உலகை அழிக்கும் மேற்கத்திய நாடுகள்

0
உலகை அழிக்கும் மேற்கத்திய நாடுகள்

கோ பிரச்சனையிலும், எதிரியை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் மேற்கத்திய நாடுகள், தங்கள் நாட்டு மக்களையும் துன்புறுத்தி மற்ற நாடுகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றன. Image Credit

மேற்கத்திய நாடுகள்

மேற்கத்திய நாடுகள் செய்து வருவதை ஏற்கனவே விரிவாகக் கூறி இருந்தாலும், தற்போது கொஞ்சம் கூடக் குறையாமல் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டு செல்வது கவலையளிக்கிறது.

போர் எவ்வளவு நாட்கள் நடந்தாலும் அமெரிக்கா துணை நிற்கும்‘ என்று உக்ரைனுக்குச் சென்று உக்ரைன் கோமாளி ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் பைடன் உறுதியளித்துள்ளார்.

இதோடு மற்ற ஐரோப்பா நாடுகளும் ஆயுதங்களை வழங்குவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

ரஷ்யா விரைவில் வீழ்ந்து விடும் என்று மேற்கத்திய நாடுகள் நினைத்தன ஆனால், நடந்ததோ வேறு. எனவே, ஆத்திரமடைந்த நாடுகள் உக்கிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

நம்புகிறீர்களோ இல்லையோ, அமெரிக்கா ஆயுதங்கள், மற்ற உதவிகள் என்று இதுவரை உக்ரைனுக்கு 200 பில்லியன் அளவுக்குச் செலவு செய்துள்ளது.

இவை அனைத்தும் தங்கள் ஆயுதங்களை இங்கே பயன்படுத்த அதோடு ரஷ்யாவை வீழ்த்த மட்டுமே! நிச்சயமாக உக்ரைனுக்கு உதவ அல்ல.

இந்தப்போரால் உலகம் முழுவதும் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன குறிப்பாக, எண்ணெய் வளம் இல்லாத நாடுகளில்.

இந்தியா

கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் வாங்குவதால், மற்ற நாடுகள் சிக்கலில் உள்ள போது இந்தியா மட்டும் வளர்ச்சியில் உள்ளது.

குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது மட்டுமே வளர்ச்சிக்குக் காரணமில்லை, இவற்றோடு இந்தியாவின் பொருளாதார கொள்கைகளும் காரணம்.

இப்போர் மேலும் பல காலங்கள் தொடர்ந்தால், ஏற்படும் இழப்புகளால் ரஷ்யாவால் தொடர்ந்து சமாளிக்க முடியாது போகலாம்.

என்ன தான் ரஷ்யா பொருளாதாரம் இப்போரால் உயர்ந்து வந்தாலும், செலவுகளும் இழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

ஏதாவது ஒரு கட்டத்தில் சிக்கலில் மாட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால், இந்தியா குறைந்த விலையில் எண்ணெய் வாங்குவதும் சிக்கலில் சென்று முடியலாம்.

அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால், மற்ற உலக நாடுகளுக்கு ஏற்படும் பொருளாதாரச் சிக்கல் இந்தியாக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்தியா விலை குறைத்து எண்ணெயை வாங்கினாலும் எரிபொருள் விலையைக் குறைக்காமல் இருப்பதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.

தற்போதைய எரிபொருள் விலை இந்தியாவில் அதிகம் என்றாலும், மற்ற நாடுகளை ஒப்பிடும் போது பல மடங்கு குறைவு ஆனால், இதைப் பற்றிச் சாதாரணப் பொது மக்களுக்குத் தெரியாது.

அவர்களுக்கு உலகத்தில் நடப்பதை பற்றிக் கவலையில்லை, நமக்குக் கட்டணம் உயரக் கூடாது என்ற மனநிலையில் இருப்பார்கள். இதை விளக்கவும் முடியாது.

எனவே, எதிர்காலத்தில் சமாளிக்க முடியாத நிலை வரும் போது விலை உயர்வை இந்தச் சேமிப்பு ஓரளவு தள்ளிப்போட முடியும், தடுக்க முடியாது.

அமெரிக்கா / ஐரோப்பா நாடுகள்

மற்ற நாடுகளை விடுங்கள், ஐரோப்பா நாடுகளே மிகப்பெரிய பிரச்சனையில் உள்ளன ஆனால், பிடிவாதமாகத் தங்கள் மக்கள் வரிப்பணத்தையெல்லாம் உக்ரைனுக்குச் செலவு செய்து ரஷ்யாவை அழிக்க முயல்கின்றன.

ஆனால், தங்கள் மக்கள் கடுமையான பொருளாதாரச் சிக்கல்களை, பணவீக்கத்தை எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். அரசுகளின் நிலை தொடர்ந்தால், போராட்டம் மேலும் அதிகரிக்க 100% வாய்ப்புகள் உள்ளன.

எதிரி அழிய வேண்டும் என்று எப்படி இவர்களால் தங்கள் நாட்டையே அழித்து முரட்டுத்தனமாகச் செயல்பட முடிகிறது என்று வியப்பாக உள்ளது!

அமெரிக்காவில் மூன்று வங்கிகள் திவாலாகி விட்டன. இதற்கு அமெரிக்க அரசின் பொருளாதார கொள்கைகளும், வட்டி விகிதங்களும் காரணம்.

உக்ரைனுக்குச் செலவிட்ட 200 பில்லியன் பணத்தை அமெரிக்க பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பயன்படுத்தி இருக்கலாம்.

இதன் மூலம் எண்ணெய் உயர்வுக்கு மானியமாக விலை குறைத்து, அமெரிக்க மக்களின் சிரமங்களை, நெருக்கடிகளைத் தவிர்த்து இருக்கலாம்.

உலக நாடுகள்

மேற்கத்திய நாடுகளின் ஈகோ மற்றும் ரஷ்யா மீதான வெறுப்புணர்வால் எண்ணற்ற உலக நாடுகள் மிகப்பெரிய பிரச்சனையில் உள்ளன.

நேரடி தொடர்பு இல்லையென்றாலும், உலகப் பொருளாதார மயமாக்களால் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதால், அனைவரையும் பாதிக்கிறது.

தற்போது நடைபெறும் ஆட்குறைப்புகளுக்கு மேற்கத்திய நாடுகளின் ஈகோவும் மிக முக்கியக்காரணம். போர் முடிவுறாமல் தொடர்வதாலும், பணவீக்கத்தாலும் செலவுகள் கண்டபடி உயர்ந்து வருகின்றன.

ஆட்குறைப்பு நடைபெறுவதால், பொதுமக்கள் மிக மோசமான நிலைக்குச் செல்கிறார்கள் ஆனாலும், போரை நிறுத்துவதற்கான அறிகுறியே தெரியவில்லை.

உலக நாடுகளிலேயே இந்தியா மட்டுமே வளர்ச்சிப்பாதையில் உள்ளது ஆனால், போர் தொடர்ந்தால் இந்தியாவும் ஒரு கட்டத்தில் நெருக்கடிக்கு உள்ளாகும்.

மேற்கத்திய நாடுகளின் வெறுப்புணர்வுக்கு, ஈகோவுக்கு எந்த விதத்திலும் போரில் சம்பந்தம் இல்லாத மற்ற நாடுகள் ஏன் பலிகடா ஆக வேண்டும்?

Dedollarisation

இதை விட முக்கியமாக அமெரிக்க டாலர் ஆதிக்கத்தை தவிர்க்க Dedollarisation என்று இந்தியா உட்படப் பல நாடுகள் டாலர் வர்த்தகத்தைத் தவிர்த்து வருகின்றன.

இது தொடரும் போது அமெரிக்கா டாலரின் மதிப்புக் குறைந்தால் அமெரிக்கா கற்பனை செய்ய முடியாத பொருளாதார சிக்கலில் மாட்டும்.

அமெரிக்காவின் கடன் மட்டுமே 32 ட்ரில்லியன்.

டாலர் பொருளாதாரத்தில் ஏற்படும் தடுமாற்றமே வங்கிகள் திவாலாவது, பணவீக்கம், பரிவர்த்தனைகளில் நிலைத்தன்மை இல்லாதது போன்றவை.

டாலர் மதிப்பு குறைந்தால், பாதிக்கப்படுவது அமெரிக்கா மட்டுமல்ல, டாலரை இருப்பு (அந்நிய செலவாணி) வைத்துள்ள ஏராளமான நாடுகளும் தான்.

இந்தியா 580 பில்லியன், சீனா 3.1 ட்ரில்லியன் வைத்துள்ளது (2023).

மேற்கூறியவை உடனே நடக்கப்போவதில்லை என்றாலும், டாலர் மதிப்புப் பாதி குறைந்தால், வைத்துள்ள இருப்பு டாலரின் மதிப்பும் குறைந்து விடும்.

எந்தச் செலவுமே செய்யாமல் 50% இழப்பு. அதாவது பங்குச்சந்தையில் நம் சேமிப்பு சந்தை வீழ்ச்சியால் இழப்பைச் சந்திப்பது போல.

எனவே தான் வரும் காலம் அமெரிக்காவுக்கு மிக முக்கியமான காலமாக உள்ளது ஆனால், உக்ரைனுக்குக் கண்டபடி செலவு செய்து வருகிறது.

எப்படிச் செய்ய வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பது ஒரு நாட்டின் அரசுக்குத் தெரியாதா? அவர்களுக்குத் தெரியாதது நமக்கு என்ன தெரியும்?!

என்ற இயல்பான கேள்வி இருந்தாலும், அதையும் தாண்டிய கவலையை நடக்கும் சம்பவங்களின் புள்ளிகளை இணைத்தால், உணர முடிகிறது.

கவலை என்பது அமெரிக்கா பற்றியல்ல, அமெரிக்காவால் சங்கிலி தொடராக இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்கு ஏற்படப்போகும் பொருளாதாரச் சீரழிவுகள்.

மேற்கத்திய அதிகார, ஊடக மன நோயாளிகளிடமிருந்து உலகை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

தொடர்புடைய கட்டுரைகள்

ஜெலன்ஸ்கி என்ற கோமாளி

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறதா? | FAQ

மேற்கத்திய நாடுகள் | கெடுவான் கேடு நினைப்பான்

இந்தியா எதிர்க்கும் இரு மாஃபியாக்கள்

George Soros | The Big Boss of Left Eco System

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here