வைகோ ஏன் வெல்ல வேண்டும்?

15
வைகோ

பாஜக கூட்டணியில் வைகோ இணைந்த பிறகு சிலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இவ்வாறு இவரை விமர்சிப்பவர்கள் பெரும்பாலும் திமுகவினராக இருப்பார்கள் அல்லது பாஜக வை வெறுப்பவர்களாக இருப்பார்கள்.

வைகோ 

இதே வைகோவை முன்பு திட்டிக்கொண்டு இருந்த பாஜக ஆதரவாளர்கள் தற்போது வைகோவை பாராட்டிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். Image Credit 

வைகோ தூய்மையானவர் நல்லவர் வல்லவர் என்றெல்லாம் கூறவில்லை, அப்படி கூறவும் முடியாது.

தினகரன் அலுவலகம் எரிப்பு சம்பவத்திற்கு அழகிரியை திட்டி விட்டு அதே அழகிரியை அன்பு சகோதரர் என்று கூற வேண்டிய நிலை.

இருப்பினும் இருக்கும் அரசியல்வாதிகளில் இவர் பரவாயில்லை என்பது தான் என் கருத்து.

கோபமாகப் பேசி இருக்கலாம், கூட்டணி மாறி இருக்கலாம் என்று வைகோ மீது மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் மற்ற அரசியல்வாதிகளை ஒப்பிடும் போது மக்களுக்காக போராடுபவர் என்பதில் சந்தேகமில்லை.

உணர்ச்சி வசப்படுதல்

வைகோவிடம் உள்ள பெரிய பிரச்சனை “உணர்ச்சி வசப்படுதல்”. எந்தப் பிரச்சனை என்றாலும் உடனே பொங்கி விடுவார்.

எந்த ஒரு நபர் உணர்ச்சிவசப் படுகிறாரோ அவர் ஒரு சிறந்த தலைவராக வர முடியாது.

எந்த ஒரு பிரச்சனையிலும் அதை பக்குவமாக கையாள வேண்டும். இது வைகோவிடம் இல்லை, இது தான் இவரிடம் உள்ள பிரச்சனை.

தமிழன் குறித்து எந்த மாநிலத்தில் பிரச்சனை என்றாலும் அது என்ன ஏது என்று கூடப் பார்க்காமல் உடனே தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக ஆவேசமாக முழங்க ஆரம்பித்து விடுவார்.

பிரச்னையைத் தீர்க்கத் தேவை விவேகம் தானே தவிர ஆவேசம் அல்ல. ஆவேசம் எக்காலத்திலும் பிரச்னையைத் தீர்க்க உதவாது.

கலைஞர்

எனக்கு கலைஞர் மீது பல்வேறு மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், ஈழ விசயத்தில் இவர் நடந்து கொண்டதை இன்னும் மறக்கவில்லை என்றாலும் சில விசயங்களில் பொறுமையாக நடந்து இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.

இரு மாநிலப் பிரச்சனைகளைப் பக்குவமாக கையாண்டு இருக்கிறார்.

சிங்கப்பூர் கலவரம் நடந்த போது தமிழக அரசியல் தலைவர்களில் பொறுப்பான அறிக்கை விட்டது கலைஞர் மட்டுமே!

மற்ற தலைவர்கள், பாதிக்கப்பட்டது தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக என்ன நடந்தது என்று கூடத் தெரியாமல் கண்டபடி அறிக்கை விட்டார்கள்.

கலைஞரைப் பிடிக்காதவர்கள் உடனே இதை வைத்துக் கொடி பிடிக்காதீர்கள்.. இது கலைஞர்பற்றிய பதிவு இல்லை, இதை ஒரு உதாரணத்திற்குக் கூறினேன்.

வைகோ, மக்கள் பிரச்சனை எது என்றாலும் குரல் கொடுப்பார்.

மக்களின் ஆதரவு

மீனவர், மீத்தேன், மது ஒழிப்பு, கெயில் நிறுவனம் குழாய் எரிவாயு, ஸ்டெர்லைட், ஈழம், விவசாயிகள் பிரச்சனை என்று எதாக இருந்தாலும் முழக்கமிடுவார்.

போராட்டங்களில் ஆவேசமாக நடந்து கொள்ளாமல் இதையே இன்னும் கொஞ்சம் முறையாக திட்டமிட்டு நடந்து கொண்டால், இவர் போராட்டம் பலரை சென்றடைந்து இருக்கும், இன்னும் மக்களின் ஆதரவு கிடைத்து இருக்கும் என்பது என் கருத்து.

மதிமுக மக்களிடையே விரிவாக சென்று இருக்கும் ஆனால், இவர் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால், ஒரு சராசரி பொது ஜனம் “அட! இவர் இப்படித்தான் எப்பவுமே கத்திக்கொண்டு இருப்பார்.. வேறு வேலையே இல்லை” என்று அசால்ட்டாக கூறி இவரின் உழைப்பை just like that கடந்து விடுகிறார்கள்.

தற்போது, போராடுபவராக இருந்தால் மட்டும் போதாது (இருக்கும் அரசியல்வாதிகளில் இவர் ஓகே என்ற அடிப்படையில் இதைக் கூறுகிறேன்) தங்களுடைய உழைப்பை சரியான முறையில் மார்கெடிங் செய்யத் தெரிந்து இருக்க வேண்டும்.

இல்லையென்றால் என்ன தான் கஷ்டப்பட்டுக் கதறினாலும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகி விடும்.  இதைத் தான் வைகோ செய்து கொண்டு இருக்கிறார்.

எந்தப் பயனும் இல்லை

இத்தனை வருடங்களாக அரசியலில் இருந்தும் இன்னும் அவரால் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்க முடியாமல் போனதற்குக் காரணம் அவரின் உணர்ச்சி வசப்படுதலும் அவருக்கு தன் உழைப்பை மார்க்கெட்டிங் செய்யத் தெரியாததும் தான் காரணம்.

நேற்று வந்த விஜயகாந்த் எல்லாம் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை வைத்துப் பாஜக வை 14 தொகுதிகள் கேட்டு மிரட்டிக்கொண்டு இருக்கும் போது, இவர் அப்பாவி மாதிரி உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்.

கூடுதல் தொகுதிகளையும் கேட்க முடியாத பரிதாப நிலையில் இருக்கிறார். உண்மையில் இவரால் கூடுதல் தொகுதிகள் கேட்க முடியாது.

காரணம், அந்த அளவிற்கு மதிமுக பலமாக இல்லை, மக்களிடையே ஆதரவைப் பெறவில்லை.

வைகோ அவர்கள் இவ்வளவு காலமாக அரசியலில் இருந்தும் ஏன் இதை அடைய முடியவில்லை என்பதை யோசித்தாலே போதும் வெற்றிக்கான காரணத்தை அறிந்து கொள்வார்.

தமிழன் தமிழன் என்று எதற்கெடுத்தாலும் கொடிப் பிடித்துச் சராசரி அரசியல் தலைவரைப் போல உணர்ச்சிவசப்படுவதை நிறுத்தி இதை எப்படி ஆக்கப் பூர்வமாகக் கையாண்டால் பிரச்னையைத் தீர்க்க முடியும்! மக்களின் ஆதரவைப் பெற முடியும்! என்பதை வைகோ யோசிக்க வேண்டும்.

இதைச் செய்ய அவர் தவறினால் முன்பே கூறியபடி “இவர் இப்படித்தான் எதற்கெடுத்தாலும் கத்திட்டே / நடந்துட்டே இருப்பாரு” என்று மக்களின் கவனத்தைப் பெறத் தவறி விடுவார்.

எத்தனை நடைப் பயணம் சென்றாலும் எந்தப் பயனும் இல்லை.

United states of India

இந்தத் தேர்தலில் என் பாஜக ஆதரவு நிலையை நான் ஏற்கனவே தெளிவாகக் கூறி இருக்கிறேன், காரணத்தையும் விளக்கி விட்டேன் ஆனால், இந்தப் பதிவு பாஜக கூட்டணியில் வைகோ இருப்பதால் எழுதப்பட்டதல்ல என்பதை நான் 100% உறுதியாகக் கூறுகிறேன்.

நான் பாஜக வை ஆதரிப்பதற்கும் இந்தப் பதிவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது வேறு இது வேறு.

மதிமுக தேர்தல் அறிக்கையில் இந்தியாவின் பெயரை “United states of India” என்று மாற்றுவோம்! என்று அறிவித்து இருப்பது, தற்போது தேவையற்றது.

தற்போதைய சூழலில் இது முற்றிலும் அவசியமற்ற அறிக்கை அதோடு தேவையற்ற விமர்சனங்களையும் கொண்டு வரும்.

நாட்டுல ஆயிரம் பிரச்சனை இருக்கு, தற்போது பெயர் மாற்றுவது தான் முக்கியமா! ஏற்கனவே தமிழ்நாடு என்றால் நக்கல் அடிக்கும் வட இந்திய ஊடகங்கள் இதைப் பெரிது படுத்தி பேசி வருகின்றன.

நம் அனைவருக்கும் வைகோ மீது மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம் ஆனால், அதைக் காட்டும் நேரம் இதுவல்ல.

நம் தமிழக அரசியல்வாதிகள் டெல்லியில் காமெடி நபர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.

பலருக்கு மொழிப் பிரச்சனை, இன்னும் சிலருக்கு தன் கருத்தைச் சரியாக முன்வைக்கத் தெரியாதது காரணம். நன்றாகப் பேசக் கூடியவர்கள் கட்சி லாபத்திற்காக அமைதியாக இருக்கிறார்கள்.

திருச்சி சிவா குறிப்பிடத்தக்க அளவில் பேசி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

தமிழகம் சார்பாக

நம் சார்பாக வைகோ போன்றவர்கள் சென்றால், தமிழர் பிரச்சனைகளுக்கு அங்கு முக்கியத்துவம் கிடைக்கும், கவனிக்கப்படும்.

ஒருவேளை பாஜக மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டி வந்தால், நம் தமிழகம் சார்பாக குரல் கொடுக்க வைகோ போன்றவர் நிச்சயம் வேண்டும்.

இது அனைத்தும் விருதுநகர் மக்கள் கையிலேயே உள்ளது. கடந்த முறை காங் நபருக்கு ஓட்டுப் போட்டு அவரை ஜெயிக்க வைத்து விட்டார்கள்.

அதோடு ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லு நடந்ததாகவும் கூறப்பட்டது, 15,000 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்து விட்டார்.

நடந்து முடிந்ததைப் பற்றிப் பேசிப் பயனில்லை. எனவே இந்த முறை விருதுநகர் மக்கள், வைகோ க்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்க வேண்டும்.

தமிழக மக்களின் குரல் என்றால் சுப்பிரமணியம் சாமியையும் சோவின் குரலையும் மட்டும் வட இந்திய ஊடகங்கள் பதிவு செய்து பெரும்பான்மை தமிழக மக்களின் எண்ணமாக அவர்களைக் காட்டி நம் உண்மையான எண்ணங்களை வெளியே தெரியாமல் செய்து விடுகிறார்கள்.

நம் குரல் மத்தியில் ஒலிக்க வைகோ போன்ற திறமையான பேச்சாளர்கள், கவன ஈர்ப்பு நபர்கள் நிச்சயம் தேவை.

வைகோ சென்றால் அனைத்தும் அப்படியே தலை கீழாக மாறி பாலும் தேனும் ஓடும் என்று கூறவில்லை, ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு இவர் போன்றவர்கள் இருப்பது நல்லது.

பிற்சேர்க்கை

வைகோ மீது ஏராளமான மதிப்பு வைத்து எழுதி இருந்தேன் ஆனால், தற்போது திமுக தயவால் ராஜ்யசபா MP ஆகி விட்டார் மகிழ்ச்சி ஆனால், அவரின் கொள்கைகள் அனைத்தையும் அடகு வைத்து விட்டார் 🙁 .

ஒரு நல்ல தலைவரின் நிலை இப்படியாகும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

அரசியல் புதிதாக நிறைய கற்றுக்கொடுத்துக்கொண்டே உள்ளது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

15 COMMENTS

 1. வணக்கம் கிரி.. தாங்கள் கூறியது போன்று வைகோ மீது சில விஷயங்ககளில் மாற்றுக் கருத்துக்கள் எனக்கும் உள்ளது. ஆனாலும் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதிலும் போராடுவதிலும் தமிழகத்தில் மற்ற அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை விட வைகோவின் செயல்பாடுகள் ஓரளவு திருப்தி அளிக்க கூடியதாகவே தோன்றியிருக்கிறது.

  தாங்கள் கூறியது போன்று தமிழர்களின் பிரச்சனைகளுக்கு வைகோவால் பெரிய அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்றே தோன்றுகிறது. கானல் நீராகவும் நீர்க்குமிழிகள் போன்றும் இருக்கும் பல அரசியல்வாதிகளின் பேச்சுகளுக்கு முன்னால் சிறு குவளை நீராக இருக்கும் வைகோவின் வார்த்தைகள் சற்றே ஆறுதல் அளிக்க வாய்ப்புள்ளது.

 2. 18 வருடங்களுக்கு முன்பு சிறு வயதில், வைகோவை முதன்முதலில் ஒரு திருமணத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது… அன்றைய பொது கூட்டத்தில் இடி முழக்கம் போல் இருந்த அவரின் பேச்சையும் கேட்டேன். அரசியலில் அது எனக்கு முதல் அனுபவம் என்பதால் அந்த நிகழ்வு என் மனதில் பல நாட்கள் ஒடி கொண்டு இருந்தது.. கல்லூரி நாட்களில் கூட திராவிட இயக்கம் சம்ந்தமான புத்தகங்கள், கட்டுரைகள் வாசித்ததுண்டு… ஆனால் தற்போது அரசியல் ஆர்வம் முற்றிலும் குறைந்து விட்டது… தனிபட்ட முறையில் எனக்கு வைகோவை பிடிக்கும்..

 3. பிழைக்கத்தெரியாத யதார்த்த அரசியல்வாதி… (மற்ற யாவரும் வியாதி ?)
  நான் மும்பை பயணம் சென்றபோது சென்னை ஏர்போர்டில் நேரில் சந்தித்திருக்கிறேன்.

 4. இதுவரை எனக்கு வைக்கோ மீது எந்த ஒரு அபிப்ரானமும் வந்தது இல்லை. ஆனால் இந்நிலை இனி இல்லை எனக்கூறும் அளவுக்கு என் மனம் மாறிவிட்டது. .///

  வைகோ அவர்கள் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்திவிட்டீர்கள் அண்ணா நன்றி.

  @கடந்த திங்கள் இரவு காட்சி “குக்கூ” திரைப்படம் பார்த்தேன் அண்ணா. நான் இந்த படம் இப்படி இருக்கும் என்று கொஞ்சமும் நினைத்து பாக்கவில்ல. கிளைமாக்ஸ் தவிர படத்தில் வந்த அனைத்து காட்சிகளையும் நான் ரசித்து பார்த்தேன்.

  இரவு காட்சி என்றாலும் கூட்டம் அதிகம் இருந்தது. எங்கள் ஊரில் இரவுக்காட்சிக்கு மாஸ் நடிகரின் படத்தை தவிர சாதாரண நடிகரின் படத்துக்கு இவ்ளோ கூட்டம் வந்து இப்பதான் பார்த்தேன் . அதிகம் பேமிலி ஆடியன்ஸ் தான் வந்து இருந்தனர் .

 5. கிரி, நான் உங்களிடம் இருந்து இந்த மாதிரி சினிமா அல்லாத பதிவுகளை நிறைய எதிர் பார்கிறேன்.

  எனக்கு வைகோ பற்றி நிறைய மாற்று கருத்துக்கள் இருந்தாலும், உங்களின் இந்த பதிவிற்கு மிகுந்த வரவேற்ப்பளிக்கிறேன்.

 6. கிரி; வைகோ; ஒரு; பொய்கோ வைகோ; MANE குட்ரை நாட்ட ஆற்றல் கரைஎந்தே

  விடும்

 7. நல்ல பதிவு கிரி ! நான் நினைத்ததை உங்கள் எழுத்தில் பார்த்து மகிழ்ச்சி. இம்முறை வைகோ நிச்சயம் விருதுநகரில் வெற்றி பெறுவார். மேலும் பா. ஜ.க ஆட்சி அமையும் பட்சத்தில் வைகோ விற்கு கேபினெட் அமைச்சர் பதவி கிடக்கும் என்று எண்ணுகிறேன். அதன் மூலம் தமிழருக்கு சிறிய அளவிலாவது நன்மை கிடைக்கும் என்று நம்புகிறேன்.

 8. ம தி மு க போட்டியிடும் இடங்களில் இரண்டாவது இடம் கிடைப்பதே அரிது …அதுதான் நடை முறை உண்மை!இருக்கும் அரசியல்வாதிகளை ஒப்பிடும்போது பல மடங்கு மேலானவர்வைகோ!

  மிசா சட்டத்தின் கொடூரங்களை தனது மகன் சந்தித்ததாக பெருமையுடன் சொல்லும் கருணாநிதி இரண்டே வருடத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து நிலையான ஆட்சிக்காக நேருவின் மகளை அழைத்தவர் …இவர்தான் பொடாவில் கைதாகி பிறகு ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்த வைகோவை எள்ளி நகையாடினார்!

  தனது அரசியல் எதிரிகள் பெட்டி வாங்கி விட்டனர் எனக்கேவலப்படுத்தும் கருணாநிதி ,அழகிரி யாரிடம் பணம் வாங்கினார் என்று தெரியப்படுத்தவேண்டும்.தமிழர்களின் எதிரிகள் வைகோவின் வளர்ச்சியை அச்சத்துடனே நோக்குகிறார்கள் என்பது மட்டும் உண்மை!நல்ல அரசியல்வாதிகளை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எப்போதோ போய்விட்டது!மதுரையில் லீலாவதி என்ற பொது உடமைபோராளியை கொன்ற கொலைகாரர்களை அடுத்த தேர்தலில் தேர்ந்தேடுக்கிரார்களே ….என்ன செய்ய ?

 9. //மக்கள் பிரச்சனை எது என்றாலும் குரல் கொடுப்பார். மீனவர், மீத்தேன், மது ஒழிப்பு, கெயில் நிறுவனம் குழாய் எரிவாயு, ஸ்டெர்லைட், ஈழம், விவசாயிகள் பிரச்சனை என்று எதாக இருந்தாலும் முழக்கமிடுவார்//

  முற்றிலும் உண்மை. இவர் மட்டுமே முழக்கமிடுவார் ஆனால் ஆதாயம் இல்லை எனில் மற்ற கட்சி தலைமைகள் பேசக்கூட செய்யாது. பெரும் பிரச்சனை என்றால் கூட சத்தம் போட மாட்டார்கள்.

  உங்களின் கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன்.

 10. giri,

  Good post.

  Vaiko a good speaker.. I had the opportunity of attenting a few of his meetings.. and he is a very good orator.. that skill of his sent waves in Mu Ka and he was forced out of DMK. But he talks about LTTE all the time when the whole world knows that the leader of LTTE is done with… he insisted that he will come one day (from where ?). He had given voice to various social issues, but the thing is he is in a front which does not have a good ground PMK / DMDK has negligible votes and BJP may be of Namo this time might register some votes .. as such MDMK does not have strength on its own.. as you wish insisting that it is a wish that VAIKO wins which is a rare possibility…

 11. கிரி,

  நாளை தேர்தல் முடிவுகள் வருகின்றன. தொகுதிக்காரன் என்ற முறையில் கூறுகிறேன்.
  இந்த தேர்தல் மட்டுமல்ல இனி வரும் தேர்தல்களிலும் வைகோ “விருதுநகர்” பாராளுமன்ற தொகுதியில் வெல்ல முடியாது. காரணத்தை கூறுகிறேன்.

  40 தொகுதியில் வைகோ விருதுநகரை[முன்பு சிவகாசி] மட்டும் தேர்வு செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினால் விடை கிடைக்கும்.

  சிவகாசி தொகுதியாக இருந்தபோது இந்த தொகுதியில் நாயக்கர்,நாடார்,தேவர்,தாழ்த்தப்பட்டோர் என்ற வரிசையில் வாக்கு வங்கி இருந்தது; நாயக்கர் சமுதாயத்தின் ஏகோபித்த ஆதரவுடன் வைகோ எளிதில் வெற்றி பெற்றார்.

  தொகுதி சீரமைப்பில் வைகோவை ஒழித்து கட்ட வேண்டும் என்பதற்காகவே நாயக்கர் சமுதாய மக்கள் அதிகம் இருக்கும் “கோவில்பட்டி” சட்டமன்ற தொகுதியை தூத்துக்குடியிலும், நாயக்கர் சமுதாய மக்கள் கணிசமாக இருக்கும்”ராஜபாளையம்-திருவில்லிபுத்தூர்” ஆகிய சட்டமன்ற தொதிகளை தென்காசியில் சேர்த்து நாயக்கர் ஓட்டுக்களை சிதறடித்துவிட்டனர்.

  தற்போதைய தொகுதி நிலவரம் தேவர்,நாடார்,தாழ்த்தப்பட்டேர்,நாயக்கர் என்ற வரிசையில் உள்ளது.

  அ.தி.மு.க, காங்கிரஸ் – தேவர்
  தி.மு.க – நாடார்
  பி.ஜே.பி – நாயக்கர்

  திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர் ஏரியாவில் சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூர் பெயர் ஓரளவுக்கு உள்ளது. இவர் தேவர் ஓட்டுக்களை பிரிக்கும் பட்சத்தில் தி.மு.க எளிதில் வெல்லும். அப்படி நடக்காவிட்டால் அ.தி.மு.க வெல்லும்.

  வைகோவிற்கு மூன்றாவது இடம்தான்.

 12. கிரி, ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த கட்டுரையை படிச்சு பார்த்தேன் ☺☺

 13. அரி இரண்டே வருடங்களில் இப்படி கைப்புள்ளை மாதிரி ஆகிட்டாரே… என்ன கொடுமை சார் 🙂 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here