கொரியன்களும் கேங்ஸ்டர் கதைகளும் இணைபிரியாதவை. மற்றுமொரு கேங்ஸ்டர் கதையில் My Name. Image Credit
My Name
கேங்ஸ்டர் மகள் Han So-hee. கேங்ஸ்டர் மகள் என்பதாலையே பள்ளியில் இவரது தோழிகள் இவரை வெறுக்கிறார்கள். இதனாலே தனது தந்தையின் மீது கோபம்.
இந்நிலையில் தன்னை காண வருகிறேன் எனக் கூறும் தந்தையை வர வேண்டாம் என்று கூறுகிறார் ஆனாலும், தந்தை வர அப்போது மர்ம நபரால் கொல்லப்படுகிறார்.
தன் கண் முன்னே தந்தை கொல்லப்பட்டதால், அதற்கு பழி வாங்க கொலை செய்தவனை தேடும் போது, தந்தையின் கூட்டாளி கண்டுபிடிக்க உதவுகிறார்.
இறுதியில் தந்தையை கொலை செய்தவரை Han So-hee கண்டுபிடித்தாரா என்பதே My Name.
கேங்ஸ்டர்
கொரியனுக்கும் கேங்ஸ்டருக்கும் என்ன சம்பந்தம் என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பது தனிப்பட்ட விருப்பம் 🙂 .
மற்ற கதைகளைக் காட்டிலும் கேங்ஸ்டர், வன்முறையில் இவர்கள் மற்ற நாடுகளை விட ஒரு படி மேல். இரத்தம் தெறிக்க சண்டை இருக்கும்.
இவர்களோடு போட்டிக்கு வருபவர்கள் ஜாப்பனீஸ்.
கொரியன் கேங்ஸ்டர் என்றால், Black Coat அணிந்த இயந்திர மனிதன் போல உணச்சிகளை வெளிக்காட்டாத 20 / 30 பேர் அடியாட்கள் இருப்பார்கள்.
ரொம்ப Professional ஆக நடந்து கொள்வார்கள். ஐந்து நட்சத்திர விடுதியில் பணி புரிபவர்கள் எப்படி இருப்பார்கள்? அது போல உடையில், ஒழுங்கில் இருப்பார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம், துப்பாக்கியைப் பயன்படுத்த மாட்டார்கள்!எப்போதும் கத்தி, கோடாரி தான்.
சென்டிமென்ட்ஸ்க்கு இடம் இருக்காது. எவன் செத்தாலும், அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள். இரங்கல் கூட்டம் Professional ஆக இருக்கும்.
கொரியன் கேங்ஸ்டர் படங்களில் New World ரொம்பப் பிடித்த படம்.
Han So-hee
காவல்துறையில் உள்ள ஒருவர் தான் தந்தையை சுட்டு இருக்க வேண்டும் என்பதால், தனது அடையாளங்களை மாற்றிக் காவல்துறையில் இணைகிறார் குறிப்பாக போதை பொருள் தடுப்புப்பிரிவு.
பணி புரிந்து கொண்டே தனது தந்தையின் கூட்டாளிக்கும் தகவல்கள் கொடுத்து உதவுகிறார்.
பள்ளியில் தொந்தரவு தரும் சக மாணவியை Han So-hee புரட்டி எடுப்பது அசத்தல் ரகம் என்றால், சண்டைகளைக் கற்றுக்கொண்டு வளர்ந்த பிறகு மற்றவர்களையும் வெறித்தனமாக பொளப்பது அதிரடி.
லேடி ஜாக்கிசான் போலச் சண்டையிடுகிறார், அதோடு நம்பும் படியும் உள்ளது 🙂 .
யாரோ நம் தகவல்களைக் கசிய விடுகிறார்கள் என்று இவரது மேலதிகாரி உணர்ந்து இதைக் கண்டுபிடிக்க முயற்சி எடுக்கிறார்.
திரைக்கதை
திரைக்கதை மிக விறுப்பாக உள்ளது. வழக்கம் போல லாஜிக்கல் கேள்விகள், சந்தேகங்கள் இருந்தாலும் திரைக்கதை பரபரப்பால் புறக்கணித்து விடுவோம்.
கேங்ஸ்டர் கதையென்றாலும் சென்டிமென்ட் உள்ளது. பழிவாங்கும் நோக்கமே தந்தைக்காக எனும் போது உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது.
இதில் என்ன குறை என்றால், யார் கொலை செய்திருப்பார்கள் என்று கண்டுபிடித்து விட முடிகிறது. வழக்கமாக அனைவரும் சந்தேகப்படும் நபர் கொலை செய்து இருக்க மாட்டார் ஆனால், இதில் சரியாக இருந்தது.
யார் பார்க்கலாம்?
கேங்ஸ்டர் கதைகளில் ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கலாம்.
இறுதி மற்றும் 8 வது எபிசோடில் ஒரு உடலுறவு காட்சி வருகிறது. எனவே, உடன் யார் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து இந்த எபிசோடை பார்க்கவும்.
இக்காட்சி அவசியமே இல்லை. ஒரு நல்ல கதையில் கமர்சியலுக்காக சம்பந்தமே இல்லாமல் குத்துப் பாட்டு வைப்பது போல உறுத்தலாக உள்ளது.
மற்ற எபிசோடுகளில் சண்டை, வன்முறை மட்டும் இருக்கும்.
பரிந்துரைத்தது சூர்யா. NETFLIX ல் காணலாம்.
Written by Kim Ba-da
Directed by Kim Jin-min
Starring Han So-hee, Park Hee-soon, Ahn Bo-hyun
Composer Hwang Sang-jun
Country of origin South Korea
Original language Korean
No. of episodes 8
Editor Hwang Yi-seol
Running time 45–59 minutes
Distributor Netflix
Picture format 4K
Audio format Dolby Digital
Original release October 15, 2021
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
Hello Giri expecting iratta movie review
@Magesh Palani Watched the movie and will write this week.