பயணக் குறிப்புகள் [மே 2014] – 2

5
பயணக் குறிப்புகள் [மே 2014] - 2

கோவை நான்கு (ஆறு!) வழிச் சாலை கிட்டத்தட்ட முடிந்து விட்டது. கோவை விமான நிலையத்திலிருந்து கோபிக்கு வர 90 நிமிடங்களே ஆனது. Image Credit

இன்னும் சில இடங்களில் வேலை நடந்து கொண்டு இருக்கிறது.

பாலங்கள் இருக்கும் இடத்தில் வேகத்தடை வைத்து இருக்கிறார்கள் ஆனால், அது குறித்த சரியான அறிவிப்பு இல்லை அல்லது மிக அருகே வந்தவுடன் தான் தெரிகிறது.

பழக்கமானவர்கள் உஷாராக இருப்பார்கள் ஆனால், புதிதாக வருபவர்களுக்கு கொஞ்சம் ஜெர்க் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

முழு வேலையும் முடியும் போது இந்த வேகத்தடைகளை சாலை அமைத்து சமமாக்கி விடுவார்கள் என்று கூறினார்கள்.

இரவில் செல்லும் போது நடுவே பெரிய மீடியன் இருப்பதால் எதிரே வரும் வாகனங்களின் விளக்கு வெளிச்சம் கண்ணைக் கூசுவதிலிருந்து தப்பிக்க முடிகிறது.

கனரக வாகனங்கள் வேகமாக செல்வதைப் பார்க்கும் போது கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது. விரைவில் சுங்கச் சாவடி வந்து விடும். அதன் பிறகு இங்கேயும் வசூல் ஆரம்பித்து விடுவார்கள்.

தற்போது பலரும் சுங்கச் சாவடி கட்டணங்களை நினைத்துக் கடுப்பாகி இருக்கிறார்கள்.

கோடை விடுமுறை

கோடை விடுமுறை என்பதாலும் எங்கள் குடும்ப நிகழ்ச்சிக்காகவும் என் குடும்பத்தினர் அனைவரும் வந்து இருக்கிறார்கள். வீடே அதகளமாகிக் கொண்டு இருக்கிறது.

இரவு 12 மணிக்கும் அந்தப் பகுதியையே கலங்கடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அக்காக்கள் பசங்க பொண்ணு, என் பசங்க என்று 6 பேர். இவர்களோடு நாங்கள்.

அக்கா பொண்ணு தீவிர விஜய் ரசிகை “ஜில்லா” படம் தான் பார்க்கணும் என்று எங்களைப் படுத்தி எடுத்துக்கொண்டு இருந்தாள்.

ஒரு நாள் சாலையில் வண்டியில் ஐஸ்கிரீம் விற்று வரும் நபரிடம் இவர்களுக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தர, அந்த நபர் தினமும் எங்க வீட்டு அருகே வந்தால் வெகு வேகமாக மணியடித்து இவர்களை உஷார் செய்து விடுகிறார்.

எங்கள் அனுமதி இல்லாமலே ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு விடுவதால் வேறு வழி இல்லாமல் பணம் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.

இரண்டு பேர் மூக்கை சிந்தியதால் கடுமையான தடை உத்தரவு போடப்பட்டு விட்டது 🙂 .

ஏர்டெல் DTH

ர்டெல் DTH பற்றி எழுதுவதாக சென்ற பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். எழுத ஆரம்பித்தால் வழக்கம் போல பெரிதாக வந்து விட்டது 🙂 . அதனால், அதை தனிப்பதிவாக விரைவில் வெளியிடுகிறேன்.

IPL (Sony Max) இதில் HD யில் வருவதால், இதைப் பார்க்க நிறையப் பேர் ஆகி விட்டார்கள். இதனுடைய தெளிவான காட்சிக்காகவே நிறையப் பேர் பார்க்கிறார்கள்.

IPL ல் ஆர்வம் இல்லாத நானே கொஞ்சம் நேரம் பார்த்தேன். மொக்கைப் படம் கூட இதில் அருமையாகத் தெரிகிறது.

தேர்தல் முடிவு

தேர்தல் முடிவு வெளியாகும் நாள் நெருங்க நெருங்க அது பற்றிய விவாதங்களும் சூடு பிடித்தது. முடிவு வெளியாகிய அன்று நாங்கள் திருக்கடையூர் கோவிலில் இருந்தோம்.

இதனால் அவ்வப்போது தகவல்கள் கிடைத்துக்கொண்டு இருந்தன.

வியாழன் இரவு எங்கள் உறவினர், அதிமுக 32 இடங்கள் வரை பெறும் என்று உறுதியாகக் கூறினார். பாஜக ஒரு இடம் பெற்றாலும் மொட்டை அடித்துக் கொள்வதாகக் கூறினார்.

இது கொஞ்சம் மிகைப்படுத்தப் பட்ட முடிவாக இருக்கிறது அதனால் வேறு முடிவு செய்யலாம் என்று கூறினாலும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால், யாருமே எதிர்பார்க்காமல் துவக்கத்தில் இருந்தே அதிமுக முன்னணியில் இருக்க… என்னால் நம்பவே முடியலை.

தமிழினத் தலைவர்

சத்தியமாக திமுக “0” வாங்கும் என்று நான் கற்பனையில் கூட நினைக்கவில்லை.

எப்படியும் 10 இடங்களாவது பெறுவார்கள் என்று நினைத்தேன் (மின்சாரப் பிரச்சனை மற்றும் பல பிரச்சனைகள் நிலவும் நிலையில்) ஆனால், மக்கள் இப்படி குத்துவார்கள் என்று நினைக்கவே இல்லை.

மச்சான் (அக்கா கணவர்) ஒருவர் தீவிர திமுக. காலை வரை பரபரப்பாக இருந்தவர் முடிவு தலைகீழ் ஆனவுடன் சோகமாகி அமைதியாகி விட்டார்.

எனக்கே பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

எனக்கு திமுக “0” வாங்கியதில் சந்தோசமே ஏனென்றால், இதே சமயத்தில் ஐந்து வருடம் முன்பு (2009) திமுக ஈழத் தமிழர்களுக்கு செய்த கொடுமையை என்னால் மறக்க முடியவில்லை.

தமிழினத் தலைவர் என்று கூறிக்கொண்டு தன்னுடைய சுயநலத்திற்காக தமிழினத்தையே அழித்ததை இன்று வரை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

இப்ப பாருங்க மாநிலத்திலும் அதிகாரம் ஒன்றுமில்லை மத்தியிலும் ஒன்றுமில்லை. இனி வரும் காலம் திமுகக்கு சிரமமான காலமாகத் தான் இருக்கும்.

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதால், பாஜக நடவடிக்கை எடுக்கும் என்று எந்த உறுதியையும் நாம் எதிர்பார்க்க முடியாது.

பலரின் சாபமே திமுக முட்டை வாங்கியதிற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால் ஏகப்பட்ட பிரச்சனை தமிழ்நாட்டில் இருக்கிறது, ஸ்டாலின் மிகச் சிறப்பாக பிரச்சாரம் செய்தார். இத்தனையையும் மீறி திமுக முட்டை வாங்கினால், வேறு என்ன காரணம் இருக்க முடியும்!

பணம் என்று கூறாதீர்கள். அதெல்லாம் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் தான். இங்கே தான் குறைந்ததே ஒரு லட்சம் வாக்கு வித்யாசம் வருகிறதே.

தர்ம அடி! நிச்சயம் சாபம் தான். கடவுள் இருக்கான் கொமாரு!

பாஜக

பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதால் அக்கா பசங்க என் உறவினர் மொட்டை அடிக்க வேண்டும் என்று இவரைப் பிடித்துக்கொண்டார்கள் 🙂 .

பின்னர் நாகரீகம் கருதி நான் எதுவும் கேட்கலை ஆனால், பசங்க அடுத்த விடுமுறைக்கு வந்தாலும் விடாமல் கேட்பார்கள்.

இது போல அதிமுக திமுக வெற்றி குறித்து இன்னொரு சபதம் ஒருவர் கூறி இருந்தார் என்ன ஆனது என்று தெரியவில்லை.

ஆம் ஆத்மி

நான் ஆம் ஆத்மி பற்றி எழுதிய போது பலரும் கோபித்துக்கொண்டார்கள். தற்போது மக்கள் தீர்ப்பு என்னவென்று புரிந்து இருப்பார்கள்.

தற்போதாவது நான் மக்கள் மனநிலையைத் தான் கூறி இருக்கிறேன் என்று நம்புவார்களா! என்று தெரியவில்லை.

நான் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இதைக் கூறவில்லை. அவர் செய்த தவறை மக்கள் உணர்ந்தது போல தீவிர ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் உணரவில்லை.

தற்போது கெஜரிவால் டெல்லியில் திரும்ப ஆட்சி அமைக்க முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். தற்போது உள்ளதும் போச்சு என்று நொந்து கொண்டு இருக்கிறார்.

இதில் இருந்து தெளிவாக ஒன்று புரிகிறது. பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே இவர் ராஜினாமா செய்து இருக்கிறார்.

தற்போது இதில் தோல்வி என்றதும் திரும்ப டெல்லி கிடைக்குமா என்று பார்க்கிறார்.

ஆம் ஆத்மி ஆதரவாளர்களே! இப்பவாவது இவர் பெரிய டகால்ட்டி என்பதை நம்புகிறீர்களா இல்லையா! எனக்கு ஒரு அனுபவம் கிடைத்து நான் திருந்திக் கொண்டேன்.

தற்போதும் இவர் செயலை நியாயப்படுத்தி பேசிக்கொண்டு இருந்தால், அது உங்கள் ஈகோ என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

நான் முன்னரே படிப்படியாக வருவதே நிலையான வளர்ச்சியாக இருக்கும், இது போல அவசரப்பட்டால் பின் விளைவுகளையே ஏற்படுத்தும் என்று கூறி இருந்தேன்.

நான் எதோ இதை பாஜக ஆதரவிற்காக கூறுவதாக கூறினார்கள்.

தற்போது ஆம் ஆத்மி தோல்வி அடைந்து விட்டதால் இதைக் கூறுவதாக நினைக்க வேண்டாம். முன்பும் இதையே தான் கூறி இருந்தேன்.

நிச்சயம் நான் யாரையும் காயப்படுத்தக் கூறவில்லை. இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்களே என்ற ஆதங்கத்தில் தான் கூறுகிறேன்.

இனி கெஜரிவால் திரும்ப முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

மோடி

மோடி வெற்றி பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அதுவும், தனிப் பெரும்பான்மை பெற்றது மிகப் பெரிய விஷயம்.

தனிப் பெரும்பான்மை பெற்று இருந்தாலும் ராஜ்ய சபாவில் போதிய எண்ணிக்கை இல்லாததால், மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும்.

மற்ற கட்சிகளைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இன்னும் இரண்டு வருடத்திற்கு எந்த மசோதாவையும் எளிதாக நிறைவேற்ற முடியாது.

தனிப் பெரும்பான்மை பெற்றும் இது போல சிக்கல்.

“மோடி பலூன் மோடி பலூன்” என்று கிண்டலடித்தவர்கள் பலர் காற்றுப் போன பலூன் போல ஆகி இருப்பார்கள்.

இணையத்தில் கத்துவதும் வீட்டினுள் தனி அறையில் கத்துவதும் சில விசயங்களில் ஒன்றாகி விடுகிறது.

இவர்கள் பேசுவதைப் பார்த்தால் எவராக இருந்தாலும் இப்படி ஆகி விடுமோ! என்று சந்தேகம் வரும் அளவிற்கு பிரச்சாரம் செய்தார்கள் ஆனால், மக்கள் எண்ணம் வேறாக இருக்கிறது.

மோடி தோல்வி அடைய கடுமையாக முயற்சித்துக் கொண்டு இருந்தவர்கள் தற்போது கடுமையான அதிர்ச்சியை அடைந்து இருப்பார்கள்.

தற்போது வெற்றி பெற்ற பிறகு, ஏதாவது பிரச்சனை ஆக வேண்டும் என்று ஆவலோடு இருக்கிறார்கள்.

மோடி எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் நான் கூறுவது ஒன்று தான். ஒரு வருடம் காத்திருந்து அவர் எப்படித் தான் செய்கிறார் என்று பாருங்களேன்!

அதற்குள் ஏன் முன் முடிவு எடுத்துத் திட்டிக்கொண்டு இருக்க வேண்டும்!

ஏற்கனவே பலர் கேட்கவில்லை, இனியும் நீங்கள் பேசுவதை மற்றவர்கள் கேட்பார்கள் என்று நினைக்கிறீர்களா! இதைப் புலம்பலாகத் தான் நினைப்பார்கள்.

தற்போது நீங்கள் அமைதியாக இருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

தயவு செய்து நீங்கள் கூறியது நடக்க வேண்டும் / வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்து முஸ்லிம் பிரச்சனை வர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இருக்காதீர்கள்.

நாடு முன்னேற வேண்டும், உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற பாசிடிவான எண்ணங்களை வைத்து இருங்கள்.

ஞானி

ஞானி அவர்கள் சமீபத்தில் அவருடைய FB யில் எழுதியதை பார்த்த போது இது தான் தோன்றியது.

சார்! தயவு செய்து உங்களைப் போன்ற “நடு நிலையாளர்கள்” வாயை மூடிக்கொண்டு இருந்தாலே பல பிரச்சனைகள் குறையும்.

வைகோ

இந்தத் தேர்தலில் வைகோ தோற்றது மட்டும் எனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது.

இவர் மூன்றாம் இடம் பெறுவார் என்று 15 தேதியே நண்பர் காத்தவராயன் சரியாகக் கூறி இருந்தார். போகிற போக்கில் கூறாமல் தெளிவாகக் கூறி இருந்தார்.

என்னமோ போங்க! இதை மட்டும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இவர் MP ஆகி இருந்தால், தமிழர்களுக்கு / தமிழ்நாட்டிற்கு என்று பேச ஒரு நல்ல நபர் கிடைத்து இருப்பார்.

தேர்தல் குறித்து தனிப்பதிவாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் கூற அவ்வளவு இருக்கிறது ஆனால், விடுமுறையில் இருந்ததால் எழுத முடியவில்லை.

இனி தனிப்பதிவாக எழுதினால் சுவாரசியம் இருக்காது / கால தாமதமான கருத்துகளாக இருக்கும் என்பதால் இதிலேயே சில கருத்துகளை கூறி விட்டேன்.

நான் கூறியது 40% தான் இருக்கும்.

நோக்கியா 1100

நான் ஊருக்குச் சென்றால் எப்போதும் நோக்கியா 1100 தான் பயன்படுத்துவேன். இணையம் பயன்படுத்த மாட்டேன்.

இதனால் என்ன நடக்கிறது என்று செய்தித்தாள் படித்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. எந்தப் பரபரப்பும் இல்லை.

இணையத்தில் இருந்தால், ஏதாவது ஒரு செய்தி வந்து நம்மைக் கடுப்படித்திக்கொண்டு இருக்கும்.

எல்லாம் தெரிந்தவரை விடத் தெரியாதவரே நிம்மதியாக இருக்கிறார்கள் என்பது இதில் உண்மையாகிறது.

கோச்சடையான்

எடுத்துக்காட்டுக்கு கோச்சடையான் 9 வரவில்லை என்றதும் இது குறித்த பல தகவல்கள் வந்து டென்ஷன் ஆக்குகிறது.

இதை விரும்பவில்லை என்றாலும் எப்படியாவது நம் கவனத்திற்கு வந்து விடுகிறது. இந்த ஒரு வாரம் ஒன்றுமே தெரியாமல் இருந்தது நிம்மதியாக இருந்தது.

சிங்கப்பூர் வந்த பிறகு திரும்ப ஆரம்பித்து விட்டது 🙂 . தயாரிப்பாளர்கள் செய்த குழப்படியால் முன்பு இருந்த ஒரு ஆர்வம் குறைந்து விட்டது.

படம் வெளியாகும் சமயத்தில் திரும்ப வரும் என்று நினைக்கிறேன். அதோடு படத்தின் நிலையும் முக்கியத்துவம் பெறுகிறது.

பார்ப்போம் படம் என்ன ஆகிறது என்று.

முதலில் சிங்கப்பூரில் கோச்சடையானுக்கு NC16 ரேட்டிங் (16 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டும் தான் பார்க்க முடியும்) கொடுத்து விட்டார்கள்.

நாங்கள் எல்லாம் PG13 (13 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பெரியவர்கள் துணையுடன் வர வேண்டும்) கொடுக்கக் கூறி பெட்டிசன் போட்டோம்.

ஏனென்றால் பலரும் குழந்தைகளை அழைத்து வரத் திட்டமிட்டு இருக்கிறார்கள். அதோடு குழந்தைகள் பலர் ஏற்கனவே படத்தைப் பார்க்க ரொம்ப ஆவலாக இருக்கிறார்கள்.

நண்பர் முத்துவின் மகன் படம் வெளியாகும் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறான்.

தற்போது சில வெட்டுகளுடன் PG13 கொடுத்து விட்டார்கள். இது குறித்து மின்னஞ்சல், அரசு தரப்பில் இருந்து அனுப்பி இருந்தார்கள்.

கடந்த முறை “வீரம்” படம் வெளியான போது ரசிகர்களால் “ரெக்ஸ்” திரையரங்கில் பிரச்சனை ஆகி காவல் துறை வர வேண்டிய அளவிற்கு ஆனதால், இந்த முறை பிரச்சனை ஆகக் கூடாது என்று பவுன்சர்களுக்கு சொல்லி இருக்கிறார்களாம்.

வியாழன் (இன்று) இரவு வெளியிடுவார்கள் என்று நினைத்தோம் ஆனால், நாளை தான் என்று கூறி விட்டார்கள். இன்று இரவு என்று மாறினால் கூறுவதாகக் தெரிவித்தார்கள்.

வெள்ளி படம் “எந்தப் பிரச்சனையும் இன்றி” வெளியானால் (மாலை தான் செல்ல முடியும்) நாளை இரவு  கோச்சடையான் திரை விமர்சனம்.

Yes! ரஜினி ரசிகனின் திரை விமர்சனம். முருகா! மானத்தை காப்பாத்தப்பா!  🙂 .

இணையம்

இணையத்தில் இல்லாதது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. தேர்தல் முடிவு வெளியாகிய அன்று மட்டும் FB யில் இல்லாமல் போனதற்காக கொஞ்சம் வருத்தம் இருந்தது.

1100 என்பதால் ஃபோனை பேன் பார்க்கும் வேலை கிடையாது 🙂 .

யாரையும் அழைக்க / அழைப்பு வந்தால் எடுக்க மட்டுமே பயன்படுத்திக்கொண்டு இருந்தேன்.

கீழே விழுந்து விடுமோ என்ற பயமில்லை, எந்த தகவலும் பார்க்க முடியாது என்பதால் நிம்மதியாக இருந்தது.

பல நேரங்களில் பழக்க தோஷத்தில் விரல் எதையாவது தேடப் போகும் ஆனால், பின்னர் அங்கே ஒன்றுமில்லை என்றதும் அமைதியாகி விடும்.

குறிப்பாக எதிரில் இருப்பவருடன் இடையூறு இல்லாமல் பேச முடிந்தது.

இது போல சில வாரங்கள் இருக்கலாம் தொடர்ந்து இருக்க முடியாது காரணம், இதன் மூலம் பல பயன்கள் இருக்கின்றன.

சிலர் கிராமத்திலிருந்து விட்டு “அருமை அருமை இங்கேயே இருந்து விடலாம்” என்று கூறுவார்கள்.

இதெல்லாம் விடுமுறை காலத்திற்கு மட்டும் தான் சரி. தொடர்ந்து இருக்க நடைமுறையில் சாத்தியப்படாது.

அதே போலத் தான் 1100 போன்ற மொபைல்களும் குறிப்பாக என்னைப் போன்று திறன் பேசியை (Smart Phone) அதிகம் சார்ந்து இருப்பவர்களுக்கு.

எது எப்படி இருந்தாலும் கடந்த ஏழு வருடமாக ஊருக்குச் சென்றால் இந்த 1100 பயன்படுத்தும் போது ஒரு அளவில்லா மகிழ்ச்சி இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும்.

பலரும் “என்னப்பா சிங்கப்பூர்ல இருக்கிறே! இங்க வந்து 1100 பயன்படுத்துறியே?” என்று கேட்பார்கள்.

சிங்கப்பூரிலிருந்து வந்தால் என்ன தலையில் இரண்டு கொம்பா முளைத்து இருக்கிறது.

நமக்கு எது வசதியோ அதைத் தான் பயன்படுத்த முடியும். எல்லோருக்கும் எதோ ஒன்றின் மீது காதல் எனக்கு 1100 மீது 🙂 .

கொசுறு

சமீபமாக ஏராளமான ஸ்பாம் பின்னூட்டங்கள் (கமெண்ட்) வருகிறது. முன்பு ஒரு நாளைக்கு 3 / 5 என்று வந்தது. தற்போது 200 / 300 என்று வருகிறது.

எனவே, அனைத்தையும் சரி பார்க்க முடியவில்லை.

என்னுடைய தளத்தில் கமெண்ட் மாடரேசன் இல்லை என்பதை அறிந்து இருப்பீர்கள்.

எனவே உங்கள் பின்னூட்டம் வெளியாகவில்லை என்றால் அது ஸ்பாம் க்கு சென்று இருக்கலாம்.

எனக்கு தெரியப்படுத்த விரும்பினால் contact[at]giriblog.com என்ற மின்னஞ்சலுக்குத் தெரிவியுங்கள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. பகிர்வுக்கு மகிழ்ச்சி கிரி.. உங்க 1100 நோக்கியோவுக்கும் என்னோட 1100 நோக்கியோவுக்கும் சொடு போட்டு பார்ப்போம்மா???

  2. //பாலங்கள் இருக்கும் இடத்தில் வேகத்தடை வைத்து இருக்கிறார்கள் ஆனால், அது குறித்த சரியான அறிவிப்பு இல்லை அல்லது மிக அருகே வந்தவுடன் தான் தெரிகிறது.//

    ஆமாம் கிரி, அப்புறம் வேகத்தடைய எடுத்திட்டு அறிவிப்பு பலகையை எடுக்காம விட்டுருக்காங்க 🙁

    //விரைவில் சுங்கச் சாவடி வந்து விடும். அதன் பிறகு இங்கேயும் வசூல் ஆரம்பித்து விடுவார்கள். தற்போது பலரும் சுங்கச் சாவடி கட்டணங்களை நினைத்து கடுப்பாகி இருக்கிறார்கள்.//

    சேலம் to கோவை பரவாயில்லை, பெங்களூர் to கோவை அநியாயம் மொத்தம் 6 சுங்கச்சவடிகள்….

    I have a doubt, they are collecting a huge amount as road tax during vehicle registration, but why they are again collecting toll fee?

  3. உங்க review படிச்சா படம் பாத்த போல இருக்கும்….இங்க கொரியா-ல படம் ரிலீஸ் இல்ல… 🙁

  4. i have seen….. movie is realy nice…. story and screenplay realy rocks more than animation… and ofcourse thalaivar voice….. rajinis face reaction in animation is realy good…… nagesh sir potions are pretty good… anyways movie is not going to flop….. nothing else to say except dis “thalaivar can do whatever”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here