சிக்கு வாக்களியுங்கள்.

ஆனால், மறந்தும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள். தமிழகத்தில் இந்து மதத்துக்கு ஆபத்து மற்ற மதத்தினர் அல்ல, திமுக என்பதை உணருங்கள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. கிரி.. பொதுவாக மதம் என்பதை வைத்து பணம் மட்டும் சம்பாரிக்க வேண்டும் என்று எண்ணுவதே தவறு.. இது ஒரு புண்ணியம் & கடமை .. அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் கைமாறு.. பல நுற்றாண்டுகளாக நாம் முன்னோர்கள் நமக்கு கற்று கொடுத்ததை நாம், நம் சந்ததிகளுக்கு கற்று கொடுக்க வேண்டியது நமது அடிப்படை கடமை..

  ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக உள்ளது.. நமது தாய்மொழியை கூட சரியாக பேச / எழுத ஒரு நாகரிக சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய அவமானம்..

  மொழிக்கே இந்த நிலை என்றால், மொழியை தாண்டி எவ்வளவோ (வாழ்வியல், ஆன்மிகம், நூல்கள், பண்பாடு, கலாச்சாரம், உணவு.. etc) உள்ளது.. நம்மை ஆள்பவர்களும் இதை கவனத்தில் கொள்வது மிக மிக அவசியம். இதை பாதுகாப்பதில் இவர்கள் நிச்சயம் அக்கறை காட்ட வேண்டும்.. இவற்றை வேறு பணம் தயாரிக்கும் இயந்திரமாக பார்க்க கூடாது..

  பல நுற்றாண்டுகளாக நம் முன்னோர்கள் பின்பற்றி, பாதுகாத்து வந்ததை நம் தலைமுறையில் காஃவு கொள்வது, ஒரு இனத்தையே கொள்வதற்கு சமம். இந்த தவறை நாம் செய்தொமானால் இதற்கு பரிகாரமே இருக்காது..

 2. @யாசின்

  “பொதுவாக மதம் என்பதை வைத்து பணம் மட்டும் சம்பாரிக்க வேண்டும் என்று எண்ணுவதே தவறு”

  அது தான் நடந்துகொண்டுள்ளது யாசின்.

  “பல நுற்றாண்டுகளாக நாம் முன்னோர்கள் நமக்கு கற்று கொடுத்ததை நாம், நம் சந்ததிகளுக்கு கற்று கொடுக்க வேண்டியது நமது அடிப்படை கடமை.”

  பெரும்பாலானவர்கள் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை.

  “நமது தாய்மொழியை கூட சரியாக பேச / எழுத ஒரு நாகரிக சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய அவமானம்.”

  உண்மை. அவமானமாக உள்ளது, இதற்கு அரசுகளே காரணம்.

  “நம்மை ஆள்பவர்களும் இதை கவனத்தில் கொள்வது மிக மிக அவசியம். இதை பாதுகாப்பதில் இவர்கள் நிச்சயம் அக்கறை காட்ட வேண்டும்..”

  காட்ட மாட்டேன் என்கிறார்கள். இதுவே பிரச்சனையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here