எங்கள் ஊரில் நடைபெற்ற எங்கள் குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்காக கடந்த வாரம் சென்று இருந்தேன். மழை பெய்து இருந்ததால், வெயிலின் தாக்கம் அவ்வளவாக இல்லை. சில நாட்கள் வெயிலே இல்லை.
நிகழ்ச்சிக்காக உடை எடுக்க வேண்டும் என்று கூறியதால் நான், மனைவி, அண்ணன் (சித்தப்பா) மகள், அக்கா மகன் நால்வரும் கோவை சென்று இருந்தோம்.
நாங்கள் சென்ற அன்று எங்கள் கோபியுடன் ஒப்பிட்டால் வெயில் குறைவாக இருந்தது ஆனால், கோவையில் தான் வெயில் இந்த முறை வாட்டி எடுத்ததாகக் கூறினார்கள்.
காரணமாக, சாலை மேம்பாட்டிற்கு சாலையோர மரங்களை வெட்டியதைக் கூறினார்கள்.
திரும்ப சில இடங்களில் வைத்து இருக்கிறார்கள் ஆனால், அவை பெரிதாகப் பல வருடங்கள் ஆகும்.
கிராஸ்கட் சாலை “ஸ்ரீதேவி”
கிராஸ்கட் சாலை “ஸ்ரீதேவி”யில் உடை நிறைய இருந்தது. வழக்கம் போல கூட்டமும் அதிகம். எத்தனை பேர் வந்தாலும் முகம் கோணாமல் வாடிக்கையாளர் சேவை செய்தார்கள்.
நான் கூட ஒருத்தர் இரண்டு பேர் அப்படி இருப்பார்கள் என்று நினைத்தேன் ஆனால், நான் கவனித்தவரை அனைவருமே சிறப்பான சேவை வழங்கினார்கள்.
சில உடைகள் விலை அதிகமாகவும் சில குறைவாகவும் இருந்தன ஆனால், உடைகளின் வகைகள் நிறைய இருந்தன.
என் அக்கா பையனுக்கு டி ஷர்ட் எடுக்க என் அண்ணன் பொண்ணு கூறிய “Grasp” கடைக்குச் சென்றோம். விலை மலிவாகவும் துணி நன்றாகவும் இருந்தது.
250 ரூபாய்க்கு L அளவு நன்றாக இருந்தது.
தற்போதெல்லாம் டி ஷர்ட் (Round neck) குறைந்தது 600 – 850 என்று கூறும் நிலையில் இது உண்மையிலேயே மிகவும் குறைவாக இருந்தது. குழந்தைகள் உடையும் கூட விலை மிகக் குறைவு.
நீங்கள் செல்ல விரும்பினால் Grasp, Race Course, Behind Old Nilgiris, PH 0422 4204039. அவினாசி சாலை வழியாக வந்தால் வழியிலேயே இறங்கிக் கொள்ளலாம்.
திருக்கடையூர்
திருக்கடையூர் கோவிலுக்குச் சென்று, வழியில் “சிதம்பரம்” கோவில் சென்றோம். தீட்சிதர்களுக்கே உரிமை என்று உச்ச நீதிமன்றம் கூறியது நினைவு இருக்கலாம்.
இங்கே இவர்களைப் பார்த்தாலே எனக்குப் பிடிப்பதில்லை என்பதால், வேண்டா வெறுப்பாக கோவிலுக்குச் சென்று வந்தேன்.
பணம் பணம் என்று பிடுங்கிக் கொண்டே இருப்பார்கள்.
அங்கே இருந்த ஒரு தீட்சிதர், என் மச்சானிடம் முகவரி கேட்டு பிரசாதம் அனுப்புவதாக விளக்கிக்கொண்டு இருக்க, நான் இதெல்லாம் வேண்டாம் என்று மச்சானை தள்ளிக்கொண்டு வந்து விட்டேன்.
வைத்தீஸ்வரன் கோவில்
அங்கே இருந்து வைத்தீஸ்வரன் கோவில் சென்றோம்.
கொடுமையான பராமரிப்பில் இருந்தது. பிரகாரத்தில் படுத்தால் “நான் ஈ” படத்தில் சுதீப் “ஈ” கிட்ட மாட்டிக்கிட்டு படாத பாடு படுவாரே அது மாதிரி ஆகி விட்டது.
அங்கே படுத்து “ஈ” தான் ஒட்டிக்கொண்டு இருந்தோம்.
வவ்வால் வாசம் வேறு குடலைப் புரட்டியது. ச பழைய கட்டிடம் தவிர்க்க முடியாது என்றாலும் மற்ற மோசமான பராமரிப்பை நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது.
விருதகிரிஸ்வரர் கோவில்
விருதாச்சலம் “விருதகிரிஸ்வரர்” கோவிலுக்குச் சென்றோம். செம்ம பெரிய கோவில்.
கட்ட எத்தனை வருடங்கள் ஆகி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்… ஒன்றும் பிடிபடவில்லை. 20 வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
மூன்று பிரகாரம் இருக்கிறது. சிவன் கோவில் என்பதாலோ என்னவோ எங்கு பார்த்தாலும் லிங்கமாக இருக்கிறது.
மற்ற கோவில்களை விட இந்தக் கோவில் நன்றாகப் பராமரிக்கப்பட்டு இருந்தது.
எனக்கென்னவோ தமிழ் நாட்டில் இருக்கும் மொத்தக் கற்களும் கோவில்களில் தான் இருக்கின்றன என்று தோன்றுகின்றன 🙂
எப்படி இதை அமைத்து இருப்பார்கள் என்று வியப்பாக இருக்கிறது!
தற்போது போல வசதி இல்லாத காலத்திலேயே கற்கள் அழகாக அறுக்கப்பட்டு அருமையாக கட்டப்பட்டுள்ளன.
இந்தக் கோவில் சென்றால் நிச்சயம் இதன் பிரம்மாண்டத்தை பார்த்து வியக்காமல் இருக்கவே முடியாது.
இதனுள் சென்று பார்த்த போது, இங்கே ராஜா மேள தாளத்தோடு வந்து சென்றால் எப்படி இருக்கும் என்று மனத் திரையில் ஓடியது. நினைப்பே அதிரடியாக இருந்தது.
அந்தக் காலத்தில் எப்படி வாழ்ந்து இருப்பார்கள்…! எப்படி இந்தக் கோவிலைக் கொண்டாடி இருப்பார்கள்…!
ஆனால், தற்போது…! இவ்வளவு கஷ்டப்பட்டு கட்டிய பல கோவில்களைப் பராமரிக்காமல் அப்படியே போட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.
சீமாந்திராவில் கோவில்களை சிறப்பாக பராமரிப்பார்கள் என்று என் அக்கா கூறினார். தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த கேவலமான நிலை?
நம்ம ஆளுங்க, இருக்கிற கோவிலைப் பரமாரிக்காமல் மேலும் மேலும் கோவிலைக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
அவனவனுக்கு கோவில் தர்மகத்தா ஆகி, தான் பெரிய லபக்குனு காட்டனும்.. இது தான் கோவில்கள் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம்.
திருக்கடையூர் கோவில்களில் அங்கே பூஜை செய்யும் ஐயர்களுக்கு செம வருமானமாம். பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.
அங்கே உள்ள ஹோட்டல், தங்கிச் செல்ல வீடுகள், லாட்ஜ் என்று ஏகப்பட்டது இவர்களுடையது தான் என்று கூறினார்கள்.
பல இடங்களில் இவர்களுக்கு இதில் தரகு / பங்கு என்று கூறினார்கள்.
எங்க ஊரில் உள்ள கோவில்களில் உள்ள ஐயர் வருமானமே இல்லாமல் பரிதாபமாக இருக்கிறார்கள். இங்கே அப்படியே உல்டாவாக இருக்கிறது. என்னமோ போங்க!
மணி விழா
நாங்கள் திருக்கடையூரில் “மணி விழா” என்ற விடுதியில் தங்கி இருந்தோம்.
10 பேர் தங்கும் அறை, AC உடன் 2000 தான் வந்தது. கட்டணம் குறைவாகவும் விடுதி நன்றாகவும் இருந்தது. இந்த விடுதியைப் பரிந்துரைக்கிறேன்.
சிதம்பரம் பகுதியில் உள்ள “கொள்ளிடம் ஆறு” மிகப்பெரியதாக இருக்கிறது. இதை விட பெரிய ஆச்சர்யம் இங்கே ஆற்றில் தண்ணீர் இருக்கிறது 🙂 .
வறட்சியான ஆறுகளையே பல பகுதிகளில் பார்த்து, இப்படி தண்ணீருடன் அதுவும் வெயில் காலத்தில் பார்த்தது ரொம்ப ரொம்ப வியப்பாக இருந்தது.
அதோடு சில வாய்க்கால்களில் தண்ணீர் சென்று கொண்டு இருந்தது.
அதில் ரொம்ப முக்கியம் சாக்கடை / சாயம் / கழிவு எதுவும் கலக்காமல் சுத்தமாக இருந்தது. மரங்களும் அதிகம் ஆனால், கோவில் பகுதிகளில் சுத்தமாக மரமே இல்லை.
வெயிலில் மண்டை கிறுகிறுத்து அடுப்பினுள் இருப்பது போல இருக்கிறது.
அடுத்த பதிவில் Airtel DTH அனுபவம், கோவை நான்கு வழிச் சாலை, தேர்தல் பரபரப்புகள், இணையம் இல்லா வாழ்க்கை மற்றும் சில தகவல்களைக் கூறுகிறேன்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
என் ஊருக்கு அருகில் வந்திருக்கிறீர்கள். ஒரு போன் செய்திருக்கலாமே கிரி .
தங்கள் பயணம் சுகமாய் அமைந்ததில் மகிழ்ச்சியே
பயணம் இனிதாக அமைந்ததில் மகிழ்ச்சி. கோவில்களைப் பற்றிய விவரங்களும் மற்றவருக்கும் பயன்படத் தகவல்களைப் பகிர்ந்திருப்பதும் நன்று.
கிரி… கோவையை பற்றி சொன்னேலே எனக்கு குதுகலம் தான்… நீங்க சொன்ன ஏரியாவுல நானும், சக்தியும் சுத்தாத இடமே இல்லை.. விடுமுறையை மகிழ்வாக குடும்பத்துடன் செலவிடுவது சிறப்பான ஒன்று….சிதம்பரம் வரை உள்ள வந்து நம்ம ஏரியா (கடலூர் – பணருட்டி) உள்ள வராம போகிடிங்களே … எங்க ஊர் காற்றையும் சுவாதித்து இருக்கலாமே!!!! தல.
===================================
(இணையத்தில் முன்பு படித்து…) இன்று கோயில் ஒரு வணிக நிறுவனம். வாசலில் செருப்பை அவிழ்த்துப் போடுவதில் துவங்கி, ஒவ்வொரு பத்தடிக்கும் ஏதோ காரணம் சொல்லிப் பணம் கறக்கும் வித்தைக் கூடம். அதே கற்தூண்களும், சிற்பங்களும் இருக்கின்றன.
ஆனால், அதன் மீது எரியும் டியூப் லைட்டிலிருந்து மின்சார மணி வரை உபயதாரர்களின் பெயர்கள், அவர்களின் முழு முகவரியோடு செல்போன் நம்பர் வரை பொறிக்கப்பட்டு மின்னுகின்றன. (நூற்றாண்டைக் கடந்தும் அழகு குறையாத யாளியைச் செய்த சிற்பியின் பெயரோ இன்று வரை யாருக்குமே தெரியாது!).
தரிசனத்துக்கும் முதல், இரண்டாம் வகுப்புக் கட்டணங்கள். சிபாரிசுக் கடிதங்கள், கையூட்டு, பல் இளிப்பு, என நடைமுறைத் தந்திரங்களின் கூடாரமாகிவிட்டது கோயில். அமைதியையும் சாந்தத்தையும் இன்று கோயிலில் காண்பது அபூர்வமாகி விட்டது.
==================================
என்னை பொறுத்தவை இது உண்மை என்றே தோன்றுகிறது.. இந்த நிலை மாற வேண்டும். இது கோவில் என்று மட்டும் அல்ல,. எல்லா வழிபாட்டு தளங்களிலும் இயல்பாக நடக்கின்ற ஒன்றாக மாறி விட்டது.. இது தவறு எனவும் யாருக்கும் தெரிவதில்லை..
கஷ்டபடுவர்களுக்கு உதவிகள் எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் இறைவனின் பெயரை,அடுத்தவர்களின் நம்பிக்கையை ஏமாற்றி பிழைக்கும் நபர்களுக்கு உதவுவதில் என்றும் எனக்கு உடன்பாடு இல்லை…
“சீமாந்திராவில் கோவில்களை சிறப்பாக பராமரிப்பார்கள் என்று என் அக்கா கூறினார். தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த கேவலமான நிலை? ”
– எல்லாம் இத்தனை வருட திராவிட கழகங்களின் ஆட்சியால்தான். பல நன்மைகள் கழகங்கள் ஆட்சியால் இருந்தாலும், இந்த மாதிரி சில தீமைகளும் இருக்கிறது.
நீண்ட இடைவெளி பதிவு தேர்தல் பற்றி ஒன்றும் இல்லை
அனைவரின் வருகைக்கும் நன்றி
@சரவணன் நீங்க இங்க இருக்கீங்க என்று எனக்குத் தெரியாது.. தெரிந்திருந்தால் அழைத்து இருப்பேன்.
@யாசின் உங்க பகுதி செல்லும் வாய்ப்பு கிடைக்கலை.
“எரியும் டியூப் லைட்டிலிருந்து மின்சார மணி வரை உபயதாரர்களின் பெயர்கள், அவர்களின் முழு முகவரியோடு செல்போன் நம்பர் வரை பொறிக்கப்பட்டு மின்னுகின்றன. (நூற்றாண்டைக் கடந்தும் அழகு குறையாத யாளியைச் செய்த சிற்பியின் பெயரோ இன்று வரை யாருக்குமே தெரியாது!).
தரிசனத்துக்கும் முதல், இரண்டாம் வகுப்புக் கட்டணங்கள். சிபாரிசுக் கடிதங்கள், கையூட்டு, பல் இளிப்பு, என நடைமுறைத் தந்திரங்களின் கூடாரமாகிவிட்டது கோயில். அமைதியையும் சாந்தத்தையும் இன்று கோயிலில் காண்பது அபூர்வமாகி விட்டது.”
நச்சுனு சொன்னீங்க.. இதுவே என் கருத்தும். எங்கே சென்றாலும் பணத்தை பிடுங்கி.. கோவில் என்றாலே வெறுப்பு வரும் படி செய்து விட்டார்கள்.
@ராஜா அடுத்த பதிவில் எழுதுகிறேன்.